Published:Updated:

ரோஹித், சச்சின், ராயுடு... யார் யாருக்கு என்ன பொசிஷன்?! - மும்பை இந்தியன்ஸ் ஆல் டைம் 11

Mumbai Indians

சச்சின், ரோஹித், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன், பும்ரா, மலிங்கா… இந்த ஏழு வீரர்களையும் தேர்வுசெய்வதற்குக் காரணம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

Published:Updated:

ரோஹித், சச்சின், ராயுடு... யார் யாருக்கு என்ன பொசிஷன்?! - மும்பை இந்தியன்ஸ் ஆல் டைம் 11

சச்சின், ரோஹித், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன், பும்ரா, மலிங்கா… இந்த ஏழு வீரர்களையும் தேர்வுசெய்வதற்குக் காரணம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

Mumbai Indians

ஐ.பி.எல் இல்லை, பிரீமியர் லீக் இல்லை, சாம்பியன்ஸ் லீக், விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ்… எதுவுமே இல்லை. க்வாரன்டீன் பொழுதுகளைக் கழிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் கையாளவேண்டியிருக்கிறது. நாமும் ஏதாவது செய்வோமே..!

ஐ.பி.எல் நடக்கவேண்டிய இந்த நேரத்தில், ஐ.பி.எல் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்ப்போம். ஒவ்வொரு அணியின் ஆல்டைம் சிறந்த அணிகள் எப்படியிருக்கும்? ஒவ்வொரு அணிக்கும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த வீரர்கள் யார்? மெக்கல்லம், வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஹெய்டன், மைக் ஹஸ்ஸி, ஆல்பீ மோர்கல், பிராவோ என வெளிநாட்டு நட்சத்திரங்கள் வெளுத்துக்கட்டிய சூப்பர் கிங்ஸின் ஆல்டைம் லெவனில், எந்த 4 வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? மிகச் சிறந்த பௌலர்கள் அமையாத கிங்ஸ் லெவனின் பௌலிங் லைன் அப் எப்படி இருக்கும்? தினமும் ஒவ்வொரு அணியின் ஆல் டைம் லெவனை அலசுவோம்.

ஐ.பி.எல் விதிகளைப்போல் இங்கும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும்தான். அதேபோல், 5 பௌலிங் ஆப்ஷன், ஒரு விக்கெட் கீப்பர் என அனைத்து வகையிலும் சரியான பேலன்ஸ் அமையும் வகையில்தான் ஒவ்வொரு அணியும் தேர்வுசெய்யப்படும். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸிலிருந்து தொடங்குவோம்…

13 ஆண்டுகளில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் மும்பை அணியில், எக்கச்சக்க வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். சச்சின், ஹர்பஜன், மலிங்கா போன்ற சீனியர்களுக்கு நடுவே, அம்பதி ராயுடு, ஹர்திக், குருனால், பும்ரா எனப் பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து சர்வதேச அரங்கில் கால்பதித்தனர். சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி, அந்த அணியின் ஆல்டைம் லெவனில் இடம்பெறும் அந்தப் பதினோரு வீரர்கள் யார்?

Sachin & Pollard
Sachin & Pollard

முதலில், தவிர்க்க முடியாத வீரர்களுக்கு அவர்களது இடத்தை ஒருமனதாகக் கொடுத்துவிடலாம். சச்சின், ரோஹித், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன், பும்ரா, மலிங்கா… இந்த ஏழு வீரர்களையும் தேர்வுசெய்வதற்குக் காரணம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படாது. தொடக்க சீசன்களில் தடுமாறிய அணி, ஐ.பி.எல் சூப்பர் பவராக மாறியதில் இவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அடுத்த நான்கு இடங்களைத் தேர்வுசெய்வதுதான்.

என்னதான் இன்றைய தேதிக்கு உலகின் மிகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஐ.பி.எல் தொடரில் ஓப்பனராக ரோஹித்தின் ரெக்கார்ட் சிறப்பாக இல்லை. அவரும் ஓப்பனிங் இறங்குவதைப் பெரிதும் விரும்புவதில்லை. அதனால் இந்த ஆல்டைம் லெவனில் அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான். அதனால் சச்சினுடன் ஓப்பனராக இறங்கப்போவது ஜெயசூர்யா, குவின்டன் டி காக் போன்ற சிறந்த வீரர்கள் மும்பைக்காக ஆடியிருக்கிறார்கள். ஜெயசூர்யா முதல் சீசனில் நன்றாக ஆடியிருந்தாலும், அதற்கடுத்து பெரிதாக சோபிக்கவில்லை. டி காக் இப்போதுதான் ஒரு சீசன் ஆடியிருக்கிறார். அதனால் அவர்கள் இருவரையும் விட்டுவிடலாம்.

Lendl Simmons
Lendl Simmons

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுடன் இந்த அணியில் ஜோடி சேர்வது லெண்டில் சிம்மன்ஸ்! 2014-ம் ஆண்டு, மாற்று வீரராக அணியில் இணைந்தவர், உடனே தன் இருப்பை நிரூபித்தார். அந்த சீசனின் முதல் 5 போட்டிகளிலும் தோற்றிருந்த அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியக் காரணமாக அமைந்தார். அடுத்த சீசனில், 13 போட்டிகளில் 6 அரைசதம் உட்பட 540 ரன்கள் குவித்திருந்தார். மும்பை சாம்பியன் ஆனதில் மிகமுக்கியப் பங்கு அவருக்கு இருக்கிறது. ஒரு ஓப்பனர், டி-20 ஃபார்மட்டில் சுமார் 40 சராசரி வைத்திருக்கும்போது அவரை எப்படி நிராகரிக்க முடியும்?

பொல்லார்ட், மலிங்கா, சிம்மன்ஸ்… நான்காவது ஓவர்சீஸ் வீரராக மிட்செல் மெக்லனகன். சிம்மன்ஸைப் போல், திடீரென அணிக்குள் சேர்க்கப்பட்டு உடனடியாக தாக்கம் ஏற்டுத்தினார், இந்த நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர். பவர்பிளே, டெத் என இரண்டு ஏரியாக்களிலும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். 17.94 ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதனால், மலிங்காவுடன் பவர்பிளேவிலும், பும்ராவுடன் டெத்திலும் விக்கெட் வேட்டை நடத்தப்போவது இவர்தான்.

Mitchell Mcclenaghan
Mitchell Mcclenaghan

இன்னும் இரண்டு இடங்கள். முதலில் விக்கெட் கீப்பர். மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை அவர்களது விக்கெட் கீப்பர்கள் மிகச் சிறந்த பங்களிப்பைக் கொடுத்ததில்லை. பர்திவ் பட்டேல், ஆதித்யா டாரே, இஷான் கிஷன் என எல்லோருமே சுமாரான சீசன்களைத்தான் கொண்டிருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக் ஒரு சீசனில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால், அதற்காக அவரை ஆல் டைம் லெவனில் சேர்ப்பது சரியாக இருக்காது. அதனால் அம்பதி ராயுடு மும்பை அணியின் கீப்பராகிறார். இங்கு அவரால் 2 டைமென்ஷன்களில் தன் அணிக்குப் பங்களிக்க முடியும்!

கடைசி ஓர் இடம், மற்றொரு பாண்டியாவுக்கு! அணியில் ஹர்பஜன் மட்டும்தான் ஸ்பின்னர். அதுபோக 6 பேட்டிங் ஆப்ஷன்கள்தான் இருக்கிறது. ஏழாவது பேட்ஸ்மேன், இரண்டாவது ஸ்பின்னர் என இரண்டு பாக்ஸ்களை டிக் செய்வதால், சீனியர் பாண்டியாவுக்கு அந்த இடம் வழங்கப்படுகிறது. 4 முறை மும்பை அணியைக் கோப்பைக்கு வழிநடத்திய ஹிட்மேன்தான் இந்த அணிக்கும் கேப்டன்! ஆக, இதுதான் மும்பை இந்தியன்ஸின் ஆல்டைம் லெவன்.

Mumbai Indians All time XI
Mumbai Indians All time XI

சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி போன்ற வீரர்கள் மும்பைக்காக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தாலும், ஸ்டார்கள் நிறைந்த இந்த மும்பை லைன் அப்பில் அவர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினமே!