Published:Updated:

100 ரன் தாண்டாத கோலி, விக்கெட் இல்லா பும்ரா, நின்று அடித்த நியூஸி! தொடர் தோல்விக்குக் காரணம் என்ன?

NZ v IND
NZ v IND ( AP )

31 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்று மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது இந்தியா. அதுவும் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த நிலையில் இத்தோல்வி இவ்வணியின்மீது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

5-0 என டி20 தொடரை வென்ற கோலி அண்ட் கோ மிகப்பெரிய நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு ஒயிட்வாஷுக்குத் தயாராக இருந்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு. மிகப்பெரிய அதிர்ச்சியை இந்திய அணிக்குக் கொடுத்தது நியூசிலாந்து. 3-0 என இந்தியாவை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து. அதிர்ந்து போய் நிற்கிறார் கோலி.

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானு மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 112 ரன்களைக் குவித்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பதற்றமின்றி விளையாடியது. தொடக்க வீரர் கப்தில் 66 ரன்களும், நிகோல்ஸ் 80 ரன்களும், கிரந்தோம் 58 ரன்களும் சேர்க்கவே, 48வது ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 300 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

டி20 தொடரை 5-0 என்று இந்திய அணி ஒயிட்வாஷ் செய்த நிலையில் ஒரு நாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து பதிலடி கொடுத்துள்ளது நியூசிலாந்து. இந்திய அணி கடைசியாக 1989 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 5-0 என ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்துள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஓர் அவமானகரமான தோல்வியைச் சந்தித்துள்ளது இந்திய அணி! ஏன் இந்த வரலாற்று மோசமான தோல்வி... எங்கே சறுக்கியது இந்தியா?

ஆல்ரவுண்டர்

ஒவ்வோர் உலகக்கோப்பையும் முடிந்த பின் அதற்கு அடுத்த உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில் அணி தயார்படுத்தப்படும். ஆனால், இந்திய அணியில் சில பொசிஷன்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் சரியான வீரர்களைத் தயார் செய்யவில்லை என்பதே உண்மை. சரியான ஆல்ரவுண்டர் இல்லாமல் அணி திணறி வருகிறது. ஹர்திக் பாண்டியா ஒருவரைத் தவிர வேறு எந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரையும் நம்மால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இவ்வுளவு பெரிய நாட்டில் நம்மால் பாண்டியாவுக்கு மாற்று வீரரை அடையாளம் காண முடியாமல் இருப்பது வேதனைக்குரியது. பாண்டியா காயத்திலிருந்து மீண்டு வரும்வரை கேதர் ஜாதவை அணியில் எடுப்பது எல்லாம் எந்த வகையான வியூகம் என்றே தெரியவில்லை.

Hardik Pandya
Hardik Pandya
Ap

ஸ்பின் ஆல்ரவுண்டருக்கு ஏற்கெனவே ஜடேஜா இருக்கும்போது நியூசிலாந்து மைதானங்களில் இன்னொரு ஸ்பின் ஆல்ரவுண்டர் எதற்கு என்பது மில்லியன் டாலர் கேள்வி. சரி அவரை பார்ட் டைம் பெளலராகவாவது பந்து வீச வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. பின்பு அவர் எதுக்கு அணியில் ஆல்ரவுண்டர் பொசிஷனில் விளையாடவேண்டும் என்பது விடை தெரியாத வினா!

கோலி

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், சதம் மேல் சதங்களை விளாசுபவர், ரன் மெஷின்... ஆனால் முதல்முறையாக ஒரு ஒருநாள் தொடரில் கேப்டனாக 100 ரன்களைத் தாண்டவில்லை என்பதோடு, முதல்முறையாகத் தொடந்து 3 முறை போல்டாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இல்லாத நிலையில் டாப் ஆர்டர் பிரஷர் முழுவதும் கோலி மீதே விழுந்தது. அந்த பிரஷரை சமாளிக்க முடியாமல், வழக்கமாகப் பந்தை தன்னை நோக்கி வரவைத்து ஆடுபவர் இந்தத் தொடரில் இவர் பந்தைத் தேடி முன்னே சென்று அவுட் ஆனதெல்லாம் அவரது பேட்டிங் நடைமுறையில் இல்லாத ஒன்று.

Virat Kohli
Virat Kohli
AP

அதுவும் லெக் ஸ்பின்னில் தொடர்ந்து திணறி வருகிறார். இதுவே இவரது வீக்னஸ் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இங்கிலாந்தில் ஆதில் ரஷீத், ஆஸ்திரேலியாவில் ஆடம் ஸாம்பா, ஐபில் போட்டிகளில் ஷ்ரேயாஸ் கோபால் இப்போது நியூசிலாந்தில் இஷ் சோதி என லெக் ஸ்பின்னர்களிடம் தனது விக்கெட்டைத் தொடர்ந்து பறிகொடுத்துக்கொண்டிருக்கிறார். இது தொடரக்கூடாது. எப்படி முதல் இங்கிலாந்து சீரிஸில், ஸ்விங் கண்டிஷனில் திணறியவர் அடுத்த சீரிஸில் மீண்டு வந்து பல சாதனைகளைப் படைத்தாரோ அதே மாதிரி இந்த லெக் ஸ்பின் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்து விடவேண்டும்.

பும்ரா

உலகின் நம்பர் 1 பெளலர், எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களையும் தனது யார்க்கரால் திணறடிப்பவர். இறுதி ஓவர்களில் தனது ஸ்லோ பந்துகளால் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்பவர்... ஆனால், காயத்திலிருந்து மீண்டு வந்ததிலிருந்து தனது பழைய பெளலிங் வீசும் திறனை சற்றே இழந்து வருகிறார். குறிப்பாக ஒருநாள் தொடர்களில் அதுவும் இந்தத் தொடரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 167 ரன்களைக் கொடுத்துள்ளார்.

Jasprit Bumrah
Jasprit Bumrah
பும்ரா, ஏன் பும்ராவாக இல்லை..?! #NZvIND

பும்ராவின் ஸ்பெஷலே பேட்ஸ்மேன்களுக்கு ஒரு எண்டில் டைட் லைனில் பந்து வீசி அவர்களுக்கு பிரஷரை ஏற்றி மற்ற பெளலர்களிடம் ஷாட்ஸ்க்குச் செல்லுமாறு தூண்டி அவர்களின் விக்கெட்டை விழ வைப்பதுதான். அது இந்தத் தொடரில் முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது. கப்தில் போன்ற பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் அதிரடியாக ஆடியும், ராஸ் டெய்லர், கிராந்தோம் போன்ற பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் ஓவருக்கு 3 முதல் 4 ரன்கள் எடுத்துவிட்டு தாகூர் போன்ற பெளலர்களை டார்க்கெட் செய்து ஓவருக்கு 10 முதல் 15 ரன்களை எடுத்தனர். இதுவே இந்திய பெளலிங் டிபார்ட்மென்ட்டுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது.

பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 50 ரன்களைக் கொடுப்பதை விட 3 விக்கெட்கள் எடுத்து 60 ரன்கள் கொடுத்திருந்தால் அணிக்கு உதவியாக இருந்திருக்கும். மற்ற பெளலர்கள் விக்கெட் எடுக்காதபோது பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்தாமல் விக்கெட்களுக்குச் செல்ல வேண்டும். இனி வரும் காலங்களில் ஆக்ரோஷமாகப் பந்து வீசி பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதே அணிக்குச் சிறந்ததாக அமையும். அதைச் செய்வார் என்றே நம்புவோம்.

Rahul
Rahul
AP
`தோனி ஓய்வுபெற்றால்....; பன்ட் செய்ய வேண்டியது இதைத்தான்!' - கபில் தேவ் ஷேரிங்ஸ்

மிடில் ஆர்டர்

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயரும், கேஎல் ராகுலும் சிறப்பாக ஆடியதே! இருவரும் இந்தத் தொடரில் சதம் அடித்து அசத்தினார்கள். 2018-க்குப் பிறகு இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சதம் அடிப்பது இதுவே முதல் முறை. இந்தியாவுக்கு நெடுங்காலப் பிரச்னையாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்னை இந்த இருவரின் ஆட்டத்தின் மூலம் ஓரளவு சரியாகி இருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

நிக்கோல்ஸ் & டாம் லேதம்

கேன் வில்லியம்சன் முதல் 2 போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டன் பதவியை ஏற்ற டாம் லேதம் சாதுர்யமாகச் செயல்பட்டு முக்கியமான நேரங்களில் பெளலர்களை மாற்றி விக்கெட்களை எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தி அசத்திவிட்டார். அதுவும் இரண்டாவது போட்டியில் பிட்சை சரியாகக் கணித்து ஸ்பின்னர்கள் இல்லாமல் தைரியமாக ஃபாஸ்ட் பெளலர்களை மட்டுமே கொண்டு இறங்கியது எல்லாம் தேர்ந்த கேப்டன்களாலே செய்ய முடிந்த ஒன்று. அதை டாம் லேதம் செய்தார்.

Nicholls
Nicholls
AP

இந்தியா சர்பாக இறங்கிய இரண்டு புது ஓப்பனர்களும் சறுக்கிய நிலையில் நியூசிலாந்து ஓப்பனர் ஹென்றி, தங்களது மைதானங்களில் ஓப்பனிங் எப்படி ஆட வேண்டும் எனப் பாடம் எடுத்தார். விளையாடிய 3 போட்டிகளிலும் முறையே 78, 41, 80 என்ற சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணி ரன்களை சேஸ் செய்வதற்கு உதவியாக இருந்தார். குப்திலை ஒருபுறம் அதிரடியாக ஆடவிட்டு மறுமுனையில் நிலையாக ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தார். பிரித்வி ஷா மற்றும் மயங் அகர்வால் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த மாதிரி நிலையான ஆட்டங்களைத்தான்.

ராஸ் டெய்லர்

20 ஓவர் போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர் ஒரு நாள் போட்டிகளில் அதே தவறைச் செய்யத் தயாராக இல்லை. காயம்பட்ட சிங்கத்தின் மூச்சு கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும் என்பதை இந்தத் தொடரின் மூலம் காண்பித்து மேன் ஆஃப் தி சீரிஸ் அவார்ட்டை வாங்கிச் சென்று விட்டார். ஸ்லாக், ஸ்வீப் ஷாட்தான் அவருடைய பலம். அதை இந்தத் தொடர் முழுவதும் பயன்படுத்தி சிக்ஸர்களாக அடித்துத் தள்ளினார். அது ஜடேஜா வீசிய ஸ்பின் பந்தாக இருக்கட்டும் இல்லை தாகூர் வீசிய வேகப் பந்தாக இருக்கட்டும். மிட் விக்கெட் திசையில் பந்து சிக்ஸர்க்குப் பறந்துகொண்டே இருந்தது. முதல் போட்டியில் இந்தியா 347 ரன்களைக் குவித்திருந்த போதும் அசராமல் சேஸ் செய்தார். 84 பந்துகளை மட்டுமே சந்தித்தவர் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Ross Taylor
Ross Taylor
AP
தோனியைப் போலவே ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவர்... ஏன் தெரியுமா? #RossTaylor

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி ஸ்கோர் 197 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இருந்தபோது அதிகபட்சம் இன்னும் 20 ரன்கள் எடுப்பார்கள் என நினைத்துக்கொண்டிருந்த போது அதிரடியைக் கையில் எடுத்து 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை 273 என்று மேலே உயர்த்திவிட்டார் டெய்லர். இந்த இரண்டு ஆட்டங்களும் நம்மிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டது என்பதே உண்மை.

அடுத்த கட்டுரைக்கு