Published:Updated:

கம்பீரின் விமர்சனம் சரியா? டிகே ஆடும் அந்த 10-15 பந்துகள் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா?

Dinesh Karthik ( DK )

பண்ட் Vs டிகே யார் பெஸ்ட்? யாரை லெவனில் எடுக்க வேண்டும்? இந்த விஷயத்தில் இரண்டாம் யோசனையே இல்லாமல் பண்ட்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற கம்பீரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Published:Updated:

கம்பீரின் விமர்சனம் சரியா? டிகே ஆடும் அந்த 10-15 பந்துகள் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா?

பண்ட் Vs டிகே யார் பெஸ்ட்? யாரை லெவனில் எடுக்க வேண்டும்? இந்த விஷயத்தில் இரண்டாம் யோசனையே இல்லாமல் பண்ட்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற கம்பீரின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Dinesh Karthik ( DK )

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அது சார்ந்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல சர்ச்சைகளும் விவாதங்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் தன் பங்கிற்கு உலகக்கோப்பை அணி குறித்து ஒரு கறாரான கருத்தைக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

கவுதம் காம்பீர்
கவுதம் காம்பீர்
"ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ப்ளேயிங் லெவனில் எடுக்க முடியாது. தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரையில், வெறும் 10-12 பந்துகளை ஆடுவதற்காக ஒரு வீரரை டி20 அணியில் சேர்க்க முடியாது. அவரால் போட்டியை நிச்சயமாக வென்று தர முடியும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், டாப் 5 ஆர்டருக்குள் ஆடுவதற்கு தினேஷ் கார்த்திற்கு விருப்பமுமில்லை. ஆகையால், எந்த இடத்திலும் பேட்டிங் செய்யக்கூடிய ரிஷப் பண்ட்டையே என்னுடைய ப்ளேயிங் லெவனில் எடுப்பேன். அவரால் போட்டிகளை வென்றுக்கொடுக்க முடியும்!"
கவுதம் கம்பீர்

இவ்வாறாக கம்பீர் கூறியிருக்கும் கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

உலகக்கோப்பை அணியின் ப்ளேயிங் லெவனில் ஆடப்போகும் அந்த ஒரு கீப்பர் பண்ட்டா அல்லது கார்த்திக்கா எனும் விவாதம் ஏற்கெனவே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில், கம்பீர் தினேஷ் கார்த்திக்கிற்கு எதிராகக் கொஞ்சம் கறாராகவே விமர்சனத்தை முன்வைத்திருப்பதுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

கம்பீரின் கூற்று சரியா? அந்த ஒரு விக்கெட் கீப்பர் ஸ்லாட்டை எந்தச் சந்தேகமுமின்றி ரிஷப் பண்ட்டிற்கே கொடுத்துவிடலாமா? ஒரு அலசு அலசுவோம்!

முதலில் கம்பீர் கூறியிருக்கும் கருத்துகளில் நாமும் ஒத்துப்போகும் கருத்துகளை பட்டியலிடலாம்.

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் என இரண்டு விக்கெட் கீப்பர்களை லெவனில் வைத்திருந்தால் 6வது பௌலிங் ஆப்சனே இல்லாமல் போகும். 6வது பௌலிங் ஆப்சன் வேண்டுமெனில் கே.எல்.ராகுல் அல்லது சூர்யகுமார் யாதவை ட்ராப் செய்ய வேண்டி வரும்.
கவுதம் கம்பீர்

இரண்டு பேருடையை ரெக்கார்டுகளுமே ஆஹா ஓஹோவென சொல்லுமளவுக்கு இல்லையெனினும், அணியின் தேவையை மனதில் வைத்து யோசிக்கையில் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் ஒருபடி முன்னேயே இருக்கிறார்.

இதை நிறுவ இன்னும் கொஞ்சம் ஆழமாக பேட்டிங் ஆர்டரைப் பற்றிப் பேசியாக வேண்டும். ரோஹித், ராகுல், கோலி. இதுதான் இந்திய அணியின் டாப் 3. இன்றைய நிலவரப்படி இதில் மாற்றமும் இருக்கப்போவதாகத் தெரியவில்லை. இவர்களைக் கடந்து நம்பர் 4-ல் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார். உறுதியாக ப்ளேயிங் லெவனில் இருக்கக்கூடிய வீரர் என்பதால் அவருக்கு இந்த 4-ஐ ஒதுக்கிவிடலாம். அடுத்ததாக ஹர்திக் பாண்டியா நம்பர் 5 இல் இறங்கக்கூடும். பொதுவாக இவர்களை பின் தள்ளிவிட்டு நம்பர் 4-5 இல் இறங்கும் பண்ட், தற்போது ஃபார்மில் இல்லாததால் அவர் அணியில் இருக்கும்பட்சத்தில் இவர்களுக்குப் பிறகுதான் அவர் இறங்கியாக வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட பண்ட், ஆடியிருக்கும் 19 போட்டிகளில் அவர் எந்த ஆர்டரில் இறங்கியிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த 19 போட்டிகளில் 2 போட்டிகளில் ஓப்பனராகவும் 3 போட்டிகளில் நம்பர் 5லும் ஒரே ஒரு போட்டியில் நம்பர் 6 லும் இறங்கியிருக்கிறார். அதிகபட்சமாக நம்பர் 4-ல் 13 போட்டிகளில் இறங்கியிருக்கிறார். எந்த இடத்திலுமே இந்த ஸ்லாட்டை அப்படியே பண்ட்டிற்கு ஒதுக்கிவிடலாம் எனும் அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் இன்னிங்ஸ்களை அவர் சீராக ஆடியிருக்கவில்லை. நம்பர் 6க்கு கீழ் ஒரு ஃபினிஷராக பண்ட் ஆடியிருக்கவே இல்லை. ஆகையால்,

Rishab Pant
Rishab Pant
Twitter
பண்ட்டை ஒரு திடகாத்திரமான ஃபினிஷராக நம்பியும் லெவனில் எடுக்க முடியாது. சூர்யகுமாரையோ ஹர்திக்கையோ இன்னும் கீழிறக்கிவிட்டு பண்ட்டை மேலே இறக்குவதற்கும் அவர் ஒரு இடதுகை பேட்டர் என்பதைத் தவிர வேறு வலுவான காரணத்தை சொல்ல முடியாது.

இந்தப் புள்ளியிலிருந்துதான் தினேஷ் கார்த்திக் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். தினேஷ் கார்த்திக்குடைய புள்ளி விவரங்களும் கொஞ்சம் அடிவாங்கிதான் இருக்கிறதென்றாலும், போட்டியில் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பும் ரொம்பவே குறைவுதான்.

ஆடியிருக்கும் 14 போட்டிகளில் நம்பர் 6-ல் ஏழு முறையும் நம்பர் 7-ல் 6 முறையும் களமிறங்கியிருக்கிறார்.

ஆக, தினேஷ் கார்த்திக்கை வைத்துக் கொண்டு மிடில் ஆர்டர் என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே வேண்டாம். அவர் ஃபினிஷர் அவ்வளவுதான். தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடர்களில் ஃபினிஷராக சிறப்பாகவேத்தான் ஆடியிருக்கிறார். பண்ட் Vs டிகே இந்தக் குழப்பத்திலேயே சில போட்டிகளில் டிகே பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அதெல்லாம் இல்லாமல் நீங்கள்தான் எங்கள் ஃபினிஷர் என அவருக்கு ஒரு உறுதியைக் கொடுக்கும்பட்சத்தில் தினேஷ் கார்த்திக் இன்னும் சிறப்பாகவே செயல்படுவார். ஐ.பி.எல்-இல் பெங்களூரு அணிக்காக அவர் ஆடிய ஆட்டம்தான் இதற்கு உதாரணம்.

வெறும் 10-12 பந்துகளை ஆடுவதற்காக ஒரு வீரரை அணியில் சேர்க்க முடியாது.
கவுதம் கம்பீர்

எனும் கம்பீரின் கூற்றை ரொம்பவே காட்டமானதாகத்தான் பார்க்க வேண்டும்.

Dinesh Karthik
Dinesh Karthik

கடந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்காக முழுக்க முழுக்க ஃபினிஷராக மட்டுமே ஆடியிருந்தார். அந்த சீசனில் மொத்தமாக 330 ரன்களை 183 ஸ்டிரைக் ரேட்டில் அடித்திருந்தார். டிகேவிற்கு ஒரு வெறித்தனமான சீசன் இது. இந்த பெர்ஃபார்மென்ஸ்தான் அவருக்கு இந்த உலகக்கோப்பை அணியிலும் இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

அந்த சீசனில் ஆடியிருந்த 16 போட்டிகளில் 12 போட்டிகளில் டிகே 15 பந்துகளுக்கும் குறைவாகத்தான் எதிர்கொண்டிருந்தார். சீசன் மொத்தமும் சேர்த்தே 180 பந்துகளைத்தான் எதிர்கொண்டிருந்தார். அதாவது சராசரியாக ஒரு போட்டிக்கு 11.25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறார்.

கம்பீர் குறையாகச் சொல்லும் அந்த 10-12 பந்துகளை எதிர்கொள்ளும் திறனுக்காக மட்டும்தான் டிகே பெங்களூரு அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெங்களூரு அணிக்காக ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் இன்னும் 10 பக்கத்திற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். வெறும் 10-12 பந்துகளை எதிர்கொண்டு பெங்களூரு அணிக்காகச் செய்ததை டிகே இங்கே இந்திய அணிக்கும் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் இந்திய அணியின் எதிர்பார்ப்புமே கூட.

தினேஷ் கார்த்திக் குறித்து கம்பீர் விமர்சிப்பது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக தினேஷ் கார்த்திக் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருந்த சமயத்திலுமே கம்பீர் டிகே-வைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தச் சமயத்தில் கம்பீருக்குப் பதில் சொன்ன கவாஸ்கர், 'Don't look at the man's age, look at the performances' எனக் கூறியிருப்பார். அதையேத்தான் இங்கேயும் குறிப்பிட்டாக வேண்டும்.

கம்பீர்
கம்பீர்
டிகே குறித்த கம்பீரின் விமர்சனம் அவரது கருத்துச்சுதந்திரம் என்ற வகையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மற்றபடி, அதற்கெல்லாம் உலகக்கோப்பையில் டிகே பதில் சொல்வார்!