Published:Updated:

ஹர்திக் பாண்டியாவின் சாதனையை அசால்டாக முறியடித்த ஆஸ்திரேலிய `லேடி தோனி'! #HBDAlyssaHealy

Australian Cricketer Alyssa Healy
Australian Cricketer Alyssa Healy

ஹர்திக் பாண்டியாவின் சாதனையை முறியடித்த லேடி தோனி யார்?! தெரிந்துகொள்ள முழுவதும் படியுங்கள் மக்களே.

மார்ச் 8, 2020... உலக மகளிர் தினம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச டி20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அன்றுதான் நடைபெற்றது. அன்றைய தேதிக்கு, ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74. கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் 3 பேர் மரணித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இறுதிப் போட்டியைக் காண மைதானத்தில் கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை 86,174. இது, மகளிர் போட்டிகளுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மைல்கல்லாக இருக்கும், 1999 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியைவிட 4,000தான் குறைவு.

ஆடவர் உலகக் கோப்பை!
2015-ம் ஆண்டு, இதே மைதானத்தில் ஆடவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அன்று, மகளிர் உலகக் கோப்பையைக் காண வந்த ரசிகர்களைவிட 6,800 பேர்தான் அதிகம் இருந்தனர்.
MCG
MCG
Australian Women's Cricket Team/Twitter

இந்தியா, ஆஸ்திரேலியா இந்த இரு நாடுகளிலும் மிகப் பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்கு, கிரிக்கெட்தான். இந்த இரு நாடுகளிலும் கிரிக்கெட் ரசிகர்களைவிட, கிரிக்கெட் வெறியர்கள்தான் அதிகம். அதன் காரணமாகத்தான், அன்று கொரோனா தொற்றையும் தாண்டி, 80 ஆயிரம் பேர் மெல்போர்ன் மைதானத்தில் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்களைத் தனது அதிரடி ஆட்டத்தால் உற்சாகப்படுத்திய அலிசா ஹீலிதான் இன்றைய நாளின் நாயகி. இந்தக் கட்டுரையின் நாயகியும்கூட!

இறுதிப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்தது ஆஸ்திரேலியா. முதல் பந்தையே பவுண்டரிக்கு பறக்கவிட்டார், அலிசா ஹீலி. அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அலிசாவுக்குக் கிடைத்தது. அந்த ஓவரின் 5-வது பந்தில் ஷெஃபாலி வர்மாவின் கைக்கு கேட்ச் கொடுத்தார் அலிசா ஹீலி. ஆனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டார் ஷெஃபாலி. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அலிசா, தனக்கு வீசப்பட்ட பந்துகளுக்கு மைதானத்தின் அனைத்து எல்லைகளையும் சுற்றிக்காட்டினார். டி.வி-யின் முன்பும் மைதானத்திலும், மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையோடு அமர்ந்திருந்த இந்தியர்களின் கனவைப் பொய்யாக்கினார் அலிசா.

Alyssa Healy
Alyssa Healy
Vikatan Infographics

அன்றைக்கு, அலிசாவின் விக்கெட் எப்போது போகும் எனக் காத்திருந்த இந்தியர்கள்கூட, சிறிது நேரத்தில் அலிசாவின் அதிரடியை ரசிக்கத் தொடங்கிவிட்டனர். பவர்ப்ளே முடிந்த பின்பும் அதிரடி காட்டிய அலிசா, வெறும் 30 பந்துகளில் அரை சதமடித்து உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். 'ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியில் அதிவேக அரைசதம்' என்பதுதான் அந்தச் சாதனை. 2017-ம் ஆண்டு, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 32 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார்.

அலிசா ஹீலி
அலிசா ஹீலி
Vikatan Infographics
ஆடவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சாதனையை உலக மகளிர் தினத்தன்று முறியடித்தார் அலிசா ஹீலி.

ஷிகா பாண்டே வீசிய 11-வது ஓவரில், தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி மகளிர் அணியின் அதிரடி ஆட்டத்துக்கு அட்ரெஸ்ஸாக தனது பெயரை எழுதிக்கொண்டார் அலிசா. அவர் அடித்த ஷாட்டுகள், கண்ணை முடிக்கொண்டு பேட்டை சுற்றி அடிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் புக்கில் உள்ள ப்ராப்பர் கிரிக்கெட்டிங் ஷாட்ஸ்! 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார் அலிசா. அலிசாவின் அதிரடியால் 5-வது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

அலிசா ஹீலி
அலிசா ஹீலி
ICC/Twitter

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்-கின் மனைவிதான் அலிசா ஹீலி. மகளிர் உலகக் கோப்பையின்போது, தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார் ஸ்டார்க். அணி நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, 10,000 கி.மீ தூரம் பயணித்து, இறுதிப் போட்டியில் ஆடவிருக்கும் மனைவி அலிசாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவிற்கு வந்தார் ஸ்டார்க். தனக்காக இவ்வளவு தூரம் பயணித்து வந்தவரை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே விளையாடியதைப்போல இருந்தது அலிசாவின் அன்றைய அதிரடி ஆட்டம்.

Alyssa healy
Alyssa healy
Alyssa healy/ twitter
தொடர் நாயகன்/நாயகி
2015-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, அந்தத் தொடரில் மொத்தம் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த மிட்செல் ஸ்டார், தொடர் நாயகன் விருது பெற்றார். அதேபோல 2018-ம் ஆண்டு, மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோது, அந்தத் தொடரில் 225 ரன்கள் குவித்திருந்த அலிசா ஹீலி, தொடர் நாயகி விருதை வென்றார்.

அலிசாவின் கணவர் மட்டும் கிரிக்கெட்டர் அல்ல. அலிசா பிறந்த குடும்பமே ஒரு கிரிக்கெட் குடும்பம்தான். ஆஸ்திரேலிய அணிக்காக 119 டெஸ்ட் போட்டிகளிலும் 168 ஒருநாள் போட்டிகளிலும் ஆடிய இயான் ஹீலி இவருக்கு சித்தப்பா முறை வேண்டும். அலிசாவின் அப்பா கிரேக் ஹீலியும் இன்னொரு சித்தப்பா கென் ஹீலியும் உள்ளூர் அணியான குயின்ஸ்லேண்ட் அணிக்காக விளையாடியவர்கள். இவரின் தம்பி டாம் ஹீலி, ஆஸ்திரேலியா ஜூனியர் அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். குடும்பம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்தாலும், கிரிக்கெட் மீது மிகப் பெரிய பிரியம் இல்லாதவராகவே வளர்ந்தார் அலிசா. அலிசாவின் குடும்பத்தினர் குயின்ஸ்லேண்டிலிருந்து சிட்னிக்குக் குடிபெயர்ந்தனர். சிட்னியில் புதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் அலிசா. அங்கே படித்துக்கொண்டிருக்கும்போது அலிசாவிற்கு புது நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் வழியாக அலிசாவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் அரும்பத் தொடங்கியது.

Alyssa Healy
Alyssa Healy
Alyssa Healy/twitter

தனது 16-வது வயதில், பள்ளி அணிக்கு விக்கெட் கீப்பராகத் தேர்வு பெற்றார் அலிசா. அதன்மூலம், முதல்முறையாக ஒரு ஆண்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் என்ற பெருமையைப் பெற்றார். முதல் போட்டியில், ஆண்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக களம் கண்டார் அலிசா. அந்தப் போட்டி முடிந்த பின்பு பள்ளி நிர்வாகத்துக்கும் உள்ளூர் ஊடகங்களுக்கும் அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த இ-மெயிலில்...

பார்க்கர்ஸ் பள்ளி அணியை யாராவது காப்பாற்றுங்கள். ஆண்கள் அணியில் ஒரு பெண்ணைச் சேர்த்திருப்பது கிரிக்கெட்டிற்கே அவமானம்
அடையாளம் தெரியாத நபரின் இ-மெயில்

பள்ளி அணியின் பயிற்சியாளர், அந்த இ-மெயிலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், "தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இப்படி ஒரு இ-மெயிலை அனுப்பியிருப்பவன் நிச்சயம் தைரியமில்லாதவனாகத்தான் இருக்க முடியும். அலிசாவின் செலக்‌ஷன் அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு" என்று பேட்டியளித்தார். அலிசாவின் சித்தப்பா இயான் ஹீலியும், முன்னாள் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலெக்ஸ் பிளாக்கும் இ-மெயில் அனுப்பியவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நடந்தது 2006-ம் ஆண்டு. அப்போது இதுபற்றி வாய் திறக்காத அலிசா, 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மகளிர் அணிக்குத் தேர்வான பின்பு இது பற்றிப் பேசினார்...

நான் மீண்டும் ஆண்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன்... அவர்களுடன் விளையாடுவது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. மேலும், என்னுடைய திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் காரணமாக இருந்தது அதுதான்.
அலிசா ஹீலி
CSK-வின் இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை, செய்யவும் முடியாது! #UnbreakableIPLRecords
Alyssa Healy
Alyssa Healy
Alyssa Healy/Twitter

பள்ளி அணிக்குத் திறம்பட ஆடியதன் விளைவாக, உள்ளூர் அணியான நியூ சவுத் வேல்ஸ் அணிக்குத் தேர்வானார் அலிசா. மிடில் ஆர்டர், ஓப்பனர் என்று மாற்றி மாற்றி பேட்டிங் ஆடி வந்தவர், 2009-ம் ஆண்டு முதல் நியூசவுத் வேல்ஸ் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பரானார். 2010-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் ஜோடி ஃபீல்ட்ஸூக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால், சர்வதேச அணிக்கு முதல் முறையாகத் தேர்வானார் அலிசா. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடிய தன் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், டெத் ஓவரில் களமிறங்கினார் அலிசா. 11 பந்துகளைச் சந்தித்தவர் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு நல்ல ஃபினிஷிங்கைத் தந்தார். அதன் பிறகான மூன்று ஆட்டங்களிலும் அலிசா சரிவர விளையாடவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளைக்கொண்ட டி20 தொடரில் வெறும் 17 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார் அலிசா.

2010 டி20 உலகக் கோப்பை அணிக்கு விக்கெட் கீப்பராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டர். அன்று முதல் 2016-ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் சில ஏற்றங்களையும் பல இறக்கங்களைச் சந்தித்து வந்த அலிசா ஹீலிக்கு இதோடு கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.

''எனக்கு அப்போது 26 வயதிருக்கும். என் கிரிக்கெட்டை நானே வெறுத்துக்கொண்டிருந்தேன். இனிமேல் நான் என்ன சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. இதற்கு மேல் என் கிரிக்கெட்டை மேம்படுத்திக்கொள்ள முடியுமா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை.''
அலிசா ஹீலி

மேற்கண்டவற்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய அலிசா, இதைப் பற்றி அப்போதைய அணிப் பயிற்சியாளர் ஷான் ஃபளக்கரிடமும் (shawn fleger) பேசியுள்ளார். "நான் கிரிகெட்டில் சரியான பாதையில் செல்லவில்லை. நான் ஓய்வுபெறுவதே எனக்கு மகிழ்ச்சியைத் தரும். நான் இதுவரை அணிக்காகச் செய்ததும் அணிக்குக் கிடைத்த வெற்றிகளுமே எனக்கு போதுமானது" என்று பயிற்சியாளரிடம் பேசியுள்ளார்.

Alyssa Healy
Alyssa Healy

அதற்குப் பிறகு, பயிற்சியாளர் ஷான் ப்ளெக்கர் கொடுத்த நம்பிக்கைதான் அவரை இன்று வரை அணியில் வைத்துள்ளதாகவும் அந்தப் பேட்டியில் மனம் திறந்திருக்கிறார் அலிசா.

''என்னை, எது மீண்டும் கிரிக்கெட் ஆட வைத்தது என்று தெரியவில்லை. 'நீ சரியான பாதையில்தான் செல்கிறாய். அணிக்காக உனது வேலையைச் சரியாகத்தான் செய்து வருகிறாய்' என்று பயிற்சியாளர் ஃப்ளெக்கர் கொடுத்த நம்பிக்கைதான் இன்று வரை நான் விளையாடக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். மேலும், 2017-ம் ஆண்டு, பெண்களுக்கான ஆஷஸ் தொடரிலிருந்து என்னை டாப் ஆர்டரில் பேட் செய்யச் சொன்னார்கள். அதுதான் கிரிக்கெட்டில் என்னுடைய அணுகுமுறையையும் என்னுடைய கேமையும் மாற்றியமைத்தது.''
அலிசா

2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓப்பனிங், 5-வது டவுண் என மாறி மாறி ஆடிக்கொண்டிருந்த அலிசா முழு நேர ஓப்பனராகக் களமிறங்கத் தொடங்கனார். அன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்குள்ளாக ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு ஃபார்மெட்டிலும் 1000 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் பல அதிரடி இன்னிங்ஸ்களையும் ஆடியுள்ளார் அலிசா.

அலிசா ஹீலி
அலிசா ஹீலி
Australian Women's Cricket Team/Twitter

அவர் ஆடிய அதிரடி இன்னிங்ஸ்களில் முதலிடம் பிடிக்கும் இன்னிங்ஸாக இருப்பது, 2019-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆடியதுதான். 61 பந்துகளில் 19 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 148 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்த ஸ்கோர்தான் மகளிர் சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்சம்.

ஆண்களுக்கான சர்வதேச டி20 போட்டிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அலிசாவின் இந்த 148 ரன்கள்தான் நான்காவது தனிநபர் அதிகபட்சமாகும்.

கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள அலிசா ஹீலி, கிரிக்கெட் தொடர்பான கின்னஸ் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். 'அதிக உயரத்திலிருந்து விழுந்த கிரிக்கெட் பந்தைப் பிடித்தவர்' என்ற சாதனைதான் அது. கிறிஸ்டன் பாம்கார்ட்னர் என்ற இங்கிலாந்தின் டொமெஸ்டிக் கிரிக்கெட்டர் 62 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த கிரிக்கெட் பந்தைப் பிடித்து கின்னஸ் சாதனை செய்திருந்தார். அந்தச் சாதனையைக் கடந்த ஆண்டு முறியடித்தார் அலிசா. 82.5 மீட்டர் (270 அடி) உயரத்திலிருந்து ஹெலிகேம் மூலம் கீழ் நோக்கி வீசப்பட்ட கிரிக்கெட் பந்தைப் பிடித்து இந்தச் சாதனையைச் செய்தார் அலிசா.

இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்ட சில நாள்களிலேயே, சாம் நார்மன் என்ற லோக்கல் ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர், 89.9 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பந்தைப் பிடித்து அலிசாவின் சாதனையை முறியடித்தார். அடுத்த சில நாள்களிலேயே கிறஸ்டன் பாம்கார்ட்னர் 114 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பந்தைப் பிடித்து மீண்டும் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

அலிசா ஹீலி
அலிசா ஹீலி
Vikatan Infographics

பேட்டிங்கைப் போல விக்கெட் கீப்பிங்கிலும் பல டெக்னிக்குகளைக் கையாண்டவர் அலிசா. சர்வதேச டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் மூலம் அதிக டிஸ்மிசல்களில் ஈடுபட்டவராக இருந்து வருகிறார் அலிசா.

Alyssa Healy
Alyssa Healy
Vikatan Infographics

2018-ம் ஆண்டு, விக்கெட் கீப்பிங்கின்போது கையாண்ட உத்தி ஒன்று வீடியோவாக வைரல் ஆனது. அந்த வீடியோவை ட்விட்டரில் வசிக்கும் தோனி ரசிகர்கள் 'லேடி தோனி' என்ற வாசகத்தோடு பகிர்ந்தனர். அந்த வீடியோவில், மகளிர் பிக் பேஷ் லீக் போட்டியில் தோனியைப் போலவே ஸ்டம்ப்பைப் பார்க்காமல் லாங்கிலிருந்து வந்த த்ரோவை பின்பக்கம் திரும்பியிருந்தபடி சரியாக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்தார் அலிசா. இதன் காரணமாகத்தான் 'லேடி தோனி' எனப் புகழப்பட்டார்.

தோனியோடு இவரை ஒப்பிட மேலும் சில காரணங்களைக்கூட சொல்லலாம். தோனிதான் ஆடவர்களுக்கான சர்வதேச டி20 போட்டிகளில் அதிக டிஸ்மிசல்களைச் செய்தவர். அதிக டி20 உலகக் கோப்பைகளில் ஆடிய விக்கெட் கீப்பரும் தோனிதான். அதிரடியாக ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்களில் தோனி முக்கியமானவர்.

தோனி சூடிக்கொண்டிருக்கும் இந்தப் பெருமைகள் எல்லாம் அலிசாவிற்கும் பொருந்தும் என்பதால், இவரை 'லேடி தோனி' என்று சொல்வதில் தவறேதுமில்லை.

அலிசா, தன் ஆட்டத்தின்மீது வெறுப்புகொண்டு ஓய்வுபெறலாம் என நினைத்து, பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்ட பிறகுதான் கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். ஆம்! அந்த முடிவை மாற்றிக்கொண்ட பின்னர்தான் ஐசிசி மகளிர் கிரிக்கெட்டருக்கான விருதை இரண்டு முறை (2018, 2019) பெற்றார். 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை நடைபெற்ற 5 டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார். ஆனால், ஓய்வு பெறலாம் என்ற முடிவை மாற்றிக்கொண்ட பிறகு ஆடிய இரண்டு உலகக் கோப்பைகளிலும்தான் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் அலிசா.

டி20 உலகக் கோப்பை நாயகி!
2018-ல் தொடர் நாயகி, 2020-ல் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகி எனும் சாதனைகளைத் தன்வசப்படுத்தியிருந்தார் அலிசா.
Alyssa Healy
Alyssa Healy
Alyssa Healy/Twitter

ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில், சரியான நேரத்தில் சரியான மனிதர்களைச் சந்தித்து, சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிச்சயம் வரும். அப்படி அமையும் சூழ்நிலைகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் புகழ்பெற முடியும். அப்படி சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, புகழ்பெற்றவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் சரியான டிரெய்னைப் பிடித்த தோனியின் பெயர் இருக்கும். கூடவே கிரிக்கெட்டில் சரியான ட்ராக்கிற்கு மாறிய 'லேடி தோனி' அலிசா ஹீலியின் பெயரும் நிச்சயம் இருக்கும்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அலிசா பல சாதனைகளைச் செய்திருக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. அலிசாவின் அதிரடி ஆட்டமும் இந்த கவனம் பெறலுக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கும். எதிர்காலத்தில் பெண்கள் கிரிக்கெட் மிகப் பெரிய களமாக மாறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த மிகப் பெரிய களத்தில் விளையாட வேண்டுமென்ற கனவுகளோடு, உலகம் முழுவதும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஜூனியர் லேடி கிரிக்கெட்டர்களுக்கு, 16 ஆண்டுகளாகக் களத்திலிருக்கும் அலிசா ஹீலி நிச்சயம் ஒரு இன்ஸ்பரேஷன்!

உலகக் கோப்பை நாயகி அலிசா ஹீலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கேள்விக்குறியாகும் 2020 ஐ.பி.எல்... இனி தோனியின் எதிர்காலம் என்ன? #Dhoni #T20Worldcup
அடுத்த கட்டுரைக்கு