Published:Updated:

ஸ்டெய்ன் அவுட்... ஸ்டார்க் இன்..! RCB ஆல்டைம் லெவன்!

எந்த சீஸனிலுமே பிளேயிங் லெவனைச் சரியாகத் தேர்வு செய்திடாத ராயல் சேலஞ்சர்ஸின் ஆல்டைம் லெவன் எப்படி இருக்கும்? அந்த விஷப் பரிட்சையில் இறங்கித்தான் பார்ப்போமே!

ஸ்டெய்ன் அவுட்... ஸ்டார்க் இன்..! RCB ஆல்டைம் லெவன்!

எந்த சீஸனிலுமே பிளேயிங் லெவனைச் சரியாகத் தேர்வு செய்திடாத ராயல் சேலஞ்சர்ஸின் ஆல்டைம் லெவன் எப்படி இருக்கும்? அந்த விஷப் பரிட்சையில் இறங்கித்தான் பார்ப்போமே!

Published:Updated:

ராயல் சேலஞ்சர்ஸின் தவிர்க்க முடியாத வீரர்களை முதலில் தேர்வு செய்துவிடுவோம். கோலி, கெய்ல், டி வில்லியர்ஸ்… இவர்கள் மூவரும் ஐ.பி.எல் ஆல்டைம் லெவனிலேயே இடம்பிடிக்கக்கூடியவர்கள். அதனால், ஏன் எதற்கு என்று காரணம் சொல்லி அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கோலி பல நேரங்களில் ஓப்பனராக ஆடியிருந்தாலும், ஒன் டவுன் வருவதுதான் அவருக்கும் அவரைவிட அணிக்கும் நல்லது. அதனால் கோலி @3, டி வில்லியர்ஸ் @4.

கெய்லோடு ஓப்பனிங் இறங்கப்போவது யார்? சொல்லப்போனால், கோலி - கெய்ல் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்துப் பார்க்கும்போது அந்த அணிக்கு நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைந்ததில்லை. தில்ஷன் ஓரளவு நன்றாக ஆடியிருந்தாலும், நம்பர்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதுவுமில்லாமல், மீதமிருக்கும் இரண்டு ஓவர்சீஸ் ஸ்லாட்களை ஆல்ரவுண்டருக்கும் பௌலர்களுக்கும் ஒதுக்கிவிடுவோம். மீதமிருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் உருட்டிப் பார்த்தால், பார்திவ் பட்டேல் அந்த அணியின் ஓப்பனர் ஸ்லாட்டுக்குச் சரியாக இருப்பார். ராயல் சேலஞ்சர்ஸுக்காக சுமார் 25 என்ற சராசரியில் 731 ரன்கள் எடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் ஸ்லாட்டையும் அவரே நிரப்புவதால் அணிக்கு அது சாதகம்தான்.

Kallis
Kallis

ஆல்ரவுண்டர்… ஆர்.சி.பி கொடுத்து வைக்காத இடம். உலகத்தர பேட்ஸ்மேன்களும் பௌலர்களும் வாய்க்கப்பெற்றாலும் இந்த ஏரியாவில் ஒரு சரியான ஆள் இல்லாமல்தான் சமீப காலமாகத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முதல் மூன்று சீஸன்களில் உலகின் மிகச் சிறந்த ஒரு ஆல்ரவுண்டர் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். கே.எல்.ராகுலைத் தாரை வார்த்ததைப்போல் அவரையும் விட்டது பெங்களூரு. ஜாக் காலிஸ்! மூன்றாவது ஐ.பி.எல் சீஸன்… 572 ரன்கள், 13 விக்கெட்டுகள்… என்னவொரு சீஸன்! இரண்டாவது சீஸனிலும்கூட காலிஸ் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். அப்படியொரு ஆல்ரவுண்டரை வெளிய விட்டது ஆர்.சி.பி செய்த மிகப்பெரிய தவறு.

ஆர்.சி.பி-யின் அடுத்த நல்ல பேட்ஸ்மேனைத் தேர்வு செய்வதுதான் மிகவும் கடினமான விஷயம். இந்திய வீரர்களில் யாரும் பெங்களூரின் மிடில் ஆர்டரில் பெரிய பங்களிப்பைக் கொடுக்கவில்லை. கே.எல்.ராகுல் ஒரு சீஸனில் மட்டும் ஆடியதால், அவரை ஆல்டைம் லெவனில் இடம் தருவது சரியாகத் தெரியவில்லை. அதனால் மந்தீப், டிராவிட் இரிவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இதுதான் மிகவும் குழப்பாமான இடம். முதல் மூன்று சீஸன்களில் டிராவிட் நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். மந்தீப், தான் ஆடிய சீஸன்களில் சில முக்கியமான இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கிறார். நம்பர்கள் வைத்துப் பார்த்தால், மந்தீப்பின் சராசரி 17-தான். ஆனால், டிராவிட் சுமார் 25 என்ற சராசரியில் ஆடியிருக்கிறார். அதனால், பெங்களூரின் மார்க்கீ வீரரே அந்தக் கடைசி பேட்ஸ்மேனுக்கான இடத்தைப் பிடிக்கிறார்.

Mitchell Starc
Mitchell Starc

ராயல் சேலஞ்சர்ஸைப் பொறுத்தவரை 5 பௌலர்களோடு செல்வதுதான் அவர்களுக்கு எப்போதும் நல்லது. 7-வது இடத்துக்கு பேட்ஸ்மேனைக் கண்டுபிடிப்பதைவிட, 5 பௌலர்களை எளிதாகத் தேர்வு செய்துவிடலாம் என்பதால் 5 பௌலர் ஃபார்மேஷனோடு செல்வோம். இருக்கும் ஒரு ஓவர்சீஸ் ஸ்லாட்டை மாற்றுக்கருத்தே இல்லாமல் மிட்செல் ஸ்டார்க் வசம் ஒப்படைத்துவிடலாம். தன் மிரட்டல் யார்க்கர்களால் ஸ்டம்ப்களைச் சிதறவிட்டுக்கொண்டே இருந்துவரை விட முடியாது அல்லவா! அதனால், ஸ்டெய்னுக்குக்கூட அணியில் இடம் இல்லை!

ஸ்பின்னர்களாக கும்ப்ளே, சஹால்… இரண்டு லெக் ஸ்பின்னர்களா என்று யோசிக்க வேண்டாம்! இருவருமே ராயல் சேலஞ்சர்ஸின் மிக மிக முக்கிய பௌலர்கள். இருவருமே மேட்ச் வின்னர்களாக விளங்கியிருக்கிறார்கள். அதனால், நிச்சயம் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், இரண்டாவது சீஸனில் அந்த அணியை அட்டகாசமாக ஃபைனலுக்கு வழிநடத்திச்சென்ற ஜம்போதான் இந்த ஆல்டைம் அணிக்குக் கேப்டன்! வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்லாட்களுக்கு வினய் குமார் & ஜஹீர் கான். ஜஹீர் 44 போட்டிகளில் 49 விக்கெட்டுகள் வீசியிருக்கிறார். வினய் குமார் பெங்களூருக்காக 64 போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். எகானமி அதிகமாக இருந்தாலும், எப்போதும் விக்கெட் டேக்கராக இருந்திருக்கிறார். அதனால், அவர்கள் இருவரும் கடைசி இரண்டு இடங்களையும் நிரப்புகிறார்கள்.