Published:Updated:

இறுதிப்போட்டி டிராவானால்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைகள்!

கார்த்திகா ராஜேந்திரன்

இறுதிப்போட்டி டிரா அல்லது டை-யானால், இரண்டு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பகிர்ந்து அளிக்கப்படும்.

Indian team
Indian team

உலகக் கோப்பை 'போர்' முடிந்துள்ள நிலையில், அடுத்த போருக்குத் தயாராகிவிட்டது 'கிரிக்கெட்'. இந்த முறை போர் நடைபெறுவது டெஸ்ட் கிரிக்கெட்டில்! ஒரு நாள், டி- 20 உலகக் கோப்பைகளைப் போன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியனைத் தேர்ந்தெடுக்க ஐசிசி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தொடர், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்'. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப்பைப் பற்றிய முழு விவரம் இங்கே...

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் அணிகள்

டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்ப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.

Teams participating ICC Test Championship
Teams participating ICC Test Championship

இதுவரை, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி, டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஓர் ஆண்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து புள்ளிகள் கணக்கிடப்பட்டுவந்தன. அந்த சீஸன் முடியும்போது, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு, 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் maze' கொடுக்கப்பட்டது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபார்மட், இரண்டு ஆண்டுகள் நடைபெறும். இதில், ஒவ்வொரு bilateral டெஸ்ட் தொடர்களுக்கும், உலகக் கோப்பைப் போட்டிகளைப்போல் புள்ளிகள் வழங்கப்படும். இந்த இரண்டு ஆண்டுகள் காலகட்டத்தில், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியில் மோதும்.

இதனால், ஒவ்வொரு தொடருக்குமான முக்கியத்துவம் அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகள் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் போட்டி முடிவுகளுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். டாப் இரண்டில் இடம்பிடிக்க ஒவ்வோர் அணியும் மெனக்கெடும் என்பதால், டெஸ்ட் போட்டியில் உள்ள சுவாரஸ்யம் அதிகரிக்கும்!

புள்ளிக் கணக்கு எப்படி?

ஒவ்வோர் அணியும் குறைந்தபட்சம் ஆறு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். சொந்த மண்ணில் மூன்று தொடர்களிலும், வெளியூரில் மூன்று தொடர்களிலும் விளையாட வேண்டும். இரண்டு அல்லது அதற்கும் அதிகமான போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதிகபட்சமாக ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர்கள் நடைபெறும். ஒரு தொடரின் போட்டி, எண்ணிக்கையைக் கொண்டு புள்ளிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ICC Test Championship Point system
ICC Test Championship Point system
முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் மற்றும் பெயர் கொண்ட ஜெர்ஸிகளை அணிந்து விளையாட உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடருக்கு, மொத்தம் 120 புள்ளிகள் வழங்கப்படும். தொடரின் போட்டி, எண்ணிகையின் அடிப்படையில் புள்ளிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில், ஒவ்வொரு போட்டிக்கும் தலா 60 புள்ளிகள் கொடுக்கப்படும். மூன்று போட்டிகள் இருந்தால், தலா 40 புள்ளிகளும், நான்கிற்கு தலா 30 புள்ளிகளும், ஐந்திற்கு தலா 24 புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன. எனவே, ஒரு தொடரை முழுவதுமாக வென்றால், மொத்தமாக 120 புள்ளிகளைப் பெறலாம்.

இதேபோல, போட்டி எண்ணிக்கையைக்கொண்டு டிரா, டை ஆகும்போது, புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்படும். போட்டி டை-யானால், வெற்றிபெற்றால் வழங்கப்படும் புள்ளிகளின் பாதி வழங்கப்படும். தோல்வியடைந்தால் புள்ளிகள் கிடையாது.

இறுதிப்போட்டி டை-யானால்?

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும். 2021 ஜூன் 10-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்றும் முடிவு எட்டப்படாத நிலையில், பவுண்டரிகளை கணக்கில்கொண்டு யார் சாம்பியன் என்பது நிர்ணயிக்கப்பட்டது. 'இப்படியும் விதிமுறைகள் உண்டா?' என கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதேபோல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் டை-யானால்?

இறுதிப்போட்டி டிரா அல்லது டை-யானால், இரண்டு அணிகளுக்கு சாம்பியன்ஷிப் பகிர்ந்து அளிக்கப்படும். ஒருவேளை போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டு விளையாட்டு தடைப்பட்டால், ரிசர்வ் தினத்தில் போட்டி நடத்தப்படும். ஆனால், இதிலும் சில விதிமுறைகள் உள்ளன.

ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணி நேரம் மழையால் தடையானால், அதே நாள் முடிவில் போட்டி தொடரும். மழை காரணத்தால் ஒரு முழு நாள் தடைப்படும்போது மட்டுமே ரிசர்வ் தினத்தில் போட்டி தொடரும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா

ICC Test Champioship - Indian team schedule
ICC Test Champioship - Indian team schedule

2019 ஆகஸ்ட் மாதம், வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது

வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, மொத்தம் 8 போட்டிகளில் விளையாடுகிறது. ஹோம் கிரவுண்டில் நடைபெறும் போட்டிகளில், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது.