பிங்க் பால் டெஸ்ட் போட்டியை வென்று, 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்றது இந்திய அணி. பரிசளிப்பு விழாவின் முடிவில், இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் 'சாம்பியன்ஸ்' போர்டுக்குப் பின்னால் கோப்பைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அணியின் கேப்டனான கோலியோ கோப்பையை பெற்றுச் சென்று ஒரு இளம் வீரரிடம் ஒப்படைத்தார். இந்த டெஸ்ட் தொடரில் விளையாடாத அந்த இளம் கிரிக்கெட்டர் யார்... கோப்பையை அவரிடம் ஒப்படைத்ததற்குக் காரணம் என்ன?
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணி, ஓர் புதிய பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது. தொடரை வென்ற பிறகு, கோப்பையைக் கைப்பற்றும் அணியின் கேப்டன், அதை அணியின் ஒரு இளம் வீரரிடம் ஒப்படைக்கின்றார். தோனிதான் இதை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு கோலி, அவ்வப்போது தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா என இருவருமே தற்போது இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.
கோப்பையைப் பெற்ற அந்த கிரிக்கெட்டர் யார்?
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், ரிசர்வ் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட்டை, அணியிலிருந்து ரிலீஸ் செய்வதாக தேர்வுக்குழு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ரிஷப் பன்ட்டும் சையத் முஸ்தாக் அலி டிராஃபியில் டெல்லின் அணியின் சார்பாக விளையாடக் கிளம்பிவிட்டார். இந்நிலையில்தான், பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்குப் புதிய ரிசர்வ் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு சின்ன ரீவைண்ட்
நாள்: ஏப்ரல் 5, 2005
இடம்: விசாகப்பட்டினம் Y.S.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானம்.
ஒரு நாள் போட்டி: இந்தியா vs பாகிஸ்தான்
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஒன் டவுன் ஆர்டரில் களமிறங்கிய தோனி, 123 பந்துகளில் 148 ரன்களை அடித்து விளாசினார். தோனியின் இந்த அதிரடி பேட்டிங்கையும் அவர் அடித்த 15 பவுண்டரிகளையும் அந்த லைனுக்கு வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் 11 வயதேயான பரத். பவுண்டரி அடித்த பந்துகளை எடுத்துப்போடுவது முதல், `இந்தியா ஏ' அணியில் இடம் பிடித்ததுவரை தொடர்ந்து தன்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
``அந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்புவரை தோனியை எனக்குத் தெரியாது. ஆனால், இந்த மேட்ச்சில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துதான் அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன். 2007, டி-20 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்திச் சென்றதைப் பார்த்ததிலிருந்து தோனியின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். இறுதியில் நானும் கிரிகெட்டில் சாதிக்க வேண்டுமென ஆசைகொண்டேன்" கிரிக்கெட் மீது தனக்கு ஏற்பட்ட தீராக் காதலை ஒரு முறை பகிர்ந்திருந்தார் பரத்.

கிரிக்கெட்தான் தன்னுடைய கரியர் என்பதில் உறுதியாக இருந்த அவர், விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டு, 19 வயதில் ஆந்திரா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஆசைப்பட்ட பரத், அதற்கான பயிற்சியிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.
முதல் தர கிரிக்கெட்டில் பரத்
2015-ம் ஆண்டு கோவா அணிக்கு எதிரான போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய பரத், 308 ரன்களை அடித்து நொறுக்கினார். அப்போது, ரஞ்சி கோப்பைக்கான போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்ற சாதனையையும் படைத்திருந்தார். மேலும், 200+ ஸ்கோர் அடித்த முதல் ஆந்திரா பேட்ஸ்மென் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.
அதே ஆண்டு, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் திரும்பிப் பார்க்காமலே ஸ்டம்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2015, ஜனவரி 1 முதல் 2018, செப்டம்பர் 6 வரையிலான தரவுகளை எடுத்துப்பார்த்தால் இவரது சாதனைகள் தெரிய வரும். முதல் தர கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் விளையாடியிருக்கும் பரத், 141 கேட்ச்கள், 14 ஸ்டம்பிங் என ஃபீல்ட்டிங் டிப்பார்ட்மென்டிலும் அசத்தியுள்ளார். இதே இடைவெளியில் மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரரும் இவர்தான் எனத் தெரிய வரும்.
தொடர்ந்து சாதித்தன் மூலம் 'இந்தியா ஏ' அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். கடந்த 18 மாதங்களில், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து 'ஏ' எனப் பல்வேறு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.
பரத், இந்திய அணியில் இடம்பிடிக்கும் நேரம் வெகுதூரத்தில் இல்லை என நம்பிக்கை தெரிவிக்கிறார் அவரது பயிற்சியாளர் கிருஷ்ண ராவ். ``சிறு வயதில் கிரிக்கெட் விளையாட வந்த பரத்தை, விக்கெட் கீப்பிங் செய்யுமாறு ஊக்கமளித்தது வீண்போகவில்லை. பரத்தின் விக்கெட் கீப்பிங் ஒரு நாள் கட்டாயம் பேசப்படும். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் கிருஷ்ண ராவ்.

"டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரித்திமன் சாஹா, பன்ட், பரத் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களை இந்திய அணிக்காகத் தேர்வு செய்ய உள்ளோம்" என இந்திய அணித் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
எதிர்காலத்தில் இந்திய அணியின் கீப்பராக தேர்வு செய்ய இவரே நல்ல சாய்ஸ் என்பதை டேட்டாக்களும் சொல்கிறது. முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆறு ஆண்டுகளான நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் பரத். ஆல் தி பெஸ்ட் ப்ரோ!