Published:Updated:

பும்ராவை பாதித்த ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர்... அன்ஆர்த்தடாக்ஸ் பௌலிங்தான் காரணமா? #Bumrah

Jasprit Bumrah
Jasprit Bumrah

இந்தப் பிரச்னைக்குப் பிறகு, அவரது பெர்ஃபாமென்ஸில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா அல்லது பும்ரா தனது பௌலிங் ஸ்டைலை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமா என்பதுதான் இந்திய ரசிகர்களின் கவலையெல்லாம்.

கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களிலும், இந்திய அணியின் பெளலிங் படையில் முக்கியமானவர் ஜஸ்ப்ரித் பும்ரா. குறைந்த காலத்தில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராகக் கோலோச்சி நிற்கும் இந்த வேகப்புயல், இந்திய அணியின் துருப்புச்சீட்டு. டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என மூன்று ஃபார்மேட்டிலும் தன் திறமையை உலகுக்குத் தொடர்ந்து வெளிப்படுத்திவருபவர். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அசத்திவந்த பும்ராவுக்கு, சொந்த மண்ணில் நடக்கவிருந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கைநழுவிப்போனது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Jasprit Bumrah
Jasprit Bumrah

மருத்துவச் சொற்களில் இந்தப் பிரச்னையை 'ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர்' (Stress Fracture) என்கின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் இந்த 'ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர்' பும்ராவையும் விட்டுவைக்கவில்லை. சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள பும்ரா, குறைந்தது ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் ஆண்ட்ரூ லெய்பஸ் தெரிவித்துள்ளார்.

அதென்ன 'ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர்' ?

பும்ராவை பாதித்துள்ள ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர், விளையாட்டு வீரர்களை மட்டும்தான் பாதிக்குமா? என்று விளையாட்டு மருத்துவ நிபுணர் சத்யா விக்னேஷிடம் கேட்டோம்.

Dr.Satya Vignesh
Dr.Satya Vignesh

"ஒரு செயலைத் தொடர்ச்சியாக ஒருவர் செய்துகொண்டே இருக்கும்போது, உதாரணமாக, ஒருவர் ஓடிக்கொண்டே இருக்கிறார், விளையாடிக்கொண்டே இருக்கிறார் என்றால், உடலில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசைகள் சோர்வடைந்து வலுவிழந்துவிடும். தசைகள் வலுவிழந்த நிலையில், மீண்டும் அதே செயலைச் செய்யும்போது ஏற்படும் பளுவை (Load) தசைகள் ஏற்றுக்கொள்ளாது. அதனால், அந்தப் பளு நேரடியாக எலும்பைத் தாக்கி, சிறிய அளவில் முறிவை ஏற்படுத்தும்.

Vikatan

முறிவு ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து அதே செயலைச் செய்யும்போது, பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுப் பகுதியில்தான் இந்தப் பிரச்னை ஏற்படும். அடி முதுகுப்பகுதியில், அதுவும் இளைஞர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவது மிகவும் அரிதானது.

Jasprit Bumrah
Jasprit Bumrah

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களைத் தவறாகக் கையாள்வது, முறையில்லாத டெக்னிக்கைப் பயன்படுத்தி விளையாடுவது போன்றவற்றால் இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம். தடகள விளையாட்டு வீரர்கள், கால்பந்து வீரர்களுக்கு, இந்தப் பிரச்னை ஏற்படும்.

எலும்பு முறிவு மிகவும் சிறிய அளவில் இருக்கும்போது (Hairline Fracture), 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருந்தாலே போதுமானது. தீவிரம் அதிகமாக இருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படலாம். அதன்பிறகு ஓய்வு, பிசியோதெரபி பயிற்சிகள், உணவுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், ஆறு மாதங்களில் மீண்டும் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கிவிடலாம்'' என்கிறார்.

பும்ரா பௌலிங் ஸ்டைல் மாறுமா?

ஆறு வருடங்களுக்கு முன், முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய பும்ராவின் unorthodox பெளலிங் ஆக்‌ஷன்தான் அவரை தனித்துவமாகக் காட்டுகிறது. முதல் முறையாக 'ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சரா'ல் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா, இந்தப் பிரச்னைக்குப் பிறகு அவரது பெர்ஃபாமென்ஸில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா அல்லது பௌலிங் ஸ்டைலை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுமா என்பதுதான் இந்திய ரசிகர்களின் கவலையெல்லாம்.

Jasprit Bumrah
Jasprit Bumrah

இந்நிலையில், இது தொடர்பாகப் பேசியிருக்கும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா,"தனித்துவமான பெளலிங் ஸ்டைல்தான் பும்ராவின் பலம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது வழக்கம். முறையான ஓய்வும் சிகிச்சையும் இருந்தால் குணாமகிவிடும். தனது பெளலிங் ஸ்டைலை மாற்றவேண்டிய அவசியம் இருக்காது" என்று தெரிவித்துள்ளது, ரசிகர்களைச் சற்று ஆசுவாசப்படுத்தியுள்ளது.

பூம்... பூம்... பும்ரா!

நிபுணர் சொல்வது என்ன?

'கிரிக்கெட் வீரர்களின் கரியரைப் பாதிக்குமா இந்த ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர்?' என்று கிரிக்கெட் பயிற்சியாளர் ஶ்ரீநாத்திடம் கேட்டோம்.

Cricket coach Srinath
Cricket coach Srinath

"எந்த ஒரு காயத்தின் பாதிப்பைப் பற்றிக் கணிக்கும் முன், அதே பகுதியில் ஏற்பட்ட முந்தைய காயங்களை ஆராய வேண்டும். தொடர் பயிற்சிகளினால் இதுபோன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால், பெளலிங் அல்லது பேட்டிங் ஸ்டைலில் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், கட்டாயமாகப் பயிற்சி முறைகளில் மாற்றம் இருக்கும். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில், கூடுதல் அழுத்தம் தராமல் பயிற்சி முறைகளை மாற்றியமைக்க வேண்டும். இதனால் கரியரில் பாதிப்புகள் ஏற்படாது. ஓய்வளிக்காமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, பாதிப்பு அதிகமாகும்" என்றார்.

காயத்திலிருந்து மீண்டு, மீண்டும் பூம்...பூம்...பும்ராவாகக் களம் காண, வீ ஆர் வெயிட்டிங் ப்ரோ!
அடுத்த கட்டுரைக்கு