Published:Updated:

ஆல்ரவுண்டர் Alice Capsey, பௌலிங்கில் மிரட்டும் Freya Kemp - பார்ட்னர்ஷிப் போடும் 17 வயது வீராங்கனைகள்!

England-W team

அலீஸ் கேப்ஸி பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஃப்ரேயா கெம்ப்! இங்கிலாந்து அணிக்கு புதிய பரிணாமத்தைக் கொடுப்பதால் இருவரும் தவிர்க்க முடியாத வீரர்களாக உருவெடுக்கப்போகிறார்கள்.

ஆல்ரவுண்டர் Alice Capsey, பௌலிங்கில் மிரட்டும் Freya Kemp - பார்ட்னர்ஷிப் போடும் 17 வயது வீராங்கனைகள்!

அலீஸ் கேப்ஸி பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஃப்ரேயா கெம்ப்! இங்கிலாந்து அணிக்கு புதிய பரிணாமத்தைக் கொடுப்பதால் இருவரும் தவிர்க்க முடியாத வீரர்களாக உருவெடுக்கப்போகிறார்கள்.

Published:Updated:
England-W team

நடந்துவரும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. மூன்றாவது இடத்துக்கான போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இருந்தாலும், அதுவரை குரூப் சுற்றில் சிறப்பாகவே விளையாடியிருந்தது. பல இளம் வீராங்கனைகள் பட்டையைக் கிளப்ப, அடுத்த தலைமுறைக்கான அணி தயாராகிக்கொண்டிருக்கிறது.

சீனியர் வீராங்கனைகளுக்கு மத்தியில் இரண்டு 17 வயது சூப்பர் ஸ்டார்களை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அலீஸ் கேப்ஸி பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஃப்ரேயா கெம்ப்! இங்கிலாந்து அணிக்கு புதிய பரிணாமத்தைக் கொடுப்பதால் இருவரும் தவிர்க்க முடியாத வீரர்களாக உருவெடுக்கப்போகிறார்கள்.
Alice Capsey
Alice Capsey

அலீஸ் கேப்ஸி

காமன்வெல்த் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டபோது பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. கடந்த ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனைக்கான ஐசிசி விருது வென்ற டேமி பூமான்ட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் அதுவரை இரண்டே சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடியிருந்த அலீஸ் கேப்ஸி இடம்பெற்றிருந்தார். ஆல்ரவுண்டராக இருப்பதால் அணியில் இடம் கிடைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அவரை முக்கிய துருப்புச் சீட்டாக கருதியது இங்கிலாந்து அணி. அவர்களின் நம்பிக்கையை தன் செயல்பாட்டால் நியாயப்படுத்தியிருக்கிறார் கேப்ஸி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2004ம் ஆண்டு பிறந்த 2K கிட்தான் அலீஸ் கேப்ஸி. ஆகஸ்ட் 11ம் தேதிதான் அவருக்கு 18 வயதே ஆகப்போகிறது. ஆனால் இரண்டு வருடம் முன்பே 'இவர்தான் இங்கிலாந்து அணியின் எதிர்கால ஓப்பனர்' என்று இங்கிலாந்து பத்திரிகைகள் இவரைப் பாராட்டின. ஆறு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே கலக்கினார். சர்ரி அணியின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவருக்கு கடந்த ஆண்டு நடந்த 'தி 100' தொடரில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியில் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் அவர்.

Alice Capsey
Alice Capsey
ஓவல் அணி கோப்பை வெல்வதற்கு இவருடைய பேட்டிங், பௌலிங் இரண்டும் பெரிதளவு உதவின. 8 இன்னிங்ஸ்கள் ஆடிய அவர், 21.42 என்ற சராசரியில் 150 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியான ஆட்டம் அந்த அணியின் மிடில் ஆர்டரை பலமாக்கியது. ஓவல் அணியின் பேட்டர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தது (126.05) இவர்தான். ஒரு அரைசதமும் அடித்திருந்தார் கேப்ஸி.
அதேபோல், ஆஃப் ஸ்பின்னரான கேப்ஸி 27 ஓவர்கள் பந்துவீசி 10 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். அதுவும் ஒரு பந்துக்கு 0.9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினார். ஓவல் அணியின் மையப் புள்ளியாக விளங்கிய மரிசான் காப், டேன் வான் நீகர்க் போன்ற உலகத்தர ஆல் ரவுண்டர்களுக்கு மத்தியில் கேப்ஸியின் பெயரும் தலைப்புச் செய்திகளை எட்டியது. அது இங்கிலாந்து அணிக்கான கதவுகளைத் திறந்துவிட்டது.

சர்வதேச அரங்கில் அவருடைய வருகை ஒரு 17 வயது வீராங்கனையைப் போல் இருக்கவில்லை. கிரிக்கெட் அரங்கையே ஆட்சி செய்த ஒரு சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ போல் இருந்தது. முதல் போட்டியில் பௌலிங் மட்டுமே செய்தார் கேப்ஸி. அதுவும் ஒரேயொரு ஓவர். ஆனால் இரண்டாவது பந்திலேயே விக்கெட். இரண்டாவது போட்டியில் 25 ரன்கள். அதை அடித்த விதத்திலேயே அவர் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை உணர்த்தினார்.

Alice Capsey
Alice Capsey

ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்க, மூன்றாவது வீரராகக் களமிறங்கினார் கேப்ஸி. ஆனால் எந்தப் பதற்றமும் இல்லை. இரண்டாவது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடித்து தன் வருகையை அறிவித்தார். ஒவ்வொரு ஷாட்டிலும் அப்படியொரு நம்பிக்கை. ஷார்ட் பால், ஃபுல் லென்த் டெலிவரி என எல்லா வகையான பந்துகளையும் எல்லா ஏரியாக்களிலும் பறக்கவிட்டார். கவர் டிரைவ், ஸ்டிரெய்ட் டிரைவ், கட், ஃபிளிக் என அனைத்து ஷாட்களையும் அநாயசமாக ஆடினார். அந்த ஆட்டத்துக்குப் பிறகு அவருக்கு காமன்வெல்த் அணியில் இடம் கிடைக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம்.

கேப்டன் ஹெதர் நைட் காயம் காரணமாக ஆட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாலும், அவரை இங்கிலாந்து அணி மிஸ் செய்யாத அளவுக்கு ஆடினார் கேப்ஸி. மூன்றாவது வீரராக களமிறங்கி சூறாவளியாகச் சுழன்றடித்தார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 44 ரன்கள். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அரைசதம் என இரண்டே போட்டிகளில் தன் செலக்‌ஷனை நியாயப்படுத்தினார். சோஃபி எக்கிள்ஸ்டன் (இடது கை ஸ்பின்னர்), சாரா கிளென் (லெக் ஸ்பின்னர்) அடங்கிய இங்கிலாந்து ஸ்பின் அட்டாக்குக்கு இவரது ஆஃப் ஸ்பின் இன்னொரு பரிணாமம் கொடுப்பது இன்னொரு பலம்!

ஃப்ரேயா கெம்ப்

இங்கிலாந்து அணியின் இன்னொரு துருவ நட்சத்திரம் ஃப்ரேயா கெம்ப். பெண்கள் கிரிக்கெட் அரங்கில் சமீப காலமாக பார்க்க முடிந்திடாத ஒரு அறிய வகை வீரர் இவர். இடது கை வேகப்பந்துவீச்சாளர்! சோஃபி எக்கில்ஸ்டன், ஜெஸ் ஜோனேசன், ராஜேஷ்வரி கெய்க்வாட் என பல இடது கை ஸ்பின்னர்கள் பெண்கள் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை சர்வதேச அரங்கில் காண்பது மிகவும் கடினமான விஷயமாகவே இருக்கிறது. ஃப்ரேயா கெம்ப் அரிய வகை பௌலர் மட்டுமில்லை. அட்டகாசமான பௌலரும் கூட! அதுதான் இங்கிலாந்து அணியில் அவருக்கான இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

தன்னுடைய சிறப்பான வேரியேஷன்கள் மூலம் எதிரணி வீரர்களைத் திக்குமுக்காடச் செய்யும் கெம்ப், தன் 14வது வயதிலேயே சசெக்ஸ் அணிக்காக கவுன்ட்டி போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு எல்லாமே அவருக்கு ஏறுமுகம்தான். முதல் கவுன்ட்டி டி20 போட்டியிலேயே விக்கெட்டோடு தொடங்கினார். 'தி 100' தொடரில் சதர்ன் பிரேவ் அணியில் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து நிர்வாகத்தின் கவனத்தைப் பெற்றார்.

Freya Kemp
Freya Kemp

காமன்வெல்த் தொடர் இங்கிலாந்திலேயே நடப்பதால், கெம்ப்பின் இடது கை பந்துவீச்சு, வேரியேஷன்கள் அணிக்குப் பெரிதும் கைகொடுக்கும் என நம்பியது இங்கிலாந்து அணி நிர்வாகம். அதனால் அதுவரை ஒரெயொரு சர்வதேச தொடரில் மட்டுமே ஆடியவரை காமன்வெல்த் தொடருக்குத் தேர்வு செய்தது. இந்தத் தொடருக்கு முன் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில்தான் அறிமுகம் ஆனார் அவர். முதல் ஓவரே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறப்பாக அமைந்தது. முதல் 5 பந்துகளையும் டாட் பாலாக வீசியவர், தன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் விக்கெட் வீழ்த்தினார். முதல் ஓவரே மெய்டன் விக்கெட். அதன்பின் ஒவ்வொரு போட்டிகளிலும் தன்னுடைய முன்னேற்றத்தைக் காட்டினார்.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டி தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்திருக்கிறார் கெம்ப். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை பந்தாடி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 12வது ஓவரிலேயே இலக்கை எட்டியது நியூசிலாந்து. அந்த இரண்டு விக்கெட்டுகளில் ஒன்று கெம்ப் வீழ்த்தியது.

பெரும்பாலான வீராங்கனைகள் இடது கை வேகப்பந்துவீச்சை சந்தித்திருக்கமாட்டார்கள் என்பதால் நிச்சயம் இங்கிலாந்து அணியின் மகத்தான ஆயுதமாக கெம்ப் உருவெடுப்பது உறுதி!