Published:Updated:

`மூடிய மைதானம்.. தோல்விகளே இல்லாத இந்தியா - பாகிஸ்தான் தொடர்!’ -அக்தரின் லாக்டவுண் கிரிக்கெட் ஐடியா

ஷோயப் அக்தர்
ஷோயப் அக்தர்

`இரண்டு நாடுகளும் மனிதநேய அடிப்படையில் விளையாடலாம். இருநாடுகளிலும் இருக்கும் நிலையை நாம் அறிவோம். தற்போது தொடரை முழுபாதுகாப்புடன் நடத்த சம்மதித்தால் அது உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்த்த கிரிக்கெட் போட்டியாக இருக்கும்’ - அக்தர்

பாகிஸ்தான் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக லாக் டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

இதனால் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை இந்த நாடுகள் எதிர்கொண்டு உள்ளன. இந்த நிலையில் அக்தர், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்த யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தற்போது ஒருநாள் அல்லது டி20 தொடரில் விளையாட வேண்டும். மூன்று போட்டிகள் கொண்ட தொடராக அது இருக்கலாம். ரசிகர்கள் இல்லாமல், மூடிய மைதானத்தில் தொடரை நடத்தலாம். அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யலாம்.

விளையாடுவதற்கு முன்னதாக வீரர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். மக்கள் அனைவரும் வீட்டிலே இருப்பதால், எத்தனை பேர் இந்தத் தொடரை கண்டு ரசிப்பார்கள் என நினைத்துப் பாருங்கள். இதன் மூலம் எவ்ளோ நிதி சேகரிக்க முடியும் என எண்ணிப் பாருங்கள். அதைக் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை ஏன் பலரும் மோசமான ஐடியா எனச் சொல்கிறார்கள்..?

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா

இப்போது அப்படி ஒரு தொடர் நடத்தினால், அது தோல்விகளே இல்லாத ஒரு தொடராக இருக்கும். ஒருவேளை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் பாகிஸ்தானின் கொரோனா தடுப்புக்கும் நிதி கிடைக்கும். அப்படிப் பார்த்தால் பாகிஸ்தானுக்கும் அது வெற்றிதான். இரண்டு நாடுகளும் மனிதநேய அடிப்படையில் விளையாடலாம். இருநாடுகளிலும் இருக்கும் நிலையை நாம் அறிவோம். தற்போது தொடரை முழுபாதுகாப்புடன் நடத்த சம்மதித்தால் அது உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்த்த கிரிக்கெட் போட்டியாக இருக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு