2019 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் அந்த இரண்டு புள்ளிகள் மட்டும் கைகூடவேயில்லை. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் அரை இறுதி வரை செல்லும் என்று கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ், அரை இறுதிக்கான ரேஸில் கூட இடம்பெறவில்லை. இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் உலகக்கோப்பையில் இரு அணிகளுக்கும் இது கடைசி போட்டி. கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால், இரு நாட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தவாவது கட்டாயம் வெற்றி பெற இரு அணிகளும் இன்று மெனக்கிடும்.

மார்ச் 25, 2018..
மார்ச் 25, 2018 அன்று நடந்த ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், 2019 ஐசிசி உலகக்கோப்பைக்கு தகுதிப்பெற்றது. இரண்டு முறை உலகச் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை வென்ற அந்த நாள், கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். கிட்டத்தட்ட அந்த குவாலிஃபையர் போட்டியில் பங்கேற்ற அதே வீரர்களுடன்தான் இரு அணிகளும் இன்று லீட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
2015 தொடரில் ஸ்காட்லாந்தை வென்றதே உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பதிவு செய்த ஒரே வெற்றி. 2019 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சிறப்பாக தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு லீக் சுற்றில் நடந்தது எல்லாம் தலைகீழ். இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டும் எதிரணிக்கு சவாலாக விளங்கிய ஆப்கான், சில தவறுகளால் வெற்றியை தாரை வார்த்துவிடுகிறது. நிலையில்லாத பேட்டிங் ஆர்டர், சுழற்பந்துவீச்சை மட்டுமே நம்பியிருக்கும் பெளலிங் யூனிட், கேப்டன் குல்பதினின் சொதப்பல் முடிவுகள் என சில காரணங்களால் ஆப்கானிஸ்தானால் சோபிக்க முடிவதில்லை. டாஸ் ஜெயித்தால் எடுக்கும் முடிவுகளில் இருந்து, பெளலர்களை ரொட்டேட் செய்வது வரை சில முக்கிய முடிவுகளை கேப்டன் குல்பதின் பார்த்துச் செய்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்

இந்த சீசன் வெஸ்ட் இண்டீஸுக்கானது இல்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி, பேட்டிங், பெளலிங் என ஒவ்வொரு ஃபீல்டிலும் திறமையான வீரர்களை கொண்ட ஒரு அணி இப்படிச் சொதப்புவதை பார்க்க முடியவில்லை. பூரன், ஷாய் ஹோப், ஹிட்மேயர் என ஒவ்வொரு போட்டியிலும் இளம் வீரர்களின் அசத்தலான பேட்டிங் இருந்தபோதும், வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றி கைகூடவில்லை.
கடைசி போட்டிதான் என்றாலும், இந்த போட்டியில் தோற்க கூடாது என்று வெஸ்ட் இண்டீஸும், ஜெயித்தாக வேண்டும் என்று ஆப்கானிஸ்தானும் மோதுவதே இரு அணிகளுக்குமான ஒரே வித்தியாசம்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகள் மோதியுள்ள ஐந்து போட்டிகளில். மூன்றில் ஆப்கானிஸ்தானும், ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது. உலகக்கோப்பையை பொறுத்தவரை, ஹெடிங்லி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிதான் இரு அணிகளுக்குமான முதல் போட்டி.

ப்ளேயிங் லெவன்
ஆப்கானிஸ்தான் (உத்தேசம்)
குல்பதின் நைப் (கேப்டன்), ரஹமத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், ஷமியுல்லா ஷின்வாரி, ரஷித் கான், இக்ராம் அலி கில், முஜீப் உர் ரகுமான், தவ்லத் ஜத்ரான்
வெஸ்ட் இண்டீஸ் (உத்தேசம்)
ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹிட்மேயர், நிகோலஸ் பூரண், கார்லஸ் பிராத்வெயிட், ஃபேபியன் ஏலன், கீமர் ரோச் / ஷெனான் கேப்ரியல், ஓஷேன் தாமஸ், ஷெல்டன் காட்ரல்
இதுவரை
ஆப்கானிஸ்தான்
vs ஆஸ்திரேலியா - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
vs இலங்கை - 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs நியூசிலாந்து - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
vs தென்னாப்ரிக்கா - 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
vs இங்கிலாந்து - 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs இந்தியா - 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs வங்கதேசம் - 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs பாகிஸ்தான் - 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
வெஸ்ட் இண்டீஸ்
vs பாகிஸ்தான் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
vs ஆஸ்திரேலியா - 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs தென்னாப்ரிக்கா - மழையால் போட்டி ரத்து
vs இங்கிலாந்து - 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
vs வங்கதேசம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
vs நியூசிலாந்து - 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs இந்தியா - 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs இலங்கை - 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி