Published:Updated:

`ஒரே ஓவரில் 5 விக்கெட்; லிஸ்ட் ஏ-வில் 3வது ஹாட்ரிக்'- கலக்கிய தமிழகத்தின் மருமகன்!

3 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்கூட வீழ்த்தாமல் இருந்த மிதுன் கடைசி ஓவரில் அதகளப்படுத்தினார். முதல் பந்திலேயே அரைசதம் கடந்து களத்தில் கோலோச்சிய ராணாவை அவுட் ஆக்கியவர், அடுத்து ராகுலை வெளியேற்றினார்.

அபிமன்யூ மிதுன்
அபிமன்யூ மிதுன் ( twitter )

சையது அலி முஷ்டாக் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதியில் இன்று ஹரியானா மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக கேப்டன் மனீஷ் பாண்டே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஹரியானா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியில் ரன்கள் மளமளவென உயர்ந்தது. 19-வது ஓவரின் முடிவில் 192க்கு 3 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் ஹரியானா இருந்தது. கடைசி ஓவரை கர்நாடக பௌலர் அபிமன்யூ மிதுன் வீசினார். அதுவரை 3 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்கூட வீழ்த்தாமல் இருந்த மிதுன் கடைசி ஓவரில் அதகளப்படுத்தினார்.

அபிமன்யூ மிதுன்
அபிமன்யூ மிதுன்

முதல் பந்திலேயே அரைசதம் கடந்து களத்தில் கோலோச்சிய ராணாவை அவுட் ஆக்கியவர், அடுத்து ராகுலை வெளியேற்றினார். இப்படி முதல் ஐந்து பந்துகளிலும் தொடர்ச்சியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஹரியானாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மிதுன். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த ஐந்து விக்கெட்களும் கேட்ச் மூலம் அவுட் ஆக்கப்பட்டவை. ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் சாதனைகளின் உச்சியை தொட்டுள்ளார் மிதுன்.

Vikatan

டி20 பார்மெட்டில் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ள மிதுன், ரஞ்சி டிராபி, சையது அலி முஷ்டாக் டிராபி, விஜய் ஹசாரே டிராபி என லிஸ்ட் ஏ கிரிக்கெட்டின் மூன்று பார்மெட் விளையாட்டுகளிலும் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற கூடுதல் பெருமையைப் பெற்றார் மிதுன். 2007-ல் தனது பிறந்தநாளில் ரஞ்சி தொடரில் முதல் ஹாட்ரிக் எடுத்தவர் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் தமிழக அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து அசத்தியிருந்தார்.

அபிமன்யூ மிதுன்
அபிமன்யூ மிதுன்

தனது சாதனைகளால் இன்று தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும் மிதுன் இன்றைக்கு ஒரு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் கர்நாடகாவில் டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. அதில் மேட்ச் பிக்சிங் நடந்தாக புகார் எழுந்த நிலையில் கிரைம் பிரிவு போலீஸார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேட்ச் பிக்சிங்கில் அபிமன்யூ மிதுனுக்கும் தொடர்பு உள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. புகாரால் விசாரணைக்கு ஆஜராகுமாறு, பெங்களூரு போலீஸ் மிதுனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேசப் போட்டியில், இந்திய அணி சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அபிமன்யூ மிதுன் தமிழகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானைதான் மிதுன் திருமணம் செய்துள்ளார்.