Published:Updated:

நூறல்ல... இருநூறுகளை பரிசளிக்கும் ஹிட்மேன்! - இ.பி.வா ரோஹித் #HBDROHIT

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஜூன் 2019... ஐபிஎல்-ல் மும்பையின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திவிட்டு கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து போய் இறங்கினார் ரோஹித் ஷர்மா.

ஜூன் 2019... ஐபிஎல்-ல் மும்பையின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திவிட்டு கோப்பையை வென்ற கையோடு இங்கிலாந்து போய் இறங்கினார் ரோஹித் ஷர்மா. அந்த ஆண்டு கேப்டனாக ஐபிஎல்லை மும்பை இந்தியன்ஸுக்கு வென்று தந்திருந்தாலும் ஒரே ப்ளேயராக ரோஹித் ஏமாற்றம்தான். 15 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள்தான் அடித்திருந்தார். அதனால் உலகக்கோப்பைக்குப் போய் இறங்கும்போதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அணி நிர்வாகமும் கேப்டன் கோலியும்கூட ரோஹித்மேல் பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தனர்.

முதல் போட்டி தென்னாப்பிரிக்காவோடு. சென்சுரியோடு தொடங்கினார் ரோஹித் ஷர்மா. ''ஓகே... இது ஏதோ ஒரு போட்டியில் அடித்துவிட்டார். அடுத்துப் பார்க்கலாம்'' என வந்துவிழுந்தன விமர்சனங்கள். அடுத்த போட்டியே ஆஸ்திரேலியாவுடன் 57 ரன்கள். அடுத்த போட்டி பாகிஸ்தானுடன். ரோஹித் மீண்டும் சென்சுரி. 113 பந்துகளில் 140 ரன்கள். அடுத்து இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை என 2019 உலக்கோப்பையில் மட்டும் 5 சதங்கள். அரை சதம் அடித்தால் பெரிய விஷயம் என உலகக்கோப்பைத் தொடரைத் தொடங்கியவர், இதுவரை உலகக்கோப்பையில் யாரும் செய்யாத சாதனையைச் செய்தார். ஆரம்பத்தில் ஃப்ளூக் என்றவர்கள் ஹிட்மேனின் பர்ஃபாமன்ஸில் மிரண்டுபோனார்கள்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

ஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது... எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களைக் கடந்துவிட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்குக் குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும்.

ரோஹித்தின் ஆரம்பகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் ரமீஸ் ராஜா இப்படிச் சொன்னார். ''நான் இந்தியன் கிரிக்கெட் அணிக்கு செலக்டராக இருந்தால் ரோஹித் ஷர்மாவை ஒரு சீரிஸ் இல்லை, இரண்டு சீரிஸ் இல்லை, 5 வருஷம் தொடர்ந்து ஆட விடுவேன்'' என்றார். அந்த அளவுக்குத் திறமையான கிரிக்கெட்டர் ரோஹித் என்பதைக் கணித்திருந்தார் ரமீஸ். ரோஹித் அட்டாக்கிங் மோடுக்கு வந்துவிட்டால் யாராலும் தடுக்கமுடியாது.

அவர் 50 ரன்களைத் தாண்டிவிட்டால் போதும்... எதிர் அணி தொலைந்தது. `நாங்க தோத்துட்டோம்' என எழுதிக்கொடுத்துவிட்டுப் போயிடலாம். பந்துகள் தரையில் போகாது. அந்தரத்தில்தான் சிக்ஸர்களாகப் பறந்துகொண்டிருக்கும்.

ரோஹித் குருநாத் ஷர்மா நாக்பூர்ல 1987-ல் பிறந்தவர். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆஃப் ஸ்பின்னராகவும், 8-வது பொசிஷனில் பேட்ஸ்மேனாகவும் ஆடிக்கொண்டிருந்தார். ரோஹித்தை ஓப்பனிங் ஆடவைத்தவர் அவரின் பயிற்சியாளர் தினேஷ் லாட். ஓப்பனிங் இறங்கிய போட்டியிலேயே சதம் அடிக்க, ரோஹித் பேட்டிங் மேல் எல்லோருக்கும் நம்பிக்கை வந்தது. ரோஹித்தும் நம்மால் பேட்டிங் ஆட முடியும் என நம்பினார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
என் சச்சின்! #MySachin

ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை 2013-க்கு முன் 2013-க்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 2007-ல் இந்திய அணியில் அறிமுகமானாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. மிடில் ஆர்டரில் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்தார்.

2013 இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் நடந்தது. அப்போது கேப்டன் தோனி, ரோஹித்துக்கு ஓப்பனிங் ஆடும் வாய்ப்பினைக் கொடுக்கிறார். அன்று தோனி எடுத்த முடிவுதான் இன்று வரை இந்தியாவைக் காப்பாற்றிவருகிறது. 2013 சாம்பியன்ஸ் டிராஃபியில் ஏற ஆரம்பித்த கிராஃப், அதன்பிறகு இறங்கவேயில்லை.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருமுறை அல்ல மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார் ரோஹித். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்கள் ரோஹித் வசமே. ''இனிவரும் காலங்களில் பேட்ஸ்மேன்கள் 200 ரன்கள் எடுக்கலாம். ஆனால், ரோஹித் அடித்திருக்கும் 264 ரன்களைத் தாண்டுவது மிக மிக கஷ்டம்'' எனச் சொல்லியிருக்கிறார் பிரையன் லாரா.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

173 பந்துகளில் 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடித்து 264 ரன்கள் என்கிற சாதனையைப் படைத்தார் ரோஹித். ரோஹித் எடுத்த உடனே அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன் இல்லை. பவர்ப்ளே ஓவர்களில் மிகவும் கவனமாக ஆடுவார்; பவர்ப்ளே முடிந்து மிடில் ஓவரில் ஸ்பின்னர் கைகளுக்குப் பந்து செல்லும்போது ரோஹித்தின் பேட் பந்தை கேலரிக்கு அனுப்பத் தயாராகிவிடும். சிக்ஸர்கள் அனுப்பிய கையோடு 50 ரன்களில் இருந்து 150 ரன்களை அசாதாரணமாக 40 பந்துகளில் தாவி விடுவார் இந்த அசுரன்.

White ball கிரிக்கெட்டில் ஜொலித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் ரோஹித்துக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. டீமுக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். தனக்கென்று நிலையான இடம் எதுவும் இல்லை.

சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். வாய்ப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கிடைத்தது. ஓப்பனிங் இறங்கி முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதங்கள். இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் எனப் பல சாதனைகள்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ்

கிங் கோலியின் எராவில் கோலிக்கு நிகராக உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார் ரோஹித் ஷர்மா. அடுத்துவரும் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லவேண்டும் என்றால் அதற்கு ரோஹித் மிக மிக முக்கியம். ஹிட்மேன் நிச்சயம் டி20 உலககோப்பையை வென்றுதருவார் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஹித்!

அடுத்த கட்டுரைக்கு