சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தலைமுறை தாண்டிய நாயகன்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

கடைசியாக இப்படி வென்றபோது அவருடன் இருந்தவர்களை நினைத்து அழுதிருக்கலாம்.

‘வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படித்தான் முடியப்போகுதுன்னு நமக்கு முன்னாடியே தெரியும். எதிர்பார்த்துத் தயாரா இருப்போம். ஆனாலும் அது நடக்குறப்போ நமக்கு வலிக்கும். உணர்ச்சிகளுக்கு தர்க்கம் கிடையாதே’ என எப்போதோ கேட்டது இப்போது நினைவிற்கு வருகிறது. தோனியை நினைத்து உருகும் ரசிகர்களுக்கும் இது பொருந்தும்.

இங்கே கிரிக்கெட் ஒரு மதம். பிடித்த வீரர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடு வார்கள் பக்தர்களைப்போல; சொதப்பி னால் தூக்கி எறிவார்கள் யானையைப்போல. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததுதான் தோனியின் வருகை. கீப்பர் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாய் சர்வதேச அரங்கிற்குள் நுழைந்தவர், ஸ்கிப்பர் ராகுல் டிராவிட்டுக்கு மாற்றாய் நான்கே ஆண்டுகளில் உயர்ந்ததற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கிறது எக்கச்சக்க வியர்வை.

தலைமுறை தாண்டிய நாயகன்!

இசையோ, சினிமாவோ, விளையாட்டோ ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு நாயக பிம்பம் இங்கே உருவாகும். அந்தப் பத்தாண்டுகளில் விடலைப்பருவத்தை எட்டுபவர் களுக்கு அவர்தான் நாயகன். காரணம், அந்த ஹீரோ வளர வளர அவர்களும் வளர்வார்கள். அவர்கள் வளர வளர ஹீரோவும் வளர்வார். இந்த வளர்ச்சி மனதிற்கு நெருக்கமானது. 80களில் பிறந்தவர்களுக்கு சச்சினும் 90களில் பிறந்தவர் களுக்கு ரஹ்மானும் ஆதர்சமாய் இருப்பதன் காரணம் இதுதான். ஆனால் தோனியால் எப்படி மூன்று தலைமுறைகளுக்கும் சேர்த்து ஒரு சூப்பர்ஹீரோவாய் இருக்கமுடிந்தது?

இந்த இருபதாண்டுகளில் ஏகப்பட்ட வீரர்கள் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். அதில் அவரைவிடச் சிறந்த பேட்ஸ்மேன்களும் அடக்கம். ஆனால் தோனிக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் இடம்? இதற்கான விடை ‘M.S.Dhoni:The Untold Story’ - அவரின் பயோபிக்கிலேயே இருக்கிறது. படத்தில் தோனிக்காக ஸ்பான்சர்ஷிப் தேடி அலைவார் அவரின் நண்பர் சிட்டு. ஒரு பேட் கடை ஓனர், ‘முகம் தெரியாத பையனுக்கு நான் எதுக்கு ஸ்பான்சர் பண்ணணும்’ என்பார். அதற்கு சிட்டு, ‘அந்தப் பையன் திறமைசாலி. அவன் இந்தியாவுக்காக ஆடுனான்னா நானே க்ரீஸுல நின்னு அவன்கூட ஆடுனமாதிரி இருக்கும்’ என்பார். நிஜத்தில் இப்படித்தான் நினைத்தது ஒவ்வொரு இந்தியக் குடும்பமும்.

மும்பை, டெல்லி எனப் பெருநகரத்து முகம் கிரிக்கெட்டிற்குத் தொடக்கம்தொட்டே இருக்கிறது. அதில் நாட்டின் ஏதோவொரு மூலையில் இருந்து வந்த நடுத்தர வர்க்கத்துப் பையன் சாதிக்கிறான் என்கிற நினைப்பே பல இந்தியக் குடும்பங்களை டிவி முன் இருத்தியது. சீரற்ற முடியும் இயல்பான உடல்மொழியும் கொண்ட தோற்றம், காட்டு அடி ஆட்டம் என, பெரும்பாலான இந்திய இளைஞர்களின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக சர்வதேச அரங்கில் கால் ஊன்றி நின்றார் தோனி. அதுவே என்னைப்போன்ற, 90களில் பிறந்தவர்கள் அவரைக் கொண்டாடக் காரணமானது.

ஆக்ரோஷம் விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியம். தோனியிடமும் கனன்றுகொண்டே இருக்கிறது அந்த ஆக்ரோஷம். ஆனால் அதை வெளிப்படுத்தும் தொனியில்தான் வேறுபட்டு நிற்கிறார். ‘He bats like he owns the place’ - முதன்முதலில் ஹர்ஷா போக்லேவிடம் தோனி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டார். உண்மையில் களத்தில் தோனி எடுக்கும் ஆக்ரோஷ முடிவுகளும் வெளியே அவர் சொன்ன ஓய்வு அறிவிப்புகளும் ‘He owns the game’ என்பதையே நமக்குச் சொல்லும். அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் குறியீடு இது. இதுவும் இளைஞர்களுக்கு இவரைப் பிடிக்கக் காரணம்.

உலகமயமாக்கலுக்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கில்லை. டெஸ்ட், ஒன் டே, டி20, பிரீமியர் லீக்குகள், பத்து ஓவர் போட்டிகள் என அதன் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது. போலவே தோனியின் கேப்டன்ஷிப் ஸ்டைலும் செயல் உத்திகளும்! டெஸ்ட் போட்டிகளில் அவரின் நிதானம் முதன்முறையாக ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெறக் காரணமானது. ஒருநாள் போட்டிகளில் அவர் காட்டிய அதிரடி அவரை இந்தியாவிற்கு அதிக வெற்றிகள் தேடித் தந்த கேப்டனாக்கியது. டி20களில் அவர் மாற்றியமைக்கும் கணநேர வியூகங்கள் 2007 இந்திய அணி தொடங்கி கடந்த சீசன் சென்னை அணிவரை வெற்றிகள் குவிக்க உதவியது. இப்போதிருக்கும் விடலைகளும் குழந்தைகளும் அவரை ரசிப்பது துளியும் அலட்சியமில்லாமல் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் அவரின் குணத்தால்தான்! தோனி செல்லும் பேருந்தைப் பின்தொடர்ந்து ஜன்னல்வழி தரிசனம் தேடும் கல்லூரி இளைஞன் சாட்சி! ‘தோனீஈஈஈஈஈ’ என, கேட்காத தூரத்தில் இருந்தாலும் சேப்பாக்கத்தில் ஆட்டம்தோறும் குரல்கொடுக்கும் ஐந்துவயதுக் குழந்தை சாட்சி!

கடைசியாக, முந்தைய தலைமுறை, அப்பாக்களின் தலைமுறை. நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட்டில் ஊறத் தொடங்கிய முதல் தலைமுறை. 83-ல் முதல்முறை சுவைத்த வெற்றியை ஒவ்வொரு நான்காண்டுகளும் எதிர்பார்த்து ஏமாந்த தலைமுறை. 2003-ல் தோற்றாலும் இன்றுவரை அந்த கிரிக்கெட் அணிதான் நம் அப்பாக்களுடைய ட்ரீம் டீம்! அவர்களில் ஆறு பேரோடும் எஞ்சிய அடுத்த தலைமுறை இளைஞர்களோடும் தோனி 2011-ல் கோப்பை வென்றது உண்மையில் அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான உரையாடல். வெற்றி தேடித்தந்த மகனாய் அப்பாக்களும், கனவை நிறைவேற்றிக் காட்டிய சகோதரனாய் இளைஞர்களும் தோனியை வரித்துக் கொண்டார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரணமிருக்கிறது.

என் கல்லூரி விடுதியில் ஒரு பணியாளர் இருந்தார். ‘போன்பாய்’ ஆறுமுகம். விடுதிக்கு வரும் பெற்றோர்களின் போன்களை அந்தந்த மாணவர்களுக்குச் சொல்லும் வேலை அவருடையது. வயது ஐம்பது. ஐந்தடி உயரத்தில், நில்லாது ஆடிக்கொண்டிருக்கும் தலையோடு ஒரு கோழைப் பூனையின் உடல்மொழியோடு அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருப்பார். மாணவர்களின் கிண்டலுக்கு சிரிப்போ, உயரதிகாரிகளின் கோபத்திற்கு எதிர்ப்போ எதுவுமே அவர் முகத்தில் இருக்காது. அவரின் குடும்பம் பற்றியும் யாருக்கும் தெரியாது. ‘கல்லுகூட மழைல லேசா அசஞ்சுடும்டா... இந்தாளு ம்ஹூம்’ என்பான் நண்பன். 2011 மார்ச் 24ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலி யாவுக் கெதிரான காலிறுதிப் போட்டியைப் பெரிய திரையில் ஒளிபரப்பச் சொல்லி வார்டனிடம் நாங்கள் கேட்டபோது எங்களுடன் அவரும் நின்றிருந்தார். அந்த நேரத்தில் அவரின் கண்களில் ஒரு மன்றாடலைப் பார்த்தேன். ஒருவாரம் கழித்து பாகிஸ் தானுடனான அரையிறுதி வெற்றியை மைதானத்தில் ஆளாளுக்குக் கட்டிப்பிடித்துக் கொண்டாடி னோம். தழுவிய கரங்களுள் அவருடையதும் ஒன்று. இறுதிப்போட்டிக்கு பெரும்பாலானவர்கள் சொந்த ஊரிலிருந்தோம். திங்கட்கிழமை திரும்பி வந்து அவரைப் பார்த்தபோது ஏனோ வெற்றிக்குப் பின் வெகுநேரம் அழுதிருப்பார் எனத் தோன்றியது. கடைசியாக இப்படி வென்றபோது அவருடன் இருந்தவர்களை நினைத்து அழுதிருக்கலாம்.

தலைமுறை தாண்டிய நாயகன்!

‘A trophy carries dust, memories last forever’ என விளையாட்டுலகில் ஒரு பொன்மொழி உண்டு. கோப்பைகள் கணநேர சந்தோஷங்கள். அந்தக் கொண்டாட்டத்தில் நம்முடன் இருந்தவர்கள்தாம் மொத்த வாழ்க்கைக்குமான நினைவாகிறார்கள். தோனி வாங்கிக்கொடுத்த ஒவ்வொரு வெற்றியிலும் இப்படி ஆயிரமாயிரம் முகங்களும் நினைவுகளும் இருக்கின்றன. விளையாட்டில் மட்டுமே நடக்கும் மேஜிக் இது. 1995 ரக்பி உலகக்கோப்பையில் பல நூற்றாண்டுப் பகையைத் தீர்த்த நெல்சன் மண்டேலாதான் இதன் உச்சபட்ச சாட்சி.

இப்படி எக்கச்சக்க கொண்டாட்டங்களை நமக்குப் பரிசளித்த ஒருவரை வழியனுப்பும்போது மனம் கனப்பது இயல்புதான். ‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது’ என்பதெல்லாம் விளையாட்டுவீரர்களுக்குப் பொருந்தாது. அதீத புகழ், பணம், உயரம் என அனைத்தையும் நாற்பதிற் குள்ளேயே அடைந்துவிடும் வாழ்க்கை அவர்களுடையது. தோனி தன்னாலான அனைத்தையும் அந்தப் பச்சைப்புற்கள் படர்ந்த மைதானத்திற்குக் கொடுத்து விட்டு இப்போது வெளி யேறுகிறார், பெருமழைக்குப் பின்னாலும் தாழாது ஓங்கி நிற்கும் மலையைப்போல! வெளியே அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கோத்துக்கொள்ள ஆயிரமாயிரம் கரங்கள் காத்திருக்கின்றன.

இறுதியாக ஒருமுறை... ‘நீங்கள் கொடுத்த வெற்றிகள், நினைவுகள், அனுபவங்கள், பாடங்கள் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி! பேரன்புடன் வழியனுப்புகிறோம்.’