`நாங்கள் தொடர்ச்சியாக கவனித்துக்கொண்டேதான் இருக்கிறோம். களத்திற்குள் சென்றுவிட்டால் அவரிடம் பயம் என்பதையே பார்க்க முடிவதில்லை. மேலும், எதிர்கொள்ளும் முதல் பந்திலிருந்து அதிரடியாக அடித்து வியைாடும் திறனும் அவரிடத்தில் காணப்படும் சிறப்பம்சம்.' பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹேடின், ஜிதேஷ் சர்மா குறித்து பேசிய வார்த்தைகள் அவை.

பிராட் ஹேடினின் இந்த வரையறைக்கு ஏற்ற வகையில்தாம் மும்பைக்கு எதிரான ஜிதேஷ் சர்மாவின் இன்னிங்ஸ் அமைந்திருந்தது. லிவிங்ஸ்டனுடன் இணைந்து கூட்டணியாக 119 ரன்களை எடுத்திருந்தார் ஜிதேஷ். தனியாக 27 பந்துகளில் 49 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 181 ஆக இருந்தது. லிவிங்ஸ்டன் மாதிரியான அசகாய சூரனுக்கு சற்றும் சளைக்காமல் ஆடிய இந்த ஜிதேஷ் சர்மா யார்?
ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி தங்களுக்கான ஒரு இடத்தை எட்டிப்பிடித்துக் கொள்வதற்கான களமாகத்தான் நீண்ட காலமாக இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது ஹீரோக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் இருந்தே இங்கே தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இப்போது தனக்கென புது வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார் ஜிதேஷ் சர்மா.

இளம் வயதிலேயே மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா உருவாகிவருகிறார் என்று, சமீபத்தில் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் ஜிதேஷின் ஆட்டம் நேற்று இருந்தது.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ஜொலிக்கும் ஜிதேஷ் சர்மா 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் பிறந்தார். சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய ஜிதேஷ் ஷர்மா தனது கிரிக்கெட் கரியரை 2012-13ஆம் ஆண்டில் விதர்பா சீனியர் அணியில் இடம்பெற்றதன் மூலமே தொடங்கியிருக்கிறார். களமிறங்கிய முதல் தொடரிலேயே 12 இன்னிங்ஸ்களில் 537 ரன்களை குவித்ததால் அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

பின் 2015- 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி டி20 தொடரில் 140+ ஸ்ட்ரைக் ரேட்டில் 343 ரன்களை குவித்து, அத்தொடரில் அதிக ரன்களை குவித்த மூன்றாவது வீரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார். டி20 யிலும் தன்னால் வலுவான அதிரடியை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை இதன் மூலம் நிரூபித்தார். ஆர்சிபிக்கு தினேஷ் கார்த்திக் பினிஷராக இருந்ததைபோல, விதர்பா அணிக்கு இவர்தான் பினிஷராக இருந்தார்.
முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இவரிடம் இருந்தால் ஜிதேஷ் ஷர்மாவை இந்திய அணிக்குள்ளுமே பிசிசிஐ கொண்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன் திடீரென தனது முட்டில் ஏற்பட்ட காயத்தால் அந்தத் தொடரிலிருந்து விலகியதால், கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருந்தார். அப்போது அவருக்கு பேக்கப் இல்லை. இதனால் இளம் விக்கெட் கீப்பரான ஜிதேஷ் ஷர்மா சாம்சனுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஐபிஎல் ஐ பொறுத்தவரைக்கும் ஜிதேஷ் சர்மாவை முதல் முதலில் 2016ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்சத்திற்கு வாங்கியது. அதற்கடுத்த சீசனிலும் அவர் மும்பை அணியிலேயே இருந்தார். ஆனால், அந்த இரண்டு சீசனிலுமே அவரை ஒரு போட்டியில் கூட மும்பை அணி களமிறக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஜிதேஷ் ஷர்மாவை 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது.
அறிமுகமாகிய முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவுக்கு எதிராக 17 பந்துகளில் 26 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அந்த சீசனில் 12 போட்டிகளில் ஆடி 234 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 163 ஆக இருந்தது. இதுதான் அவரின் சிறப்பம்சம். டி20 க்கேற்ற சரியான ஆள் என்பதை வாய்ப்பு கிடைத்த அந்த முதல் சீசனிலேயே நிரூபித்துவிட்டார். அதனால்தான், அடுத்தடுத்து சீராக வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.

நடப்பு சீசனில் இதுவரை பஞ்சாப் அணி ஆடியிருக்கும் 10 போட்டிகளிலும் ஜிதேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீசனில் இதுவரை 239 ரன்களை 165 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். முன்னே லிவிங்ஸ்டன் என்ற இங்கிலாந்தின் அதிரடி சூறாவளியையும் பின்னே ஷாரூக்கான் எனும் உள்ளூர் சிக்சாசுரனையும் வைத்துக் கொண்டு அவர்களுக்கிடையில் தனக்கென இரு தனி இடத்தையும் அடையாளத்தையும் பெறுவது சாதாரண விஷயமல்ல. அதை ஜிதேஷ் சர்மா செய்து காண்பித்திருக்கிறார்.