2020-21 இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் -;கவாஸ்கர் தொடர் அது. அந்தத் தொடரை இந்திய அணி எத்தனை பரபரப்பாக வென்றது என்பதைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அந்தத் தொடரின் முக்கியமான காபா போட்டியில் ரோஹித்தும் கில்லும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தார்கள். அத்தனை பேரின் கண்களும் ரோஹித்தின் மீதே இருந்தன. ரோஹித்தின் புல் ஷாட் எப்போது வருமென்றே அனைவரும் காத்திருந்தனர். அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ரோஹித்துக்கு எதிர்முனையில் நின்று கொண்டிருந்த கில்லிடம் இருந்து அந்த புல் ஷாட் வந்தது. அதுவும் மற்றவர்கள் அஞ்சி நடுங்கும் ஸ்டார்க்குக்கு எதிராக!
சுப்மன் கில்லின் துணிச்சலும் திராணியும் படம் போட்டு காட்டப்பட்ட முதல் இடம் அதுதான். அப்போது கில்லைப் பார்க்கையில் எத்தகைய பிரமிப்பும் வியப்பும் ஏற்பட்டதோ அதைவிட நூறு மடங்கு இப்போது அகமதாபாத்தில் அவருடைய சதத்தை பார்க்கையில் ஏற்பட்டது. இந்த முறையும் கில்லுக்கு எதிரில் ரோஹித்தான் இருந்தார். ஆனால், எதிரணி வீரராக!

மும்பைக்கு எதிராக கில் அசுரத்தனமாக அந்தச் சதத்தை அடித்தத் தருணத்தில் அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஒரே குரலில் ஆரவாரமாக 'ஆவா தே' (Aava De) என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். 'ஆவா தே...' என்பது ஒரு குஜராத்தி வார்த்தை. இதை அப்படியே கூகுளில் தட்டிப் பார்த்தால் 'Bring it On' என வருகிறது.
`எத்தகைய சவாலையும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயார். இறங்கி ஒரு கை பார்த்துவிடுவோம்.' என்பதாக இதற்கு பொருள் புரிந்துக்கொள்ளலாம். எனில், கில்லின் இந்த சதத்தை 'ஆவா தே...' என்கிற இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் முழுமையாகக் கொண்டாடி விட முடியாது.
ஏனெனில், கில் அத்தனை தீர்க்கமாகப் பயமறியா மூர்க்கனாக இந்த ஆட்டத்தை ஆடியிருந்தார். கில் மாதிரியாக பாரம்பரிய முறையில் கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு எப்போதுமே ஒரு விஷயம் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதாவது, பௌலர் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அதி அற்புதமாக ஒரு டெலிவரியை வீசினால் அதற்கு உகந்த மரியாதையை அளித்தே ஆக வேண்டும். ஆனால், கில்லிடம் நேற்று அப்படியான குணாதிசயங்கள் எதுவுமே வெளிப்படவில்லை. மும்பை அணியின் பௌலர்களை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பௌலர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்கிறேன் என எதையாவது செய்தால் நொடிப்பொழுதில் கில்லின் நியூரான்கள் அதற்கு மேலாக வேறு எதையோ யோசித்து அசத்திவிடும். ஆகாஷ் மத்வாலின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்த சமயத்திலெல்லாம் இதுதான் நடந்திருந்தது. லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த மத்வால், அந்த ஓவரில் தனக்குத் தெரிந்த வித்தையையெல்லாம் இறக்கிப் பார்த்தார். ஆனால்,

எல்லாவற்றுக்கும் கில்லிடம் இருந்து வந்தது ஒரே பதில்தான். அது சிக்ஸர் மட்டுமே!
ஒரு தொடர் வண்டி வேகமெடுப்பதை போல கில் மெதுவாகத் தொடங்கி புல்லட் வேகத்திற்கு சீறிப்பாய்ந்த விதமும் விறுவிறுப்பைக் கூட்டக் கூடிய விஷயமாக இருந்தது. முதல் அரைசதத்தை எட்ட 32 பந்துகளை எடுத்துக் கொண்ட கில், அடுத்த அரைசதத்தை 17 பந்துகளிலேயே எடுத்துவிட்டார். இரண்டாம் அரைசதத்தின் போது கில்லின் ஸ்ட்ரைக் ரேட் 294.11 என்று இருந்தது.
கில்லின் விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே குஜராத்தை வெல்ல முடியும் என்கிற தற்போதைய ட்ரெண்ட் உருவாக கில்லின் இந்த எகிறியடிக்கும் ஸ்ட்ரைக் ரேட்டுமே கூட ஒரு காரணம்தான். இதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் கில்லின் ஐ.பி.எல் கரியர் முழுவதையும் ஒரு பார்வை பார்க்க வேண்டும். கில் 18 வயதே நிரம்பியிருந்த சமயத்திலேயே அவரை 1.8 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியிருந்தது. அதன்பிறகு, அந்த அணிக்காகதான் 4 சீசன்களை கில் ஆடியிருந்தார்.
2018 சீசனில் 203 ரன்களை 146 ஸ்ட்ரைக் ரேட்டில் கில் அடித்திருந்தார். 2019 சீசனில் 296 ரன்களை 124 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தவர், 2020 சீசனில் 440 ரன்களை 117 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். கொல்கத்தாவிற்காக கடைசியாக ஆடிய 2021 சீசனில் 478 ரன்களை 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார்.

இந்நிலையில், புதிதாக ஐ.பி.எல் க்குள் நுழைந்த குஜராத் அணி கில்லை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த சீசனில் குஜராத்துக்காக ஆடிய கில் 483 ரன்களை 132 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார்.
கில்லின் ஐ.பி.எல் கரியரில் கடந்த மூன்று சீசனன் செயல்பாடுகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்க்க முடியும். அதாவது, கடைசியாக ஆடிய 3 சீசன்களிலுமே சீராக 400 ரன்களைக் கடந்திருக்கிறார். ஆனால், ஸ்ட்ரைக் ரேட்டைக் கவனியுங்கள். அதுதான் இங்கே பிரச்னை. அதில் பிரமாதமாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை. கிட்டத்தட்ட 'Strike rate is overrated' என்கிற மனநிலையில்தான் கில் ஆடியிருந்தார். ஆனால், இந்த சீசனில் அவருடைய ஆட்டம் வேறாக இருக்கிறது. இதுவரை 851 ரன்களை 156.43 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இவ்வளவு ரன்களை 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பது அத்தனை லேசான காரியமில்லை. டெக்னிக்கலாகவே கில் நிறைய மேம்பட்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்த வியப்பூட்டும் ஸ்ட்ரைக் ரேட். கடந்த சில சீசன்களில் கில் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை இங்கே.
2018 - 5 சிக்ஸர்கள் | 2019 - 10 சிக்ஸர்கள் | 2020 - 9 சிக்ஸர்கள் | 2021 - 12 சிக்ஸர்கள் | 2022 - 11 சிக்ஸர்கள்

கடந்த 5 சீசன்களிலும் சேர்த்தே 47 சிக்ஸர்களைத்தான் அடித்திருக்கிறார். ஆனால், இந்த நடப்பு சீசனில் மட்டும் இதுவரை 33 சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருக்கிறார். கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு மனரீதியாகவும் தொழில்நுட்பரீதியாகவும் பெரிய ஷாட்களை ஆடும் முனைப்போடு கில் ஆடியிருக்கிறார். கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் பசி கொண்ட சிங்கத்தைப் போல வேட்டையாடும் கில், கோலியின் 2016 சீசன் சாதனைக்கு நெருக்கமாக ரன்களையும் எடுத்துவிட்டார். ஒரு அசகாய டி20 பேட்டருக்கு தேவையான ரன்ரேட்டையும் கைக்கொண்டிருக்கிறார்.
கில்லை அத்தனை பேரும் 'Prince - இளவரசன்' என அடையாளப்படுத்துகிறார்கள். ஆட்சிக்கட்டிலை நோக்கி அரியணையை நோக்கி முன் நகரும் இளவரசர்களின் போர் வெறியை ஒத்தது கில்லுடைய தற்போதைய சூரையாட்டம்.
இந்த இளவரசன் விரைவிலேயே இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் அரசனாக முடிசூடக்கூடும்!