Published:Updated:

சச்சின் டெண்டுல்கர்… பொடியன் ரன் மெஷின் ஆன கதை! #HBDSachin

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் ( ஹாசிப் கான் )

1989-ல் "பள்ளிக்குள் நுழையவேண்டியவன் வழிமாறி இந்திய அணிக்குள் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டான்" என சச்சினைப் பார்த்து கிண்டல் அடித்தார்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள். "இந்தப் பொடியன் எல்லாம் எங்களின் இரண்டு பவுன்சர்களைத் தாங்கமாட்டான்" என்றார் வக்கார் யூனிஸ்.

கிரிக்கெட் கடவுள்... ரன் மெஷின்... லிட்டில் மாஸ்டர்... மாஸ்டர் பிளாஸ்டர்... சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 48வது பிறந்தநாள். கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் சச்சின்... சச்சின்... சச்சின் என்கிற அந்த இசை, அந்த ரிதம், அந்த ரிங்டோன் இன்னமும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் காதுகளுக்குள்ளும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
Sachin
Sachin

சென்னை சூப்பர் கிங்ஸில் இப்போது இடம்பெற்றிருக்கும் இங்கிலாந்து வீரர் சாம் கரணை ‘ஸ்கூல் பையன்’ எனப்பலரும் கிண்டல் அடிக்கிறார்கள். ‘’கொரோனா லாக்டெளன் முடிந்து இங்கிலாந்தில் பள்ளிகள் திறந்துவிட்டன. இதனால் பள்ளிக்குப்போக சாம் கரண் சென்னை அணியில் இருந்து விலகுகிறார்’’ என மீம்கள் பறக்கின்றன. அப்படித்தான் 1989-ல் பள்ளிக்குள் நுழையவேண்டியவன் வழிமாறி இந்திய அணிக்குள் கிரிக்கெட் விளையாடவந்துவிட்டான் என சச்சினைப் பார்த்து கிண்டல் அடித்தார்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள்.

"இந்தப் பொடியன் எல்லாம் எங்களின் இரண்டு பவுன்சர்களைத் தாங்கமாட்டான்’’ என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார் வக்கார் யூனிஸ். அவர் சொன்னதுபோலவே வக்காரின் ஒரு பவுன்சர் பறந்துவந்து சச்சின் மூக்கை உடைத்தது. ரத்தம் சொட்டச்சொட்ட பரிதாபமாக நின்றார் சச்சின். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினின் முதல் விக்கெட்டை அதுவும் போல்டாக்கி எடுத்தவர் வக்கார் யூனுஸ். சச்சினுக்கு மட்டுமல்ல வக்கார் யூனுஸுக்கும் அதுதான் முதல் சர்வதேசப்போட்டி. இரண்டாவது இன்னிங்ஸில் சச்சினுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ரத்தம் வழிய இரண்டு அடி வாங்கிவிட்டு மூன்றாவது அடி திருப்பிக் கொடுப்பதுதானே சூப்பர் ஸ்டார்களின் ஸ்பெஷல்.

சச்சின்
சச்சின்

ஃபைசலாபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா முதல் பேட்டிங். 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துவிட்டது இந்தியா. கேப்டன் ஶ்ரீகாந்த், சித்து, அசாருதின், ரவி சாஸ்திரி என எல்லோரும் அவுட். சச்சின் கிரவுண்டுக்குள் நுழைகிறார். வாசிம் அக்ரம், இம்ரான் கானிடம் இருந்து பவுன்சர்கள் வருகின்றன. இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வலது கை வேகப்பந்துவீச்சாளர் என சச்சினுக்கு மாறி மாறி பவுன்சர்களை வீசுகிறார்கள். ஆனால், சச்சின் பதற்றப்படவே இல்லை.

காத்திருந்தார்… மிகப்பொறுமையோடு காத்திருந்தார். பவுன்சர் வீசி, வீசி ஓய்ந்தவர்கள் தங்களின் லைன் அண்ட் லென்த்தை இழந்தார்கள். தாக்குதலைத் தொடங்கினார் சச்சின். அன்று கிட்டத்தட்ட 4 மணி நேரம் களத்தில் நின்று 172 பந்துகளை சந்தித்து தனது முதல் அரை சதத்தையும் அடித்து 59 ரன்களோடு வெளியேறினார் சச்சின். பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டிலும் இன்னொரு 57 ரன்கள் குவித்து தான் பொடியன் இல்லை என்பதை நிரூபித்தார் சச்சின்.

டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் விக்கெட்டை எடுத்ததுபோலவே முதல் ஒருநாள் போட்டியிலும் சச்சினை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் வக்கார் யூனுஸ். எளிமையாய் தொடங்கும் எதுவும் எளிமையாய் முடிந்ததில்லை. முதல் போட்டியில் டக் அவுட் ஆனவர்தான் 100 சதங்கள் என்கிற சதத்தில் சதம் சாதனையைப் படைத்திருக்கிறார்.

16 வயதில் இந்தியாவுக்காகத் தடதடக்கத் தொடங்கிய ரன் மெஷின் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கொஞ்சமும் பர்ஃபெக்‌ஷன் குறையாமல் தன்னுடைய கரியரை நிறைவு செய்தது. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாய் 34,357 ரன்கள்... 100 சதம், 164 அரை சதம், 201 விக்கெட்டுகள் என சச்சின் செய்யாத சாதனைகளே இல்லை. இன்னமும் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்படாமல் சச்சினின் பெயரில்தான் இருக்கின்றன.

சச்சின்
சச்சின்

கோலி, ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் என இப்போது பல்வேறு கிரிக்கெட் வீரர்களைப் பார்க்கிறோம். எல்லோரும் நன்றாகத்தான் ஆடுகிறார்கள்… ரன் குவிக்கிறார்கள்... ஆனால் சச்சினிடம் இருந்த பர்ஃபெக்‌ஷன், அந்தத் துல்லியமான, தீர்க்கமான பேட்டிங்கை இன்றுவரை மற்றவர்களால் கொண்டுவரமுடியவில்லை. கிரிக்கெட்டை மட்டுமே சுவாசமாக சுவாசித்த ஒரு மனிதனால்தான் அப்படி ஆடமுடிந்திருக்கிறது.

சச்சினின் காலகட்டம் என்பது பெளலர்கள் கோலோச்சிய காலம். மெக்ராத், கில்லெஸ்பி, ஷேன் வார்னே, பிரெட் லீ, வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சக்லைன் முஷ்தாக், ஆலன் டொனால்டு, ஷான் பொல்லாக், ஆம்புரோஸ், கோர்ட்னி வால்ஷ், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஹீத் ஸ்ட்ரீக், ஹென்ரி ஒலாங்கா, டேரன் காஃப், ஆலன் முலாளி, ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாஃப், ஷேன் பாண்ட், கிறிஸ் கெய்ன்ஸ் என ஒவ்வொரு டீமிலும் ஸ்ட்ரைக்கிங் பெளலர்கள் இருந்த காலம் அது. அவர்களுக்கு எதிராகத்தான், இப்படிப்பட்ட பெளலர்களுக்கு எதிராகத்தான் பல சம்பவங்களை செய்தார் சச்சின். யாருக்கு எதிராக, எந்த மாதிரியான அணிக்கு எதிராக, எப்படிப்பட்ட பெளலர்களுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியம். அப்படி பெளலர்கள் கோலோச்சிய காலகட்டத்தில் ரன்மெஷினாய் இருந்தவர் சச்சின்.

சச்சின் டெண்டுல்கரை நாம் ஏன் இன்னமும் கொண்டாடுகிறோம்?! #Sachin100

ஒவ்வொரு பெளலரும் தனக்கு எந்த மாதிரியான பந்துகளை வீசுகிறார்கள், அதை எதிர்கொள்வது எப்படி எனத்தொடர்ந்து பயிற்சிகள் எடுத்துக்கொண்டே இருந்தார் சச்சின். ஷேன் வார்னே தொடங்கி மெக்ராத் வரை அத்தனை பெளலர்களையும் தைரியமாக எதிர்கொண்டார். க்ரீஸைவிட்டு இறங்கிவந்து அடிப்பது, விக்கெட்டுகளை பெளலர்களுக்குக் காட்டி ஒதுங்கிவந்து எக்ஸ்ட்ரா கவரில் அடிப்பது, ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், கட், புல் ஷாட், ஸ்ட்ரெயிட் டிரைவ் என எல்லாவிதமான ஷாட்களையும் துல்லியமாக ஆடியவர் சச்சின்.

ஷார்ஜாவில் சச்சின் அடுத்தடுத்து நிகழ்த்திய அற்புதங்கள் எந்த கிரிக்கெட் ரசிகனாலும் மறக்கமுடியாதவை. அதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அந்த முதல் ஒருநாள் டபுள் சென்சுரிக்கு இணையான இன்னொரு இன்னிங்ஸ் இன்றுவரை யாராலும் விளையாடப்படவில்லை. 200 ரன் இன்னிங்ஸில் ஒரு டிராப் கேட்சோ, ஒரு ரன் அவுட் சான்ஸோ, எல்பிடள்யுவில் தப்பிப்பிழைத்ததோ என எதுவும் இல்லை. கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டபோதும் பை ரன்னர் வைத்துக்கொண்டு ஓடவில்லை. அன்று அவர் அடித்த 25 பவுண்டரிகளும் க்ளாசிக்ஸ்.

சச்சின்
சச்சின்

சச்சின் இந்திய அணிக்குள் நுழைந்தபோது அது ஓர் அணியாகவே இல்லை. ஒவ்வொருவரும் தனித்து விளையாடினார்கள். அணிக்குள் ஒரு குழு மனப்பான்மைகிடையாது. சச்சின் விளையாடினால் ஆட்டம் விறுவிறுப்பாகப்போகும். அவர் அவுட் ஆனால் ஆட்டம் முடிந்துவிடும் என்பதுதான் நிலைமை. ஆனால், சச்சின் ஓய்வுபெற்றபோது இந்திய அணியை அவர் அப்படி விட்டுவிட்டுப்போகவில்லை. தோனி, கோலி, கம்பீர், யுவராஜ், ரெய்னா எனத் திறமையான பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வழிகாட்டி வெளியேறினார் சச்சின்.

கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின். கிரிக்கெட் இருக்கும்வரை அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும். இந்தியாவின் ரன் மெஷினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDSachinTendulkar
அடுத்த கட்டுரைக்கு