Published:Updated:

ஆஃப் சைடுனா ஸ்கொயர் கட்... பவுன்சர்னா ஊப்பர் கட்... ஸ்பின்னா இறங்கி வந்து... ஷேவாக்டா! #HBDSehwag

ஷேவாக்
ஷேவாக்

கேங்கைக் கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்... ஒத்தையா வரவன் மான்ஸ்டர். 99,199,299 ரன்களில் சிங்கிள் எடுக்கும் கேங்ஸ்டர் கிடையாது. இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் மான்ஸ்டர் இவர்!

2000-களில் ஆரம்பித்து இன்றுவரை ஷேவாக்கைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் என்ன? இருக்கு... நிறையவே இருக்கு! இந்தியாவின் விவியன் ரிச்சர்ட்ஸ் சர் வீரேந்திர ஷேவாக்கிற்கு இன்று 41-வது பிறந்தநாள். சிலாகிக்கப் பல விஷயங்களைப் படையலிட்டுவிட்டுப் போயிருக்கிறார் ஷேவாக்.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆட்டத்தின் முதல் பந்தை கையில் எடுத்துக்கொண்டு பல கனவுகளுடன் பந்துவீசவருவார். முதல் பந்தை யார்க்கராகப் போடலாம்... பவுன்சராகப் போடலாம்... இன்ஸ்விங்கராகப் போடலாம் என அவருக்குள் பல திட்டங்கள் இருக்கும். கனவுகளுடனும், திட்டங்களுடனும், விக்கெட்டை வீழ்த்திவிடவேண்டும் என்கிற வெறியுடனும் பந்துவீச வரும் பெளலரை அடுத்த நொடியிலேயே பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பிவைத்து அட்டகாசம் செய்தவர் வீரேந்திர ஷேவாக். இப்படி ஒரு முறை அல்ல இருமுறை அல்ல... இரண்டாயிரம் முறைக்கும் மேல் செய்தவர் என்பதால்தான் வரலாற்றில் நிற்கிறார் வீரு பாய்!

When Viv Richards retired I thought it was an end of entertainment. But then came Virender Sehwag, the King of entertainment
ரமீஸ் ராஜா, பாகிஸ்தான்

சச்சின் இருக்கும்போது, இன்னொரு ஓப்பனராக கங்குலி இருக்கும்போது அணிக்குள் நுழைந்து, ஓப்பனிங் ஸ்லாட்டைப் பிடித்து, தனக்கென தனி ரூட் அமைத்து, பெளலர்களின் கனவுகளைச் சிதைத்து கிரிக்கெட்டின் உச்சத்தில் உயர்ந்து நின்றவர் ஷேவாக்.

Sehwag
Sehwag

1999-ல் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவருக்கு முதல் போட்டியே பாகிஸ்தானுடன்தான். பேட்டிங்கில் 1 ரன்னில் அவுட். பெளலிங்கில் வெளுத்துவிட்டார்கள். முதல் போட்டியே இறுதிப்போட்டியாகிவிட்டதுபோன்ற நிலை. ஒரே போட்டியில் அணியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனால், ஷேவாக் பயந்துவிடவில்லை. ரஞ்சி போட்டிகளில் அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். ஷேவாக்கின் திறமையைத் தவிர்க்க முடியவில்லை. 20 மாதங்கள் கழித்து மீண்டும் அணிக்குள் ஆட இடம் கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் காலம் இரண்டாவது வாய்ப்பை வழங்கும். இந்த இரண்டாவது வாய்ப்பை இறுகப்பற்றிக்கொண்டு எழுந்துவந்தார் ஷேவாக்.

ஜூலை 13, 2002... நாட்வெஸ்ட் சீரிஸ் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அடித்த 325 ரன்களை சேஸ் செய்து இந்தியா பெருவெற்றிபெற்ற நாள். இந்த ஃபைனல் என்றதும், யுவராஜ் சிங்- கைஃபின் பார்ட்னர்ஷிப்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் போட்டியின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம் ஷேவாக் - கங்குலி போட்ட ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்தான். யுவராஜ் - கைஃப் கூட்டணியின் பார்ட்னர்ஷிப் 121 ரன்கள் என்றால் ஷேவாக் - கங்குலி பார்ட்னர்ஷிப் 106 ரன்கள்.

இங்கிலாந்து பெளலிங்கைத் தொடங்கியதிலிருந்தே வெறியாட்டம் ஆடுகிறார் கங்குலி. முதல் 12 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 82 ரன்கள். விக்கெட் இழப்பு எதுவும் இல்லை. கங்குலி 36 பந்துகளில் 52 ரன்கள் அடித்துவிட்டார். ரன்ரேட் ஆறுக்கும் மேல் இருக்கிறது. அதனால் ஷேவாக்கிடம் போய் கங்குலி சிங்கிள்கள் அடித்தாலே போதும். தேவையான ரன்ரேட் இருக்கிறது என்கிறார். 13வது ஓவரை வீச வருகிறார் மித வேகப்பந்து வீச்சாளர் ரோனி இராணி. ஷேவாக் ஆன் ஸ்ட்ரைக். முதல் பந்து பவுண்டரிக்குப் பறக்கிறது. கங்குலி வருகிறார். ''அவசரப்பட்டு ஆடாதே... தேவையான ரன்ரேட் இருக்கிறது'' என அட்வைஸ் செய்கிறார். ''சரி'' எனத் தலையை ஆட்டிக்கொண்டவர் அடுத்த பந்தை தேர்ட்மேன் பக்க பவுண்டரிக்கு விரட்டுகிறார். மீண்டும் கங்குலி. மீண்டும் அட்வைஸ். இந்தமுறை ஸ்வீப் செய்து ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடிக்க ஹாட்ரிக் பவுண்டரிஸ். கங்குலி அட்வைஸ் செய்வதை நிறுத்திட்டார். இந்த ஓவரில் ஷேவாக் அடித்த ரன்கள் மட்டும் 16.

அட்வைஸ் கொடுப்பது கேப்டனாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் கடவுள் சச்சினாக இருந்தாலும் சரி, இவருக்கு எது சரியோ அதை மட்டும்தான் செய்வார். பயந்து ஆடுவது என்பது ஷேவாக்கின் டிக்‌ஷனரியிலேயே கிடையாது.

ஷேவாக்கின் இன்னிங்ஸ்களில் எதிரிகளுக்கு மரண பயம் காட்டிய பல இன்னிங்ஸ்கள் இருக்கின்றன. ஆனால், அதில் இந்த இன்னிங்ஸ் செம ஸ்பெஷலானது.

2003 டிசம்பரில் கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது இந்தியா. ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் வாக். கங்குலிக்கும்- ஸ்டீவ் வாக்குக்கும் இடையே பெரிய பனிப்போர் நிலவியதால் இந்த டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய ஹைப் இருந்தது. முதல் டெஸ்ட் டிராவில் முடிய இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவை, குறிப்பாக ஸ்டீவ் வாக்கை நிலைகுலையவைக்கிறது. மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் தொடங்குகிறது. ஏற்கெனவே பிரஷரில் இருந்த ஸ்டீவ் வாக் வெறுத்துப்போன நாள் இது. டெஸ்ட் கிரிக்கெட்டா, ஒருநாள் கிரிக்கெட்டா எனக் குழம்பியது ஆஸ்திரேலியா அணி. ``என் கிரிக்கெட் கேரியரில் இப்படி ஒரு டெஸ்ட் இன்னிங்ஸைப் பார்த்ததில்லை'' என ஸ்டீவ் வாக்கைத் தளரவைத்தபோட்டி அது. காரணம் ஷேவாக்கின் அந்த ஒரு இன்னிங்ஸ்.

Sehwag
Sehwag

முதல் நாள்... முதல் இருபது ஓவர். மிகப்பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ஷேவாக்கை யாரும் பெரிதாக சட்டை செய்யவில்லை. காரணம் எல்லோருடைய கவனமும் டிராவிட், சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் மீதுதான் இருந்தது. ஆனால் 20-வது ஓவருக்கு மேல் டாப் கியரில் பறக்க ஆரம்பித்தார் ஷேவாக். பிரட் லீ, நாதன் பிராக்கென், வில்லியம்ஸ் என எல்லோருடைய பந்துகளையும் அடித்து நொறுக்குகிறார் ஷேவாக். ஒருபக்கம் இந்தியாவின் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், ஷேவாக்கின் அடி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. ஸ்டூவர்ட் மெக்கிலை வாழ்க்கையின் விளிம்பிக்குக் கொண்டுபோய்விட்டது அவரின் ஒரு ஓவரில் ஷேவாக் அடித்த அடி. லெக் ஸ்பின்னரான மெக்கில் எக்ஸ்ட்ரா கவரில் இரண்டு ஃபீல்டர்களை அருகருகில் நிற்கவைத்துவிட்டு கேட்ச் ஆகவேண்டும் எனப் பந்துவீசுவார். ஆனால், அந்த இரண்டு ஃபீல்டர்களுக்கும் இடையில் பவுண்டரி அடித்தார் ஷேவாக். ஒருமுறை அல்ல... 5 முறை அதே இடத்தில் பவுண்டரி அடித்தார் ஷேவாக். மொத்தம் 25 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்... 233 பந்துகளில் 195 ரன்கள். ஒருநாள் இன்னிங்ஸை ஆடிவிட்டு ஷேவாக் ஓய்ந்தபோதுதான் ஆஸ்திரேலியாவுக்கு உயிர்வந்தது.

ஸ்லிப்ல இருந்து கவர் ஏரியா வரைக்கும் வரிசையாக 9 ஃபீல்டர்களையும் நிறுத்தினால்கூட ஷேவாக் ஸ்கொயர் கட்டில் பவுண்டரி அடிப்பார். அந்த அளவுக்கு அவர் ஷாட்டில் பர்ஃபெக்‌ஷன் இருக்கிறது
இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவை மிரட்டியது இந்த இன்னிங்ஸ் என்றால் பாகிஸ்தானுக்குப் பாடம் எடுத்த இன்னொரு இன்னிங்ஸ் இருக்கிறது. ஷோயப் அக்தரின் மின்னல் வேகம், சமியின் லைன் அண்ட் லெங்த், ஷபிர் அஹமதுவின் பவுன்சர், சக்லைன் முஸ்தாக்கின் சுழல் என பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அத்தனையும் தரையில் புரண்டு கதறிய இன்னிங்ஸ் அது.

sehwag
sehwag

மார்ச் 28, 2004... பாகிஸ்தானின் முல்தானில் நடக்கிறது அந்த முதல் டெஸ்ட். ஆகாஷ் சோப்ராவும், கேப்டன் ராகுல் டிராவிட்டும் மட்டும்தான் அவுட். சச்சின் ஒருபக்கம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ஷேவாக் வாணவேடிக்கை நிகழ்த்திய நாள் அது. முதல் நாள் ஷேவாக் அடித்த ரன்கள் மட்டும் 228 நாட் அவுட். சச்சின் 60 நாட் அவுட். இந்தியாவின் ஸ்கோர் முதல் நாளிலேயே 356.

இரண்டாவது நாளைத் தொடங்குகிறார்கள் ஷேவாக்கும், சச்சினும். ஷேவாக் பவுண்டரிகளால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை டீல் செய்துகொண்டிருக்கிறார். ஷேவாக் 290 ரன்களில் இருக்கும்போது பெரும்பாலான ஸ்ட்ரைக்கை சச்சின் எடுக்கிறார். இதனால் நிதானம் இழக்கும் ஷேவாக்கை கவனிக்கிறார் சச்சின். 295 ரன்னில் ஆடிக்கொண்டிருக்கும் ஷேவாக்கிடம், ''சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணாதே... ஒழுங்கா சிங்கிள் எடுத்து ஆடு'' என்கிறார். சச்சின் சொன்னதும் ஷேவாக்குக்கு சிக்ஸர் ஞாபகத்துக்கு வருகிறது. சக்லைன் முஸ்தாக் சிக்குகிறார். மிட் விக்கெட் திசையில் சிக்ஸர். 300 ரன்கள் என்கிற மைல்கல்லைத் தொடுகிறார் ஷேவாக். மிரண்டு போய் பார்த்தார் சச்சின்.

இந்த நாள் முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இப்படிச் சொன்னார். ''ஸ்லிப்ல இருந்து கவர் ஏரியா வரைக்கும் வரிசையாக 9 ஃபீல்டர்களையும் நிறுத்தினால்கூட ஷேவாக் ஸ்கொயர் கட்டில் பவுண்டரி அடிப்பார். அந்த அளவுக்கு அவர் ஷாட்டில் பர்ஃபெக்‌ஷன் இருக்கிறது'' என்றார். ஆமாம்... அந்த பர்ஃபெக்‌ஷன்தான் ஷேவாக்.

பாகிஸ்தானுக்கு இந்த அடி மட்டுமல்ல, இன்னொரு அடியும் இருக்கிறது. இந்தமுறை லாகூரில் நடந்தது அந்த கும்பாபிஷேகம். முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 679 ரன்கள் அடிக்கிறது. யூனிஸ் கான், மொகமது யூசுப், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல்... என நான்கு பேர் சதம் அடிக்கிறார்கள். இரண்டு நாள் ஃபீல்டிங் செய்துவிட்டு சோர்வுடன் இருக்கிறது இந்திய அணி. சிரிப்பும், கொண்டாட்டமாக இருக்கிறது பாகிஸ்தானின் டிரெஸ்ஸிங் ரூம்.

Sehwag
Sehwag

இந்தியாவின் முதல் இன்னிங்ஸுக்கு இன்சமாம் கெத்தாக பெளலர்களை அழைத்துக்கொண்டு மைதானத்துக்குள் நுழைகிறார். ஆனால், கேப்டனின் கெத்து கொஞ்ச நேரத்தில் காணாமல் போகிறது. இன்சமாம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்த நாள் பாகிஸ்தானின் கேப்டன் இன்சமாமின் வாழ்க்கையில் மிக மோசமான நாளாக மாறுகிறது. ஷேவாக்கும், டிராவிட்டும்தான் இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். இருவரின் விக்கெட்டையுமே பாகிஸ்தான் பெளலர்களால் வீழ்த்த முடியவில்லை. வழக்கமாக சிக்ஸர்களால் மிரட்டும் ஷேவாக், பவுண்டரிகளால் பாகிஸ்தான் பெளலர்களைப் பாடாய்ப் படுத்துகிறார். ஒன்றல்ல... இரண்டல்ல... 47 பவுண்டரிகள். ஷேவாக் மட்டும் 254 ரன்கள். ஷேவாக் - டிராவிட் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மட்டும் 410 ரன்கள் குவிக்கிறது. பாகிஸ்தான் 679 ரன்கள் அடிக்க இந்தியா வீசிய ஓவர்கள் 144. ஆனால், இந்தியா 410 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் வீசிய ஓவர்கள் வெறும் 76. கிட்டத்தட்ட ஒருநாள் இன்னிங்ஸ். மூன்றே ரன்களில் உலக சாதனையைத் தவறவிட்டது ஷேவாக்- டிராவிட் கூட்டணி. ஆனால், மேட்ச் முடிந்ததும் ஷேவாக் ``எனக்கு இப்படி ஒரு சாதனை இருக்குறதே தெரியாது.'' என்கிறார். அதுதான் ஷேவாக்.

சென்னை சேப்பாக்கத்தில், சிதம்பரம் மைதானத்தில் அதிவேக முச்சதம் அடித்தது முதல், சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தது வரை ஷேவாக்கின் கொண்டாட்டமான இன்னிங்ஸ்கள் பல இருக்கின்றன. ஆனால், அதை எல்லாம் ஒரே கட்டுரையில் எழுதிமுடிக்கமுடியாது. இந்தக் கட்டுரைய படித்துமுடித்த கையோடு கொஞ்ச நேரம் யூ-டியூபில் ஷேவாக்கின் இன்னிங்ஸ்களைப் பார்த்து ரசிக்கலாம். வீரு பாய்க்கு அன்பின் முத்தங்கள்!

அடுத்த கட்டுரைக்கு