Published:Updated:

மாஸ்டர் பிளாஸ்டரின் கடைசி ஆட்டத்தில் இன்னொரு ரன் மெஷின் உருவான கதை தெரியுமா?! #Sachin #Kohli183

கோலி
கோலி ( AP )

எந்த அணியைத் தோற்கடிப்பதைக்காட்டிலும் பாகிஸ்தானைத் தோற்கடிப்பது என்பது இந்திய வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் எப்போதுமே ஸ்பெஷல்தான்.

சச்சின் எனும் மாபெரும் சகாப்தம் ஆடிய இறுதி ஒருநாள் போட்டியில் விராட் கோலி என்னும் விடிவெள்ளி பிறந்த தினம் 18 மார்ச் 2012. எந்த நாட்டைத் தோற்கடிப்பதைக்காட்டிலும் பாகிஸ்தானைத் தோற்கடிப்பது என்பது இந்திய வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த வெற்றி கொடுக்கும் சந்தோஷம் மிகவும் உணர்வுபூர்வமானது மற்றும் ஈடு இணையில்லாதது.

வழக்கமாக சச்சின், சேவாக் வரிசையில் பாகிஸ்தானைப் பந்தாட வந்துசேர்ந்தார் கோலி. 2012 மார்ச்சில் வங்கதேசத்தில் தொடங்கியது ஆசியக் கோப்பை. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நான்கு அணிகள் மோதின. ரவுண்ட் ராபின் முறையில் நடந்த இந்த ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறவில்லை. வங்கதேசத்திடம் அடைந்த எதிர்பாராத தோல்வி, இந்திய அணியைப் பின்னுக்குத் தள்ளியது. இதில் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மார்ச் 18, 2012-ல் விளையாடியது இந்திய அணி. தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் விக்கெட்டே கொடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 50 ஓவர்களும் விக்கெட் போகாமல் ஆடிவிடுவார்களோ என்றளவுக்கு சோதனையைக் கொடுத்தார்கள் முகமது ஹஃபிஸீம், நாசிர் ஜம்ஷெத்தும்.

கோலி
கோலி

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான இருவருமே சதம் அடிக்க, 36-வது ஓவரில்தான் இந்தக் கூட்டணியை உடைத்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். அப்போது பாகிஸ்தானின் ஸ்கோர் 224. பாகிஸ்தான் இருந்த வேகத்துக்கு ஸ்கோர் 380 ரன்களைத் தாண்டிப் போயிருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி பெளலர்களின் இறுதிநேர சாதுர்ய பந்துவீச்சினாலும் தோனியின் ஃபீல்ட் செட் அப்பினாலும் 329 ரன்களில் வந்து நின்றது பாகிஸ்தான். அதாவது இறுதி 14 ஓவர்களில் 105 ரன்கள் மட்டுமே. இருந்தும் ஈசியாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் அல்ல 330. அதுவும் உமர் குல், வஹாப் ரியாஸ், அஜ்மல், அஃப்ரிடி போன்ற பெளலர்களை எதிர்த்து.

330 ரன்கள் என்கிற இலக்கை சேஸ் செய்து ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ஸ்பின் ஆயுதத்தைக் கையில் எடுக்க, ஹஃபீஸ், கெளதம் கம்பீரை ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே காலி செய்தார். பொதுவாக 300 ரன்களை சேஸ் செய்யும்போது ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் சேஸிங் செய்வது என்பது கடினமாகிவிடும். அன்றைக்கு சேஸிங் அப்படி கடினமாகிவிடுமோ, ஒருவேளை பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்சியபோது விடிவெள்ளி விராட் கோலி களத்துக்குள் வந்தார்.

வழக்கமாக சச்சின் அடிப்பார் மற்ற பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஆடுவார்கள். இதில் சேவாக் மட்டுமே விதி விலக்கு. ஆனால், அன்றைக்கு நிலைமை வேறு மாதிரி இருந்தது. கோலி அடிக்க சச்சின் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்துகொண்டிருந்தார் . ''நீ ஆடியது போதும் தலைவா... ஓய்வெடு... இனி இந்த கிரிக்கெட்டை நாங்கள் முன்னேடுத்துச் செல்கிறோம்'' என்பதுபோல் இருந்தது அன்றைய கோலியின் ஆட்டம் .

சச்சின் 52 ரன்களில் அவுட் ஆக இரண்டாவது விக்கெட்டுக்கு சச்சினும்- கோலியும் பார்ட்னர்ஷிப்போட்டு எடுத்த ரன்கள் 132. அடுத்து வந்த ரோஹித் ஷர்மா நங்கூரம் மாதிரி நின்று ஆட கோலி பெளலர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்.

சச்சின்
சச்சின்

உமர் குல் நன்றாக ஃபார்மில் இருந்த நேரத்தில் ''நீ எல்லாம் ஒன்றுமே இல்லை'' என்பது போல் வெளுத்தெடுத்தார் கோலி . அஜ்மல், அஃப்ரிடி, வஹாப் ரியாஸ் என யாரையும் விட்டுவைக்கவில்லை. ஷார்ட் பால் போட்டால் புல் ஷாட் அடித்தார், காலில் போட்டால் ஃப்ளிக் ஷாட் ஆடினார். ஆஃப் சைடில் போட்டால் தனது மணிக்கட்டுகளை யூஸ் செய்து கவர் டிரைவ் அடித்தார். இவ்வாறு அன்று கோலியின் ஆட்டம் வேறு மாதிரி இருந்தது. மிஸ்ட்ரி பெளலர் என்றழைக்கப்படும் சஜித் அஜ்மலால்கூட கோலியை ஒன்றும் செய்யமுடியவில்லை.

148 பந்துகளைச் சந்தித்தவர் 22 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் அடித்து அதகளம் செய்தார். ஒருகட்டத்தில் 200 ரன்களை எடுத்துவிடுவாரோ என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருக்க ,183 ரன்கள் இருக்கும்போது உமர்குல் வீசிய ஷார்ட் பாலில் சிக்ஸர் அடிக்க முயன்று பந்து எட்ஜ் ஆகி ஹஃபீஸின் கையில் தஞ்சம் புகுந்தது.

வெற்றிக்குத் தேவை 17 பந்துகளில் 12 ரன்கள் என்ற நிலையில்தான் விட்டுச் சென்றார் கோலி. 183 ரன்கள் அடித்து தனது அதிகபட்ச ஒன்டே ஸ்கோரைப் பதிவு செய்தார் கோலி. மேலும் சேஸிங்கில் அதிக ரன் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களில் தோனியுடன் சேர்ந்து முதல் இடத்தைப் பகிர்ந்தார். அன்றைக்கு தனது 11-வது சதத்தைப் பதிவு செய்தவர் அதற்கு பிறகு மேலும் 32 சதங்களை அடித்துவிட்டார். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுசெய்யும்போது பேட்டிங்கில் என்ன எல்லாம் சாதனைகள் இருக்கிறதோ அது எல்லாம் தன் பெயரில் எழுதிச்சென்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி
விராட் கோலி

சச்சின் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் தான் அடித்த 183 ரன்கள் என்பது கோலியின் வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னிங்ஸாக இருக்கும்.

கேள்விக்குறியாகும் 2020 ஐ.பி.எல்... இனி தோனியின் எதிர்காலம் என்ன? #Dhoni #T20Worldcup
அடுத்த கட்டுரைக்கு