விடைபெறும் 2022-ம் ஆண்டில், உலகக்கிரிக்கெட் குகைக்கு ஒளிகூட்டியவை, இருளூட்டியவை என இருவகையிலான சம்பவங்களுமே அரங்கேறின. 'இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வரலாறு' எனச் சொல்லப்படுவதுண்டு. விடைபெற இருக்கும் 2022-ம் வருடமும் உலகக் கிரிக்கெட்டின் கால நூலகத்தில் பத்திரப்படுத்தப்படுவதற்கான அத்தகைய பல நிகழ்வுகளுக்கு வடம் பிடித்தது.
அதில் சில மிரள வைத்தவை, ஒருசில கலங்க வைத்தவை, இன்னமும் சிலவோ நெகிழ வைத்தவை. கடந்த ஓர் ஆண்டின் நிமிடங்களின் நினைவகத்துக்குள் சற்றே நீந்தி உலகக்கிரிக்கெட்டின் முக்கிய தருணங்களில் மூழ்கி விட்டு வரலாமா?
BazBall:
காட்டினில் படரும் காரிருளாக, ஆண்டின் தொடக்கத்தில் 4/0 என்ற அவமானகரமான ஆஷஸ் தோல்வி இங்கிலாந்தைச் சூழ்ந்தது. அந்த இடிபாடுகளிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டை புனரமைப்பதற்காக புதிதாக இணைந்தது மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி.
அவர்கள் கொண்டு வந்த புது ஆயுதம்தான் `Baz Ball' என மற்றவர்களால் பெயரிடப்பட்டது. இலக்கும், சூழலும் என்னவாக இருந்தாலும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் ` பயந்தால் பயனில்லை' என அடித்து நொறுக்கும் வியூகம்.

ரேஸ் காரின் வேகத்தை சைக்கிள் ரேஸில் கொண்டு வருவது போன்றதுதான். கேட்க வினோதமாகத் தெரிந்தாலும் இது இங்கிலாந்துக்குக் கைகொடுத்து வருகிறது. நியூசிலாந்தை எடுத்த எடுப்பிலேயே 3/0 என தோற்கடித்தது, அதுவும் எப்படி? 277, 299, 296 என்னும் இலக்குகளை சேஸ் செய்து. இந்தியா நிர்ணயித்த 378 ரன்களை எட்டி, மிரட்டி, முந்தைய ஆண்டின் பழியைத் தீர்த்து தொடரை சமன் செய்தது. தற்போது பாகிஸ்தானையும் துவம்சம் செய்து வருகிறது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நால்வர் சதமடித்தனர் அதுவும் 97+ ஸ்ட்ரைக்ரேட்டில்.
Baz Ball சித்தாந்தம் தற்சமயம் மற்ற அணிகளுக்குள்ளும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் ஃபாலோ அப் எப்படி இருக்கும் என்பதை அடுத்த ஆண்டுதான் நிர்ணயிக்கும்.
ஷேன் வார்னே, சைமண்ட்ஸ் மறைவு:
பௌலர்களில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள்தான் `Alpha Male' எனச் சொல்லப்படும் ஆதிக்கக்காரர்கள்; ஆட்டத்தின் போக்கையே தங்களது கைப்பிடிக்குள் அடக்குபவர்கள். ஆனால் தனது சுழல்பந்து ஜாலத்தின் மூலமாகவே அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷேன் வார்னே.

ஸ்பின்னர்களின் குறிப்பாக லெக் ஸ்பின்னர்களின் மானசீக குரு, ஜீரோ ஹேட்டர்களைக் கொண்ட வெகுசில கிரிக்கெட்டர்களில் ஒருவர். அதனால்தான் அவரது திடீர் மறைவு பலரையும் உலுக்கியது. இன்னமும் அதிலிருந்து முழுதாக மீள முடியவில்லை என்பதே உண்மை. அதுவும் இன்னுமொரு ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டரான ராட் மார்ஷின் மரணத்திற்காக தனது இரங்கல் பதிவை வெளியிட்ட ஒரு நாளுக்குள்ளாகவே வார்னே இறந்து போனார்.
கடத்தப்பட்ட சாபம் போல அடுத்த இரு மாதங்கள் கழித்து, வார்னே பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்குள் மூன்று முக்கிய முன்னாள் கிரிக்கெட்டர்களை ஆஸ்திரேலியா இழந்தது கிரிக்கெட் சமூகத்திற்கே பேரிழப்பாக இந்தாண்டு இருந்தது.

தேய்பிறை காணும் ஒருநாள் ஃபார்மட்டும், தென்னாப்பிரிக்கா டி20 லீக்கும் :
`தமிழ் இனி மெல்லச் சாகும்' என்ற பாரதியின் வார்த்தை போல `ஒருநாள் ஃபார்மட்டும் ஒருநாள் இல்லாமலே போகும்' என்ற விவாதங்கள் இந்தாண்டு சூடுபிடித்தன. இதற்கு மாற்றாக டெஸ்ட் ஃபார்மட் கிரிக்கெட் காதலர்களால் தப்பிப் பிழைக்கும், டி20 லீக்குகளோ பல்கிப் பெருகும் என்று இந்தாண்டு முழுவதுமே கூறப்பட்டு வந்தது. கால் பந்தாட்டத்தின் தடம் பின்பற்றி உலகக்கோப்பைகளில் மட்டுமே நாடுகள் மோதிக் கொள்ளும் லீக்குகள் முழுதாக கோகோச்சும் என ஆருடங்கள் கணிக்கப்பட்டன. FTP எனப்படும் 2023 - 2027 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கான திட்டத்திலும் ஒருநாள் போட்டிகளைப் பின்னுக்குத் தள்ளி டி20 போட்டிகளே இருமடங்காக இடம் பெற்றுள்ளன. ஒருநாள் ஃபார்மட்டில் மட்டும் ஓய்வறிக்கும் டிரெண்டையும் சில கிரிக்கெட்டர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர்.
எதிர்காலத்தை மனதில் நிறுத்தி, தென்னாப்பிரிக்காவும் அதனை நோக்கி தனது முதல் அடியை டி20 லீக் மூலமாக எடுத்து வைத்துள்ளது. இதில் விந்தை என்னவென்றால் இதன் ஆறு அணிகளையும், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட இந்திய ஐபிஎல் உரிமையாளர்களே வாங்கியிருப்பதுதான்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சம்பள ஒப்பந்தம் :
"டி20 லீக்குகள் கரையானாகி, சர்வதேசக் கிரிக்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் என்ற பயம் என்னைக் கவ்வுகிறது", என ஒருமுறை மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். அதன் தொடக்கப்புள்ளியோ என எண்ணுமளவிற்கு நியூசிலாந்துக் கிரிக்கெட்டில் காட்சிகள் அரங்கேறின. கிரிக்கெட் வாரியத்துடனான சம்பள ஒப்பந்தத்திற்கு உட்பட டிரெண்ட் போல்ட், நீசம் உள்ளிட்ட வீரர்கள் மறுத்து விட்டனர். இவர்களுக்கு பதிலாக ஃபின் ஆலன், பிரேஸ்வெல், அஜாஸ் படேல் போன்றவர்கள் ஒப்பந்தத்திற்கு சம்மதித்தாலும் இந்த ஸ்டார் ப்ளேயர்களின் துணிகரமான முடிவு நாட்டிற்கு முன்னதாக பணத்தை முன்னிலைப்படுத்துவதாக இருக்கிறதென சலசலப்பை உண்டு பண்ணியது.
மேற்கிந்தியதீவுகளின் வீழ்ச்சி:
இருமுறை டி20 சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, இம்முறை சூப்பர் 12-க்குக்கூட முன்னேறவில்லை. மோசமான அணித்தேர்விலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கான விமானத்தைத் தவறவிட்ட ஹெட்மயர் வரை என தவறான விஷயங்களுக்காகவே தலையங்கத்தை மேற்கிந்தியத்தீவுகள் அலங்கரித்தன.
சம்பளப் பிரச்சினையில் கிடுக்குப்பிடி போடும் வாரியம் போதுமான வருமானமில்லாததால் டி20 லீக்குகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரும் ஸ்டார் வீரர்கள் என ஒரு அணியாகவே இணைந்து ஆட முடியாத நிலை நீடிக்கிறது.

ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, ஃபார்மட் வேறுபாடின்றி உதைவாங்கிக் கொண்டிருந்த மேற்கிந்தியத்தீவுகள் டி20 உலகக் கோப்பையிலோ ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்துடன் தோல்வி கண்டு, க்ரூப் ஸ்டேஜோடே தொடரை விட்டு வெளியேறியது. ஒரு பேரரசின் படுவீழ்ச்சியாகவும், சாம்ராஜ்யத்தின் சரிவாகவுமே இது பார்க்கப்படுகிறது.
ஆசியக்கோப்பை :
பல நட்சத்திர வீரர்கள் வெளியேறியதால் உருவாகிய வெற்றிடத்தை நிரப்ப இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வந்தது. அந்த வெற்றிடமே பல வெற்றிகளை உள்ளிழுத்து அடையாளமில்லா அணியாக அவர்களை உருவாக்கி வைத்திருந்தது. ஹசரங்க, பனுகா ராஜபக்ஷ, தீக்ஷனா, துஷ்மந்த சமீர உள்ளிட்ட வீரர்களின் எழுச்சியை ஏற்கனவே இந்தாண்டு ஐபிஎல் அடிக்கோடிட்டிருந்தது.
இருப்பினும் நாட்டிற்காக ஆசியக்கோப்பையில் ஆடியபோது, அந்தத்தீ, இன்னமும் வலுப்பெற்றது. லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே தோல்வியுற்றாலும் மீண்டெழுந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து கோப்பையைக் கையிலேந்தியது. ஏற்கனவே ஐந்து முறை சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தாலும் ஆறாவது முறை அதனை இளம்படை வென்றதுதான் இன்னமும் சிறப்பானதாக அமைந்தது. அதுவும் இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்த வெற்றி நெகிழ்ச்சியானதாகவும் மனதிற்கு நெருக்கமானதாகவும் மாறியது.
டி20 உலகக் கோப்பையில் அசோசியேட் நாடுகள் தந்த ஆச்சரியங்கள் :
தங்கள் திறமையைக் காட்சிப்படுத்துவதற்கான வருடக்கணக்கிலான ஏக்கத்தை அசோசியேட் அணிகள் தீர்த்துக் கொள்வது இது போன்ற பெரிய மேடைகளில்தான். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை பல சர்ப்ரைஸ்களை உள்ளடக்கி இருந்தது. இலங்கையை வீழ்த்திய நமீபியா, இங்கிலாந்தை அயரவைத்த அயர்லாந்து, தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்த நெதர்லாந்து, பாகிஸ்தானைப் பந்தாடிய ஜிம்பாப்வே என அசோசியேட் நாடுகள் ஆச்சரியங்களைத் தந்தன.
கடலில் அலையும் குமிழி போல நிரந்தர இடமில்லா, வருமானத்திற்கே உத்திரவாதமில்லா விட்டாலும் கிரிக்கெட்டின் மீதான நேசத்தால் உந்தப்படும் இந்நாடுகளின் வீரர்களுக்கு சிக்கந்தர் ரசா, பால் ஸ்டிர்லிங், மேக்ஸ் ஓ'டவுட் உள்ளிட்ட வீரர்களின் சாதனைகள் விடிவெள்ளியாகி நம்பிக்கையூட்டுகின்றன.
`Tough Cookie' என்ற சொற்பதம், இருக்கும் கடினமான சூழலைக்கூட சுலபமாகக் கடக்கும் அசைக்க முடியாத மனோதிடம் உள்ளவர்களைக் குறிக்கும். அசோஸியேட் அணிகளின் ஒவ்வொரு வீரர்களிடமும் காணப்படும் இந்த உறுதி இருந்தாலே எதனையும் எதிர் கொள்ளலாம் என்ற எண்ணத்தை, நம்பிக்கையை இந்த உலகக்கோப்பையில் அவர்கள் திரும்பத்திரும்ப ஏற்படுத்தினர்.

இவைதவிர காமன்வெல்த்தில் கிரிக்கெட் அறிமுகம், மாற்றியமைக்கப்பட்ட ஒருசில ஐசிசி விதிகள், கிரிக்கெட் ஒளிபரப்பில் ஓடிடி தளங்களின் படையெடுப்பு என பல விஷயங்களை இந்தாண்டு பார்த்திருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் எந்தாண்டுமில்லாத அளவு இந்தாண்டு அதிகரித்திருந்ததும் நேர்மறையான விஷயம்தான்.
இந்தாண்டு முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள், திருப்புமுனைகள், டெத் எண்ட்கள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் என அத்தனையையும் கிரிக்கெட் உலகம் பார்த்து விட்டது. எனினும், காலத்திற்கேற்றவாறு வெவ்வேறு வடிவெடுத்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ள கிரிக்கெட் தயங்கியதே இல்லை.
இதனாலேயே, ஆண்டின் முடிவில், கிரிக்கெட் மீதான ரசிகர்களின் நேசமும் மோகமும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இன்னுமொரு மடங்கு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டிலும் அது பன்மடங்கு கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.