Published:Updated:

Asia Cup 2022: ஆறு நாடுகள் மோதும் சவாலான தொடர்; அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

Asia Cup 2022

இந்த ஆசியக் கோப்பை தொடர்தான் இதுவரை நடந்த தொடர்களைக் காட்டிலும் வலுவான மற்றும் சவாலான தொடர். இதில் மோதவிருக்கும் அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

Asia Cup 2022: ஆறு நாடுகள் மோதும் சவாலான தொடர்; அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

இந்த ஆசியக் கோப்பை தொடர்தான் இதுவரை நடந்த தொடர்களைக் காட்டிலும் வலுவான மற்றும் சவாலான தொடர். இதில் மோதவிருக்கும் அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

Published:Updated:
Asia Cup 2022
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இதுதொடரில் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.

ஆசியக் கோப்பை முதன்முறையாக 1984-ம் ஆண்டில் நடைபெற்றது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் கலந்துகொண்டன. அதன் பிறகு, பல்வேறு காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இத்தொடரை புறக்கணித்ததும் நடந்துள்ளது. அவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை என்றாலும் தவறாது ஆசியக் கோப்பையில் இடம்பெற்று விடும். இதனால் ஆசியக் கோப்பை மீது எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

"இந்த ஆசியக் கோப்பை தொடர்தான் இதுவரை நடந்த தொடர்களைக் காட்டிலும் வலுவான மற்றும் சவாலான தொடர்" இன்று தொடங்கவுள்ள தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இத்தொடரில் போட்டியிடும் ஒவ்வொரும் அணியின் பலம் பலவீனங்கள், பிளேயிங் லெவன் எப்படி அமையலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குரூப் A

இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் இடம்பெற்றுள்ள இந்த குரூப்தான் முடிவுகள் ஏற்கெனவே தெரிந்துவிட்ட குரூப் எனலாம். எப்படியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகும் இரண்டு அணிகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளே இருக்கப்போகின்றன என்பதே பலரின் கணிப்பும். ஒருவேளை ஹாங்காங் அணி, ஏதேனும் அதிர்ச்சியை ஒரு போட்டியில் நிகழ்த்தினாலும் காட்சிகள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா

7 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள அணி இந்தியா. கோலி அடித்த 183, சச்சினின் 100-வது சதம், ஹர்பஜன் சிக்ஸருடன் முடித்த ஆட்டம் என எத்தனையோ நினைவுகளை ஆசியக் கோப்பை வழங்கியுள்ளது. கடந்த இரு தொடர்களில் ஒரு தோல்வியையும் இந்திய அணி சந்தித்திருக்கவில்லை. கோலியின் கம்பேக் இத்தொடரில் நிச்சயம் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியா
இந்தியா

பலம்:

1) நீண்ட பேட்டிங் வரிசை.

2) நம்பர் 4-ல் சூர்ய குமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம்.

3) சிறந்த சுழற்பந்து வீச்சைக் கொண்டுள்ள அணி.

4) இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் ஃபார்ம்.

பலவீனம்:

1) பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் இருவரும் காயத்தால் இடம்பெறாதது.

2) காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ராகுலின் பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

3) துபாய் போன்ற பெரிய அளவிலான ஆடுகளங்களில் அஷ்வின், சஹால், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்கள் இடம்பெற்றால், தினேஷ் கார்த்திக் ஆடுவாரா என்பது சந்தேகம்தான்.

உத்தேச அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பண்ட், பாண்டியா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக்/அஷ்வின், சஹால், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்

கடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. ஆனால், அதன்பின் வெறும் 7 டி20ஐ போட்டிகளில் மட்டுமே பங்கேற்று உள்ளது.

பொதுவாகவே ஆசியக் கோப்பையில் அந்த அணி சிறப்பாகச் செயல்பட்டத்தில்லை என்பதையும் குறிப்பிடலாம். இதுவரை இரண்டு ஆசியக் கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது. இந்த முறை தங்கள் கடந்த கால வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்கும்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பலம்:

1) கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வரும் பாபர் அசாம்.

2) பாகிஸ்தானின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர்.

3) ஆல்ரவுண்டர் ஷதாப் கானின் ஆட்டம் இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஒன்று.

4) கடந்த டி20 உலகக்கோப்பையில் ஃபினிஷராக அதகளப்படுத்திய ஆசிப் அலி இந்தத் தொடரிலும் தன் அதிரடியை காட்டக் காத்திருப்பார்.

பலவீனம்:

1) ஷாகின் அப்ரிடி காயத்தால் இடம்பெறாதது பாகிஸ்தானுக்கு பெரிய பலவீனம்.

2) மிடில் ஆர்டர் வலுவாக இல்லை.

3) ஷாகின் இடத்தை நிரப்பப்போகும் நியூ பால் பௌலர் யார் என்பது மிகப்பெரிய கேள்வி.

உத்தேச அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ரிஸ்வான், பக்கர் ஜமான், ஹைதர் அலி, ஆசிப் அலி, இப்கிதார் அகமது, ஷதாப் கான், நவாஸ், முகமது வாசிம், ரவுப், நசீம் ஷா/முகமது ஹஸ்னைன்.

ஹாங்காங்

தகுதி சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஆசியக் கோப்பைக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளது ஹாங்காங். பேட்டிங்கில் யசிம் முர்டசா, பாபர் ஹயாட்டி, பௌலிங்கில் யஹ்சன் கான் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் அந்தஸ்து அணிகளுடன் விளையாட அந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு நல்ல வளர்ச்சி.

ஹாங்காங்
ஹாங்காங்

ஹாங்காங் அணி, நாளை நடைபெறும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணியைத் தோற்கடித்தால் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறுவது மூன்று அணிகளிடையே ரன்ரேட் அடிப்படையில் அமையும். அப்படி நடந்தால் குரூப் பி போலவே இந்த குரூப்பும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், இத்தகைய 'Dark horse moment' என்பது ஹாங்காங்குக்குச் சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உத்தேச அணி:

யசிம் முர்டசா, நிசாகட் கான், பாபர் ஹயாட்டி, கின்சிட் ஷா, ஐஸஸ் கான், மெக்கைனி, ஜீசன் அலி, ஹரூன் அரஷத், எக்சன் கான், மொகமது கசன்ஃபர், ஆயூஷ் சுக்லா.

குரூப் B

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் குரூப் B-யில் இடம் பெற்றுள்ளன. இதில் எந்த இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும் என்பது சுவாரஸ்யமாக அமையப்போகிறது. ஏனென்றால், மூன்று அணிகளும் சமீப காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதால் இந்த குரூப்பில் 'ரன்ரேட்' மிக முக்கியமான பங்கை வகிக்கப்போகிறது.

வங்கதேசம்

2012-ம் ஆண்டிலிருந்து ஆசியக் கோப்பை தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது வங்கதேசம். அந்த அணி இன்னும் ஆசியக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இம்முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல முயற்சிகள் எடுக்கும்.

வங்கதேசம்
வங்கதேசம்

பலம்:

1) அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் திரும்பியிருப்பது.

2) ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் மிராஸின் ஃபார்ம்.

3) மிடில் ஆர்டரில் அஃபிப் ஹோசைனின் சிறப்பான பார்ம் அவர்களுக்குப் பெரிய பாசிட்டிவ்.

பலவீனம்:

1) லிட்டன் தாஸ் காயத்தால் இடம்பெறாதது ஒரு புது ஓப்பனிங் இணையைத் தேர்வு செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.

2) டஸ்கின் அஹமது பார்மில்லாமல் தவிப்பது.

உத்தேச அணி:

முகமது நைம், அனமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மஹ்மதுல்லா, ரஹிம், அஃபிப் ஹோசைன், மெஹிதி ஹசன், சைப்புதீன், தஸ்கின் அஹமது, முஸ்தபிசூர் ரஹ்மான், நசூம் அஹமத்/எபடாத் ஹூசைன்

இலங்கை

சங்கக்காரா, ஜெயவர்த்தனே, மலிங்கா போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிய இலங்கை அணியைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. ஆனால், இந்த நெருக்கடி நிலையின் போது அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் மற்றும் கடைசி டி20ஐ போட்டிகளின் வெற்றிகள். கேப்டன் ஷனகா ஆடிய ஆட்டம் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே உத்வேகத்துடன் இலங்கை இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளது. அவர்கள் நாட்டு மக்களுக்காக இலங்கை வீரர்கள் தங்களின் நூறு சதவிகித உழைப்பைக் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

இலங்கை
இலங்கை

பலம்:

1) ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக ஹசரங்கா அந்த அணியின் முக்கிய வீரராக இருப்பார்.

2) பனுகா ராஜபக்சவின் அதிரடி ஆட்டம்.

3) தீக்ஷனாவின் எக்கனாமிக்கல் பந்துவீச்சு.

4) நிசங்கா, அசலங்கா, கருணரத்னா போன்றோரின் நிலையான ஆட்டம்.

பலவீனம்:

1) சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக உள்ள அளவிற்கு, வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இல்லை.

2) சமீரா காயத்தால் விலகியுள்ளது அவர்களுக்குப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

3) இத்தகைய சூழலில் இலங்கை அணி எப்படி தன் பிளேயிங் லெவன் அமைக்கப் போகிறது என்பதுதான் அவர்கள் முன் இருக்கும் பெரிய சவால்.

உத்தேச அணி:

பதும் நிசங்கா, குணதிலக்கா, அசலங்கா, பனுகா ராஜபக்ச, குசல் மெண்டிஸ், சனகா (கேப்டன்), ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா, கருணாரத்னா, தீக்சனா, பதிரனா.

ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் இதுவரை எப்படி விளையாடினர் என்பதை மறந்து விட்டு, இனி எப்படிச் செயல்பட இருக்கின்றனர் என்பதைதான் பார்க்க வேண்டும். ரஷித் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் என இருவரின் வருகை அவர்களை சிறந்த பௌலிங் அணியாக்கி உள்ளது. அவர்கள் தங்கள் பலத்தின் மீது அணியைக் கட்டமைத்து அதற்கேற்ப விளையாடி வருகின்றனர். இந்தப் பிரிவில் தங்கள் திறனை வெளிப்படுத்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Andy Kearns

பலம்:

1) ரஷித் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் இருவரின் ‘Spin Duo’.

2) ரஷித் கானின் பேட்டிங் ஐ.பி.எல் தொடரில் இருந்து சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு அது மேலும் பலம் சேர்க்கும்.

3) ஃபசல் ஹக் ஃபரூக்கி தன் வேகப்பந்து வீச்சால் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். ஸ்லோயர் பந்துகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.

4) ஆப்கானிஸ்தான் அணிக்கு துபாய் மற்றும் அதிலுள்ள ஆடுகளங்கள்தான் ‘Home grounds’. ஆகையால் அவர்கள் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து நன்கு அறிவர்.

5) அனுபவசாலியான நபியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் அந்த அணிக்குப் பலமாக அமையும்.

பலவீனம்:

1) என்னதான் பௌலிங் வலுவாக இருந்தாலும் பேட்டிங் அந்தளவுக்கு வலுவானதாக இல்லை.

2) குர்பாஸ், ஜட்ரான், ஜசாய் போன்றோரின் நிலையற்ற ஆட்டம் அணிக்குச் சற்று பலவீனமான விஷயங்கள். ஆப்கான் அணியிலும் மிடில் ஆர்டர் பிரச்னையாக உள்ளது.

3) ஆஸ்கர் ஆப்கானின் ஓய்வு, அஹ்மத் ஷெஷாத் அணியில் இடம்பெறாதது.

உத்தேச அணி:

ஹசரத்துல்லா ஜசாய், குர்பாஸ், உஸ்மான் காணி, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), சமிஉல்லா சின்வாரி, இப்ராஹீம் ஜட்ரான்/கரீம் ஜனத், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக், முஜிபுர் ரஹ்மான், ரஷித் கான்.