Published:Updated:

`86,174 பேர்; ஒருவருக்கு கொரோனா தொற்று!’- எச்சரிக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப் #T20WorldCup

மெல்போர்ன் மைதானம்
மெல்போர்ன் மைதானம்

பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை 86,174 பேர் நேரில் கண்டுகளித்தாக மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப் தெரிவித்திருந்தது.

`கொரோனா வைரஸ்’ உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்கம் மெல்ல மற்ற நாடுகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால், இத்தாலி மற்றும் இரான் நாடுகளில் கொரோனா தாக்கமும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனமும் கொரோனா தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தனிநபர் சுகாதாரம் மிகவும் அவசியம் என்கிறார்கள். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதய அறுவை சிகிச்சைகள், கேன்சருக்கு மருந்து எடுத்துவருபவர்கள் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நாடுகளில் கிரிக்கெட் போட்டி நடந்தால் மைதானங்கள் நிரம்பி வழியும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இந்தப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்தப்போட்டியை 86,174 பேர் நேரில் கண்டுகளித்தாக மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப் தெரிவித்திருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி.

ஆஸ்திரேலியா பெண்கள் அணி
ஆஸ்திரேலியா பெண்கள் அணி

இந்த நிலையில், பெண்கள் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்த்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``ஐசிசி நடத்திய பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 8-ம் தேதி நடந்தது. இந்தப் போட்டியை நேரில் பார்த்த பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் N வரிசையில் 42-வது சீட்டில் அமர்ந்து போட்டியைப் பார்த்துள்ளார். அந்த வரிசையில் அமர்ந்து போட்டியைப் பார்த்த மற்ற பார்வையாளர்கள் தங்களது தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப் அரசாங்கத்துடனும் சுகாதாரத்துறையினருடனும் தொடர்பில் இருக்கிறது. இங்கு வரும் பார்வையாளர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு சுகாதாரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு