Published:Updated:

கோலி மறக்க நினைக்கும் கெட்ட கனவு..! சி.எஸ்.கே-வின் மேஜிக் மேட்ச்

MS Dhoni and Kohli
MS Dhoni and Kohli

ரன்மெஷின் விராட்கோலியே ஒரு பௌலராக பேட்ஸ்மேனுக்கு எதிராக நிராயுதபாணியாக வியர்த்து விருவிருத்து நின்ற த்ரில்லிங்கான மேட்ச் குறித்த சின்ன ரீவைண்ட்...

ரன் மெஷின் கோலியின் ஆக்ரோஷ பேட்டிங்கில் சிக்கிச் சின்னாபின்னமாகி என்ன செய்வதென்றே தெரியாமல் பாவமாக எக்ஸ்ப்ரெஷன் கொடுத்து பவ்யமாக நடந்த பல பௌலர்களைப் பார்த்திருப்போம். அந்த ரன்மெஷின் விராட்கோலியே ஒரு பௌலராக பேட்ஸ்மேனுக்கு எதிராக நிராயுதபாணியாக வியர்த்து விருவிருத்து நின்ற த்ரில்லிங்கான மேட்ச் குறித்த சின்ன ரீவைண்ட்...

ஒரு மீனுடைய திறமையைப் பரிசோதிக்க, அதை மரம் ஏறச் சொல்லி சோதனை செய்தால் அந்த மீன் ஃபெயிலாகத்தான் செய்யும். விராட் கோலி என்னும் பேட்டிங் திமிங்கலம், பௌலராக மாறி ஆல்பி மார்க்கெலால் ஃபெயிலாக்கப்பட்ட கதைதான் இது.

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் ரைவல்ரிக்குப் பிறகு பெங்களூர்தான் சிஎஸ்கேவுக்கு ஒரு விறுவிறுப்பான எதிரி. இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டங்களில் தோனியா, கோலியா என்ற ஈகோ சண்டைதான் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும். இந்த தோனி vs கோலி என்ற ரசிகர்களின் முட்டல் மோதல்கள் உருவாகத் தொடங்கியிருந்த ஆரம்பகட்டம். 4-வது ஐபில் சீசனின் இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவிடம் தோற்றிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ். அடுத்து 5-வது சீசனின் லீக் சுற்றில் இந்த இரண்டு அணிகளும் அதே சேப்பாக்கத்தில் மீண்டும் மோதினர்.

கோலி
கோலி
RCB

முதல் பேட்டிங் ராயல்ஸ். கெயில், மயங்க் அகர்வால், கோலி என டாப் ஆர்டர் முழுவதும் ஃபுல் ஃபார்மில் இருந்து பேட்ஸ்மென்களின் வான வேடிக்கையால் ஸ்கோர் 200-ஐத் தாண்டியது. சிஎஸ்கேவுக்கு டார்கெட் 205.

எந்த கிரவுண்டாக இருந்தாலும் அக்மார்க் பேட்டிங் பிட்ச்சாகவே இருந்தாலும் சேஸிங்கில் 205 என்பதெல்லாம் கொஞ்சம் முடியாத காரியம்தான். இருந்தாலும் ராயல்ஸ் வம்பிழுத்தது சிங்களின் குகையான சேப்பாக்கத்திலே. சிஎஸ்கே நிச்சயம் மேஜிக்கை நிகழ்த்திவிடும் என ரசிகர்கள் நம்பினர்.

இப்போது சென்னை சேஸிங். டூ ப்ளெஸ்சிஸ் மட்டும் நிலைத்து நின்று ஆட, முரளிவிஜய், ரெய்னா இருவருமே சீக்கிரமே அவுட் ஆகிய பின்னர் தோனி களத்தில் இறங்கினார்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக ராயல்ஸுடையதை நெருங்கியது. கடைசி இரண்டு ஓவர் இருக்கையில் தோனி அவுட். தோனியில்லாமல் கடைசி இரண்டு ஓவர்களில் 43 ரன்கள் அடித்து ஆக வேண்டும். முடிந்துவிட்டது என்ற மனநிலையில் ரசிகர்கள் இருக்க, `மே ஐ கம்மின்' என ஆல்பி மார்கெல் களமிறங்கினார்.

ஆல்பியின் அதிரடியாட்டம் அதற்கு முன் சில முறை அரங்கேறியிருந்தாலும் `கடைசி ஓவர்' என்ற டஃப் சிச்சுவேஷனை எப்படிக் கையாளப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புதான் அங்கிருந்த ஒவ்வொருவனது கண்களிலும் தென்பட்டது. ஆனால், அன்றைய தினத்தை மார்கெல் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார். வெட்டோரி, முரளிதரன், ஜாகீர் என அனுபவ பௌலர்கள் எல்லோருக்கும் ஓவர் முடிவடைந்ததையடுத்து வினய் குமாருக்கு மட்டுமே ஒரு ஓவர் மிச்சமிருந்தது. எதிர்பாராத விதமாய் 18-வது ஓவரை வீச கோலி கையில் பந்தைக் கொடுத்தார் வெட்டோரி.

Dhoni - Kohli
Dhoni - Kohli
IPL

சிஎஸ்கேவில் பார்ட் டைம் பௌலரான சுரேஷ் ரெய்னா, அடிக்கடி சில ஓவர்களை வீசி பழக்கப்பட்டிருந்தார், சில விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். ஆனால், ராயல்ஸில் கோலியை பார்ட் டைம் பௌலர் என்றுகூட சொல்லமுடியாது. அவரது பௌலிங் ஸ்டைலும் ரொம்ப ரொம்ப ஆவரேஜ். ஒரு உலகத்தரமான பேட்ஸ்மேனை அவருக்குப் பரிச்சயமே இல்லாத விஷயத்திற்காக இப்படியெல்லாம் விமர்சிப்பது ஓவர்தான். இருந்தாலும், அந்த நொடி கோலியின் கையில் பந்தைப் பார்த்தவுடன் ஆல்பி மார்க்கெல்லின் மைண்ட் வாய்ஸ், 'அலார்ட் ஆகிக்க டா ஆல்பி மார்கெல்' என இப்படித்தான் இருந்திருக்கும்.

அதன் பின்னர் 2007 EA கிரிக்கெட் கேமை ஈஸி மோடில் வைத்து ஆடிய கதைதான். முதல் பந்து எட்ஜாகி பவுண்டரி போனதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகள் வான வேடிக்கைகளால் கதறின. என்ன செய்வதென்று தெரியாமல் கோலியின் முகம் பரிதவித்தது. நொந்து நூடுல்ஸ் ஆகிய கோலியின் முகம், எட்டுத்திக்கும் மீம் டெம்ப்ளேட் ஆகின. 3 சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் என 28 ரன்களை விளாசி சிஎஸ்கேவுக்கு வெற்றியைப் பரிசளித்தார் ஆல்பி. இன்றளவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கோலி மறக்க நினைக்கும் முதல் மேட்ச் இதுவாகத்தான் இருக்கும்.

வினய் குமார் வீசிய கடைசி ஓவரில் பிராவோவும், ஜடேஜாவும் பவுண்ட்ரி அடித்து சிஎஸ்கே வை வெற்றி பெறச் செய்தனர். இந்த சீசனில் சென்னையும் ராயல்ஸும் சமமாக 8 போட்டிகளை வென்றிருந்தன.

ப்ளே ஆஃப் ஸ்லாட்டில் ஒரே ஒரு அணிக்கு மட்டுமே இடமிருந்தது. கடைசியாக ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்குத் தகுதிபெற்றது. ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிராக அந்த ஒரு ஓவரை கோலிக்குப் பதில் வேறொரு பௌலர் வீசியிருந்தால் அந்த சீசனிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப்க்குச் செல்லாமல் சென்னை வெளியேறி இருக்கக்கூடும்.

Albie Morkel
Albie Morkel
CSK

அண்மையில் சிஎஸ்கே டிவிட்டர் ஹேண்டிலில் பேட்டி அளித்திருந்த ஆல்பி மார்க்கெல், இந்த ஓவர் குறித்து பேசும்போது, `அந்த ஓவரை விராட்டிடம் ஏன் கொடுத்தார்கள் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. அது ஒரு மேஜிக்' என்று கூறியிருந்தார். நிஜமாகவே சிஎஸ்கே ரசிகர்களுக்கு அந்த மேட்ச் ஒரு மேஜிக்தான்.

அடுத்த கட்டுரைக்கு