Published:Updated:

`15 வருஷ ரெக்கார்ட திரும்பிப் பாருங்க; இப்பவும் மனுசன் ஃபிட்தான்’ - தோனியைப் புகழ்ந்த கைஃப்

தோனி
தோனி

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது நியாமற்றது என முகமது கைஃப் பேசியுள்ளார்.

இந்தியாவில் கோடை விடுமுறையில் ஐபிஎல் போட்டிகள் களைகட்டும். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்தால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்பதால் போட்டிகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக லாக் டெளன் நீட்டிக்கப்பட்டுள்ளது பிசிசிஐ-யை களக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தோனி குறித்த பேச்சு எழுந்துள்ளது.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

சில நாள்களுக்கு முன்பு பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், `இந்த ஐபிஎல் போட்டியில் தோனி தன்னை நிரூபித்தால் அணிக்குத் திரும்புவார். ஒன்றரை வருடமாக கிரிக்கெட் ஆடாதவரை யார் அணியில் எடுப்பார்கள். தோனிக்குப் பதில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் செய்யச் சொல்லலாம் என அட்வைஸ் வழங்கினார்.

’தோனியால கேம் ஃபினிஷ் பண்ணமுடியல... ரிட்டயர்ட் ஆகலாமே!’- அக்தர் சீண்டல்

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் ஒருபடி மேலே போய் தோனி ஏன் ஓய்வு முடிவை இழுத்துக்கொண்டிருக்கிறார். நான் இந்தச் சூழலில் இருந்தால் உலகக்கோப்பை போட்டியுடன் ஓய்வை அறிவித்திருப்பேன் என தன் பங்குக்கு கொளுத்திப்போட்டார்.

அக்தர்
அக்தர்

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவது நியாமற்றது என முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார். ``எல்லோரின் பார்வையில் தோனி ஐபிஎல் போட்டியில் எப்படி விளையாடப்போகிறார் என்பதில் இருக்கிறது. இல்லையென்றால் டி20 உலகக்கோப்பை குறித்த பேச்சுகள் இருக்கும். ஆனால், என்னுடைய பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. ஐபிஎல் போட்டிகளை வைத்து நான் தோனியை மதிப்பிடவில்லை. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இப்போதும் அவர் ஃபிட்டாகதான் இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புகிறார். ஒரு கேப்டனாக சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் வெற்றிகரமான மனநிலையைக் கொண்டவர். எப்படியான சூழலிலும் வெல்வது எப்படி என அவருக்குத் தெரியும். ஒரு வீரர் நீண்ட காலமாக விளையாடுகிறார் என்றால் சில ஏற்றம் இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். தோனி என்று இல்லை, எல்லா வீரர்களுக்கும் இருக்கும். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது நியாயமற்றது என நான் நினைக்கிறேன்.

தோனி
தோனி

அரையிறுதிப்போட்டியில் தோனி நமக்காக வெற்றிபெற்றுத் தருவார் என மக்கள் நம்பினர் அதுநடக்கவில்லை. அதற்காக தோனி வெளியேற வேண்டும் என்று கூறுவதா. தோனி ஒரு சாம்பியன். கடந்த 10- 15 ஆண்டுகள் தோனியின் சாதனையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். தற்போது எப்படி ஆடுகிறார் என்பது மிகவும் முக்கியமானதுதான். ஆனால், நீங்கள் நிராகரிக்கும் அளவுக்கு அவரது ஃபார்ம் இல்லை.

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைத்துள்ள பிசிசிஐ-யின் முடிவுக்கு கைஃப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் விளையாட்டைவிட வாழ்க்கை மிகவும் முக்கியம். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிசிசிஐ எடுத்த முடிவு சரி என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு