Published:Updated:

ராபட்ஸ், ஹோல்டிங், க்ராஃப்ட், கார்னர் : பேட்ஸ்மேன்களைப் பம்மி, பதுங்கவைத்த Four Horsemenகளின் கதை!

Andy Roberts, Michael Holding, Colin Croft and Joel Garner
Andy Roberts, Michael Holding, Colin Croft and Joel Garner ( Facebook )

பவுன்சர்கள், யார்க்கர்கள், ஸ்விங்குகள் என்னும் அணுகுண்டுகள் நிரப்பப்பட்ட நான்கு ஏவுகணைகள், எதிரணியின் கூடாரத்தைத் தரைமட்டமாக்கிய கதைதான் இது.

பேட்டுக்கும் பந்துக்குமான மகாயுத்தத்தை அதிவேகமாய் அரங்கேற்றி, துல்லிய லைன், லென்த், வேகம் மற்றும் மூவ்மென்ட்டால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி, சிக்கவைக்கும் மாயாவிகள்தான் வேகப்பந்து வீச்சாளர்கள். இரு வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக அமைந்தாலே, எதிரணியின்பாடு திண்டாட்டம் எனும் நிலையில், நால்வரணி எல்லாம் அமைந்தால் எதிரணி சின்னா பின்னமாகி விடும்! அப்படித்தான் நடந்தது 1970களில்...

கிரிக்கெட்டின் அரிச்சுவடியை எழுதிய, சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முதல், அசந்தால் கதைமுடிக்கும் ஆஸ்திரேலியா வரை, அனைவரையும், இரு தலைமுறைகளாக, அஞ்சி நடுங்கவைத்து, கட்டி ஆண்டது மேற்கிந்தியத் தீவுகள். அதற்கு முப்படைகள் தேவைப்படவில்லை. நான்கு சாமுராய்களே போதுமானவர்களாய் இருந்தனர். ஒவ்வொரு பௌலரின் பந்துகளையும் இப்படித்தான் ஆட வேண்டும் என டீகோடிங் செய்துவரும் வல்லுநர்களால்கூட அவிழ்க்கமுடியாத ஒரு சூட்சுமம் அவர்களுடையது. அதுதான், 'வேகம்'! மணிக்கு 90 மைலுக்கும் மேல் விரையும் பந்துகளினைப் பாயச் செய்து, கன்னக்கோல் போட்டு, கிரிக்கெட் கோட்டையையே, தங்களுடையதாக்கிய வேகச்சக்ரவர்த்திகள் அவர்கள்; பெருவேகமும் பேராபத்தும் கொண்டவர்கள்.

Andy Roberts
Andy Roberts
அழிவைக்குறிக்கும், 'ஃபோர் ஹார்ஸ்மென்' என்றழைக்கப்படும் ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் மற்றும் காலின் கிராஃப்ட் ஆகியவர்கள்தான் அந்நால்வரும். ஆயிரக்கணக்கான ஹார்ஸ்பவரளவு ஆற்றல்மிக்க இந்த ஹார்ஸ்மென் மெஷின் கன்கள், பந்துகளை அக்னி ஜுவாலையாக வீச, அந்த அனலில் நிற்கமுடியாது, எதிரணி பேட்ஸ்மேன்கள் வெளியேறினர்.

1974-ம் ஆண்டே ஆன்டி ராபர்ட்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 1975 உலகக் கோப்பையிலும், ஐந்து போட்டிகளில், எட்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். உலக கோப்பை பெருமையெல்லாம் மண்ணோடு மண்ணாக, டெஸ்ட் தொடரில், 5/1 என ஆஸ்திரேலியாவிடம், மரணஅடி வாங்கிய கையோடு இந்தியாவுக்கு வந்திருந்தது மேற்கிந்தியத் தீவுகள். தோல்விக்கு விடைகொடுக்க, சுழல்பந்துக்கு ஓய்வறித்து, க்ளைவ் லாய்டு, வேகம் மட்டுமே தங்களது வெற்றிக்கான வித்தென, வியூகம் வகுக்க, ராபர்ட்ஸ் எதிர்கொள்ள இயலா கட்டில்லா வேகத்தைக் கட்டவிழத்தார். சென்னையில் நடந்த டெஸ்டில், 12 விக்கெட்டுகளை கொத்துக்கொத்தாக எடுத்திருந்தார்.

பொதுவாக, இருவகையான பவுன்சர்களை வீசுவார் ராபர்ட்ஸ். ஒன்று, சற்று குறைந்த வேகத்தில் வரும். அந்தவேகத்தில் வரும் நான்கு பந்துகளைக் கணித்து, பேட்ஸ்மேன்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டதும்தான், இறுதி குண்டான அதிவேக பவுன்சரை, எக்ஸ்பிரஸ் வேகத்தில் அனுப்பிவைப்பார்; தப்பவே முடியாது யாராலும். ரத்தமோ, விக்கெட்டோ, ஏதோ ஒன்று நிச்சயம். அத்தொடரில், இந்திய அணியின் ஃபிஸியோவுக்கும் மருத்துவக்குழுவுக்கும் நிறையவே வேலைவைத்தார் ராபர்ட்ஸ். தாடை எலும்பு நொறுங்க, காது கிழிய, உயிராவது மிஞ்சட்டுமென, ஆறு விக்கெட்கள் விழுந்த நிலையிலேயே டிக்ளேரெல்லாம் செய்தது இந்தியா. ஐந்து டெஸ்ட்களில், 32 விக்கெட்டுகளோடு, ராபர்ட்ஸ்தான், அத்தொடரில், லீடிங் விக்கெட் டேக்கராக இருந்தார்.

அதிர்வலைகளை உலகத்தின் நரம்புகளில் அனுப்பத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளை, வெறியேற்றியது அடுத்து வந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம்.

அச்சுற்றுப் பயணத்திற்கு முன், "அவர்களை எங்கள் முன் தவழச்செய்வோம்" என்பதுபோன்ற இனவெறி இழையோடிய இங்கிலாந்து கேப்டன் டோனி க்ரெய்க்கின் வார்த்தைகள்தான், அவர்களை மேலும் உந்தி, உத்வேகம் கொள்ளச் செய்தன. அவமானப்படும்போது ருத்ர அவதாரம் எடுப்பதும், விழும்போதெல்லாம் விஸ்வரூபமெடுப்பதும் இயல்புதானே!? சதுரங்கத்தில் வெட்டு மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த கருப்புக் காயின்கள், வெள்ளைக் காயின்களை வெட்டி வீழ்த்தத் தொடங்கின. நெம்புகோல் தத்துவத்தை விளக்க, "நிற்கமட்டும் இடம்தாருங்கள்... உலகை நகர்த்திக் காட்டுகிறேன்" என்பார் ஆர்க்கிமிடீஸ். மேற்கிந்தியத் தீவுகள் தாங்கள் எழுந்து நின்று, திருப்பியடிக்க, உலகை உலுக்க, கிரிக்கெட் களத்தைத் தேர்ந்தெடுத்தது.

Clive Lloyd with the 1975 Cricket World Cup Trophy
Clive Lloyd with the 1975 Cricket World Cup Trophy
wikidot.com
எவ்வளவுதூரம் அமுக்கப்படுகிறதோ, அதே அதிவேகத்தில், எம்பி மீண்டெழுவதுதானே, ஸ்ப்ரிங்கின் தன்மை. அத்தொடரில், அப்படி ஒரு மகாசக்தியாக உருவெடுத்துக்காட்டியது மேற்கிந்தியத்தீவுகள். அதற்கு உறுதுணையானது, இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக ராபர்ட்ஸும் ஹோல்டிங்கும் மாறியதுதான்‌.

கூர்முனை தாங்கிய ஈட்டியாக, முன்னேறிவந்த அவர்களது பந்துகளே பேட்ஸ்மேனுக்குக் கிலியேற்படுத்தின. மனிதில் இருந்த கோபம் மொத்தமும் வேகமாக மாற்றப்பட, அவர்கள் வீசியவை, சந்திக்கவே முடியாத பந்துகளாய் இருந்தன. தலைக்கோ, ரவுண்ட் த விக்கெட்டில் வந்து விலா எலும்புக்கோ குறி வைக்கப்பட்ட பந்துகள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கையையே தூள்தூளாக்க, உள்ளேவந்த அத்தனைபேரும், கையைத்தூக்கிச் சரணடையாத குறையாக, ஓட்டமும் நடையுமாக வெளியேறினர். நிறுத்தவே முடியாத விசையாக, எதிர்ப்படும் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து முன்னேறினர் இருவரும்.

இவ்வளவுக்கும், ரோல்ஸ் ராய்ஸ் காரோடு ஒப்பிடப்படும் ஹோல்டிங்கின் ரன்அப், ரிதமிக்காக, மிக ஆர்ப்பாட்டமின்றித்தான் தொடங்கும். ஆனால் 'டேக் ஆஃப்' ஆகி, வீசப்படும் பந்துகளைச் சந்திக்கையில்தான் தெரியவரும்... அது புயலுக்கு முந்தைய அமைதியென்று. `whispering death' என்றழைக்கப்பட்ட அவர், வீசிய பந்துகள், 'கரணம் தப்பினால் மரணம்' என மிரட்டி, மரணபயம் காட்டின. அத்தொடரில், ஓவலில் அவருடைய 14/149 இன்றளவும் மிகச்சிறந்த ஸ்பெல்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக, விழுந்த 14 விக்கெட்டுகளில், 12 எல்பிடபிள்யு மூலமாகவோ அல்லது போல்டாகவோ விழுந்திருந்ததுதான், தரமான சம்பவம். 1981-ல் பாய்காட்டிற்கு அவர் வீசியதெல்லாம், டெஸ்ட் வரலாற்றிலேயே சிறந்த ஓவர். ஐந்து பந்துகளை மட்டும் எப்படியோ சமாளித்த பாய்காட், ஆறாவது பந்திலேயே, ஹோல்டிங்கின் வேகம், பவுன்ஸ், துல்லியத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினார். 1983 இந்தியாவுடனான தொடரில், மார்ஷலுடன் இணைந்து, 63 விக்கெட்டுகளை வீழ்த்தி, 3/0 என இந்தியாவை வென்றதெல்லாம் இன்றளவும் மறக்க முடியாத சம்பவங்கள்.

சரித்திரம்பேசும் 1976 இங்கிலாந்து டெஸ்ட்தொடரில், இவ்விருவரும், தலா 28 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, 'தீவிரவாதிகள்' என்றெல்லாம் இங்கிலாந்துப் பத்திரிக்கைகள் எழுதித்தீர்த்தன. பேட்டிங்கிலோ விவியன் ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்திற்கு மனநடுக்கத்தையே கொண்டுவந்தார். போர்க்குணம், அவர்களது மரபணுவிலேயே மண்டியிருக்கிறதென நிரூபித்து, ஒரு போட்டியில்கூட இங்கிலாந்தை வெல்லவிடாது, 3/0 என டெஸ்ட்தொடரையும், 3/0 என ஒருநாள் தொடரையும் மேற்கிந்தியத்தீவுகளே வென்றது. புரட்சிக்கும், எழுச்சிக்கும் புது அர்த்தமும் தந்தது.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்
Twitter

ஆனால், உச்சகட்டக் காட்சிகள் அதற்குப்பின்தான் அரங்கேறின. 1977-ம் ஆண்டு, ஜோயல் கார்னர், காலின் கிராஃப்ட் என`பிளாக்பேர்ட்' ஜெட்டுக்கு இணையான, இருவேகங்கள், இணைந்தன புதிதாக. அதன்பின்தான், ஸ்பின்னுக்கு ஆதரவளிக்கும் பிட்ச்களில்கூட, துணிவாக, பிரதான ஸ்பின்னர்கள் இல்லாமல், இவர்கள் நால்வரோடு மட்டுமே களமிறங்கத்துவங்கி, வெற்றிகளைக் குவித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

ராபர்ட்ஸ், ஹோல்டிங்கிடமிருந்து மாறுபட்டது இந்த இணை.

'பிக் பேர்ட்' என 6' 8 உயரத்திற்காக அழைக்கப்பட்ட கார்னரது பலமே அந்த உயரம்தான். இதனாலேயே, அவர் வீசும் பவுன்சர்கள், இரண்டாவது மாடியிலிருந்து எறியப்படுவது போன்ற உணர்வை, பேட்ஸ்மேன்களுக்குக் கொடுத்தது. பந்துகள் பவுன்ஸாகி, பேட்ஸ்மேன்களின் நெஞ்சை நோக்கிப்பாயும். இங்கிலாந்து வீரர், மைக் பிரியர்லே, இதைப்பற்றிச் சொன்னபோது, "சைட் ஸ்க்ரீனையே அவரது கைகள் மறைத்து விடுவதால், பந்தைப்பற்றி எதையும் யூகிக்க முடியவில்லை" என்றார்.

'Money heist' வெப்சீரிஸில், ஒலியைவிட வேகமாய்ச் செல்லும் தோட்டா, இதயத்தை துளைக்கும்போது, அந்தத் துப்பாக்கி ஒலியைக் கேட்கும் முன்பே, சுடப்படுபவரின் உயிர், பிரிந்து விடும் என்ற ஒருதகவல் வரும். இவர் வீசியபந்துகளும் அப்படித்தான் பாய்ந்தன. பந்தைப் பார்த்தகணமே, தலையோ, மூக்கோ, குறைந்தபட்சம், ஸ்டம்போ, தகர்க்கப்பட்டிருக்கும். பேட்ஸ்மேன் தன்னைத் தற்காத்துக் கொள்வதே கடினமெனில், ரன் எடுப்பதெங்கே?! குறிப்பாக, மார்கம் மார்ஷலுடன் இணைந்து, 23 டெஸ்ட்களில், 230 விக்கெட்டுகளை எடுத்திருந்த கார்னர், ஒன்டே ஸ்பெஷலிஸ்டாக, 3.09 எக்கானமியோடு, 98 போட்டிகளில், 146 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

நான்காமவர் கிராஃப்ட்... இவரின் ரன்அப்பே வேறுபாடானது. மூச்சுவாங்க ஓடிவர மாட்டார். இயல்பான வேகத்திலேயே வந்து, கடைசி விநாடியில், வேகத்தை உச்சத்துக்கு ஏற்றி, பந்தைவீசுவார். மெதுவாகத்தான் வருகிறார் என்று கொஞ்சம் அசந்தாலும், கதை முடிந்துவிடும். ஸ்டம்புகளைச் சிதறச்செய்வதைப் பார்த்தே பரவசப்படுவார்கள் ரசிகர்கள். கமன்டேட்டர்களின் குரலில், கூடுதலாக உற்சாகம் மிகும். கருணையே காட்டாதவர். "எதிரணியில் இருப்பது என் தாயாகவே இருந்தாலும், என் குறி தலைக்குத்தான்" என்று ஒருமுறை கூறியிருந்தார் கிராஃப்ட்.

Colin Croft
Colin Croft
Caribbean National Weekly

இவர்கள் நான்கு பேரும் சந்தித்த ஒரேபுள்ளியான வேகம்தான், பல சாகசங்களைச் செய்ய வைத்தது. இவர்கள் வீசும் பவுன்சர்கள் பேட்ஸ்மேன்களின் தலையைப் பதம் பார்த்தது, மூக்கை உடைத்தது, காதைக் கிழித்தது, காயங்கள் உடம்பு முழுவதும் அன்புப் பரிசாகக் கிடைத்தது. வழக்கமாக ஃபாஸ்ட் பௌலர்கள் வீசும் பவுன்சர்கள், பேட்ஸ்மேனால் ஹுக் அல்லது புல் ஷாட் ஆடப்படும். ஆனால், ஹெல்மெட் அணியாத அக்காலத்தில் இவர்கள் பந்தில் ஹூக் அடிப்பது என்பது பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் கனவு. காற்றின் வேகத்தை விட இவர்களின் வேகம், காதைக் கிழிப்பதாக இருக்கும்.

நான்கு பௌலர்களும் நாற்பது பருத்தி வீரர்களுக்கு இணையாக பயமுறுத்த, ஹெல்மெட், பவுன்சர் விதிகள் எதுவுமற்ற நிலையில், தளர்வுகளற்ற ஊரடக்கத்தை வருடக்கணக்காக அனுபவித்த உணர்வோடே களத்திலிருந்தனர் பேட்ஸ்மேன்கள். நான்கு ஜோஃப்ரா ஆர்ச்சர்கள், போட்டி முழுவதும் வந்து மிரட்ட, மூச்சுத்திணற, விவியன் ரிச்சர்ட்ஸ் வரமாட்டாரா, ஸ்பின் பந்துகளை வீசமாட்டாரா எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்தோ பரிதாபமாக, அவரது பந்தைத்தானே அடித்தாட முடியுமென, அவசரப்பட்டு ஆடி, ஆட்டமும் இழப்பர். இந்த ஃபார்முலாவோடுதான் வெற்றிவலம் வந்தது, மேற்கிந்தியத்தீவுகள்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரித்தான ஸ்லெட்ஜிங்கிற்கு, இந்நால்வருக்குமே, அர்த்தமே தெரியாது. முகத்திலும் பெரிதாய் உணர்வுவெளிப்பாடும் இருக்காது. எனினும், கில்லர் இன்ஸ்டிங்கோடு, வென்றேயாக வேண்டுமென்ற வெறியோடு, விக்கெட்டுகளையும் வெற்றியையும் மட்டுமே இலக்காக்கி, கட்டற்ற காட்டாறாய் முன்னேறுவார்கள்.

இந்நால்வரும் சேர்ந்து செய்த உச்சகட்ட சம்பவம், 1979-ம் ஆண்டு உலகக் கோப்பைதான். விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியதும் இவர்களால்தான். 31 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறித்தனம் காட்டியிருந்தனர், பவர்ரேஞ்சர்களாக!

இரட்டை கேஜிஎஃப் படத்துக்கு இணையான ஆக்ஷன் சம்பவங்களை, 1979/80 ஃப்ராங்க் ஓர்ரேல் தொடரில், செய்து காட்டினர். முதலில் ஆஸ்திரேலியா பந்து வீச, வழக்கம் போல, டென்னிஸ் லில்லி, 'முடிந்தால், நீ மிஞ்சினால் அடித்துப்பார்!' எனும்படியாகப் பந்துவீச, ஜெஃப் தாம்சன் அதற்குமேல் பவுன்சர்களால், கதைமுடிக்க நினைக்க, விவியன் ரிச்சர்ட்ஸ், பேட்டால் பதில்கொடுத்தார். எனினும், அதோடு முடியவில்லை அந்தப் பகை. மார்ஷ், சேப்பல் என அத்தனைபேரையும், இந்த வேக வித்தகர்கள், பந்துகளால் தாக்கித் தகர்க்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மேற்கிந்தியத் தீவுகள். அந்த டெஸ்ட் தொடரை, 2-0 என வென்று, பவர்ஹவுஸாக மேற்கிந்தியத்தீவுகள், தங்களை நிரூபிக்க, எல்லா வெற்றிகளுக்கும், இந்நால்வருமே காரணமாயிருந்தனர்.

Joel Garner
Joel Garner

இதன்பின், 1983-ல் உலகக்கோப்பையைக் கோட்டைவிட்ட கோபத்திலிருந்தவர்கள், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய, `ரிவென்ஜ் சீரிஸ்' எனுமளவு, பேட்ஸ்மேன்களுக்குக் காயப்பரிசு தந்து, இந்தியர்களுக்கு இதை, சர்வைவர் சீரிஸாக மாற்றினர். 3-0, 5-0 என முறையே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர், இரண்டையுமே பறிகொடுத்தது இந்தியா.

மொத்தமாக, 1977 முதல் 1983 வரை, இந்நால்வரும் இணைந்து களமிறங்கிய டெஸ்ட் களங்கள், 11. அதில், 172 விக்கெட்டுகளை வேட்டையாடி, அணியை 5-ல் வெற்றியையும், 5-ல் டிராவும் செய்ய வைத்தனர். ஒரு போட்டியில் மட்டுமே, தோற்றிருந்தது, மேற்கிந்தியத்தீவுகள். அதேநேரம், இவர்கள் நால்வருடைய, 5 அல்லது 10 விக்கெட் ஹால்கள், மற்ற அணி பௌலர்களோடு ஒப்பிடுகையில், குறைவாகவே இருந்தன. காரணம், போட்டிபோட்டுக் கொண்டு அவர்கள் விக்கெட் வீழ்த்தியதே.

இவர்களோடு, ஜாம்பவான், மார்கம் மார்ஷலும் இணைய, இன்னமும் வலிமைமிக்கதாக அணி மாறியது. அவரது பாணி இன்னமும் தன்னிகரற்ற தனித்துவமானது. பவுன்சர் மட்டுமின்றி, இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய வைப்பார். ஆன்டி லாய்டின் முதல் போட்டியிலேயே அவருக்கு காயமேற்படுத்தியதுடன், 1985 தொடரில், மைக் கேட்டின் மூக்கை உடைத்ததுவரை பல சம்பவங்களை களத்தில் நின்று செய்திருக்கிறார். 200 விக்கெட்டுகளுக்கு மேலெடுத்துள்ள பௌலர்களில், இவரது சராசரியே, சிறந்ததாக இருக்கிறது.

1970-88 காலகட்டம் கரீபியன் கிரிக்கெட்டின் பொற்காலமாக விவரிக்கப்பட்டாலும், இந்நால்வரும் இணைந்து விளையாடிய சமயம்தான், அச்சுறுத்தும், வீழ்த்தவேமுடியாத அணியாக ராஜபவனி வந்தது மேற்கிந்தியத்தீவுகள். ஆம்ப்ரோஸ், வால்ஷ் என மிகச்சிறந்த பௌலர்கள் உருவெடுக்க, வழியேற்படுத்தியதும், இந்நால்வரும்தான்.

Vivian Richards
Vivian Richards

க்ரெய்க்கின் வார்த்தைகளால் உத்வேகம்பெற்று, விவியன் ரிச்சர்ட்ஸால் பேட்டிங்கில் மிளிர்ந்தாலும், தோல்வியையே ஏற்றுக்கொள்ள முடியாதெனும் எழுச்சிக்கதை, எழுதப்பட்டது, இந்த முரட்டுக் கவிஞர்களால்தான். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரிஸின் அத்தனை பாகத்தையும், களத்தில், கண்முன்னே விரியச்செய்தனர் இவர்கள். ராயல் என்ஃபீல்டை ஒத்த அந்நால்வரின் கம்பீரமும், அனுபவித்த வலியைத் திரும்பக்கொடுக்கும் அந்த வைராக்கியமும்தான், மேற்கிந்தியத்தீவுகளை, தலைநிமிர வைத்து, மிடுக்கான நடை போடவைத்தது!

அடக்கிவைக்கப்பட்ட ஆற்றல், வெடித்து வெளிப்படும்போது, விளைவுகள், சரித்திரத்தையே மாற்றும் வல்லமை படைத்ததாக இருக்குமென்பதை உலகுக்குணர்த்தினர், இந்த ஃபோர் ஹார்ஸ்மென்!
அடுத்த கட்டுரைக்கு