Election bannerElection banner
Published:Updated:

சிக்ஸாசுரன்... ஐ.பி.எல் மேன்... தோனியே வியந்த வீரர்... யூசுஃப் பதான் எனும் சம்பவக்காரன்!

யூசுஃப் பதான்
யூசுஃப் பதான்

ஒரு பிக் ஹிட்டராக... ஆல்ரவுண்டராக தோனியே இவர் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தார். சில சமயங்களில் தன்னுடைய பேட்டிங் ஆர்டரில் யூசுஃப் பதானையே கூட இறங்க வைத்து ஃபினிஷ் செய்ய வைத்துள்ளார்.

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக பிரபல கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் அறிவித்துள்ளார். யூசுஃப் பதான் நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடியிருக்காவிட்டாலும் ஆடிய கொஞ்ச காலத்தில் ராக்கி பாயாக சில முரட்டுத்தனமான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறார். யூசுஃபின் அதிரடி ஆட்டத்திற்காகவே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

யூசுஃப் பதானின் இளைய சகோதரரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்கு அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்துதான் யூசுஃப் இந்திய அணிக்கு அறிமுகமாகிறார். இந்திய அணி 2007 ஓடிஐ உலகக்கோப்பையில் மோசமாக தோற்றபிறகு, கேப்டன் பதவி இளம் வீரரான தோனிக்கு கொடுக்கப்படுகிறது. அந்த ஆண்டே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தோனி தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. அந்த அணியில்தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்த யூசுஃப் பதானுக்கும் இடம் கிடைத்தது.

இர்ஃபான் பதான், யூசுஃப் பதான்
இர்ஃபான் பதான், யூசுஃப் பதான்

அணியில் இருந்தாலும் எந்தப் போட்டியிலும் யூசுஃபுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்காது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்பாக ஓப்பனரான சேவாக் காயமடைந்துவிட அவருக்குப் பதில் அந்த இடத்தில் சேவாக்கை போலவே அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரர் தேவைப்பட்டார். அப்போதுதான் தோனி யூசுஃப் பதானின் பெயரை டிக் அடித்தார்.

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக அழுத்தமிக்க ஆட்டத்தில் ஓப்பனராக இந்திய அணிக்கு அறிமுகமானார் யூசுஃப் பதான். அந்தப் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. 8 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார். ஆனால், இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே முகம்மது ஆசிஃப் வீசிய ஒரு பந்தை அவரின் தலைக்கு மேலேயே சிக்ஸராக்கியிருப்பார். எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக நினைத்த நேரத்தில் இப்படி சிக்ஸர் அடிக்கும் திறன்தான் யூசுஃபின் அடையாளமாக மாறிப்போனது.

இந்த உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் அணியில் அறிமுகமானார். ஆனால், அங்கே பெரிய இன்னிங்ஸ்களை அவரால் ஆடமுடியவில்லை. அவரின் சீரற்ற பெர்ஃபார்மென்ஸும் பின்னடைவாக இருந்தது. இலங்கைக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் பதான் சகோதரர்கள் இருவரும் இணைந்து ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருப்பார்கள். இதேமாதிரியான ஒரு சில இன்னிங்ஸ்கள் அவரை இந்திய அணியில் தொடர்ந்து உள்ளே வெளியேவாக இருக்க செய்தது. யூசுஃப் பதானை பற்றி பேசும்போது ஐ.பி.எல்-ஐ தவிர்த்துவிட முடியாது. தொடர்ந்து இந்திய தேர்வுக்குழுவின் ரேடாரில் யூசுஃப் பதான் இருந்ததற்கு அவரின் ஐ.பி.எல் பெர்ஃபார்மென்ஸ்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.

Yusuf Pathan
Yusuf Pathan
2008 ஐ.பி.எல்-ன் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றபோது அந்த அணியின் கீ ப்ளேயராக இருந்தார். 4 அரைசதங்களுடன் அந்த சீசனில் 435 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். க்ரீஸுக்குள் நின்றபடி நின்ற இடத்தில் இருந்தே இவர் அடிக்கும் இமாலய சிக்ஸர்களுக்கே தனி ரசிகர் கூட்டம் உருவானது.

இப்போது கெயிலை பற்றி பேசுவதை போல அப்போது முதல் மூன்று சீசன்களில் யூசுஃப் பதானை பற்றி பேசுவார்கள். எல்லா அணியும் அவரைக் கண்டு கொஞ்சம் மிரண்டே போயிருக்கும். பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடமே 'யூசுஃபை சமாளிப்பதற்கு என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?' என கேள்வியெல்லாம் கேட்கப்பட்டிருக்கிறது. செய்தித்தாள்களில் இவரை சிக்ஸாசுரன் என வர்ணித்து செய்திகளெல்லாம் வெளிவரும். இப்படி உச்சக்கட்டத்தில் இருக்கும்போதுதான் 2010-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்து மிரட்டியிருப்பார். இதன்மூலம் இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருப்பார். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு ஓடிஐ போட்டியில் டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பிய நிலையில் 6 வது விக்கெட்டுக்கு சவுரப் திவாரியுடன் கூட்டணி போட்டு சதமடித்து 300+ ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்ய வைத்திருப்பார். இந்த பெர்ஃபார்மென்ஸ்கள் எல்லாம் யூசுஃப் பதான் 2011 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட காரணமாக அமைந்தது.

யூசுஃப் பதான் வெளியிட்ட செய்தி அறிக்கை
யூசுஃப் பதான் வெளியிட்ட செய்தி அறிக்கை

ஒரு பிக் ஹிட்டராக... ஆல்ரவுண்டராக தோனியே இவர் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தார். சில சமயங்களில் தன்னுடைய பேட்டிங் ஆர்டரில் யூசுஃப் பதானையே கூட இறங்க வைத்து ஃபினிஷ் செய்ய வைத்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

2007, 2011 இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவிலேயே ஓடிஐ போட்டியில் யூசுஃப் அடித்த சதம்தான் இன்று வரை அவரின் பெஸ்ட் எனக் கூறலாம். 268 டார்கெட்டை சேஸ் செய்த இந்திய அணி 60 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்கும் நிலையில் இருந்த போது டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு தென் ஆப்பிரிக்காவின் பௌலிங் அட்டாக்கை துவம்சம் செய்து சதம் அடித்து மிரட்டியிருப்பார். ஜாகீர் கானுடன் ஒரு 100 ரன் பார்ட்னர்ஷிப் வேறு! வெற்றியை நெருங்கிய நிலையில் அவுட் ஆக இந்திய அணி தோற்றிருக்கும்.

50 ஓடிஐக்களில் ஆடியிருக்கும் யூசுஃப் பதான் ஆஃப் ஸ்பின்னராக 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 5.50 மட்டுமே. இப்படி ஒரு திறமையான ஆட்டத்தையே மாற்றக்கூடிய ஆல்ரவுண்டராக இருந்த போதிலும் அவருக்குத் தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. காரணம், அவரின் சீரற்றத்தன்மை. அடித்தால் வெறித்தனமான சதம்... இல்லையேல் டக் அவுட் என இருந்த அவரின் சீரற்ற பெர்ஃபார்மென்ஸ்கள்தான் அவருக்கான இடத்தை கேள்விக்குள்ளாக்கியது. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு தோனி அடுத்தக்கட்ட அணியை கட்டமைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதால் யூசுஃப் க்கு 2012க்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவே இல்லை.

யூசுஃப் பதான், சச்சின்
யூசுஃப் பதான், சச்சின்

கொல்கத்தா அணி 2012, 2014 இல் கோப்பையை வென்ற போது அந்த அணியிலும் முக்கிய வீரராக இருந்தார். ஆனால், அதன்பிறகு ஐ.பி.எல்-லிலும் பழைய சிக்ஸாசுரனான யூசுஃப்பை பார்க்கவே முடியவில்லை. தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருந்தார். சன்ரைசர்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இருந்தபோதும் யூசுஃப்பை அணியில் வைத்திருக்காமல் அந்த அணி வெளியேற்றியது. அதன்பிறகு, அவரை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. இந்நிலையில்தான், தற்போது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் யூசுஃப் பதான். இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற தருணங்கள், சச்சினை தோளில் சுமந்த நிகழ்வு என பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார் யூசுஃப் பதான்.

எத்தனையோ வீரர்கள் நீண்ட நெடிய காலம் ஆடி சாதனைகள் படைத்திருக்கிற போதிலும், யூசுஃப் பதான் கொஞ்ச காலமே ஆடியிருந்தாலும் மனதில் நிற்கும்படியான சில தரமான சம்பவங்களை செய்துவிட்டுதான் சென்றிருக்கிறார் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை என்றுமே மறக்கமாட்டார்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு