Published:Updated:

சேப்பாக்கம் 224 டு அடிலெய்டு 44... தோனியின் கரியரில் மறக்கவே முடியாத டாப் 10 இன்னிங்ஸ்கள்!

தோனி
தோனி

இந்திய அணிக்காகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் தோனி. அவற்றில் எத்தனை காலமானாலும் மறக்க முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் டாப் 10 இன்னிங்ஸ்கள் இங்கே...

91* vs இலங்கை (2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி)

தோனி ஆடியிருக்கும் அத்தனை சிறப்பான இன்னிங்ஸ்களுக்கும் உச்சமான ஓர் இன்னிங்ஸ் இதுதான். இந்த 91 நாட் அவுட் இன்னிங்ஸ்தான் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தது. யாரும் எதிர்பாராத வகையில் யுவராஜைக் காத்திருக்க வைத்துவிட்டு சர்ப்ரைஸ் எண்ட்ரியாக உள்ளே வந்து அதகளப்படுத்தியிருப்பார். தோனி அடித்த லாங் ஆன் சிக்ஸரும் ரவி சாஸ்திரியின் கமெண்ட்ரியும் இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் வாழ்நாளில் ஆகச்சிறந்த தருணமாக அது அமைந்திருந்தது.

183* vs இலங்கை

Dhoni 183*
Dhoni 183*

கரியரின் தொடக்கத்திலேயே தோனி செய்த தரமான சம்பவம் இது. இலங்கைக்கு எதிராக 300 ரன்களை சேஸ் செய்தபோது நம்பர் 3 இல் இறங்கி இலங்கை பௌலர்களை ஈவு இரக்கமின்றி வெளுத்தெடுத்திருப்பார். எல்லா பக்கமும் பந்துகளை பறக்கவிட்ட தோனி இந்த இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடித்திருப்பார். இது அந்தக் காலத்தில் மிகப்பெரிய ரெக்கார்டாக பதிவாகியிருந்தது.

148 vs பாகிஸ்தான்

தோனி ஆடிய ஆறாவது போட்டிதான் இது. தோனியின் கரியரில் முதல் திருப்புமுனையாக அமைந்தது இந்த இன்னிங்ஸ்தான். இந்தப் போட்டியிலும் நம்பர் 3 யிலேயே இறக்கப்பட்டிருப்பார். பாகிஸ்தானைப் பதறடித்து இந்தியா 350+ ஸ்கோரை எட்டவைத்திருப்பார்.

113* vs பாகிஸ்தான் ( 2012)

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டி இது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கும். ஆனால், மேன் ஆஃப் தி மேட்ச் தோனிக்கே வழங்கப்பட்டிருக்கும். அணி மொத்தமும் சொதப்பும்போது ஒரு கேப்டன் முன் நின்று எப்படிப் போராட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்த இன்னிங்ஸ் இது.

224 vs ஆஸ்திரேலியா

தோனி 224
தோனி 224
BCCI

சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி இது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தோனி ஒரே நாளில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்திருப்பார். டெஸ்ட் போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பதால் ரசிகர்களுக்கும் ரொம்பவே பிடித்தமான இன்னிங்ஸ் இது.

44 vs ஆஸ்திரேலியா (2012 ட்ரை சீரிஸ்)

சேஸிங்கின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய லெஜண்ட் மைக்கேல் பெவனின் வித்தையை ஆஸிக்கே செய்து காட்டி வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்திருப்பார். ஓடி ஓடியே ரன்கள் சேர்த்த தோனி கடைசி ஓவர்வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று சிக்ஸர் அடித்து முடித்திருப்பார்.

99 vs இங்கிலாந்து

சச்சின் மட்டுமில்லை தோனியும் சென்ச்சூரியை மிஸ் செய்து 99 ரன்னில் அவுட் ஆகியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 2012-ல் ஹோம் சீரிஸை இழந்திருந்தது இந்தியா. இந்தத் தொடரில் ஒரு இன்னிங்ஸில் தனது வழக்கமான ஆட்டத்தை விட மிகவும் பொறுமையாக 'மேட்ச் சேவிங்' இன்னிங்ஸ் ஆடியிருப்பார் தோனி. சரியாக 99 ரன்னில் ரன் அவுட் ஆகி சென்ச்சூரியை தவறவிட்டிருப்பார். மாஸான தோனியிடமிருந்து வெளிப்பட்ட க்ளாஸான இன்னிங்ஸ் என்பதால் இதை மறக்கவே முடியாது.

54* vs பஞ்சாப்

தோனி
தோனி

2010 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கு மூலக்காரணமாக அமைந்த இன்னிங்ஸ் இது. இர்ஃபான் பதான் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு பவுண்டரியுடன் 108 மீட்டருக்கு இரண்டு இமாலய சிக்சர்களை அடித்து சென்னை அணியை வெற்றிப்பெற வைத்திருப்பார்.

63(19)* vs சன்ரைசர்ஸ்

தோனியின் பீஸ்ட் மோட் வெளிப்பட்ட இன்னிங்ஸ் இது. 300+ ஸ்ட்ரைல் ரேட்டில் ஆடியிருந்த தோனி திசாரா பெராராவின் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டியிருப்பார்.

70* vs பெங்களூர்

டி20 போட்டிகளில் சேஸிங்கின் போது, ரன்ரேட் அழுத்தம் அதிகமிருக்கும் சூழலில், ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை பற்றி தோனி எடுத்த மாஸ்டர் க்ளாஸ் இது.

உங்களால் மறக்கமுடியாத `தல' தோனியின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் எது? கமென்ட் செய்யுங்கள் மக்களே!
அடுத்த கட்டுரைக்கு