Published:Updated:

ஹர்பஜன் சிங்: சைகை மொழி ஸ்டம்பிங், திடீர் தூஷ்ராக்கள்... ஆஸியை அலறவிட்ட பாஜி!

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

தோனியுடன் சைகை மொழியில் பேசி லெக் ஸ்டம்ப் லைனில் வீசி எடுக்கும் ஸ்டம்பிங்குகள், திடீரென வீசும் தூஷ்ராக்கள், அதிரடியான பேட்டிங், ஸ்ரீசாந்த் உடனான சண்டை என பல பரபரப்பான கிரிக்கெட் நினைவுகளைக் கொடுத்தவர் ஹர்பஜன். அவரின் பிறந்தநாள் இன்று!

பிப்ரவரி 2001. காதலர் தினம் என்பதைத் தவிர சொல்லிக்கொள்ளுமளவுக்கு எந்த விசேஷமும் இல்லாத சாதாரண மாதம் அது. ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்படியில்லை. அவர்களை பொறுத்தவரை அது ஒரு திகிலுடன் கூடிய சஸ்பென்ஸ் நிறைந்த மாதம். காரணம், ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் சீரிஸில் ஆடுவதற்காக இந்தியா வந்திருந்தது. ஹோம் சீரிஸ்தானே இந்தியா எளிதில் அடித்துவிடுமே என்கிற லாஜிக்கெல்லாம் அப்போதைய ஆஸ்திரேலியாவிடம் செல்லுபடியாகாது.

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி தனிப்பெரும்பான்மையோடு சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஹேடன், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், க்ளென் மெக்ராத் என ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் க்ரேட் எல்லாம் ஒரே நேரத்தில் முரட்டு ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்தனர். போதாக்குறைக்கு, இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 15 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருந்தது. இது அதற்கு முன் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியே செய்யாத சாதனை. இதனால்தான் இந்திய ரசிகர்கள் பயங்கர திகிலோடு இந்தத் தொடருக்கு காத்திருந்தனர்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

எதிர்பார்த்தபடியே முதல் போட்டியிலெயே இந்தியாவை அடித்து துவைத்தது ஆஸ்திரேலியா. மும்பை வான்கடேயில் நடந்த அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தொடர்ச்சியாக 16 வது வெற்றி. ஹேடனும் கில்கிறிஸ்ட்டும் சென்ச்சூரி போட்டிருந்தனர். இந்திய அணிக்கு வழக்கம் போல சச்சின் மட்டும் ஆறுதல் இன்னிங்ஸ் ஆடியிருந்தார். 'நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது' மோடில் ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி மொத்தமாக இந்த சீரிஸை வாரிச்சுருட்ட போகிறார்கள் என்றே அத்தனை செய்தித்தாள்களும் ஆரூடம் கூறின. இந்திய ரசிகர்களும் ஒரு மோசமான சீரிஸ் தோல்வியை தாங்கிக்கொள்ள மனதை தயார்ப்படுத்தத் தொடங்கினர். ஆனால், நடந்ததோ வேறு!

ஈடன்கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. வெல்லவே முடியாது என மார்தட்டப்பட்ட ஆஸ்திரேலிய அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இத்தனைக்கும் அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஃபாலோ ஆன் ஆகியிருந்தது. ட்ராவிட் மற்றும் லெக்ஷ்மணின் 367 பார்ட்னர்ஷிப் இந்திய அணியை காப்பாற்றி கரை சேர்த்தது. இந்தப் போட்டியை மேலோட்டமாக பார்த்தால் ட்ராவிட்டும் லெக்ஷ்மணும் மட்டுமே ஹீரோவாக தெரிவார்கள். உள்ளே கொஞ்சம் இறங்கி அலசினால்தான் ஒரு டர்பன் அணிந்த மனிதனின் பஞ்சாபி நடனம் செய்த மேஜிக் தெரியவரும்.

இந்த தொடரில் இந்தியாவின் மெயின் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதில் 20 வயதே ஆன இளம் பஞ்சாபிதான் ஆடியிருந்தார். முதல் இன்னிங்ஸில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம். இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் எடுத்த முதல் ஹாட்ரிக் அதுதான். ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ஹேடன், ரிக்கிபாண்டிங், கில்கிறிஸ்ட் என ஆஸியின் ஆல்டைம் க்ரேட்கள் அத்தனை பேரையும் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள். வெல்லவே முடியாத ஆஸியை வீழ்த்தவே முடியாத ஆஸி பேட்ஸ்மேன்களை கிறுகிறுக்க வைத்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ் மூலமே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்களின் மனதில் தனியிடம் பிடித்தார் ஹர்பஜன் சிங் எனும் டர்பன் அணிந்த அந்த மனிதர்.

கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்
கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்

இந்தியா எப்போதும் ஸ்பின்னர்களின் சொர்க்கப்பூமி. இங்கே வேகப்பந்து வீச்சு எல்லாம் ஒரு பெயருக்குதான். ஸ்பின்னர்கள்தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துவார்கள். ஒரு அணியில் 3 - 4 ஸ்பின்னர்கள்கூட இருப்பார்கள். பந்தை பழையதாக்கி கொடுப்பதற்காக ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே இருப்பார். ஆனால், கபில்தேவின் காலக்கட்டதுக்குப் பிறகு இது மாற தொடங்கியது. இந்திய அணிக்குள் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்கள் வரத்தொடங்கினர். 90களில் ஜவகல் ஸ்ரீநாத்தும், வெங்கடேஷ் பிரசாத்தும் வேகப்பந்து வீச்சில் ஒரு வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து ராபின் சிங், கங்குலி போன்றோரும் மிதவேகத்தில் வீச வந்தார்கள். ஒரு காலத்தில் ஸ்பின்னர்கள் பெரும்பான்மை வகித்த பௌலிங் டிபார்ட்மெண்ட்டில் இப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஸ்பின்னுக்கு பெயர் போன இந்திய அணியில் அனில் கும்ப்ளேவை தாண்டி வேறு ஒரு முகம் தெரிந்த ஸ்பின்னர் இல்லாத நிலை உருவானது. இதனால் அனில் கும்ப்ளேவுக்கு சரியான சப்போர்ட்டும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில்தான் இந்திய அணிக்கு அறிமுகமானார் ஹர்பஜன் சிங்.

அனில் கும்ப்ளேவுடன் சேர்ந்து இந்தியாவின் ஸ்பின் பாரம்பரியத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தொடங்கினார் ஹர்பஜன் சிங்.

1998யிலேயே இந்திய அணிக்கு அறிமுகமாகியிருந்தாலும் ஆவரேஜான பெர்ஃபார்ம்களால் அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். கங்குலி கேப்டன் ஆன பிறகு, அக்ரஸிவ் இளம் வீரர்களுக்கு அவர் விரித்த வலையில் ஹர்பஜனும் சிக்கினார். 2001 பார்டர் கவாஸ்கர் சீரிஸுக்கு பிறகான பேட்டி ஒன்றில், "எனக்கு மேட்ச் வின்னர்களே தேவை. முதல் பார்வையிலேயே காதலில் விழுவது போல என்னால் முதல் பார்வையிலேயே ஒரு அக்ரஸ்வ் மேட்ச் வின்னரை அணிக்கு தேர்ந்தெடுத்து விட முடியும். ஹர்பஜன் விஷயத்தில் அது நிரூபணமும் ஆகியிருக்கிறது" எனக் கங்குலி பேசியிருந்தார். கங்குலி கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே. ஒரு அக்ரஸிவ் வீரராக அவரிடமிருந்த துறுதுறுப்பும் துள்ளலும் இந்திய அணிக்கு பெரியளவில் கைகொடுத்தது.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரின் அக்ரஷன் இந்தியாவுக்கு பெரும்பலனை கொடுத்திருக்கிறது. சொல்லப்போனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் தனது அறிமுகப் போட்டியையே ஆடியிருந்தார் ஹர்பஜன். அதில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும் அடுத்தடுத்து செய்ததெல்லாம் சம்பவங்கள்தான். மேலே குறிப்பிட்ட அந்த 2001 சீரிஸில் ஹர்பஜன் மட்டும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த தொடரின் மேன் ஆஃப் தி சீரிஸ் விருதையும் வென்றிருந்தார்.

'மங்கி கேட்' சர்ச்சை
'மங்கி கேட்' சர்ச்சை
Screenshot Grabbed From YouTube

2008 சீரிஸில் மிகவும் சர்ச்சைக்குள்ளான 'மங்கி கேட்' பிரச்னையில் இடம்பெற்றிருந்தார் ஹர்பஜன் சிங். இந்தப் பிரச்னைக்கு பிறகே, கேப்டன் அனில் கும்ப்ளே இந்தத் தொடரை நாம் விட்டுவிடக்கூடாது. மீதமிருக்கிற போட்டிகளில் மூர்க்கத்தனமாக ஆட வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படியே இந்திய அணி அந்தச் சர்ச்சைக்கு பிறகு நடந்த இரண்டு போட்டியில் ஒன்றை வென்று இன்னொன்றை டிரா செய்திருந்தது. மேலும், ஹர்பஜனின் கரியரில் ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக அவர் வைத்திருக்கும் சிறப்பான ரெக்கார்டுகளும் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராகவே இருக்கிறது. ரிக்கி பாண்டிங்கை 10 முறையும் ஹேடைனை 8 முறையும் வீழ்த்தியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே, கபில்தேவ்க்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருந்தாலும் வெளிநாட்டு மைதானங்களில் ஹர்பஜனின் ரெக்கார்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என விமர்சிப்பவர்களும் உண்டு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது நிதர்சனமாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற ட்ரிக்கியான பிட்ச்களில் சில நல்ல ஸ்பெல்களை வீசியிருக்கவே செய்கிறார்.

டெஸ்ட் போட்டிகளை தாண்டி லிமிட்டெட் ஓவர் என வந்தால் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் பெரிதாக ஒன்றும் செய்திருக்காவிட்டாலும் ஓடிஐக்களில் மிகச்சிறப்பாகவே பந்துவீசியிருக்கிறார். ஓடிஐ க்களில் அவருடைய எக்கானமி 4.1 மட்டுமே. குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் அனைத்து போட்டிகளிலுமே மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக எக்கனாமிக்கலாக வீசி ப்ரஷர் ஏற்றியிருப்பார்.

ஹர்பஜனின் பந்துவீச்சு மட்டுமில்லை, பேட்டிங்கும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். இப்போதுதான் டெய்ல் எண்டர்கள் எல்லாம் சிக்ஸர்கள் அடித்து துவம்சம் செய்கிறார். ஒரு பத்து வருடம் முன்பு வரைக்கும் நம்பர் 7-ஐ தாண்டினால் அடிப்பதற்கு ஆள் இருக்காது. அந்தச் சூழலிலேயே ஹர்பஜன் சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.

2009-10 வாக்கில் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஓடிஐ போட்டியில் 290+ சேஸிங்கின் போது இந்தியாவுக்கு முக்கியமான விக்கெட்டுகளெல்லாம் விழுந்துவிட பிரவீன் குமாருடன் கூட்டணி போட்டு ஆஸ்திரேலியாவின் பௌலிங்கைச் சிதறடித்திருப்பார் ஹர்பஜன். ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில் 49 ரன்னில் அவுட் ஆகியிருப்பார். 'ஆஸ்திரேலியன்னாலே அடிப்பேண்டா' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். 4 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றிருக்கும்.

கேப்டன் தோனி, ஹர்பஜன்
கேப்டன் தோனி, ஹர்பஜன்

இந்த மேட்ச்சுக்கு பிறகான ப்ரஸ்மீட்டில் தோனியிடம், "இனிமேல் ஹர்பஜனை ஆல்ரவுண்டர் என்று அழைக்கலாமா?" என ஒரு நிரூபர் கேட்க, "அப்படி அழைத்து அவர் மீது தேவையில்லாத அழுத்தத்தை சுமத்த விரும்பவில்லை" என தோனி பதில் கூறியிருப்பார். டெஸ்ட் போட்டிகளிலுமே ஹர்பஜன் சதமெல்லாம் அடித்திருக்கிறார்.

2011-க்குப் பிறகு அணியிலிருந்து மெதுவாக ஓரங்கட்டப்பட்டாலும் ஐபிஎல்-லில் தொடர்ந்து அட்டகாசமாகவே வீசி வந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு, தோனியுடன் இணைந்து சென்னை அணிக்காகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியிருந்தார்.

தோனியுடன் சைகை மொழியில் பேசி லெக் ஸ்டம்ப் லைனில் வீசி எடுக்கும் ஸ்டம்பிங்குகள், திடீரென வீசும் தூஷ்ராக்கள், அதிரடியான பேட்டிங், ஸ்ரீசாந்த் உடனான சண்டை என பல பரபரப்பான கிரிக்கெட் நினைவுகளைக் கொடுத்தவர் இப்போது திருவள்ளுவராக உருவெடுத்து தமிழ் பாடியும் நினைவடுக்கில் சேகரமாகிக் கொண்டே இருக்கிறார். இப்படியே இனிமேலும் அவர் எடுக்கப்போகும் அவதாரங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நல்நினைவுகளாக பதியும் வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

ஹேப்பி பர்த்டே பாஜி!

அடுத்த கட்டுரைக்கு