Published:Updated:

`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'! #VikatanVintage

கடுமையாக உழைக்கிறேன்... வேகமாகப் பந்து வீசுகிறேன்... பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அது மாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்!

கபில்தேவ்
கபில்தேவ்

கேப்டன் கபில்தேவ் சுயசரிதம் எழுதி இருக்கிறார்!

ஆஸ்திரேலியாவில் மட்டுமே ரிலீஸாகி இருக்கும் இந்தப் புத்தகம் (அச்சானதும் அங்கேயே!) இன்னும் இந்திய மார்க்கெட்டுக்கு வரவில்லை. 104 பக்கங்கள் கொண்ட சின்ன புத்தகம். இதில் இன்னும் கொஞ்சம் விஷயங்களைச் சேர்த்து, இன்னும் கொஞ்சம் பக்கங்களை அதிகப்படுத்திய பிறகே, இந்தியாவில் வெளியிடப் போகிறாராம் கபில். 'கடவுளின் கட்டளைப்படி... (By God's Decree) என்று புத்தகத்துக்குத் தலைப்புக் கொடுத்து இருக்கிறார் கபில். இந்தப் புத்த கத்தை எழுத கபிலுக்கு வலக்கரம் கொடுத்து இருப்பவர், இந்தியாவில் பிறந்து, வளர்ந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறி இருக்கும் வினய் வர்மா.

அச்சுத் துறை அட்டகாசமாக முன்னேறி இருக்கும் இந்த நாளில், வண்ணப் படங்களே இல்லாமல் ஒரு கிரிக்கெட் புத்தகம் வெளி வந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், புத்தகத்தில் அச்சாகி இருக்கும் கறுப்பு - வெள்ளைப் படங்கள் கொள்ளை அழகு. குறிப்பாக, சின்ன வயசில் எடுக்கப்பட்ட கபிலின் போட்டோவையும், (வாவ்! இப்போது தான் அவர் எப்படி மாறிவிட்டார்!) அவருடைய திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் 'கபில் விசிறி'கள் கத்தரித்து ஆல்பத்தில் ஒட்டிவைப்பார்கள்!

`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'! #VikatanVintage

புத்தகத்தில் இன்னோர் ஆச்சர்யம், கபிலின் எழுத்துகளில் அவருடைய மாறுபட்ட மறு பக்கத்தைப் பார்க்க முடிகிறது. இந்து மதத்தின் அருமை பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் உள்ளே நுழைத்து இருக்கிறார். 'ஹரே ராமா' இயக்கத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருக்கிறார் (இயக்கம் ஆட்சேபித்து இருக்கிறது!). நிறைய இடங்களில் வேதாந்தக் கருத்துகளை அள்ளித் தெளித்து இருக்கிறார். இனி... புத்தகத்துக்குள் நுழைவோம்!

*

கபில்தேவுக்கு 17 வயது இருக்கும்போது, பம்பாயில் ஹெமு அதிகாரி நடத்திய ஒரு பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் முகாமின் மற்ற விவரங்களைக் கவனித்துக் கொண்டவர் தாராபூர்.

"தாராபூர்தான் என்னுடைய இன்றைய வளர்ச்சிக்குப் பெருமளவு பொறுப்பு'' என்கிறார் கபில்.

''கடும் வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்குப் பயிற்சி நடக்கும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. இடையில் ஓய்வும் கிடையாது. முதல் நாள் பயிற்சி முடிந்து பகல் உணவுக்கு உட்கார்ந்தோம். இரண்டு சப்பாத்திகளும் கொஞ்சம் காய்கறிகளும் பரிமாறினார்கள். எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட, சாப்பிட மறுத்தேன். நான் வடக்கில் இருந்து வருகிறேன்... கடுமையாக உழைக்கிறேன்... வேகமாகப் பந்து வீசுகிறேன்... பயிற்சி முடிந்ததும் எனக்குப் பயங்கரப் பசி ஏற்படுகிறது. அது மாதிரி நேரத்தில் ஒரு குதிரையையே என்னால் சாப்பிட முடியும். அவர்களோ இரண்டு சப்பாத்திகள் தருகிறார்கள்!

''தாராபூர் என்னிடம் சீறிக்கொண்டு வந்தார். 'நாங்கள் தரும் சாப்பாடு உனக்குப் பிடிக்க வில்லையா?' என்று கேட்டார்.

'இல்லை சார்... நான் வேகமாகப் பந்து வீசுபவன். எனக்கு நிறையச் சாப்பாடு வேண்டும்' என்றேன்.

தாராபூர் ஏளனமாகச் சிரித்துவிட்டு, கிண்ட லாகச் சொன்னார். 'இந்தியாவில்... ஃபாஸ்ட் பௌலர்களே கிடையாது!'

பொங்கி வந்த கண்ணீரை நான் அடக்கிக்கொண்டேன். இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு வேகப் பந்துவீச்சாளராகத் திகழ வேண்டும் என்று உறுதிகொண்டேன். நன்றி தாராபூர். அன்று எனக்கு நீங்கள் மிகப் பெரிய சேவை செய்தீர்கள்!''

*

1982-ம் வருடம், மே மாதம் 6-ம் தேதி நடை பெற்ற தனது திருமணத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் கபில்.

''என் திருமணம் நிச்சயமான சமயத்தில் கல்யாணம் குறித்து ஒருவித எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது. அதே சமயம் என்னுடைய சுதந்திரம் பறிபோய்விடுமோ என்கிற கோபம் கலந்த பயமும் ஏற்பட்டது. எனக்கு மனைவியாக வரப்போகும் ரோமிக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை என்னால் ஒழுங்காகச் செய்ய முடியுமா? எனக்கு என்று ஒரு ப்ரைவஸி... தனி இடம் உண்டு; நான் சாவி கொடுத்தால் ஒழிய யாருமே அதில் நுழைய முடியாது என நினைத்தேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.''

*

கபில்
கபில்

இங்கிலாந்து அணி இந்தியா வந்தபோது, கேப்டன் பதவி மறுபடியும் கவாஸ்கருக்குக் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் கபில்தேவ் முழங்காலில் ஆபரேஷன் செய்துகொண்டு திரும்பியிருந்தபோது நடந்தது அது. பம்பாயில் முதல் டெஸ்ட்...

''தீர்ந்துபோன கேஸாகத்தான் அந்த டெஸ்ட்டில் நான் கருதப்பட்டேன். பத்திரிகைக்காரர்கள் எனக்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். ஒரு விஷயத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். எனக்கு ஆபரேஷன் நடந்தது முழங்காலில்தானே தவிர, முதுகு எலும்பில் அல்ல!

கேப்டன் பதவியை நான் இழந்துவிட்டேன். ஆனால், அதை எப்படியும் திரும்பப் பெறுவது என்று தீர்மானித்து இருந்தேன். ஆனால், அந்தப் பதவியை நான் இழந்தது, கிரிக்கெட் அரங்கில் இருந்து என்னை ஒரேயடியாக விரட்டியடிக்கும் மாஸ்டர் பிளானின் முதல் பாகம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.''

அடுத்து நடைபெற்ற டெல்லி டெஸ்ட்டில்தான் அந்தப் 'புகழ்பெற்ற' சம்பவம் நடந்தது... கபில் எழுதுகிறார்:

''அந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில்தான் நான் மாபெரும் 'குற்றம்' புரிந்தேன். இந்திய அணி ஆட்டம் கண்டுகொண்டு இருந்த நேரத்தில்தான் நான் பேட் செய்ய வந்தேன். ஒரு சிக்ஸர் அடித்தேன். அடுத்த பந்தையும் அதே மாதிரி அடிக்க முயன்றபோது, அவுட் ஆகிவிட்டேன். இதுவே அந்த டெஸ்ட்டில் இந்தியா தோற்றதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஒரு வேளை, பந்தை நான் விண்வெளியில் அடித்து, அதன் காரணமாக மேட்ச் ரத்தாக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களோ என்னவோ? விளைவு, கல்கத்தா டெஸ்ட்டில் இருந்து நான் நீக்கப்பட்டேன். 'டிசிப்ளினரி நடவடிக்கை' என்று தேர்வுக் குழு வினர் அதற்குச் சுருக்கமாகக் காரணம் சொல்லி விட்டார்கள். முழங்கால் ஆபரேஷனுக்குப் பிறகு விளையாட வருவதற்கே டிசிப்ளின் தேவை என்பதை அவர்கள் அறிந்து இருக்கவில்லை. Bureaucrats In Padded Chairs Only Know The Pain Of Piles. அவர்களுக்கு ஒரு பலி கடா தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.''

முழுப் புத்தகத்திலும் இந்த ஓர் இடத்தில்தான் கபில் சற்றுக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து இருக்கிறார். அந்த அளவுக்கு அந்தச் சம்பவம் அவரைப் புண்படுத்தியிருக்கிறது!

- ஆனந்த விகடன் 9.2.1986 இதழில் இருந்து.

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z