Published:Updated:

SA v IND: 2018-ல் முதல் இரண்டு டெஸ்ட்களில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே... இம்முறை அணியில் இடம்பெறலாமா?

ரஹானே

துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹானேவுக்கு, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டது அப்போது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

SA v IND: 2018-ல் முதல் இரண்டு டெஸ்ட்களில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே... இம்முறை அணியில் இடம்பெறலாமா?

துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹானேவுக்கு, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டது அப்போது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
ரஹானே

2018-ல் தென் ஆப்பிரிக்கா தொடரில், ரஹானேவைச் சேர்க்காதது தவறான முடிவென்றால், இம்முறை அவரைச் சேர்ப்பதுதான் தவறான முடிவாகும்.

ரவி சாஸ்திரி - கோலி கூட்டணியின் அணித்தேர்வு அலைவரிசை, பல சமயங்களில் வெகுஜனக் கருத்தோடு ஒத்திசைவு பெறாமல் போய் இருக்கிறது. 2018-ல் புஜாராவை இங்கிலாந்து தொடரில் வெளியே அமர வைத்தது, அஷ்வினை லிமிடெட் ஃபார்மட்டை விட்டே ஒதுக்கி வைத்தது எனப் பல சமயங்களில் அவர்களது முடிவுகள் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் வித்திட்டிருக்கின்றன. இத்தகைய முடிவுகள், `அணியின் நன்மை' என்னும் தராசினைக் கொண்டு அளவிடப்பட்டு, சில சமயங்களில், அது நியாயப்படுத்தப்பட்டு வெற்றிகளால் மறக்கடிக்கப்பட்டுக் கூடப் போய் இருக்கின்றன.

ஆனாலும், இன்றளவிலும், அவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளில், ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாததென்றால் அது 2018-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் ரஹானேவை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இணைக்கத் தவறிய அந்த முடிவுதான். ஏனெனில், இதன் விளைவாக இந்தியா தவறவிட்டது ஒரு மாபெரும் டெஸ்ட் தொடர் வெற்றியையும், தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பினையும்!

Indian Leadership team
Indian Leadership team
துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஹானேவுக்கு, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டது அப்போது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கான காரணங்கள் இரண்டு...

காரணம் 1: ரஹானே அந்தச் சமயத்தில் மிக மோசமான ஃபார்மில் தடுமாறியது.

காரணம் 2: அவருக்கு மாற்று வீரராக லிமிடெட் ஃபார்மட்டில் தனது பிரைம் ஃபார்மில் இருந்த ரோஹித் ஷர்மா!

அறிமுகம் ஆன சமயத்திலிருந்தே, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்டது போல டெஸ்டில் ஆகச்சிறந்த வீரராகத்தான் ரஹானே வலம் வந்து கொண்டிருந்தார். வருடவாரியாக, ரஹானேவின் டெஸ்ட் சராசரியைக் கணக்கிட்டால், 2013-ல் இருந்து 2015 வரை அது 40-களில் வலம் வந்தது. அதுவும் 2016-ம் ஆண்டு 54.41 சராசரியோடு இந்தியாவின் ரட்சகனாகவே இருந்தார் ரஹானே. ஆனால், அங்கிருந்துதான் எல்லாமே மாறத் தொடங்கியது. 2017-ம் ஆண்டிலேயே அவரது செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. சராசரியும் கிடுகிடுவென பள்ளத்திற்குப் பாய்ந்தது. ரஹானேவின் 2017-ம் ஆண்டு டெஸ்ட் சராசரி வெறும் 34.62 ஆக மட்டுமே இருந்தது. ஆனாலும், எடுத்த எடுப்பிலேயே அவரைத் தூக்கி எறிந்து விடவில்லை அணி நிர்வாகமும், கோச் - கேப்டன் கூட்டணியும்.

2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கருண் நாயர் முச்சதத்தைப் பதிவேற்ற, அச்சமயம் ரஹானேவின் ஃபார்ம் ஆட்டங்கண்டிருக்க, `ஐந்தாவது இடத்தில், ரஹானேவுக்கு பதிலாக கருண் நாயரை ஆட வைக்கலாமே?!' என்ற கருத்துகள் உலவத் தொடங்கின. அச்சமயம் கூட கோலி, ரஹானேவின் பக்கம்தான் நின்றார். "ஒரே ஒரு முச்சதம், அணிக்கான ரஹானேவின் இரு ஆண்டுகள் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும், இருட்டடிப்பு செய்துவிடாது" என்று கூறினார். இருப்பினும், அங்கிருந்தும் ரஹானேயின் விமானம் ரன்வேயைத் தாண்டி மேலே எழவேயில்லை.

Ajinkya Rahane and Rohit Sharma
Ajinkya Rahane and Rohit Sharma

அந்தாண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் மூன்று டெஸ்டில், ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 17 ரன்களை மட்டுமே ரஹானே எடுத்திருந்தார். அத்தொடரில் அவரது சராசரி வெறும் 3.4 மட்டுமே. ஒருநாள் போட்டிகளிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத இச்சராசரியை எப்படி டெஸ்ட் தொடரில் ஏற்றுக் கொள்ள முடியும்?! ஆனாலும்கூட இதையும் தாண்டி ரஹானேவின் இடம் பறிபோக முக்கியக் காரணமாக மாறியது என்ன தெரியுமா?! மொத்த விலைக்கு ரன்களை வாங்கிக் குவித்து அந்தத் தராசின் மறுபக்கம் எடைகூட்டிக் கொண்டே இருந்த ரோஹித்தின் உச்சகட்ட ஃபார்ம்தான்.

ரஹானே சோபிக்கத் தவறிய அதே இலங்கை டெஸ்ட் தொடரில்தான் ரோஹித் நான்காண்டு இடைவெளிக்குப் பின் தனது மூன்றாவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவேற்றி இருந்தார். போதாக்குறைக்கு அதே சுற்றுப் பயணத்தில், ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள், டி20 தொடரில் ஒரு சதம் என சதவேட்டையையும் நடத்தி இருந்தார். ரஹானேயின் தட்டு சாய்ந்தது இங்கேதான்.

மூன்று ஃபார்மட்களிலும், முழுநேரக் கேப்டனாகப் பதவியேற்ற பின்பு, கோலி தலைமையேற்ற முதல் SENA தொடர் என்பதால் அதில் வென்றே ஆக வேண்டுமென்ற எண்ணமும், உத்வேகமும் கோலியின் கண்களிலிருந்து ரஹானேவை மறைத்து, ரோஹித் பக்கம் அவரைத் திரும்ப வைத்தது. வொய்ட் பால் கிரிக்கெட்டின் வேந்தரான ரோஹித்துக்கு வெள்ளை ஜெர்ஸியையும் போட்டு, ஐந்தாவது இடத்தையும் அளித்து, அழகு பார்க்கும் முக்கிய முடிவை எடுக்க வைத்தது.

ஆனால், இது எந்த அளவிற்குச் சரியான முடிவு?!

ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒருநாள் போட்டிகளில், ரோஹித் ஷர்மாவை வெளியே அமர வைப்பது, எப்படி ஒரு தவறான முடிவோ அதைப் போலத்தான் டெஸ்ட் அணியில் ரஹானேவைத் தவற விடுவதும்.

இதே தென் ஆப்பிரிக்காவில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா 5-வது இடத்தில் ஆடினார். ஆனால், அடித்த ரன்கள் மொத்தமே 45 மட்டுமே. ஆனால், மறுமுனையில் ரஹானே எடுத்த ரன்கள் 209. அதில் இரண்டு அரை சதங்களும், 2-வது டெஸ்டில் நூழிலையில் தவறவிட்ட சதமும் (96 ரன்கள்) அடங்கும்.

Indian test team
Indian test team

கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில், பெர்ஃபார்மன்ஸை மனதில் வைத்துக் கூட ரஹானேவை எடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா போன்ற அதிக பவுன்ஸ் ஆகக்கூடிய மைதானங்களில் ரோஹித் ஷர்மா புல்ஷாட் மூலம் அதிக ரன்களைப் பெற்றுத் தருவார் என சாஸ்திரி அண்ட் கோ நம்பியது. ஆனால் ஷார்ட் பால்களில் மட்டும் இல்லாமல் ஸ்விங் பந்துகளையும் சமாளித்து நன்றாகக் கண்ட்ரோல் செய்து ஆடக்கூடிய ரஹானேவை எடுக்காமல் விட்டது தொடர் தோல்விக்கு வழிவகுத்தது.

அது மட்டுமல்ல... இந்த விஷயத்தை இன்னமும் பல கோணத்திலிருந்தும் கோலி அணுகி இருக்க வேண்டும். ரஹானே சொந்த மண்ணில் ஆடிய தொடர்களிலும், துணைக் கண்ட மைதானங்களிலும் வேண்டுமென்றால் திணறியிருக்கலாம். ஆனால், அயல்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் அவரது சராசரி, நம்பிக்கை அளிப்பதாகவே இருந்து வந்தது. அந்தச் சமயம் வரை, இந்தியாவில் நடைபெற்ற 19 டெஸ்ட் போட்டிகளில் 1009 ரன்களை 36.88 சராசரியோடு குவித்திருந்த ரஹானே, அயல்நாடுகளில் அரள வைத்திருந்தார். 24 போட்டிகளில், 1817 ரன்களை, 53.44 ஆவரேஜோடு அடித்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு வீரரை இந்தியா தவறவிட்டதுதான் கோப்பைக்கு குட்பை சொல்ல வைத்தது. அதுவும், மத்திய வரிசையில் பலம் சேர்த்த ஒரு வீரருக்கு விடை சொல்லி இருந்தது, கட்டடத்தின் நடுச் செங்கல்கள் அத்தனையையும் உருவி விட்டு, சுவர் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதைப் போல மாறிவிட்டது.

கோலி மறந்த இன்னொரு பரிமாணமும் உண்டு. ரோஹித் சேர்க்கப்பட்டதற்கு அவரது தரப்பிலான நியாயம், ரோஹித்தின் அப்போதைய அபார ஃபார்ம்தான். கடைசியாக ஆடிய மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தையும், இரண்டு அரை சதத்தையும் ரோஹித் அடித்திருந்தார். அத்தகையவரை எப்படித் தவற விட முடியும் என்பதுதான் அவர்கள் தரப்பிலான கேள்வியாக இருந்தது. ஆனால், அவருக்குரிய பதிலை தொடரின் போக்கும், முதல் இரண்டு போட்டிகளின் முடிவுகளுமே அவருக்குக் கூறிவிட்டன.

ஆடிய முதல் மூன்று இன்னிங்ஸ்களில், ஒன்றில்கூட 11 ரன்களை ரோஹித்தின் பேட் தாண்டவில்லை. நான்காவது இன்னிங்ஸில் மட்டுமே 47 ரன்களை அவர் சேர்த்திருந்தார். இதில் முழுக்குற்றச்சாட்டையும், ரோஹித்தின் தலையிலும் ஏற்றிவிட முடியாது. ஏனெனில் புஜாரா, முரளி விஜய் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களே பிலண்டர், ஸ்டெய்ன் போன்றோர் உள்ளடக்கிய பௌலிங் படையை எதிர்கொள்ளத் தடுமாறினர். உத்தேசிக்கவே முடியாதபடி பந்துகள் தன் இஷ்டப்படி பவுன்ஸாகும் க்ரீன் டாப் பிட்ச்களில் ரோஹித்தைப் பயிற்சி ஆட்டங்கள் கூட இல்லாமல் சந்திக்க வைத்தது புலிகள் நிறைந்த குகை வாயிலில் எட்டிப் பார்ப்பதற்குச் சமமானதுதான். ஏனெனில், தனக்கான ஆயுதத்தைத் தயார் செய்து கொள்ளும் அவகாசம்கூட ரோஹித் ஷர்மாவிற்கு அப்போது இல்லை. விளைவு, சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழக்க, மிடில் ஆர்டர் தள்ளாட, டெய்ல் எண்டர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற, இரண்டு மோசமான தோல்விகளை இந்தியா சந்தித்தது.

ரஹானே போன்ற ஒரு வீரரின் அனுபவம் இல்லாமல் போனது பேட்ஸ்மேனாகவும் கோலி மீதான அழுத்தத்தை அதிகரித்தது. புஜாராவோ ரஹானேயோ, இருவரில் யாரோ ஒருவர் நங்கூரம் பாய்ச்சி நிற்க முடிந்திருந்தால், இந்தியா வெற்றியை முத்தமிடா விட்டாலும், தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம். ரஹானே இல்லாமல் போனது, இரட்டைத் தூண்களைச் சாய்க்க வேண்டிய இடத்தில் ஒன்று காட்சியிலேயே இல்லை எனத் தென் ஆப்பிரிக்க பௌலர்களின் பணியை இன்னும் சுலபமாக்கி விட்டது.

"2017 வரை சென்று ஆடிய அத்தனை வெளிநாட்டுப் போட்டிகளிலும், இந்தியாவுக்காக ரன்களைக் குவித்துள்ளார் ரஹானே!" என சஞ்சய் பங்கரும், "கடின சூழல்களில் ஆடுவதைக் கூட சவாலாக ஏற்று ரஹானே சாதித்திருக்கிறார்" என பிரவின் ஆம்ரேயும், தென்னாப்பிரிக்கத் தொடருக்கு முன்னதாகவே கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் மறந்து டெஸ்ட் போட்டியில் அதுவும் ரஹானேவுடைய வலிமையான ஜோன் ஆன ஓவர்சீஸ் சூழலில் அவருக்கு மாற்று வீரரை ஆட வைத்ததுதான் இந்தியாவை அபாயத்தை நோக்கி அடியெடுக்க வைத்தது. முதல் இரு டெஸ்டுகளை இழந்ததற்கான முக்கியக் காரணமாக இதுவே இருந்தது.

Shreyas Iyer
Shreyas Iyer

தவற்றை உணர்ந்து, மூன்றாவது டெஸ்டில் ரஹானே இறக்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் 9 ரன்களோடு அவர் சோபிக்கத் தவறியிருந்தார்தான். எனினும், இரண்டாவது இன்னிங்ஸில், கோலி மற்றும் பாண்டியாவுடனான அவரது பார்ட்னர்ஷிப்கள்தான் போட்டியின் முக்கியத் திருப்பு முனைகளாக மாறி, அணியின் ஸ்கோரை 200-க்கு மேல் எட்டிப் பார்க்க வைத்தன.

அந்த இன்னிங்ஸில் 48 ரன்களை அதுவும் சற்றே வேகமாகவே ரஹானே சேர்த்திருந்தார். சில நேரங்களில் தோற்கும் தறுவாயில் வரும் சதம் மற்றும் அரை சதத்தை விட, வெற்றியை நோக்கி வழிநடத்தும் வின்னிங் ரன்கள் குறைவானவையாகவே இருந்தாலும் அவை அதிமுக்கியமானவைதான். அதை உணர்த்துவதாகத்தான் ரஹானேயின் அந்த இன்னிங்ஸ் அமைந்தது.

வருடக் காலண்டர்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இம்முறையும் ரஹானே பிளேயிங் லெவனில் இருப்பாரா, அவருக்கு பதில், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராகச் சிறப்பாக ஆடிய ஹனுமா விஹாரி சேர்க்கப்படுவாரா என்பது போன்ற விவாதங்கள் தற்போது நடந்துவருகின்றன.
Ajinkya Rahane
Ajinkya Rahane

கடைசியாக, ரஹானே சதம் அடித்தது கடந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில்தான். சம்பவங்கள் திரும்பத் திரும்ப சுழற்சி முறையில் நடப்பதைப் போல், நடக்கவிருக்கும் பாக்ஸிங் டே டெஸ்டில் அடுத்த சதத்தை ரஹானே பூர்த்தி செய்வாரா அல்லது 2018 போல ரஹானே வெளியே அமர்த்தப்பட்டு, அக்னிப் பரிட்சை மேற்கொள்வாரா?!

இந்தியாவுக்கு அடுத்த கட்ட வீரர்களைத் தயார் செய்ய இருக்கவேண்டிய நிலையில், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை இந்தியா ஆட வைக்குமா, அல்லது மீண்டும் அவுட் ஆஃப் ஃபார்ம் ரஹானேவை நம்பிச் செல்லுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி! இதற்கான விடை, கோலி - டிராவிட் கையில் இருக்கிறது!