2012... இந்திய கிரிக்கெட்டின் `Wall' ராகுல் டிராவிட் தனது ஓய்வை அறிவித்த போது பல இதயங்கள் கலங்கின. தங்களின் ஆதர்ச நாயகனை மீண்டும் கிரிக்கெட் களத்தில் காண முடியாதா, அவர் ஆடும் அந்தக் கண் கவரும் கவர் டிரைவ்களையும் ஃப்ளிக் ஷாட்களையும் காண முடியாதா என்று ஏங்கினார்கள். சரியாக 3 ஆண்டுகள் கழித்து, 2015 ஜூன் மாதம் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது. இந்திய A அணிக்கும், Under 19 அணிக்கும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராகச் செயல்படுவார் என்பதுதான் அந்தச் செய்தி. இந்திய கிரிக்கெட்டுக்கு மதிலாக இருந்த அந்தச் சுவர், இம்முறை அதன் அஸ்திவாரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டது!
சிவாஜி படத்தில் ரஜினி 1 ரூபாய் நாணயத்தை மேலே தூக்கி வீசி, `பூ விழுந்தால் பூப்பாதை, தலை விழுந்தால் சிங்கப் பாதை' என்று கூறுவார். டிராவிட்டும் ஓய்வுக்குப் பிறகு, சிங்கப்பாதையா பூப்பாதையா என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டம் வந்த போது, ஆரவாரம் இல்லாத மீடியா வெளிச்சம் இல்லாத அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பும், வர்ணையாளர் பதவியும் காத்துக் கொண்டிருந்த போது, அவரின் தேர்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது மட்டுமல்லாமல் குழப்பத்தையும் கொடுத்தது. `டிராவிட் ஏன் இந்தப் பதவியைத் தேர்ந்தெடுத்தார்?'
அந்தக் குழப்ப முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிந்தபோது அனைவரும் மீண்டும் ஆனந்தத்தில் ஆழ்ந்தனர். அட்சயப்பாத்திரம் போல், அள்ள அள்ளக் குறையாத வீரர்களை இந்திய அணிக்கு அள்ளிக் கொடுக்கும் பதவியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்தனர். தான் கற்ற வித்தைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதுதானே சிறந்த குருவிற்கு அழகு! அந்த அழகான பதவியைத் தேர்ந்தெடுத்தார் டிராவிட்.
இந்திய அணியின் எதிர்காலம் ரஞ்சி போட்டிகளிலும், Under 19 போட்டிகளிலுமே இருக்க வேண்டும், அதிலிருந்தே இந்திய அணிக்கு வீரர்கள் வரவேண்டும். அதுவே ஆரோக்கியமான வழி என்பதை திடமாக நம்பினார். டொமெஸ்டிக் போட்டிகளின் பர்ஃபாமன்ஸ்களைப் பெரிதாகக் கருத்தில் கொள்ளாமல், ஐ.பி.எல் செயல்பாடுகளின்மூலம் தேர்வாகும் முறையை மாற்றவேண்டும் என நினைத்தார்; அதைச் சாதித்தும் காட்டியிருக்கிறார்!

பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் செய்த முதல் வேலை, இந்திய A அணிக்கு அதிக போட்டிகள் ஆடும்படி அட்டவணைகள் அமைக்க வேண்டும் என்பது. அதுவும் உள்நாட்டில் அல்ல வெளிநாட்டில் அதிக போட்டிகள் வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்தார். அவ்வாறு கூறியதன் நோக்கம், சர்வதேசப் போட்டிகளில், எல்லாச் சூழ்நிலைகளிலும் விளையாடுமளவுக்கு முறையாகத் தயாராக வேண்டும் என்பதற்கே.
2015-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என A அணிகள் மோதிய முத்தரப்புத் தொடரில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது இந்திய A அணி. டிராவிட்டைப் பொறுத்தவரை வெற்றிகளை விட, இந்திய அணிக்கு ஆடுவதற்கு சிறந்த முறையில் வீரர்களை தயார்ப்படுத்த வேண்டும். ஒரே வீரருக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்காமல் அனைவருக்கும் சரிசமமாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
Under 19 போட்டிகளில் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெற்ற உள்ளூர்ப் போட்டிகளாக இருக்கட்டும், இங்கிலாந்து மற்றும் இலங்கையுடன் நடைபெற்ற வெளியூர்ப் போட்டிகளாக இருக்கட்டும் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தது இந்தியா.
2016 அண்டர்-19 உலகக்கோப்பை ஆடுவதற்கு முன்பு Under 19 vs போர்டு XI ஆட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அபினவ் முகுந்த், ஈஷ்வர் பாண்டே, ஜெய்தேவ் உனத்கட் போன்ற சீனியர் வீரர்கள் கொண்ட அணிக்கெதிராக அந்த இளம் வீரர்களைக் களமிறக்கினார் டிராவிட். அந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது Under 19 அணி. இளம் வீரர்களின் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது.

இதே முனைப்போடு 2016 உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஆடச்சென்றது இந்திய அணி. வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது. இறுதிப்போட்டியில் எதிர்பாராவிதமாகத் தோற்றது இந்திய அணி. கலங்கிய வீரர்களிடம் டிராவிட் கூறியது இதுதான் - ``நீங்கள் எனக்கு சாம்பியன்கள்தான். கவலை வேண்டாம்" என்று தோள்கொடுத்தார். உடனடியாக அதிலிருந்து மீண்ட வீரர்கள், அதற்கடுத்து நடைபெற்ற ஆசியக் கோப்பையை வென்று டிராவிட் கைகளில் கொடுத்து அசத்தினர். ரிஷப் பன்ட், இஷான் கிஷன், அவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் என்ற பல எதிர்கால இந்திய நட்சத்திரங்கள் உருவாகியது இந்தத் தொடரில்தான்.
2016-ம் ஆண்டு அனில் கும்பிளே இந்திய அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார். கும்பிளே மற்றும் அப்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன்கள் தோனி, கோலி உடன் ஆலோசனை நடத்தினார் டிராவிட். எதிர்கால இந்திய அணி எப்படி இருக்க வேண்டும், டொமெஸ்டிக் போட்டிகள் செட்டப், வீரர்கள் வேலைப்பளு, இந்தியா A அணி போட்டிகள், இந்திய அணி பேக்கப் பலம் என அனைத்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்திய A அணிக்கு அதிக போட்டிகள் நடத்தி, ஒவ்வொரு பொசிஷனுக்கும் பேக்கப் உருவாக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது .
அதற்கு உடனடியாகக் கிடைத்த பலன் ஹர்திக் பாண்டியா! ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடிக்கொண்டிருந்த பாண்டியாவை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவைத்தார் டிராவிட். முதலில் திணறினாலும் டிராவிட் கொடுத்த அட்வைஸின் காரணமாக 2-வது போட்டியில் பொறுமையாக ஆடி 79 ரன்களை எடுத்தார் ஹர்திக். டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகளைப் புரிந்துகொள்ள அவருக்கு வெகுவாக உதவியது அந்தத் தொடர். ``இந்தப் போட்டிக்குப் பிறகு என் மேல் எனக்கு நம்பிக்கை வந்தது. என் உளவியல் பலத்தை டிராவிட் பன்மடங்கு உயர்த்தி விட்டார் என்று கூறினார்.
பாண்டியா மட்டும் அல்ல... கருண் நாயர், மனீஷ் பாண்டே, சஹால், கேதார் ஜாதவ், ஷ்ரயாஸ் ஐயர் போன்ற பல வீரர்கள் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஜொலிக்க ஆரம்பித்தனர். 2016 டிசம்பர், சென்னையில் வைத்து இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடிக்க பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூரிடமிருந்து வந்த ட்வீட் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. கருண் நாயரை வாழ்த்திய அனுராக், ட்ராவிட்டை வெகுவாகப் புகழ்ந்திருப்பார் - இந்திய A அணியிலிருந்து சிறப்பான வீரர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்று.

2016/17 ரஞ்சி தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை விளையாட வேண்டும். அணியில் ஓப்பனர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது மும்பை. அணித் தேர்வாளர் மிலிந்த் ரேகேவிற்கு யாரைத் தேர்வு செய்வது என்று குழப்பம். சிறுவன் ப்ரிதிவி ஷாவைத் தேர்வு செய்யலாமா, சரியான தேர்வாக இருக்குமா என்று குழம்பியவர், டிராவிட்டிற்கு போன் செய்தார். அந்த போன் கால் மும்பையை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வைத்தது மட்டுமல்லாமல், சாம்பியன் பட்டம் வெல்லவும் உதவியது. டிராவிட்டின் சர்டிஃபிகேட் பெற்றுக் களமிறங்கிய ப்ரிதிவி ஷா அந்தப் போட்டியில் 120 ரன்கள் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இப்படித் தொட்டது எல்லாம் தங்கமாக மாறிக்கொண்டிருக்க, 2018 under 19 உலகக்கோப்பை வந்தது. இந்த முறையாவது ஜெயிக்குமா இல்லை கை நழுவி விடுமா என்று ரசிகர்கள் நினைக்க டிராவிட் ஒரு தைரியமான, ஆனால் ரிஸ்க்கான முடிவெடுத்தார். தேர்வாளர்களுக்கோ பயம். ஆனால், டிராவிட் உறுதியாக இருந்தார். அந்த முடிவு போன உலகக்கோப்பையில் ஆடிய வீரர்கள் இந்தத் தடவை 19 வயதிற்குள் இருந்தாலும் அவர்கள் ஆடக்கூடாது என்ற முடிவு. புது வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், வீரர்கள் under 19 போட்டிகளோடு தங்கிவிடக் கூடாது அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டும் என்பதே டிராவிட்டின் கொள்கை. அவர் வெற்றி தோல்விகள் பற்றிக் கவலைப்படவில்லை. சிறந்த வீரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
அந்த முடிவிற்குக் கை மேல் பலன் கிடைக்க இந்தியா வெற்றி வாகை சூடியது. ப்ரிதிவி ஷா, சுப்மான் கில், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, இஷான் போரல் போன்ற பல வீரர்கள் ஜொலித்தனர்.இளம் வீரர்களை வளர்க்கவேண்டும் என்பது மட்டுமே, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் கொண்டிருந்த டார்கெட். Conflict of Interest பிரச்னை எழுந்த போது, பணம் கொழிக்கும் டெல்லி டேர்டெவில்ஸின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்து இந்திய அணியின் Under 19, A அணியின் கோச் பதவியில் தொடந்தார். தன் நலனை விட இந்திய அணியின் எதிர்கால நலனே முக்கியம் என்று நினைப்பதினால் காலம் கடந்தும் `The Wall' என்று போற்றப்படுகிறார் .
4 வருடங்கள் இந்திய ஜூனியர் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்தவர், கடந்த ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பான நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஜூனியர் வீரர்களை செம்மைப்படுத்திய கைகள், ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் அமைப்பையும் செம்மைப்படுத்தும் அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியுள்ளன. பி.சி.சி.ஐ தலைவர் கங்குலியுடன் சேர்ந்து உலகத்தரத்தில் புது நேஷனல் கிரிக்கெட் அகாடமியை அமைப்பது, புது கோச்சிங் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தி வீரர்களின் திறனை மேம்படுத்துவது, கோச்களுக்குத் தனிப் பயிற்சி அளிப்பது , தரமான பிட்ச்களை உருவாக்குவது, சிறந்த அம்பயர்களை உருவாக்குவது, வீரர்களுக்குக் காயங்கள் வராமல் தடுக்க கணினி உதவியுடன் கூடிய ஆராய்ச்சிகள், under 19 போட்டிகளில் 40 டு 45 வீரர்களை உருவாக்க வேண்டும் எனப் பல்வேறு வேலைகளில் இறங்கியுள்ளார்.
தான் கற்ற வித்தைகளைத் தன்னோடு மறைந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கும் ராகுல் டிராவிட்டிற்க்கு 47-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.