Published:Updated:

நியூசிலாந்து டெஸ்ட், உலகக் கோப்பை: இந்திய அணி இன்று தேர்வு!

நியூசிலாந்து டெஸ்ட், உலகக் கோப்பை: இந்திய அணி இன்று தேர்வு!
நியூசிலாந்து டெஸ்ட், உலகக் கோப்பை: இந்திய அணி இன்று தேர்வு!
நியூசிலாந்து டெஸ்ட், உலகக் கோப்பை: இந்திய அணி இன்று தேர்வு!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இன்று முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சமீபத்தில் இளம் வீரர்களின் வரவால், சீனியர் வீரர் லட்சுமண் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம் சீனியர் வீரர் லட்சுமண், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வரும் காலத்தில் சிறந்த டெஸ்ட் அணியை உருவாக்க, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பதால் லட்சுமணனுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. இருப்பினும் முதல் டெஸ்ட் இவரது சொந்த ஊரான ஐதராபாத்தில் நடக்க இருப்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு சீனியர் வீரராஅ 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இலங்கை தொடரில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்பதால் இவரது இடம் உறுதியாகி உள்ளது.

இந்திய 'பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் அனுபவ வீரர் ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பின் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவரது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் இந்தியா 'ஏ' அணி கேப்டன் புஜாராவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதுவரை மூன்று டெஸ்டில் விளையாடி உள்ள புஜாரா, 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, கேப்டன் தோனி ஆகியோர் நிச்சயம் இடம் பெறுவார்கள். மூன்றாவது துவக்க வீரராக அஜின்கியா ரகானே தேர்வு செய்யப்படலாம். 15வது வீரராக ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வேகப்பந்துவீச்சில் அனுபவ ஜாகிர் கான், உமேஷ் யாதவ் வாய்ப்பு பெறலாம். இஷாந்த் சர்மா உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் இடம் கிடைக்கும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகத்தில் அசத்திய இர்பான் பதானுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சுழலில் அஷ்வின், பிரக்யான் ஓஜாவின் இடம் உறுதியானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெறுவது சிக்கலில் உள்ளது. ஏனெனில் இவரது சமீபத்திய 'பார்ம்' சிறப்பானதாக இல்லை. சமீபத்தில் மூன்று கவுன்டி போட்டியில் விளையாடிய இவர், இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். ஒருவேளை ஹர்பஜன் தேர்வு செய்யப்படாத பட்சத்தில் ராகுல் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்திய சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், இரண்டு சர்வதேச 'டுவென்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆக., 23ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆக., 31 - செப்., 4ம் தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய வீரர்களின் தேர்வு இன்று மும்பையில் நடக்கிறது.

20 ஓவர் உலகக் கோப்பை: யுவராஜுக்கு வாய்ப்பு?

இலங்கையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள 'டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வும் இன்று நடக்கவுள்ளது.

இந்த தொடரை பொறுத்த வரையில் நடந்து முடிந்த இலங்கை தொடரில் பங்கேற்ற அதே வீரர்கள் தான் இதிலும் இடம் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

இதில் யுவராஜ் சிங் மீது தான் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் 'கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட்ட இவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்தார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது பயிற்சி முறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால், உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.