Published:Updated:

கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

Published:Updated:
கிரிக்கெட் இஸ் எ கேம்… தாதா இஸ் ஆன் எமோஷன் #HappyBirthdayDada

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இவர் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டும் அதன்பிறகு வெகுதூரம் பயணித்துவிட்டது. ஆனாலும் தாதா எனும் பெயர் அதே வீரியத்துடன் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே! எப்படி? இன்றைய நாயகர்கள் தோனி, கோலி ஆகியோருக்கு இணையாக ஃபேஸ்புக்கில் பக்கங்களிலும் சரி, தவான் ஆஃப் சைடில் பவுண்டரி அடித்தாலும் சரி, கோலி ஆக்ரோஷமாய் எதிரணியை அலறவிட்டாலும் சரி, இவ்வளவு ஏன்…ஸ்மிரிதி மந்தனா ஆன் சைடு சிக்சர் அடித்தாலும் சரி... இந்த ஒவ்வொரு செயலலிலும்  கங்குலியை ஒப்பிடுகிறார்களே…ஏன்? இன்னும் அவரை மறக்கவில்லையா? உலகக்கோப்பையை வென்று தராத ஒருவரை இன்னும் ஏன் இந்த தேசம் தலைசிறந்த கேப்டன் என தலையில் வைத்துக் கொண்டாடுகிறது? காரணம் இருக்கிறது. இன்றைய ட்ரெண்டில் சொல்ல வேண்டுமானால் கிரிக்கெட் இஸ் எ கேம்…தாதா இஸ் ஏன் எமோஷன்!

தாதா – அண்ணனைக் குறிக்கும் பெங்காலி வார்த்தை. ஆனால், நம்ம ஊர் தாதா (கேங்ஸ்டர்) போன்று கங்குலி உருவகப்படுத்தப்பட்டார். காரணம் அவரது மாஸ். அவரது கெத்து அவரது ரசிகர்களை வெறியர்களாக்கியது. எப்படி வேலு நாயக்கரிலிருந்து டேவிட் பில்லா வரை ஒவ்வொரு தாதாவிற்கும் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறதோ, அதேபோல இந்த தாதாவுக்கும் ஒரு ஃபிளாஷ்பேக் உண்டு.

 கங்குலி எனும் கிரிக்கெட் வீரன், இந்திய கிரிக்கெட்டின் காட்ஃபாதராய் மாறியது எப்படி?

சினிமாவில் ஒரு தாதா உருவாவது இப்படித்தான்
1.ஒரு பெரிய ஆள் எல்லோரையும் அடக்கி ஆண்டு கொண்டிருப்பான். 
2.நம்ம ஹீரோ மோசமான பின்புலத்திலிருந்து வந்திருப்பான். 
3.ஒருநாள் பொங்கி எழும் ஹீரோ அந்த பெரிய ஆளை ஜீரோவாக்குவான். ‛இனிமே எல்லாம் அப்படித்தான்’ என மக்கள் துணை நிற்பார்கள்.
4. அப்பறம் பெரிய பெரிய விஷயங்களை வரிசையாகச் செய்ய,  அவர் அந்த ஏரியாவில் தாதாவாக உருவெடுப்பார்.

அதே டெம்ப்ளேட் தான் இங்கேயும்…
1. கிரிக்கெட் எனும் குளோபல் விளையாட்டை ஒற்றை ஆளாய் ஆண்டு கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாமல் வலம் வருகிறது.
2. சூதாட்டம் என்னும் அசுரனின் பிடியில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியை கரைசேர்க்க ஆபத்வாந்தனாய் கேப்டனாகிறார் கங்குலி.
3. யாராலும் அசைக்க முடியாத ஆஸி அணிக்கு 2001ல் தொடர்ந்து இரு தோல்விகள் தந்து, அத்தொடரையும் வென்று கர்ஜனையோடு உலக அரங்கிற்கு இந்தியாவின் வருகையை அறிவிக்கிறார்.
4. அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபி, நாட்வெஸ்ட் கோப்பை என வெற்றிகளை வசமாக்கி, தாதாவாய் இந்திய ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறார் கங்குலி!

அந்தப் பயம் இருக்கணும்..!
இவை வெறும் பெருமைக்காக சொல்லப்பட்டவை அல்ல. அந்த ஒவ்வொரு பாயின்ட்டுக்குப் பின்னாலும் கங்குலி என்னும் ஆளுமையின் திறமை இருக்கிறது. இந்திய அணி உலக அரங்கில் நிமிர்ந்து நின்ற கம்பீரம் இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக அக்டோபர் 2000ல் பதவியேற்கிறார் கங்குலி. அது இந்திய கிரிக்கெட்டின் மிகமோசமான காலகட்டம். சூதாட்ட சுழலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரத்தில் துணிந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கங்குலி. சறுக்கி விழுந்த அணி எழுந்து நிற்குமா என்று அனைவரும் நினைக்க, அவ்வணியைப் புலிப்பாய்ச்சலில் செலுத்தினார் தாதா. அணிக்குள் அடுத்து பிரச்னைகள் எழாமல் தடுத்தார். ஏற்கனவே ஏற்பட்ட பிரச்னைகளால் அணியின் கெமிஸ்ட்ரி குறையாமலும் பார்த்துக்கொண்டார்.

கங்குலி எனும் மனிதன் இருந்ததுவே சூதாட்டம் மீண்டும் இங்கு தலைதூக்காததற்கு முக்கிய காரணம். இதை நான் சொல்லவில்லை. ஒரு சூதாட்டத்தரகரே சொல்லியிருக்கிறார். சூதாட்டத்தில் சச்சின், டிராவிட், கங்குலிக்கு பங்குள்ளதா என்று கேட்ட போலீசிடம், “அவர்களையும் இதனுள் கொண்டுவர நாங்கள் நினைத்தோம். ஆனால் கங்குலியை நெருங்க நாங்கள் மிகவும் அஞ்சினோம். கங்குலியை நெருங்கினால், அவர் எங்களுக்கு எதிராகவே இருப்பார். அதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படும் என்ற பயம் இருந்தது” என்றார் தரகர். இதை நினைக்கையில் மகாதீரா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது. ராம்சரணின் பெருமைகளை ஷேர்கானின் மந்திரி கூற, “அவன் உடம்பிலும் கத்தி இறங்கும் தானே” என்பான் ஷேர்கான். அதற்கு அவன் மந்திரியோ, “அவன் உடம்பில் கத்தியை இறக்க ஆம்பளை வேண்டுமே” என்பார். இதுதான் தாதாவின் மாஸ்..! 

நோ ஈகோ…நோ பார்ஷியாலிடி..
 அன்று கேப்டனாய் தாதா சோபிக்கக் காரணம், ஈகோவோ பார்ஷியாலிடியோ கொஞ்சமும் இல்லாமல் அணியை வழிநடத்தியதுதான். அதற்கு முன்பு அவ்விரு நோய்களும் இந்திய கிரிக்கெட்டோடு பயணித்துக்கொண்டே இருந்தது. சொல்லப்போனால், முன்னாள் கேப்டன் அசாருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்ட மோதலே கங்குலிக்கான முதல் டெஸ்ட் வாய்ப்பைத் தந்தது. அப்படியான மோதல்கள் இல்லாமல் அணியை அழகாய் வழிநடத்தினார் கங்குலி. அவரது ஆட்டிட்யூட் பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால் என்றுமே தன் வீரர்களுக்கான மரியாதையை அவர் செலுத்தத்தவறியதில்லை. இதற்கு 2011ல் நடந்த ஒரு சம்பவமே பெரிய எடுத்துக்காட்டு.

2011ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர்ந்து சொதப்ப டிராவிட் மட்டுமே சிறப்பாய் ஆடினார். அப்போது ஒருமுறை சக வர்ணைனையாளர் டேவிட் லாயிட், “இந்திய கிரிக்கெட்டின் சிறப்பென்னவென்றால் சச்சின் போன்ற ஜாம்பவான் சோபிக்கத் தவறும் தருணங்களில் யாரேனும் ஒருவர் அணிக்குக் கைகொடுக்கிறார். இம்முறை டிராவிட் தன் பங்கைச் செய்துள்ளார்” என்றார். அதற்கு தாதா, “என்ன இம்முறையா? அவர் இதை ஒவ்வொரு முறையும் செய்துகொண்டிருக்கிறார். கடந்த 15 வருடங்களாக அவர் ஒவ்வொரு நாளும் இதைச் செய்துகொண்டிருக்கிறார்” என டிராவிட்டைப் புகழ்ந்தார். அந்த ஜென்யூனிடி தான் கங்குலியை ஒரு சிறந்த தலைவனாக முன்னிறுத்தியது.

ஆஸிக்குப் பாடம் புகட்டியவர்
இந்தியா 2001-ல் ஆஸிக்கு எதிரான தொடரை வென்றது, டெஸ்ட் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 3 போட்டிகள் கொண்ட அத்தொடரில் 32 விக்கெட்டுகள் சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஹர்பஜன். ஆனால் அவர் எப்படி அணிக்குள் வந்தார்…? சுமார் ஓராண்டு காலம் அணியில் சேர்க்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்டார் பாஜி. சுமாரான ஃபார்ம், தந்தையின் மரணம் என துவண்டுபோய் நிற்க, இத்தொடர் சமையத்தில் கும்ப்ளே காயம் அடைகிறார். அந்த ரஞ்சி சீசனில் ஹர்பஜன் சிறப்பாக செயல்பட்டிருந்த போதிலும், சுனில் ஜோஷி, முரளி கார்த்திக், சரன்தீப் சிங் போன்றோர்களை கிரிக்கெட் வாரியம் முன்னிறுத்த, ஹர்பஜன் தான் வேண்டுமென்று பகிரங்கமாக அறிவிக்கிறார் கங்குலி. ஹர்பஜன் சேர்க்கப்படுகிறார். ஆஸியெனும் பூனையின் கழுத்தில் ஹர்பஜனைக் கொண்டு மணி கட்டுகிறார் கங்குலி. தொடர்ந்து 16 வெற்றிகள் பெற்று பெருமையில் மிதந்த கங்காருவின் தலை மீது ஏறி அமர்ந்தது புலி..வங்கப் புலி..! 

கே.பி எனும் விதையிலிருந்து கமல், ரஜினி, சுஜாதா போன்ற ஆளுமைகள் பூத்ததென்றால், கங்குலி எனும் விதையிலிருந்து விருட்சமானவர்களே சேவாக், யுவி, ஜாகிர், நெஹ்ரா போன்றோரெல்லாம். சேவாக்கை ஓப்பனராக்கியதை அறிவோம். “நாளைக்கு மேட்ச்ல நான் இருப்பேனானு தெரியல” என்று நினைத்துக்கொண்டிருந்த தோனியை ஒன் டவுனில் இறக்கிவிட்டு மாஸ்டர் பேட்ஸ்மேன் ஆக்கியதையும் ‘The Untold Story’ மூலம் அறிவோம். அணிக்காக எதையும் செய்யத் துணிந்தவர். லக்ஷ்மன், கும்ப்ளே போன்றோரை ஒருநாள் அணியிலிருந்து நீக்கவும் அவர் தயங்கியதில்லை. அவர் கேப்டன் என்பதையும் கடந்து தன்னிகரற்ற தலைவனாய் இன்று அறியப்படுவதற்கு அதுவே காரணம். எதையும் துணிந்து செய்தார். அந்தத் துணிச்சல்தான் இன்றும் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக்கக் காரணம். 

கிரேக் சேப்பல் உங்களிடமும், சச்சின், டிராவிட்டிடமும் மன்னிப்புக் கேட்டாரா என்று ராஜ்தீப் சர்தேசாய் கங்குலியிடம் கேட்ட கேள்விக்கு தாதா தந்த பதில் பல மாஸ் கோலிவுட் டயலாக்குகளுக்கு நிகரானது. “சேப்பல், சச்சினிடமோ டிராவிட்டிடமோ மன்னிப்புக் கேட்கலாம். ஆனால் என் போனுக்கு தெரியாமல் கூட அவர் கால் செய்யக்கூடாது. இதை அவர் டி.வி யில் பார்த்துக்கொண்டிருந்தால் சவுரவ் கங்குலியின் நம்பருக்கு டயல் செய்ய அவர் அஞ்ச வேண்டும்” என்று கொந்தளித்தார். “உனக்கு நான் கோட் போடுறது தான் பிரச்னைனா நான் போடுவேண்டா” எனும் கபாலி வசனத்திற்கு நிகராக, “நான் பேசுறது தான் உனக்குப் பிரச்னைனா, நான் பேசுவேண்டா” என்று என்றுமே சிக்கல்களைக் கண்டு அஞ்சாத நாயகன் தாதா. இந்தக் குணத்தை எப்படிப் பிடிக்காமல் போகும்?

தி கோல்டன் மொமென்ட்

கங்குலியைப் பிடிச்சதுக்கான சின்ன சின்னக் காரணங்களையெல்லாம் சொல்லிட்டு, முக்கியமான சம்பவத்தை விட்டால் எப்படி? அதுவும் கிரிக்கெட் உலகை புருவம் உயர்த்தவைத்த சம்பவம் அல்லவா அது.  அதுதாங்க நாட்வெஸ்ட் இன்சிடென்ட்… அதுவரைக்கும் இந்த இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மற்ற அணிகளை அடிக்கடி சீண்டிப் பாப்பாங்க. அது அவங்களுக்கே உண்டான குணம்னு நினைச்சுட்டாங்க. ஆனா சிங்கத்த சீண்டிட்டு தப்பிச்சிட முடியுமா? 

கோப்பையை ஜெயிச்சிட்டோம்னு இங்கிலாந்து ரசிகர்களெல்லாம் நினைச்சுட்டு இருந்த நேரம், நம்ம யுவியும் கைபும் வச்ச ஆப்புல இங்கிலாந்து அவுட். ஆனா அதுக்குப்பிறகு தாதா தன் சட்டையைக் கழட்டி லார்ட்ஸ் பால்கனியில சுத்துன அந்த நிமிஷம், 300 வருஷம் நம்மள ஆண்ட வெள்ளைக்காரனுக அத்தனை பேரையும் ஒரு நிமிஷம் காலடியில போட்டு மிதிச்ச ஃபீல். தாதா ரசிகர்களுக்கு மட்டுமில்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் அது நிச்சயம் கர்வமான தருணம். அந்தக் கண்ணுல வெற்றிக் களிப்புடன் கோபமும் அனல் பறந்தது. வங்கப்புலி, தாதா ஆன தருணம் இதுவாகத்தான் இருக்கும்!

தாதா – எங்கும் எதிலும்..
ஒரு கேப்டனாக மட்டுமல்லாது ஒரு பேட்ஸ்மேனாகவும் தாதா தனக்கென்று மாபெரும் ரசிகர் படை வைத்திருந்தார். நாமெல்லாம் கிரிக்கெட் பேட் பிடிச்சது சச்சினைப் பாத்துனா, அத லெஃப்ட் ஹேண்டேடா புடிச்சது கங்குலியைப் பார்த்துதான். அவரது ஸ்டைல் அவருக்கே உரியது. அவரது ஆஃப் சைடு ஷாட்கள் பற்றியும், அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்சர்கள் பற்றியும் நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த மே மாதம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வலைதளத்தில் அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியின் ‘ஆல் டைம் பெஸ்ட் லெவனு’க்கு தாதா தான் கேப்டன். தன் 22 ஒருநாள் சதங்களில் 18 சதங்களை அந்நிய மண்ணில் அடித்த அசாத்திய பேட்ஸ்மேன். வெளிநாட்டு மண்ணில் இந்தியா வெற்றி பெற தானே முன்னுதாரணமாக விளங்கியவர். இவரது அர்ப்பணிப்பும் நேர்மையும் ஈடு இணையற்றவை.

 அதனால் தான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்திய கிரிக்கெட்டில் அவரது பெயர் நிலைத்து நிற்கிறது. இவர் மட்டைக்கு ஓய்வு அளித்தாலும், மைதானம் இவருக்கு ஓய்வளிக்கவில்லை. வாரியத் தலைவராய், வர்ணனையாளராய் இன்னும் தாதா ரசிகர்கள்…சாரி வெறியர்கள் அவரை ரசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவரது கமென்டரி ஹிட்ஸ் கூட கூகுல் சர்ச்சில் ஃபேமஸ். அப்படி வெறித்தனமாக அவரை ஃபாலோ செய்துகொண்டிருக்கிறது தாதா ஆர்மி. BCCI மொத்தத்திலும் மாற்றம் கொண்டு வர நினைக்கும் லோதா கமிட்டியிலிருந்து முத்கல் கமிட்டி வரை அனைத்திலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர் – கங்குலி.

BCCIயின் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பெயர் – கங்குலி. இதை எப்படி தாதா ரசிகர்களின் மனதிலிருந்து எளிதில் அகற்ற முடியும்? ஓய்வு பெற்ற ஒரு மனிதனுக்காய் இன்று ஃபேஸ்புக்கில் ‘Common Profile Picture’ மாற்றப்படுகிறது என்றால் அதுவொன்றும் சாதாரண விஷயமல்ல. அதற்கு அவர் ஒவ்வொரு ரசிகனின் நாடி, நரம்பு, சதை, ரத்தம் அனைத்திலும் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி ஒவ்வொன்றிலும் தாதா வெறி ஊறிப்போனவர்கள் தான் அவரது ரசிகர்கள். ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆஃப்சைடில் பவுண்டரி அடிக்கும் வரை, அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்சர்கள் பறக்கும்வரை, கிரிக்கெட் மைதானத்தில் ஜெர்சிகள் கழட்டி சுழற்றப்படும் வரை, கிரிக்கெட் மைதானங்களில் டாஸ் போடப்படும் வரை, கேப்டன் எனும் சொல் கிரிக்கெட் உலகில் உலாவும் வரை தாதா எனும் மந்திரம் முழங்கிக்கொண்டேதான் இருக்கும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒருமுறை இப்படிச் சொன்னார்:  “நம் நாட்டில் இரண்டு பேர் மட்டும் எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரு ரசிகனைக் கூட இழக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் கங்குலியும், அஜித் குமாரும்” என்று தல பற்றியும் தாதா பற்றியும் பெருமையாய்க் கூறியிருப்பார். அது நிதர்சனமான உண்மை. அந்த தல ஸ்டைல தாதாவைப் பற்றிச் சொல்லணும்னா, “He is a KingMaker”…

ஹேப்பி பர்த்டே டு தி கிங்மேக்கர் ஆஃப் இந்தியன் கிரிக்கெட்.