Published:Updated:

தோனியின் மறக்க முடியாத 7 இன்னிங்ஸ்கள்! #HBDDhoni

தோனியின் மறக்க முடியாத 7 இன்னிங்ஸ்கள்! #HBDDhoni
News
தோனியின் மறக்க முடியாத 7 இன்னிங்ஸ்கள்! #HBDDhoni

தோனியின் மறக்க முடியாத 7 இன்னிங்ஸ்கள்! #HBDDhoni

எம்.எஸ்.தோனி ... இவரை இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக மட்டும்தான் தெரியும். ஆனால், அவர் நல்ல பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜொலித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தோனி அதில் முக்கியமானவர். ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் அவர் முதலிடத்தில் இருந்தது அதற்குச் சான்று. ஹெலிகாப்டர் ஷாட்டின் பிதாமகனான தோனியின் சிறந்த 7 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம்.

இலங்கைக்கு எதிராக 183*, 2005

2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களை வென்று முன்னிலையில் இருந்தது இந்தியா. மூன்றாவது ஆட்டத்தில் ஜெயவர்தனே சதத்தின் உதவியுடன் 298 ரன்கள் அடித்தது இலங்கை. இது அந்தக் காலகட்டத்தில் சவாலான இலக்கு. இந்த இலக்கை ஒற்றை ஆளாக சேஸ் செய்தார் தோனி. முதல் விக்கெட்டிற்குப் பிறகு இறங்கிய தோனி 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது கிரிக்கெட்டின் தொடக்ககாலத்தில் ஆடிய இந்த இன்னிங்ஸ்தான் அவரை யாரென்று உலகுக்குக் காட்டியது. இதுதான் இன்றுவரை ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள். இப்போட்டியின் நடுவில் அவர் காயமடைந்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாது விளையாடியது பாராட்டுக்குரியது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 44*, 2012

இந்த மேட்ச் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. காமன்வெல்த் பேங்க் தொடரின் 4வது ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலியா அணி 271 ரன்களை இலக்காக வைத்தது. பின் ஆடிய இந்திய அணி கவுதம் கம்பீரின் பொறுப்பான ஆட்டத்தினால் 178-4 என்ற நிலையில் இருந்தது. அந்தச் சூழலில் வெற்றி கடினமான விஷயமாக இருந்தது. தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் தன் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய தோனி, கிளின்ட் மெக்கே வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 124, 2009

 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது இந்தியா. முதல் போட்டி தோல்வியினால் பின்தங்கியிருந்த நிலையில், வெற்றி நெருக்கடியில் களமிறங்கியது இந்திய அணி. நாக்பூரில் நடந்த இப்போட்டியில் 107 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய பௌலர்களைத் திணறடித்தார் தோனி. இதனால் இந்தியா 355 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பின் ஆடிய ஆஸ்திரேலியா 99 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிராக 91, 2011

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை யாரால் மறக்கமுடியும்?. 275 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி முதல் ஓவரிலேயே சேவாக்கை இழந்தது. சிறிது நேரத்தில் சச்சினும் அவுட். கவுதம் கம்பிரும் கோலியும் பொறுப்பாக ஆடினர். ஆனால் கோலி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திணறியது இந்தியா. யுவராஜ் இறங்குவார் என எதிர்பார்த்த வேளையில், திடீரெனக் களம்புகுந்தார் தோனி. உலகக் கோப்பை ஃபைனலில் கேப்டனுக்கே உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய தோனி 91 ரன்கள் அடித்து 28 வருடங்களுக்குப் பிறகு கோப்பையையும் வென்று கொடுத்தார். அந்த வின்னிங் ஷாட் சிக்ஸரும், ரவி சாஸ்திரியின் வர்ணனையும் இன்னும் நினைவில் நிழலாடுகிறது. 

இலங்கைக்கு எதிராக 45, 2013

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த இந்தியா-இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 202 என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பேட்டிங்கில் சொதப்பியது இந்திய அணி. சொற்ப ரன்களில் வீரர்கள் அவுட் ஆன நிலையில் தோனி மட்டும் விக்கெட்டை இழக்காமல், கடைசி ஓவர் வரை நின்று அணியை வெற்றிபெற வைத்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 9 விக்கெட்டைகளை இழந்திருந்தது இந்தியா. இருப்பினும் கடைசி ஓவரில் இஷாந்த் ஷர்மாவை மறுபுறத்தில் வைத்துக்கொண்டு நாலே பந்துகளில் தனது அபார ஆட்டத்தை  வெளிப்படுத்தித் தொடரை வென்றுகொடுத்தார் தோனி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224, 2013

இதுதான் தோனியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று கண்ணைமூடிச் சொல்லலாம். சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது இந்திய அணி. முதல் இன்னிங்சில் கிளர்க்கின் சதத்தின் உதவியுடன் 380 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. பின் ஆடிய இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று 196 ரன்களில் இருந்தபோது சச்சினை இழந்தது. ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார் தோனி. கோலி, தோனி பார்ட்னர்ஷிப் 128 ரன்கள் குவித்தது. பின்பு கோலி அவுட்டாக புவனேஸ்வர் குமார் களமிறங்கினார். முதல் டெஸ்டில் பதற்றத்துடன் ஆடிய அவருக்கு அதிக பந்துகள் தராமல் நேர்த்தியாக ஆடினார். இருவரும் சேர்ந்து 140 ரன்கள் அடித்தனர். இதில் பெரும்பான்மையானவை தோனியின் ரன்கள். இறுதியில் 224 ரன்கள் அடித்த தோனி, இந்தியா முதல் இன்னிங்சில் 572 ரன்கள் எடுக்க உதவினார்.  இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் சூழலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 50 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி சுலபமாக வென்றது. இதுதான் தோனி சர்வதேச டெஸ்ட்களில் அடித்துள்ள ஒரே இரட்டைச் சதம்.

இங்கிலாந்துக்கு எதிராக 76*, 2007

இங்கிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது இந்திய அணி. லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 298 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 201 ரன்களில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் கெவின் பீட்டர்சனின் 134 ரன்களின் உதவியுடன் 282 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. 382 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 145/5 என்ற நிலையில் திணறிக்கொண்டிருந்தது. இன்னும் 80 ஓவர்கள் இருந்தநிலையில் வந்த தோனி தனது நிதானமான 76*(159) ஆட்டத்தால் போட்டியை ட்ரா செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 1-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா.