Published:Updated:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆம்லா 311, காலிஸ் 182 அசத்தல் ஆட்டம்!

Vikatan Correspondent
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆம்லா 311, காலிஸ் 182 அசத்தல் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆம்லா 311, காலிஸ் 182 அசத்தல் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆம்லா 311, காலிஸ் 182 அசத்தல் ஆட்டம்!

ஓவல்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: போட்டியில் ஆம்லா மற்றூம் காலிஸ் ஆகியோரது அசத்தல் ஆட்டம் காரணமாக  தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 385 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 403 ரன்கள் எடுத்திருந்தது. ஆம்லா (183), காலிஸ் (82) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆம்லா, காலீஸ் அபார ஆட்டம்!

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணியின் ஆம்லா - காலிஸ் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது. அபாரமாக ஆடிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த காலிஸ், தன்பங்கிற்கு சதம் அடித்தார்.

தொடர்ந்து அசத்தலாக ஆடிய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது முச்சதத்தை பதிவு செய்தார். தென் ஆப்ரிக்க அணி தேநீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 637 ரன்கள் எடுத்து, 252 ரன்கள் முன்னிலையுடன் ‘டிக்ளேர்' செய்தது.

ஆம்லா (311), காலிஸ் (182) ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிரஸ்னன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து மண்ணில் தென் ஆப்ரிக்கா வரலாற்று சாதனை!


நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா, டெஸ்ட் அரங்கில் ’டிரிபிள் செஞ்சுரி' அடித்த முதலாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். முன்னதாக 2010ல் அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் அதிகபட்சமாக 278 ரன்கள் எடுத்ததே அதிக பட்சமாக இருந்தது.

தவிர, இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ’டிரிபிள் செஞ்சுரி' அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார் ஆம்லா. முன்னதாக 1990ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இங்கிலாந்தின் கிரகாம் கூச் 333 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் - ஆம்லா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 360 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில், இங்கிலாந்து சார்பில் ஒரு இன்னிங்சில் இரண்டு ஜோடிகளை 250 அல்லது அதற்கு மேல் ரன் சேர்க்க வைத்து, மோசமான பந்துவீச்சை பதிவு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், தனது 43வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இந்திய ’மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (51 சதம்) உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (41) உள்ளார்.

இங்கிலாந்து தடுமாற்றம்!

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே கேப்டன் குக் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.  பின்னர் டிராட் 10, பீட்டர்சன் 16, ஸ்டிராஸ் 27 ஆகியோர் வரிசையாக வெளியேறினர்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிந்த இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் சேர்த்துள்ளது. இயான் பெல் 14, ரவி போப்பாரா 15 ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதனால் ஐந்தாம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் எஞ்சிய விக்கெட்களை விரைவில் வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.