Published:Updated:

சாதனை மேல் சாதனை...விமர்சனங்களுக்குப் பேட்டிங்கில் பதில் சொன்ன மகேந்திர சிங் தோனி!

சாதனை மேல் சாதனை...விமர்சனங்களுக்குப் பேட்டிங்கில் பதில் சொன்ன மகேந்திர சிங் தோனி!
News
சாதனை மேல் சாதனை...விமர்சனங்களுக்குப் பேட்டிங்கில் பதில் சொன்ன மகேந்திர சிங் தோனி!

சாதனை மேல் சாதனை...விமர்சனங்களுக்குப் பேட்டிங்கில் பதில் சொன்ன மகேந்திர சிங் தோனி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோற்றபோது தோனி, யுவராஜ் உட்பட சீனியர் வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இவர்கள் இருவர் குறித்தும் பிசிசிஐ  உடனடியாக முடிவு எடுக்குமாறு ராகுல் டிராவிட்  வலியுறுத்தியிருந்தார்.  ரிஷப் பன்ட் அருமையாக விளையாடி வருவதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் ரிஷப் பன்ட்டையும் சேர்ந்தது பிசிசிஐ. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிறைய சோதனை முயற்சிகளை விராட் கோலி மேற்கொள்வார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குல்தீப் யாதவை அணியில் சேர்த்ததைத் தவிர பெரிய முயற்சிகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் எடுத்த பிறகு கடந்த ஏழு போட்டிகளில் சுமாராகவே ஆடி வருகிறார் யுவராஜ்சிங். இதனால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார். மகேந்திர சிங் தோனி மீதும் லேசான நெருக்கடி இருந்தது உண்மைதான். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவசர கதியில் அவர் விளாசிய மோசமான ஷாட் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில்தான் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடர் தொடங்கியது. 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  மூன்று போட்டிகளிலும் இதுவரை தோனி அவுட் ஆகவே இல்லை. முதல் போட்டியில் 9 பந்துகளில் 9 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 13 பந்துகளில் 13 ரன்களையும் எடுத்தார். நேற்றைய தினம் ஆண்டிகுவாவில் நடந்த போட்டியில் 79 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். வேகப்பந்துக்குச் சாதகமாகவும் பேட்டிங் செய்வதற்கு மிக சிரமமாக இருந்த பிட்ச்சில் அபாரமாக ஆடினார் தோனி. 26.2 ஓவர்களில் 100 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது ரஹானேவுடன் இணைந்து விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தினார். நேற்றைய தினத்துக்கு முந்தைய நாளில் ஆண்டிகுவாவில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பிட்ச்சில் ஈரப்பதம் இருந்தது நன்றாகவே தெரிந்தது. இப்போதைய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர்கள் இல்லை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிலைமையைப் புரிந்துகொண்ட தோனியும் ரஹானேவும் பொறுப்பாக ஆடினார்கள். ஸ்கோர்போர்டில் ரன்கள் மெதுவாக உயர்ந்தன. நடப்பது ஒருநாள் போட்டியா இல்லை டெஸ்ட் போட்டியா என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு மணி நேர ஆட்டம் சென்றது. 40 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 151. 210 முதல் 225 ரன்கள் வரை எடுத்தாலே பெரிய விஷயம் என்பது போல இருந்தது ரஹானே மற்றும் தோனியின் பேட்டிங். 43வது ஓவரில் அணியின் ஸ்கோர் 170 ஆக இருக்கும் போது ரஹானே அவுட் ஆனார். அதன் பிறகு கேதர் ஜாதாவோடு இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களைப் புரட்டி எடுத்தார் தோனி. நன்றாக செட்டிலாகிய பிறகு தனது பாணியில் பவுண்டரிகளை விளாசி ரசிகர்ளை குஷிப்படுத்தினார். இதற்கிடையில் தனது 63வது அரை சதத்தையும் நிறைவு செய்தார். ஹோல்டர் வீசிய 47 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன. அதன்பின்னர் கேதர் ஜாதவின் விளாசலில் ரன்கள் எளிதாக வந்தன. கடைசி ஓவரின் கடைசி பந்தில் தோனியின் அட்டகாசமான பவுண்டரியால் இந்தியா 250 ரன்களைக் கடந்தது. கடைசி நான்கு ஓவரில் கேதர் -தோனி இணை 51 ரன்கள் குவித்தது. 

கேதர் ஜாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கேதர் தனது பணியைச் செவ்வனே செய்தார். பவுலிங்கில் இந்தியா கிடுக்கிப்பிடி போட்டதில் 158 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். குல்தீப் யாதவ் மற்றும் அஷ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். மகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் தோனி. கடைசியாக  2015ம் ஆண்டில் தென் ஆப்ரிக்கா இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தபோது இந்தோரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 பந்துகளில் 92 ரன்கள் குவித்தபோது ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். ஒருசுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அந்தப் போட்டிக்குப் பிறகு பேட்டிங் செய்த 18 இன்னிங்ஸ்களில் அத்தனை முறையும் தோனி அவுட். ஆனால் இந்தத்  தொடரில் மூன்று போட்டிகளில் தொடர்ந்து நாட்அவுட்டாக களத்தில் இருந்தார். 

நேற்றைய தினம் 46 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் வரிசையில் கில்கிறிஸ்ட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சங்கக்காரா 13,341 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் (9,442 ரன்கள்) தோனியும், மூன்றாவது இடத்தில் (9,410 ரன்கள்) கில்கிறிஸ்ட்டும் இருக்கின்றனர்.

சத்தமில்லாமல் இன்னொரு சாதனையும் படைத்திருக்கிறார் தோனி, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த  இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (18,426 ரன்கள்) இரண்டாவது இடத்தில் கங்குலி (11,221 ரன்கள்) மூன்றாவது இடத்தில் டிராவிட் (10768 ரன்கள்) இருக்கின்றனர். நான்காவது இடத்தில் இருந்த அசாருதீன் (9,378 ரன்கள்) இப்போது ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 

தோனி கேப்டன்சி பதவியைத் துறந்த பிறகு இதுவரை பேட்டிங் செய்த 8 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் எடுத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 133 ரன்கள், சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக எடுத்த 63 ரன்கள் மிகவும் முக்கியமான சமயங்களில் வந்தவை. அதே போல நேற்றைய போட்டியிலும் அணிக்குத் தேவையான சமயத்தில் நல்ல இன்னிங்ஸ் ஆடினார். ஐந்தாம் நிலையில் அல்லது ஆறாம் நிலையில் பேட்டிங் செய்யும் தோனி தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார். ஓரிரு போட்டிகள் சொதப்பினாலும் அணியில்  இருந்து நீக்கும் அளவுக்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். கோலிக்குத் தனது கேப்டன்சி அனுபவத்தில் தேவையான சமயங்களில் சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இதை கேப்டன் கோலியே பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 

நேற்றைய தினம் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசிய தோனி அணியின் ஸ்கோர், பிட்ச், கேதர் ஜாதவின் அதிரடி, பீல்டர்கள், குல்தீப் யாதவ் பவுலிங் குறித்து விரிவாகவே பேசினார். குல்தீப் யாதவ் குறித்து பேசும் போது " குல்தீப் நிறைய உள்ளூர் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் எப்போது வெரைட்டியான பந்துகளை வீச வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இன்னும் 5 -10 போட்டிகளுக்கு அவருக்கு வழிகாட்ட வேண்டும்" என்றார். நேற்றைய தினம் தனது பேட்டிங் குறித்து பேசியதை விட அணி குறித்தே அதிகம் பேசினார். அணியின் மீது அக்கறை கொண்ட ஒரு சீனியர் பிளேயராக தோனி இருக்கிறார். பேட்டிங் பிட்ச்களில் நன்றாக விளையாடுவதை விடவும் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகளில் தோனி மிளிர்கிறார். இதே பார்மில் தோனி விளையாடினால் நாம் அவரை 2019 உலகக் கோப்பையிலும் காண முடியும் என்பதே இப்போதைய  செய்தி.