Published:Updated:

ஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே! #IndVsPak #MatchAnalysis #CT17

ஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே! #IndVsPak #MatchAnalysis #CT17
ஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே! #IndVsPak #MatchAnalysis #CT17

ஜமான் சென்ச்சுரி... அமீர் ஸ்பெல்... சாம்பியன் பாகிஸ்தான்... இது ஸ்க்ரிப்ட்டிலேயே இல்லையே! #IndVsPak #MatchAnalysis #CT17

முற்றிலும் மறக்க நினைப்பதை ஏதோவொன்று நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இடம், பாடல், சாயல் என ஏதோவொன்று. நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் அரங்கேறிய பல விஷயங்கள், 2003 உலகக் கோப்பை ஃபைனலை நினைவுபடுத்தியது. டேவிட் பூன் டாஸ் போட்ட காயினைப் பார்த்து ‘India won the toss’ எனச் சொன்னபோது இருந்த உற்சாகம் ‘நாங்கள் முதலில் பெளலிங் செய்யப் போகிறோம்’ என விராட் கோலி சொன்னபோது இல்லை. 

நொடிக்கு நொடி உணர்வுகளை மாற்றும் சக்தி விளையாட்டுக்கு மட்டுமே உண்டு. அதுவும் கிரிக்கெட்டுக்கு அதிகம் உண்டு. அன்று கங்குலி செய்த அதே தவறை விராட் செய்கிறார். அன்று இருந்த ஆஸ்திரேலிய அணி, எத்தகைய இலக்கையும் சேஸ் செய்யும். ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அணி பெரிய இலக்குகளை சேஸ் செய்யும் அளவுக்கு வலுவான பேட்டிங் கொண்ட அணி கிடையாது. ஏன் சேஸிங் தேர்வு செய்தார் என்பது கோலிக்கு மட்டுமே வெளிச்சம். என்னதான் விராட் கோலி ‘Not at all’ ‘Not at all’ என சமாளித்தாலும் அதை ஏற்கமுடியவில்லை. இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும், பாகிஸ்தான் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஸ்போர்ட்ஸில் எப்போதுமே கம்பேக் ஸ்டோரிகளுக்கு மதிப்பு அதிகம். தோல்வியிலிருந்து மீண்டு வரும் நாயகர்கள் மீது இனம் புரியாத ஈர்ப்பு வரும். தற்போது பாகிஸ்தான் மீது கிரிக்கெட் உலகுக்கு வந்திருக்கும் ஈர்ப்பின் காரணமும் அதுவே.

2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தது. குரூப் சுற்றில் முதல் போட்டியில் இந்தியாவுடன் 88-வது இடத்தில் இருக்கும் அணியைப் போல விளையாடியது. கிரிக்கெட் அவர்களுக்கு அந்நியமான விளையாட்டு போல தெரிந்தது. கத்துக்குட்டி போல ஆடியது. கேவலமாகத் தோற்றது. ஆனால், ஃபைனலில் நடப்பு சாம்பியன் போல விளையாடியது. நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. கடைசியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இழப்பதற்கு எதுவும் இல்லை எனும்போது ஆக்ரோஷம் வருவது இயல்புதானே! முதல் போட்டியில் இந்தியாவுடன் தோற்றபின் அவர்களுக்கு இழக்க எதுவுமில்லை. பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. இது அவர்களுக்கு ப்ளஸ். பெரிய பலம். அடுத்து தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டனர்.பாகிஸ்தானை விடவும் ஒரு டீம் மோசமாக ஐசிசி தொடர்களில் விளையாடும் எனில் அது தென் ஆப்பிரிக்காதான். அவர்களை எளிதாக வீழ்த்தினர். அரையிறுதியில் இங்கிலாந்தைத் தோற்கடித்தனர். குரூப் ஸ்டேஜில் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினர். ஆக,  இந்தத் தொடரில் பாகிஸ்தான் பயணித்த பயணம் கிரிக்கெட் வரலாற்றில் அழுந்தப் பதிவாகும். இந்த இரு போட்டிகளைப் பார்த்தாவது இந்தியா சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால், இந்தியா குரூப் ஸ்டேஜில் ஆடிய பாகிஸ்தான் அணியின் திறமையை மட்டுமே கணக்கிட்டது. அதற்குரிய விலையாக, கோப்பையை பாகிஸ்தானுக்கு பரிசளித்தது. 

இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்பது More than a game. அது 180 கோடி இதயங்களின் ரசனை சம்பந்தப்பட்டது. ரசனை மட்டுமே அல்ல, உணர்வு சம்மந்தப்பட்டது; அரசியல் சம்மந்தப்பட்டது; நொடிக்கு 3.33 லட்சம் ரூபாய் காசு பார்க்கும் வர்த்தகம் சம்பந்தப்பட்டது. நேற்றைய மோதலும் அப்படித்தான். ஆனால், இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்பது நேற்று தெளிவாக விளங்கியது. பாகிஸ்தான் தெளிவாக விளக்கியது.


கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. ஆனாலும், அங்கே தனிநபர் ஒருவர் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். நேற்று ஃபகார் ஜமான் மாற்றியது போல... முகமது அமீர் மாற்றியது போல. வழக்கம் போல, நேற்றைய போட்டியும் இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் ஃபெளலிங்குக்குமான மோதல்தான். அந்த மோதலில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தானின் வெற்றிக்கு பேட்டிங்கில் ஜமான் அஸ்திவாரம் போட்டார் எனில், பெளலிங்கில் அமீர் நேர்த்தியாக ஃபினிஷ் செய்துவிட்டார். அமீர் முதல் ஸ்பெல்லுக்குப்  (6-2-16-3) பிறகு பந்துவீச வரவே இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஃபார்மிலிருந்த ரோகித், விராட், ஷிகர்  தவன் என மூவரையும் அவுட்டாக்கி விட்டார். மூன்றும் முக்கிய விக்கெட்டுகள். மூவரும் தன்னந்தனியாக ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். ரோகித் தனி ஆளாக 264 அடித்தவர், விராட் சேஸிங் மாஸ்டர், ஷிகர் தவன் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்தவர். ஆனால், இந்த மன்னன்களை, இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒரே மூச்சில் வீழ்த்தி விட்டார் அமீர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது ஒரு பெளலருக்கு அழகு. தன் மூன்றாவது பந்தில் ரோகித், பத்தாவது பந்தில் விராட் (ஒன்பதாவது பந்திலேயே அவுட் ஆகியிருப்பார்), 30வது பந்தில் ஷிகர் தவன் என அமிர் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும் அழகு. கச்சிதம். 

பொதுவாக, ஐ.சி.சி நடத்தும் பெரிய டோர்னமென்ட்டுகளில், அதுவும் ஃபைனல்களில் முதல் ஓவர் முக்கியம். ஃபீல்டிங் செய்யும் அணிக்கு முதல் ஓவரில் விக்கெட் எடுப்பது முக்கியம். பேட்டிங் செய்யும் அணிக்கு முதல் ஓவரில் விக்கெட்டை இழக்காமல் இருப்பது முக்கியம். இந்தத் தொடர் முழுக்க இந்தியா அப்படித்தான் ஆடியது. ஆனால், ஃபைனலில் வேறு கிளைமாக்ஸ். முதல் ஓவரில் விக்கெட் விழுந்து விட்டால், மனரீதியாக பெளலிங் அணி உற்சாகம் அடைந்து விடும். 2003ம் ஆண்டு ஃபைனல் அதற்கு ஒரு உதாரணம். முதல் ஓவர் வீச வந்த ஜாகிர் கான், வீசிக் கொண்டே இருப்பார் (10 பந்துகள் 15 ரன்கள்).  2015 உலகக் கோப்பை ஃபைனல் மேலும் ஒரு சான்று.  மெக்கல்லம் முதல் ஓவரிலேயே அடித்து விளையாட ஆசைப்பட்டார். விக்கெட்டை இழந்தார். நியூஸிலாந்தின் உலகக் கோப்பை கனவு அந்தக் கனமே கலைந்தது. நேற்று ரோகித் அவுட்டானபோதும் அதேநிலைதான். 

ரோகித் டக் அவுட்டில் வெளியேறியபோதே தெரிந்து விட்டது. விராட் கோலி விக்கெட் விழுந்தபோதே புரிந்து விட்டது, ஷிகர் தவன் பெவிலியன் திரும்பியபோதே விளங்கி விட்டது, யுவராஜ் சிங் தடுமாறும்போதே உரைத்துவிட்டது, தோனி நடையைக் கட்டியபோதே முடிந்து விட்டது. அவ்வளவுதான். முடிஞ்ச் போச். வெறிச்சோடிய சாலைகளில் மீண்டும் வாகனங்கள் செல்லத் தொடங்கி விட்டன. டிவியை ஆஃப் செய்து முடிவெட்டக் கிளம்பி விட்டோம். சலூனில் உள்ள டிவி, காமெடி சேனலுக்கு மாறிவிட்டது. இந்தியாவில் இயல்புநிலை திரும்பிவிட்டது. மாறாக, பாகிஸ்தானில் இயல்பு வாழ்க்கை மாறி விட்டது. அந்நாடு பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகி விட்டது. முன்கூட்டியே ரம்ஜான் வந்துவிட்டது. 


இந்தியாவுக்கு ஒரே ஒரு ஆறுதல் ஹர்திக் பாண்டியா பொழிந்த சிக்ஸர் மழை. அதுவும் பருவம் தப்பி பெய்த மழை. அந்த மழையில் மண் வாசனை இல்லை. அந்த மழையை ரசிக்கமுடியவில்லை. 54/5 என்ற நிலையில் இருந்தபோதே இந்தியாவின் கதை முடிந்து விட்டது. சம்பிரதாயத்துக்காகக் காத்திருந்தோம். முறைப்படி தோல்வியை அறிவிக்க காத்திருந்தோம். கோப்பையைப் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கக் காத்திருந்தோம். நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தாரை வார்க்க காத்திருந்தோம். மற்றபடி ஹர்திக் பாண்டியா அடித்ததெல்லாம் ஆறுதல். வெறும் ஆறுதல். 2003 உலகக் கோப்பை ஃபைனலில் சேவாக் அடித்தது போல. 

ஃபைனல் முடிந்தபின், கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, ‘சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் நான் எழுதிய கட்டுரையில் ஷதாப் கான், ஃபகார் ஜமான், ஹசன் அலி பெயர்களைப் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால், அவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள்’ என்ற ரேஞ்சில் ஒரு ட்வீட் செய்திருந்தார். ஆம், தன் நான்காவது சர்வதேச போட்டியில், முதல் சதம் அடித்து, காலத்துக்குமான நாயகனாக எழுந்து நிற்கிறார் ஜமான். இந்த ஃபைனல், இந்தியாவுக்கு 2003 உலகக் கோப்பை ஃபைனலை நினைவுபடுத்தியது எனில், பாகிஸ்தானுக்கு 1992 உலகக் கோப்பையை நினைவுபடுத்தியிருக்கும். அந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்சமாம் உல் ஹக் போன்ற ஜாம்பவான்கள் கிடைத்தார்கள் எனில், இந்த  சாம்பியன்ஸ் டிராபியில் ஃபகார் ஜமான், ஹசன் அலி, ஷதாப் கான்கள் கிடைத்திருக்கிறார்கள். 

ஷதாப் கான், ஐசிசி ஃபைனலில் விளையாடும் டீன் ஏஜ் சிறுவன். யுவராஜ், ஏழு ஐ.சி.சி. டோர்னமென்ட்டின் ஃபைனல்களில் விளையாடியவர். இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியை விட அதிகம். ஷதாப் கானுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது யுவராஜ் தன் முதல் சர்வதேசப் போட்டியில் அடியெடுத்து வைத்து விட்டார். 2011 உலகக் கோப்பையில் தனி ஆளாக மிரட்டியவர். கேன்சரிலிருந்து மீண்டவர். 17 ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் ஜொலிப்பவர். ஷதாப் கான், பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் கூட அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், இருவருக்கும் இடையே நேற்று ஒரு மெளன யுத்தம் நடந்தது.

யுவிக்கு இது முக்கியமான போட்டி. 40 ஓவர் வரை நின்றால் இந்தியா வெற்றிபெற்று விடும். பலமுறை அவர் அப்படி நின்றிருக்கிறார். இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.  ஏற்கெனவே டாப் ஆர்டர் ஆட்டம் கண்டுவிட்டது. எதிர்முனையில் தோனி இருக்கிறார். இருவரும் இணைந்து படைத்த சாதனைகள் பல. குரூப் சுற்றில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக எதிராக யுவி தாண்டவம் ஆடியிருக்கிறார். எட்ஜ்பாஸ்டனில் யுவியை ஒருமுறை சோதித்தார் ஷதாப். அந்த வலையில் யுவி சிக்கவில்லை. ஆனால் பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார். அதேமாதிரி இன்னொரு இன்னிங்ஸ் ஆடுவாரா யுவி? இல்லை ஷதாப் கானிடம் வேறு பிளான் இருக்கிறது. ஒரு லெக் பிரேக். வழக்கம்போல தடுமாறுகிறார் யுவி. பந்து யுவியின் பேடில் பட்டு, பேட்டில் படுகிறது. போகிற போக்கில் பார்த்தால் அது பேட்டில் பட்டது போல தெரியும். ஆனால், அது அப்படி இல்லை. ஷதாப் கான் அசரவில்லை. யுவியும் அசரவில்லை. பந்து முதலில் கால் பேடில் பட்டது. பந்து பிட்ச் ஆன இடமும் பக்கா. நிச்சயம் இது ஆஃப் ஸ்டம்ப்பைத் தகர்க்கும். இது ஷதாப் கான் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கேப்டன் சர்ஃபராஸுக்கும் விதைக்கிறார். அவுட் என பிடிவாதமாக இருக்கிறார் ஷதாப்.  ரிவ்யூ போகலமா? இது சர்ஃபராஸ் தயக்கம். ஆனாலும், ஷதாப் கானை நம்புகிறார் சர்ஃப்ராஸ். ரிவ்யூ கேட்கிறார். ஆம், சர்ஃப்ராவிஸின் ரிவ்யூ சரி, ஷதாப் கானின் நம்பிக்கை சரி, பாகிஸ்தானின் ரிவ்யூ முடிவு சரி. ஆனால், யுவராஜ்  சிங்...?


பாகிஸ்தானின் ஃபீல்டிங் படுமோசம். முன்பல்ல, இப்போதும்... இப்போதல்ல, எப்போதும். விராட் கோலியின் கேட்ச்சை முதல் ஸ்லிப்பில் இருந்த அசார் அலி டிராப் செய்தது அதற்கு நல்ல உதாரணம். பாகிஸ்தான் ஃபீல்டிங்கில் தேறி வருகிறது. முகமது அமீரின் அடுத்த பந்தில் பாயின்ட் திசையிலிருந்து ஷதாப் பிடித்த கேட்ச் அதற்கு நல்ல சான்று. ஷதாப் கான் நல்ல பெளலராக வருவாரா தெரியாது. ஆனால், பாகிஸ்தான் இதுவரை கண்டிராத நல்ல ஃபீல்டர்.  

தன் 27 வயதில் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் ஃபகார் ஜமான். இது அவரது முதல் ஐ.சி.சி. போட்டி. ஒருவேளை ஷர்ஜில் கான் இருந்திருந்தால், இவருக்கு அணியில் இடம் கிடைத்திருக்காது. அகமஷ ஷேசாத்  ரன் குவித்திருந்தாலும், ஜமானின் இடம் கேள்விக்குறியே. ஆனால், ஜமான்  இங்கே அடுத்தடுத்து மூன்று நாக் அவுட் போட்டிகளில் விளாசி இருக்கிறார். ஃபைனலிலும் அட்டகாச ஆட்டம். ஆனால், அவர்  மூன்றாவது ரன் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஜமான் அவுட். கிளம்ப தயாராகி விட்டார். இந்தியா டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது சரி எனத் தோன்றியது. இல்லை, இல்லை தவறு. ஜமான் நாட் அவுட். அவர் பெவிலியன் திரும்ப வேண்டியதில்லை. பும்ரா வீசியது நோபால். ஓவர்ஸ்டெப். அப்பாடா கண்டம் தப்பியது. விராட் கோலி போல வீணடிக்கவில்லை. ஜமான் சதம் அடித்தார். 

ஜமான், டாட் பால்களை விரும்பவில்லை. அது அவரை வதைத்தது. எல்லா இடத்திலும் அடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஸ்பின்னை பதம் பார்த்தார். மிடில் ஓவர்களில் இந்தியாவின் பலம் அதுதான். ஜமான் அடித்ததில் பல ரன்கள் எட்ஜ் வாங்கியது. பல ரன்கள் புல் ஷாட் மூலம், ஹுக் மூலம் வந்தவை, ட்ரைவ் குறைவு, நேர்த்தி கம்மி. பிட்வீன் தி விக்கெட்டில் பிரமாதமாக ஓடவில்லை. ஆனால், சதம் அடித்தார். அதிர்ஷ்டம் மட்டும் காரணமில்லை. பயமில்லாத ஆட்டம். இந்தியா - பாகிஸ்தான் மோதலைக் கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர் என்ற பயமில்லை. பதட்டமில்லை. ஒரு கவுன்டி கிரிக்கெட் போட்டியைப் போல இந்த ஃபைனலை எதிர்கொண்டார். 114 ரன்கள் விளாசினார். இந்த ரன் பாகிஸ்தான் 338 ரன் குவிக்க உதவியது. வெற்றிக்கு உதவியது.

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றதும், 1992 உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் இம்ரான் கான், பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார். அவருடன் முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் சேர்ந்து கொண்டனர். ‘தோல்வி சகஜம், போராடமல் தோற்பது அவமானம்’ என வசைபாடினர். அந்தத் தோல்வி, அந்த அவமானம், அந்த வசை பாகிஸ்தானை மீட்டெடுத்தது. என்ன செய்ய, பல சாதனைகளின் அச்சாரம் அவமானம்தான்.

அடுத்த கட்டுரைக்கு