Published:Updated:

சச்சின், கங்குலி,டிராவிட்,அசார் வரிசையில் இணைந்த யுவி

சச்சின், கங்குலி,டிராவிட்,அசார் வரிசையில் இணைந்த யுவி
சச்சின், கங்குலி,டிராவிட்,அசார் வரிசையில் இணைந்த யுவி

சச்சின், கங்குலி,டிராவிட்,அசார் வரிசையில் இணைந்த யுவி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இன்று இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதைக் கடந்து, தனிநபர் ஒருவருக்கு இது ஸ்பெஷல் போட்டி. ஆம், இது யுவராஜ் சிங்கின் 300வது ஒருநாள் போட்டி. கிட்டத்தட்ட இது அவர் கிரிக்கெட் வாழ்வின் மைல்கல். ஏனெனில், இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், முகமது அசாருதீன் ஆகிய நான்கு பேர் மட்டுமே இந்திய அணிக்காக 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஐந்தாவது ஆளாக சேர்ந்துள்ளார் யுவராஜ்.

அவரது ஒருநாள் போட்டிகளுக்கான பயணம் தொடங்கியதும் சாம்பியன்ஸ் டிராபி (ஐசிசி நாக்-அவுட்) போட்டியில்தான். 2000 ஆம் ஆண்டு கென்யாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில், கென்யாவிற்கு எதிராக நடந்த காலிறுதியின் முந்தைய சுற்று போட்டியின் மூலம் முதன்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்தார் யுவராஜ். அந்தப் போட்டியில் இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டி, அதே தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டி. தன் பிரத்யேக ஷாட்கள் மூலம் 80 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அதோடு அற்புதமான பீல்டிங். முடிவில் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். ‛யார்ரா இது... உன்னைத்தான் தேடிட்டு இருந்தோம்’ என ஒட்டுமொத்த இந்திய ரசிர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இப்படி வெற்றியுடன் துவங்கியது யுவராஜின் சர்வதேச பயணம். பின் பல சாதனைகள், பல சோதனைகள் என யுவராஜின் கிரிக்கெட் பயணம் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.

சச்சின், கங்குலி,டிராவிட்,அசார் வரிசையில் இணைந்த யுவி

2007ஆம் ஆண்டு நடந்த டி-20 இருபது ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றது. யுவராஜ் தொடர் நாயகன் விருது பெற்றார். அந்தத் தொடரில் அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்து, ரன் மழை பொழியச் செய்தது அனைவரும் அறிந்ததே. அந்தப் போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். அடுத்து 2011 உலகக் கோப்பை. அந்த கோப்பையையும் இந்தியா வென்றது. அதிலும் யுவராஜ்தான் தொடர் நாயகன். இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான இவரது பங்களிப்பு இன்றியமையாதது. எப்போதுமே அவர் தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல தவறியதில்லை.

அதன்பின் தன் வாழ்வில் சில மோசமான நாள்களை யுவராஜ் சந்தித்தார். கேன்சர் அவர் வாழ்வைப் புரட்டிப் போட்டது. மீளவே முடியாது என்று பலரும் விமர்சித்தனர். ஒரு வருடகால போராட்டம். கேன்சர் நோயிலிருந்து மீண்டு வந்தார். மீண்டும் ஓடத்துவங்கினார். ஃபிட்னஸில் தேறினார். இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தார். வெற்றியை நோக்கி பயணித்தார். 2014 டி-20  உலகக் கோப்பையில் சொதப்ப, மீண்டும் விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணியில் இடம் கிடைக்கவே போராட்டம். வழக்கம்போல விமர்சனங்களைத் தகர்த்து, இதோ மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து விட்டார். சாம்பியன்ஸ் டிராபியில் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே ஆடி வருகிறார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார். அந்தப் போட்டியில் பழைய யுவராஜைப் பார்க்க முடிந்தது. ‛யுவராஜ் எதிர்முனையில் விட்டு விளாசிக் கொண்டிருந்தார். அவர் அப்படி ஆடியது எனக்கு நெருக்கடியைக் குறைத்தது’ என்றார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. ‛இக்கட்டான தருணத்தில், ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் எப்படி ஜொலிக்க வேண்டும் என்பது யுவிக்கு அத்துப்படி...’ என, லட்சுமண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், நிபுணர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். 

இதுவரை இந்தியாவிற்காக 299 ஒரு நாள் போட்டிகளை விளையாடிய யுவராஜ், ஒருநாள் போட்டியில் 8622 ரன்கள் அடித்துள்ளார். அதில் 14 சதங்களும், 52 அரைசதங்களும் அடக்கம். பல சோதனைகளைச் சந்தித்து, பல சாதனைகள் படைத்து, இன்று அவர் தன்னுடைய 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகள் யுவி!

அடுத்த கட்டுரைக்கு