Published:Updated:

வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடுமா இந்தியா? புள்ளிவிபரக் கணக்கு #MatchPreview #CT17

வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடுமா இந்தியா? புள்ளிவிபரக் கணக்கு #MatchPreview #CT17
வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிடுமா இந்தியா? புள்ளிவிபரக் கணக்கு #MatchPreview #CT17

இன்னமும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி என்றால் சூடு குறைவதில்லை. போட்டி நடக்கும்போது இரண்டு நாட்டின் ரசிகர்களிடமும் கூட ஆக்ரோஷமான மனநிலை இருக்கும். ஆனால், அந்த போட்டி முடிந்தவுடன் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் மற்றொரு அணியுடன் மோதும்போது பாகிஸ்தான் வென்றால் அவர்களை வாழ்த்துவதில் தயக்கம் காட்டியதில்லை இந்திய ரசிகர்கள். இரு நாடுகளுக்கும் பகை இருக்கலாம், ஆனால் விளையாட்டுகள்தான் பகைவனையும்  நண்பனாக்க உதவும் ஆயுதம். ஆனால் சில நேரங்களில் விளையாட்டுகளையே ஒரு வித பகையையும் தூண்டிவிடுகின்றன என்பதை மறுக்க முடியாது. 

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின்  மிகச்சிறந்த சதம் வீணாகிப் போய் பாகிஸ்தான் வென்றது. இந்தியா தோற்றதை நம்புவதற்கே கடினமாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது. சயீத் அன்வர் இதே சென்னை மைதானத்தில் இந்திய பவுலர்களை துவைத்தெடுத்த போது  ரசிகர்கள் கவுரமாக வரவேற்பு கொடுத்தார்கள். இதெல்லாம் பாகிஸ்தான் அணியே எதிர்பார்க்காத விஷயங்கள். இந்த சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி. எளிய வெற்றி என்பதால் இந்திய ரசிகர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. எங்களுக்கு ஆக்ரோஷமாக ஆடும் பாகிஸ்தான் அணிதான் வேண்டும் என்றனர் இந்திய ரசிகர்கள். இந்தியாவுடனான  தோல்விக்கு பிறகு பாகிஸ்தான்  வீறு கொண்டு எழுந்து தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறது. இதோ மீண்டும்  இந்தியா - பாகிஸ்தான் அணிகள்  மீண்டுமொரு ஞாயிற்றுக்கிழமையில், அதுவும் ஐசிசி கோப்பையின்  இறுதிப்போட்டியில் மோதுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடை இருக்கிறது. அது அரை இறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை வெல்ல வேண்டும் என்பதே அது!  

இப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு கிட்டத்தட்ட இணையாக இருக்கும் அளவுக்கு வங்கதேசம் - இந்தியா இடையிலான போட்டிகள் மாறியுள்ளன. பல முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது  வங்கதேசம். பதிலடியாக வங்கதேசத்தை பல முறை துவைத்து காயப்போட்டிருக்கிறது இந்தியா. 

2015 உலக கோப்பைக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் நடைபெறும் சமயங்களில் எல்லாம் சமூக வலைதளம்  மீம்ஸ்களால் திணறுகிது. இந்திய கொடியை அவமதிப்பது, இந்திய கேப்டனின் தலையை வங்கதேச வீரர்  வைத்திருப்பது போன்ற போட்டோஷாப் செய்வது மாதிரியான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் வங்கதேச ரசிகர்கள் இறங்க, கொதித்தெழுந்தனர் இந்திய ரசிகர்கள். இந்தியா வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்று ஒருநாள் போட்டிகளில் மோசமான தோல்வியைச் சந்தித்தபோது,  இந்திய அணியின் மீதும் தோனியின் கேப்டன்சி மீதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக கடந்த டி20 உலக கோப்பையில் பழி தீர்த்தது தோனி தலைமையிலான இந்திய அணி. 

வெற்றிகான  எல்லைக்கோட்டை வங்கதேசம் தொடும் முன்னர், தோனியின் சமயோசித கேப்டன்சியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்தியா வென்றதும், வங்கதேச ரசிகர்கள் இன்னும் கடுப்பானார்கள். அரை இறுதியில் வெஸ்ட் இன்டீஸிடம் இந்தியா தோற்றபோது வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹீம் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கொழுந்து விட்டு எரிந்த 'தீ'-க்கு  மண்ணெண்ணெய் ஊற்ற, ஏற்கனவே தோல்வி விரக்தியில் இருந்த இந்திய ரசிகர்கள் வங்கதேசத்தை சரமாரியாக விமர்சித்தார்கள். இதெல்லாம் கடந்தகால வரலாறு. கடந்த ஆண்டு தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க துடிப்புடன் காத்திருக்கிறது வங்கதேசம். சிந்தாமல் சிதறாமல் அரை இறுதியில் கால் எடுத்து வைக்க வேண்டும் என விரும்புகிறார் இந்திய அணியின் கேப்டன் கோலி.  இந்த சூழ்நிலையில்தான் இன்று அரை இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. 

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? 

இந்தியாவும் வங்கதேசமும் இதுவரை 31 ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கின்றன. இதில் ஐந்து முறை படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்தியா. அந்த ஐந்து போட்டிகளும் இந்தியாவுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தவை. அவற்றை பற்றிப் பார்ப்போமா? 

1988 ஆம் ஆண்டு முதன் முதலாக வங்கதேசத்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடியது இந்தியா. அந்த போட்டியில் 93 ரன்களில் சுருண்டது வங்கதேசம். அந்த சோகம் அடுத்த 16 வருடங்கள் தொடர்ந்தது. இந்த 16 ஆண்டுகாலத்தில் இந்தியாவுடன்  தொடர்ச்சியாக 12 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது வங்கதேச அணி. 2004 டிசம்பரில்  வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய அணி. அந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது  என முடிவு செய்யப்பட்டது. டெண்டுல்கர், டிராவிட் போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அந்த தொடரில்  முக்கியமான இரண்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். அந்த இரண்டு பேருக்கும் அப்போது  பின்னாளில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல கதாநாயகனாக அமையப்போகிறோம் எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். அதில் ஒருவர் இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்றுத்தந்த தலைசிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி. இரண்டாமவர் 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இறுதி ஓவரை வீசிய ஜோகீந்தர் ஷர்மா. 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால் அந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார் தோனி. இரண்டாவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இருந்தது இந்திய அணி.  காலை எழுந்ததும் அந்தத் துயரைச் செய்தி  இந்திய வீரர்கள் காதில் சொல்லப்பட்டது. டிசம்பர் 26, 2004 அன்று இந்திய நாட்டையே உலுக்கிய மாபெரும் ஆழிப்பேரலையால் கொத்துக் கொத்தாக இறந்து மடிந்தது மனிதக் கூட்டம். அந்த சோகத்தோடு அன்றைய போட்டியை எதிர்கொண்டது இந்தியா. வங்கதேசம் 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சேவாக் டக் அவுட் ஆனார். யுவராஜ் வெறும் நான்கு ரன்னில் நடையை கட்டினார். முகமது கைஃப், ஸ்ரீதரன் ஸ்ரீராம் இணை சற்றே நம்பிக்கையளித்தாலும் அடுத்தடுத்து அவுட் ஆயினர்.இந்திய கீப்பர்களாக தோனி, பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் பெயர்கள் பரிசீலிக்கப்பட, தோனி முன்னிறுத்தப்பட்டார். பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தோனி 12 ரன்னில் மோர்தசா பந்தில் வீழ்ந்தார். ஜோகீந்தர் ஷர்மா இறுதிக் கட்டத்தில் போராடினாலும் இந்தியாவால் இலக்கை அடைய முடியவில்லை. 15 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது  வங்கதேசம்; அதிர்ச்சியடைந்தது இந்தியா. தோனி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன; அதே வேளையில்  மூன்றாவது போட்டியில் வென்று தொடரை வென்றது கங்குலி தலைமையிலான இந்திய அணி. 

அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் இந்தியாவும் வங்கதேசமும் ஒருநாள் போட்டியில் மோதவில்லை. 2007 உலகக் கோப்பையில் இந்தியா வலுவான அணியாக இருந்தது. உலகக் கோப்பையை வெல்லும் டாப் - 3 அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது இந்திய அணி. தோனி டக் அவுட் ஆனார். இந்திய வீரர்களின் வீடுகள் மீது கல் எறிந்து கேவலமாக நடந்து கொண்டார்கள் இந்திய ரசிகர்கள். வங்கதேசத்துடனான தோல்வி இந்தியாவை லீக் சுற்றோடு வெஸ்ட் இண்டீசில் இருந்து புதுடில்லிக்கு விமானம் ஏறுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 

அந்தத் தோல்வி சீனியர்களை அணியில் இருந்தே ஓரம்கட்ட அடித்தளம் போட்டது. இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம்.'தோனி என்றொரு மிகச்சிறந்த கேப்டன் கிடைக்கவும் அடித்தளம் போட்ட தோல்வி 'அது' .

அதன் பின்னர் அடுத்த தோல்வி 2012 ஆசிய கோப்பையில் வந்தது. சச்சினின் நூறாவது சதத்தை வீணாக்கினார்கள் இந்திய பவுலர்கள். 289 ரன்கள் குவித்தும் சேஸிங்கில் கோட்டை விட்டனர் இந்திய பவுலர்கள். வங்கதேச அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது. அந்தத் தோல்வியால் இந்தியாவால் ஆசியக் கோப்பை  இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது. 2015 உலக கோப்பையில் காலிறுதியில் இந்தியாவை எதிர்கொண்டது வங்கதேசம். 'இந்தியாவை அதன் ஊருக்கு அனுப்புவோம்'  என வங்கதேச ரசிகர்கள் சொன்ன வீடியோக்கள் வைரலாகி அனலைக் கூட்டின. ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 302 ரன்கள் குவித்தது இந்திய அணி. உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்துவீச்சில் 193 ரன்களில் சுருண்டது வங்கதேசம்.  அந்த போட்டியில் ரோஹித் ஷர்மா அவுட் ஆன போது இடுப்புக்கு மேல் புல்டாஸாக வீசப்பட்டதால் அந்த பந்தை நோபால் என அறிவித்தார் அம்பயர். அது தவறான முடிவு என போட்டி முடிந்த பின்னர் கதறினார்கள் வங்கதேச ரசிகர்கள். 

அந்த போட்டிக்கு பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. வலுவான அணியாக கிளம்பிப்போன இந்திய அணியைத் துவைத்தெடுத்தது வங்கதேசம். மூன்று போட்டிகளில் 2 -1 என வென்றது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகள் தோற்றதிலும், வங்கதேச அணியிடம் முதன் முறையாக தொடரை இழந்ததிலும் கடும் கோபமுற்றனர் இந்திய ரசிகர்கள். தோனி கேப்டன்சியை விட்டு நீக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. 

இதோ ...இப்போது... மீண்டும் இந்தியா - வங்கதேசம்!  இந்த முறை வங்கதேசம் வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்தை அசைத்துப் பார்த்தது. இன்னும் 20 - 30 ரன்கள் வங்கதேசம்  எடுத்திருந்தால்  போட்டியின் முடிவே மாறியிருக்கக்கூடும். ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி அடைய வேண்டிய நிலையில் இருந்து மழையால் தப்பித்தது. நியூசிலாந்து அணியுடனான போட்டியில் போர்க்குணத்துடன் மீண்டு வந்து வென்றது. அந்தப் போட்டியில் வங்கதேசத்தின் சேஸிங் அட்டகாசம். 

கடைசி மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவைத் தவிர மீது ஏழு முக்கியமான அணிகளுடனும் வெற்றிப் பெற்றிருக்கிறது வங்கதேசம். நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்  ஆகிய அணிகளுடனான தொடர்களை வென்றிருக்கிறது. 2004 க்கு பிறகு இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்றதே வங்கதேசத்துக்கு மிகப்பெரிய சாதனைதான். அரை இறுதி வரை முன்னேறியது வரலாற்றில் பொறிக்கப்படும். இப்போது அரை இறுதியிலும் வென்று இறுதிப்போட்டியிலும் காலடி எடுத்துவைக்க விரும்புகிறது மோர்தசா அணி. 

தமீம் இக்பால் இதுவரை 16 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளார். அதில் ஆறு முறை அரை சதம் எடுத்திருக்கிறார். அவர் இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கிறார். முஷ்பிகுர் ரஹீம், மஹமதுல்லா, ஷகிப் அல்  ஹசன் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முஸ்தாபிசுர் நன்றாக பந்து வீசுகிறார்.நியூசிலாந்துடனான போட்டி அவர்களுக்கு பெரும் தன்னம்பிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவுடனான போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் தைரியமாக விளையாடும் வங்கதேச அணி.

இந்திய அணி எப்படி இருக்கிறது? 

இந்த தொடரில் அதிசிறப்பான ஆட்டத்தை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. எனினும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது சில வீரர்கள் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடுவதால் அரை இறுதிக்கு நுழைந்திருக்கிறது. இலங்கையுடன் அடைந்த தோல்வி இந்திய அணியின் பவுலிங்கில் உள்ள பலவீனங்களை காட்டுகிறது. எனினும் இந்திய அணி பயப்படத் தேவையில்லை. வங்கதேசத்தை விட பல மடங்கு வலுவாக இருக்கிறது இந்தியா. அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேர்த்தியாக போட்டியை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசை. 2015 அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் உலக கோப்பையில் மண்ணை கவ்வியது இந்திய அணி. 2016ல்  அரை இறுதியில் வேஸ்ட் இண்டீசிடம் தோற்று வெளியேறியது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டிலும் அந்த சோக நிகழ்வு ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இந்திய கூடாரத்தில் இருக்கிறது. நாங்கள்  வங்கதேசத்தை ஒரு சதவீதம் கூட எளிதாகி எடுத்துக் கொள்ள மாட்டோம் எனச் சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

இந்தியா Vs பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் மோதினால் அனல் பறக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய தேசமும் எதிர்பார்க்கும் அந்த நிகழ்வு நடைபெற வேண்டுமெனில் வங்கதேசத்தை முதலில் வீழ்த்த வேண்டும். அது நிச்சயம் சவாலானது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்துவதற்குரிய அதே உழைப்பு இன்றும் தேவை. இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்ல வாழ்த்துவோம்.

அடுத்த கட்டுரைக்கு