Published:Updated:

1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1

1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1
1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1

1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 1

அப்போது எந்த கிரிக்கெட் விமர்சகரும் சேத்தன் ஷர்மா ஹாட்ரிக் எடுப்பார் என்றோ, நவ்ஜோத் சித்து தொடர்ந்து நான்குமுறை 50 ரன்கள் அடிப்பார் என்றோ கணிக்கவில்லை. அந்த உலகக் கோப்பை தொடங்கும் முன்பும் முடிந்த பின்பும் கிரிக்கெட் அல்லாத ஒரு விஷயத்தை பற்றிதான் அதிகம் பேசினார்கள். அது டேவிட் பூனின் மீசை. இப்படி பல விஷயங்களுக்கு அச்சாரமாக இருந்த 1987 உலகக் கோப்பையைப் பற்றிய கம்ப்ளீட் ரீவைண்ட் இதோ...

1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன்முறையாக கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே நடக்கப்போகிறது என்றதுமே கிரிக்கெட் உலகிற்கு ஆச்சர்யம். 1975,1979 மற்றும் 1983 என மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளுமே இங்கிலாந்தில்தான் நடந்தன. அப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகளுக்கு மட்டுமே டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து இருந்தது. தென் ஆப்பிரிக்க அணி (நிறவெறி காரணமாக) அதிகாரபூர்வ கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி)  தடைவிதித்திருந்த காலகட்டம் அது.

மேற்கு நாடுகளுக்கு தெற்காசிய நாடுகள் என்றாலே ஒரு இளக்காரம். ‘இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டு கிடந்த நாடுகள்தானே...’ என்றுதான் பார்ப்பார்கள். ஏழை நாடுகள், படிப்பறிவில்லாத நாடுகள் என்றும் எண்ணிக்கொள்வார்கள். இந்தியா, பாகிஸ்தானிலாவது மைதானங்கள் உண்டு. இலங்கையில் இரண்டே மைதானங்கள்தான்.

முதல் இரண்டுமுறை சாம்பியனாக, கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்த மேற்கிந்திய தீவுகளில் பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. மிகப்பெரும் ஸ்டார் கிரிக்கெட் பிளேயர்களுக்கு கூட சம்பளம் கிள்ளித்தான் கொடுப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கும் சரி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் சரி, விளம்பரத்தால் கிடைக்கும் வருமானம் சொற்பம். ஆனால் பேஸ்பால், பேஸ்கட் பால் போன்றவற்றிற்கு அங்கு கூடுதல் கவனிப்பு உண்டு. அவர்களின் ஸ்டார் விக்கெட் கீப்பரான ஜெஃப் துஜான் கிரிக்கெட் போட்டி நடக்காத காலங்களில் மருந்து கம்பெனி பிரதிநிதியாக வேலை பார்ப்பார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

கணிதத்தில் படிக்கும் அறுங்கோணம், எண்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்படி மைதானங்களை வைத்திருப்பது நியூசிலாந்து. அவர்களாலும் தனியாய் ஒரு உலக்கோப்பைப் போட்டிகளை நடத்த முடியுமா என்பதும் சந்தேகம். எனவே மீதம் இருப்பது ஆஸ்திரேலியாதான். 

இங்கிலாந்திற்கு நிகராக சொல்லப்போனால் கூடுதலாகவே மைதான உள்கட்டமைப்பு, ஒளிபரப்பு வசதிகள் கொண்ட ஆஸ்திரேலியாவில் தான் 1987 உலக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்ற கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாக இருந்தது. ஆனால், 1985 உலக தொடர் கோப்பையை (World Championship of Cricket) ஆஸ்திரேலியா நடத்தியதாலோ அல்லது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு முக்கிய நாடுகள் இணைந்து போட்டியை நடத்த ஐ.சி.சி-யிடம் கேட்டுக் கொண்டதாலோ ,1987 உலக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியா-பாகிஸ்தானுக்கு கிடைத்தது. 

1983 உலக கோப்பையை வென்ற பின்னர்தான் இந்தியாவில் சிறு நகரங்கள், கிராம மக்களுக்கு கிரிக்கெட்டின் மீது ஒரு பிடிப்பு வந்தது. அதற்கு முன்புவரை, டெஸ்ட் மேட்சுகளே பரவலாக விளையாடப்பட்டு வந்தன. இரண்டு இன்னிங்ஸ், ஃபாலோ ஆன், தோற்காமலும் இருக்கலாம், அதுக்குப் பேரு டிரா என வழவழாவென இருக்கும் விதிமுறைகள் அவர்களைக் கவரவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் இத்தனை ஓவர், எவ்வளவு முடியுதோ அவ்வளவு அடிக்கணும், அதைத் திருப்பி அடிச்சா வெற்றி, இல்லைன்னா தோல்வி என்ற விதிமுறை அவர்களுக்கு நெருக்கமாக இருந்தது. சொல்லப் போனால் 1983 வெற்றிவரை கிரிக்கெட் மேட்டுக்குடி மக்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. ஜென்டில்மேன் கேம் என்கிற அடையாளம் வேறு.

மக்களுக்கு ஒரு விளையாட்டு பிடித்தால் அதை விளையாடிப் பார்க்கத் தோன்றும். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விளையாடிப் பார்க்க வேண்டுமென்றால் ஸ்டிக் போன்ற குச்சி, குறைந்த பட்சம் நாலு பேர்,  இடவசதி தேவை. டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து என எதற்கும் உபகரணமோ, இடவசதியோ வேண்டும். அப்படி இல்லாமல் விளையாடினால் அது போரடித்துவிடும். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு கட்டை, பந்து போன்ற ஒரு பொருள் இருந்தால் போதும். இரண்டு பேர் ஒரு பள்ள மேடான முட்டுச் சந்தில் விளையாடினால் கூட சுவராஸ்யம் குறையவே குறையாது.  இன்னும் சிலர் மழைபெய்தால் வீட்டுக்குள், பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் இல்லா நேரங்களில் புக் கிரிக்கெட் கூட விளையாடுவார்கள். 

இப்படி இந்தியாவில் கிரிக்கெட் மக்கள் மனதில் எளிதாக ஒட்டிக் கொண்டது. கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் இரண்டு அணிகளும் ஏறக்குறைய சமமாக இருந்தால்தான் ஆட்டம் சுவராஸ்யமாக இருக்கும். இல்லாவிட்டால் ஆட்டம் ஒருபக்கச் சார்பாகவே இருக்கும். ஆனால் கிரிக்கெட்டில் ஒரு அணி சாதாரணமாக இருந்தாலும் அந்த அணியில் ஒரு நபரின் ஹீரோயிசத்தால் அன்றைய போட்டியில் வென்றுவிடலாம் என்ற காரணி இயல்பாகவே நாயக ஸ்துதி கொண்ட நாட்டிற்கு உவப்பாக இருந்தது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வில் மலையேற்றம், வனம் புகுதல் போன்ற  அட்வெஞ்சர்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. அதிகபட்சம் ஓடும் பேருந்தில் ஏறுவதும், பைக்கை விரட்டுவதும்தான். எனவேதான் அவர்கள் ஆப்ரேஷன் தியேட்டரில் கூட மசாலா கேட்கிறார்கள். கிரிக்கெட்டில் நிலவும் இந்த நிலையற்ற தன்மையும் அவர்களை இயல்பாக கவர்ந்திருந்தது.

எனவே இந்தியா, பாகிஸ்தானில் 1987 உலக கோப்பைப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும் இரண்டு நாட்டிலுமே மக்களிடையே ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது . ‘அங்க நடந்த போட்டியவே ஜெயிச்சாச்சு. இப்ப நம்ம ஊர்லயே நடக்குது’ என இந்திய மக்களும், ‘போன வருஷம் இந்தியால போயி அவங்களயே புரட்டிட்டு வந்தோம், நமக்கென்ன...’ என பாகிஸ்தான் மக்களும் மகிழ்ந்தார்கள். ஏற்கனவே அரசியல்வாதிகளால் மனதளவில் பகையுண்டு கிடந்த இருநாட்டு மக்களுக்கும் யார் இந்த கோப்பையை வெல்வது என்பதில் கௌரவ பிரச்னையும் இருந்தது. 

இப்போது போல பகல் - இரவு ஆட்டங்கள் நடத்த மின்னொளி மைதானங்கள் அதிகம் இல்லாத காலகட்டம். 90 சதவிகிதத்திற்கும் அதிகமான போட்டிகள் பகல் ஆட்டமாகவே நடத்தப்படும். ஒருநாள் போட்டிகளை அப்போது லிமிடெட் ஓவர் மேட்ச் என்றுதான் அழைப்பார்கள். காரணம் 50 ஓவர், 55 ஓவர், 60 ஓவர் என நாட்டிற்கு ஏற்றவாறு அங்கு சூரிய ஒளி கிடைக்கும் கால அளவைக் கொண்டு நடத்தப்படும். இங்கிலாந்தில் வெயில் காலத்தில் சூரிய ஒளி அதிகநேரம் வரை நீடிக்கும். அங்கே அனாயாசமாக 60 ஓவர் போட்டிகள் நடத்தலாம். எனவே அதற்கு முந்தைய உலக கோப்பைப் போட்டிகள் எல்லாம் 60 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டன. இந்தியா போன்ற நாடுகளில் சூரிய வெளிச்சம் 4.30 மணிக்கு மேல் குறைய ஆரம்பித்து விடும்.  எனவே இந்தியாவில் ஆட்டங்கள் 50 ஓவர்கள்தான் நடக்கும்.  

ஐ சி சி விதிமுறைகளின் படி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் உலக கோப்பைப் போட்டிகளில் நேரிடையாக கலந்து கொள்ளலாம்.  டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையாய் இருந்தால் குரூப் பிரிக்க உப்புக்குச் சப்பாணியாக ஒரு நாட்டைச் சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் அந்த நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் தூண்டப்படும் என்பது ஐ.சி.சி-யின் திட்டம். அதன்படி உறுப்பு நாடுகளிடையே ஐ.சி.சி சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி, ஜிம்பாப்வே அதில் வெற்றி பெற்று எட்டாவது அணியாக உள்ளே வந்தது.  

குரூப் ’ஏ’ வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், குரூப் ’பி’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் அவரவர் போட்டிகளை அவரவர் நாட்டிலேயே விளையாடிக் கொள்ளலாம். முடிந்தால் அரை இறுதிப் போட்டிகளைக் கூட அவரவர் நாட்டில் விளையாடிக்கொள்ளலாம் என்ற சலுகையும் கிடைத்தது. ஈடன் கார்டனில் ஃபைனல்.

அதற்கு முந்தைய உலக்கோப்பைப் போட்டிகளையெல்லாம் புருடென்ஷியல் என்ற காப்பீட்டு நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது. இந்த உலகக்கோப்பையை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய முடிவு செய்தது. இன்று வேண்டுமானால் ரிலையன்ஸ் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் நேரிடையாக பங்குபெறும் ஒரு நிறுவனமாக இருக்கலாம். ஆனால் 80களில் அவர்கள் மக்களுடன் நேரடி வணிகத்தில் இல்லை. அப்போது தொழிலதிபர்கள் என்றாலே டாட்டா பிர்லா தான். ‘ஆமா... இவரு பெரிய டாட்டா பிர்லா’ என ஒருவரை கிண்டல் செய்ய பயன்படும் வார்த்தைகள் இப்போது ‘ஆமா... இவர் பெரிய அம்பானி’ என மாறுவதற்கு ஒரு காரணமாய் இருந்தது இந்த ஸ்பான்சர்ஷிப். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ‘அதென்ன ரிலையன்ஸ்’ எனக் கேட்கப்பட்டு ‘ஓ அப்படி ஒரு கம்பெனியா?’ என மக்களிடையே பெரிய அறிமுகம் கிடைத்தது. 

தமிழகத்தில் 85ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் தமிழிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நடுத்தர வர்க்கத்தினரிடையே டிவி வாங்கும் ஆர்வமும் அதிகரித்தது.  இந்த உலக்கோப்பைப் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பாவதால் கிரிக்கெட் ஆர்வம் உடைய வீடுகளில் டிவி எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. எனவே டிவி விற்பனை களைகட்டியது.  லட்சக்கணக்கான மக்களை இந்தப் போட்டிகள் நேரிடையாகச் சென்றடையும் என்பதால் விளம்பரதாரர்களும் அதிகம் வந்தனர்.  

ஊடகங்களும் மக்களிடையே அதீத ஆர்வத்தை தூண்டத் தொடங்கியது. பல பத்திரிகைகள் 1983 உலக கோப்பை வெற்றி அணியில் இருந்தவர்களிடம் இருந்து கட்டுரைகள் வாங்கி தொடர்ச்சியாக பிரசுரித்தன. ‘ஆல் தி வே ஃபார் போர்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வந்தன. அப்போது ஸ்ரீகாந்த்துக்கு பயங்கர டிமாண்ட். கட்டுரை, பேட்டி என சுற்றிக்கொண்டிருந்தார். ஒரு நல்ல டோர்னமெண்ட் நடப்பதற்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தேறின என்றே சொல்லவேண்டும்.

அடுத்ததாக, போட்டியில் பங்கேற்கவிருக்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியானது. மேற்கிந்திய தீவு அணியில் கார்டன் கிரினீட்ஜ், மால்கம் மார்ஷல் இல்லை. முதல் அதிர்ச்சி. இங்கிலாந்து அணியில் இயன் போத்தமும், டேவிட் கோவரும் இல்லை. இது அடுத்த அதிர்ச்சி. நியுசிலாந்து அணியில் ரிச்சர்ட் ஹேட்லியும் இல்லை. இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. கவாஸ்கர் – ஸ்ரீகாந்த்  தொடக்க ஆட்டக்காரர்கள்,  வெங்சர்க்கார், அசாருதீன் மிடில் ஆடர்டர் பேட்ஸ்மேன்கள். கபில்தேவ், ரவிசாஸ்திரி ஆல்ரவுண்டர்கள். சேட்டன் சர்மா, ரோஜர் பின்னி மற்றும் மனோஜ் பிரபாகர்  வேகப்பந்து வீச்சுக்கு. கிரன் மோர், சந்திரகாந்த் பண்டிட் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொள்வர். சுழற்பந்துக்கு மனீந்தர் சிங், சிவராமகிருஷ்ணன். ஒரே புதிய முகம் நவ்ஜோத் சிங் சித்து மட்டும். ஆனாலும் அவர் ஏற்கனவே டெஸ்ட் அணியில் அவ்வப்போது இடம்பிடித்திருந்தார். எல்லோரும் டெல்லியைச் சேர்ந்த ராமன் லம்பாதான் மிடில் ஆர்டருக்கு தேர்வு செய்யப்படுவார் என நினைத்திருந்தபோது சித்து இடம்பிடித்தார். அப்போது உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் கலக்கி வந்தார். ராமன் லம்பா கிடைத்த வாய்ப்புகளை வீணடித்ததும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்தது. 

இந்த 87 காலகட்டமானது பெரிய அளவில் டீம் ஸ்ட்ரேட்டர்ஜிகள், கோச்சுகள், அனாலிசிஸ்கள் இல்லாமல், அவர்களுக்கு என்ன வருகிறதோ அதை அப்படியே களத்தில் வெளிப்படுத்திய காலம். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் அகடாமிகள் இருந்தன. இங்கிலாந்திலும் கவுன்டி அணிகளில் பயிற்சியாளர்கள் இருந்தனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகளில் எல்லாம் பயிற்சியாளர்கள் என்பவர் சீனியாரிட்டி, சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்பட்ட காலம். கோச் என்ற பதம் கூட அப்போது புழக்கத்தில் இல்லை. மேனேஜர் என்றுதான் சொல்வார்கள். எனவே அணி தேர்வானதும் மேனேஜரும் கேப்டனும் எப்படி விளையாடலாம், யாரை எடுக்கலாம் என பேசிக்கொள்வார்கள். 

இப்போதுபோல, அடுத்து மோத இருக்கும் அணி வீரர்களின் பலம்/பலவீனத்தை எல்லாம் வீடீயோவில் பார்த்து அதற்கேற்ப வியூகம் வகுப்பதெல்லாம் புழக்கத்தில் இல்லாத காலம். முதல் 40 ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளுக்கு மேல் விழக்கூடாது. கடைசி 10 ஓவரில் அடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வியூகமாகவே இருக்கும். பந்து வீசும் அணியினரும் முதல் 10 ஓவரை வீசும் இருவரை கடைசி 10 ஓவருக்கும் வைத்துக் கொள்வார்கள். மீதமிருக்கும் முப்பதை மற்ற மூவர் பங்கிட்டுக் கொள்வார்கள். ஃபீல்டிங் பொஸிஷனையும் பெரிய அளவில் மாற்றமாட்டார்கள். முதலில் பேட்டிங் பிடித்து 260 ரன்களைக் கடந்துவிட்டால் போதும் பந்துவீச்சாளர்கள் கூட மெத்தனமாகத்தான் பந்து வீச வருவார்கள். 

இப்படித்தான் 87 உலக்கோப்பை ஆட்டங்கள் தொடங்கின.

விக்கெட் விழும்!

அடுத்த கட்டுரைக்கு