Published:Updated:

தென் ஆப்ரிக்காவை ‘டிவில்லியர்ஸ் அணி’ தோற்கடித்தது எப்படி? #MatchAnalysis‘

தென் ஆப்ரிக்காவை ‘டிவில்லியர்ஸ் அணி’ தோற்கடித்தது எப்படி? #MatchAnalysis‘
தென் ஆப்ரிக்காவை ‘டிவில்லியர்ஸ் அணி’ தோற்கடித்தது எப்படி? #MatchAnalysis‘

தென் ஆப்ரிக்காவை ‘டிவில்லியர்ஸ் அணி’ தோற்கடித்தது எப்படி? #MatchAnalysis‘

ஆம். தென் ஆப்ரிக்காவை நேற்று இந்தியா தோற்கடிக்கவில்லை. அவர்களே தோற்கடித்துக் கொண்டார்கள். ஐந்தரை கோடி மக்களின் கனவுகளைச் சுக்கு நூறாக நொறுக்கி விட்டனர் டிவில்லியர்ஸ் & கோ. ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் தென் ஆப்ரிக்கா, நெருக்கடியான போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவுகிறது எனில் இந்தத் தரவரிசை விதிகளின்மீதே சந்தேகம் எழுகிறது. நேற்று தென் ஆப்ரிக்கா விளையாடிய விதம் அபத்தத்தின் உச்சம்.

கடந்த 15 ஆண்டுகாலத்தில் இம்முறை கிடைத்தது போன்ற அற்புதமான அணி எப்போதும் வாய்க்கப் பெறவில்லை. கிரிக்கெட் உலகில் சிறந்தவர்களில் தலை சிறந்தவர்களைக் கொண்டிருந்தாலும் அரை இறுதிக்குக்கூட தகுதி பெறாமல் சிதறிப்போயிருக்கிறது. உலகின் டாப் 10 பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் தென் ஆப்ரிக்க வீரர்கள். டாப் - 3 பவுலர்களில் இருவர் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள். அனுபவமிக்க கேப்டனும் கிடைத்திருக்கிறார். அனுபவமும் இளமையும் சேர்ந்த ஆகச்சிறந்த அணியும் அமைந்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் நாக் அவுட்டில் ஜெயிக்கமாட்டோம் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது தெ.ஆ. 

இந்தமுறை மழை தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்குக் குறுக்கே நிற்கவில்லை; டக் வொர்த் லூயிஸ் கழுத்தைப்பிடித்து நெரிக்கவில்லை; எதிரணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் இல்லை. தங்களது பேட்டால் காலை உடைத்துக் கொண்டு, வெள்ளை நிறப்பந்தால் தலையைச் சேதாரமாக்கிக் கொண்டு அழுதபடி நிற்கிறது தென் ஆப்ரிக்கா. இந்த முறை கோப்பை மட்டுமல்ல ரசிகர்களின் இதயத்தையும் வெல்லமுடியவில்லை. இது படுதோல்வி. வேறு எந்த அணியும் இந்த நிலையிலிருந்து மீண்டு வருவது என்பது சாத்தியமற்றது. ஆனால் அடுத்த ஒரு வாரத்திலேயே தென் ஆப்ரிக்கா மீண்டு எழும், இங்கிலாந்தை உதைக்கும். ஐசிசி தரவரிசையில் மீண்டும் நம்பர் -1 இடத்தைப் பெறும். அந்தப் போர்க்குணம் தென் ஆப்ரிக்காவுக்கே உரித்தானது. அதனால்தான் அந்த அணியை எல்லோருக்கும் பிடிக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு ஐசிசி தொடரின் போதும் அதிக வெற்றி வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நாக்  - அவுட் சுற்றில் தோற்று ரசிகர்களைத் தெளியவைத்து தெளியவைத்து அடிக்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு என்னதான் பிரச்னை? நேற்று எப்படி தோற்றார்கள்? 

தென் ஆப்ரிக்கா ஐசிசி நடத்தும் டோர்னமென்ட்களில் ஏழுமுறை ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கிறது. இதில் மூன்று முறை மட்டுமே ஜெயித்திருக்கிறது. சொல்லப்போனால் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவிடம் ஐசிசி கோப்பைகளில் தொடர் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஒரு சுவாரஸ்ய புள்ளிவிவரம் இருந்தது. தென் ஆப்ரிக்காவும் இந்தியாவும் 12 முறை ஐசிசி நடத்திய தொடர்களில் மோதியிருந்தன. அதில் இந்தியா எட்டு முறை வென்றிருந்தது. அதில் ஒருமுறை கூட இந்தியா சேஸிங்கில் வென்றதில்லை.

டிவில்லியர்ஸ் நேற்று டாஸ் தோற்றார். ஆனால் விராட் கோலி பேட்டிங் செய்ய பணித்தார். சேஸிங்கை விட முதலில் பேட்டிங் செய்வது தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமான அம்சம். முதலில் பேட்டிங் செய்யும்போது பெரிய அழுத்தம் எதுவும் இருக்காது. மேலும் நேற்று ஆடிய ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. 350 முதல் 400 ரன்கள் வரை விளாசுவதற்கு ஏற்ற களம். இதை தென் ஆப்ரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்த்த நிலையில்தான் ரசிகர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது  டிவில்லியர்ஸ் அணி. 

முதல் பத்து ஓவர்களில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு ரன்ரேட் என்ற அளவில் பேட்டிங் செய்யவேண்டும் என்பது டிவில்லியர்ஸ் திட்டம். இதை அவர் பாகிஸ்தானுடன் தோற்றபோதே சூசகமாக தெரிவித்திருந்தார். டி காக் நன்றாகவே ஆடினார். ஆம்லா லேசாகத் தடுமாறினார். அவருக்கு ரன்கள் எளிதில் வரவேயில்லை. முதல் பத்து ஓவர்களில் ஃபீல்டிங்கிலும் சில சொதப்பல்களைச் செய்தது இந்திய அணி. விராட் கோலியே ஒரு ரன் அவுட் வாய்ப்பைக் கோட்டை விட்டார். புவனேஷ்வர் குமார், பும்ரா தென் ஆப்ரிக்காவின் தடுமாற்றத்தைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் இருவருமே ஷார்ட் பிட்ச் பந்துகளையோ, யார்க்கர்களையோ வீசவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து நல்ல லெந்த்தில் வீசிக் கொண்டிருந்தனர். பந்து ஸ்விங் ஆகவும் இல்லை. இது போன்ற தருணங்களில் ஆம்லா - டி காக் போன்ற வீரர்கள் நல்ல ஷாட்கள் விளாசியிருக்கலாம். ஆனால் நாக் அவுட் சுற்று பயத்தால் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நோக்கில் ஆடினார்கள். முதல் பத்து ஓவர்களில் எதிரணி பதுங்குவதைக் கண்ட கோலி, சூழலைச் சரியாகப் புரிந்து கொண்டு  அஷ்வினை முன்கூட்டியே பந்து வீச அழைத்தார். அவர் தென் ஆப்ரிக்க வீரர்களைத் தடுமாற்றத்திலேயே வைத்திருந்தார். பெரிய ஷாட் ஆட முடியாமல் தடுமாறியது தென் ஆப்ரிக்கா. இதனால் தேங்கியது ரன்ரேட். ஒரு கட்டத்தில் 3.5 எனச் செல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது ரன்ரேட். 

அஷ்வின் ஓர் அட்டகாசமான பந்தில் ஆம்லாவை வெளியேற்ற, டி காக் பெரிய ஷாட் ஆட ரெடியானதுமே நேர்த்தியாக விக்கெட்டைத் தகர்த்தார் ஜடேஜா. இப்போது டி வில்லியர்ஸ் - டு பிளசிஸ் என இரண்டு அனுபவமிக்க பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள். இருவரும் சூழலை உணர்ந்து சுழலைச் சமாளித்து சூறாவளி ஆட்டம் ஆடக்கூடியவர்கள். ரன் ரேட் குறித்து அதிகம் கவலை கொண்டிருந்த டிவில்லியர்ஸ், உடனடியாக அதைச் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். முதல் பந்திலிருந்தே டிவில்லியர்ஸ் தன்னம்பிக்கையோடு ஆடிக்கொண்டிருந்தார். தன்னுடன் படித்து, தன்னுடன் பயணித்து, தனது நாட்டுக்கு இரண்டு பார்மெட்டில் கேப்டனாக விளங்கும் டு பிளசிஸ் தனக்கே ஆப்பு வைப்பார் என டிவில்லியர்ஸ் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. 

ஜடேஜாவின் பந்தை ஆஃப் சைடில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டார் டுபிளசிஸ். நேராக ஃபீல்டரிடம் அடித்துவிட்டு எந்த கவலையும் இல்லாமல்  டுபிளசிஸ் ஓடியதைப் பார்த்தபோது டிவில்லியர்ஸ் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தாலும் தன்னம்பிக்கையோடு ஓடினார். ஸ்டம்புகள் அருகிலிருந்தும் கூட பாண்டியவால் நேரடியாகத் தகர்க்கமுடியவில்லை. தோனியின் சமயோசிதத்தின் முன் டிவில்லியர்ஸின் டைவ் பயனளிக்காததால் ரன் அவுட் ஆனார். உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை அவுட் ஆக்கிவிட்ட குற்றவுணர்வின்றி மீண்டும் ஒரு தவறைச் செய்தார் டு பிளசிஸ். 

அஷ்வின் பந்தில் ஸ்லிப்பில் அடித்தார் டுபிளசிஸ். அது நேராக பும்ராவிடம் சென்றது. நிச்சயம் எந்தவொரு பேட்ஸ்மேனும் அந்த ரன்னுக்கு ஓட முயற்சிக்க மாட்டார். ஆனால் எதிரே மில்லருக்கு எந்த சிக்னலும் தராமல், பந்தைப் பார்த்துக் கொண்டு ஓடினார் டுபிளசிஸ். அதிர்ச்சியடைந்த மில்லர் சரி, மறுமுனைக்குச் செல்வோம் என நினைத்து ஓட, திடீரென ஏதோ ஞானம் உதயமானது போல டுபிளசிஸ் திரும்பி ஓடினார். மீண்டும் மில்லர் அதிர்ச்சியடைந்தார். இந்தக் களேபரத்தில் பும்ரா பதற்றத்தில் பந்தை வீசினார். தோனியால் கூட அதைப் பிடிக்க முடியவில்லை. இப்போது இந்திய ரசிகர்களுக்குப் பதற்றம் தொற்றியது. விராட் கோலி பதற்றப்படாமல் மறுமுனைக்குப் பந்தை எடுத்துச் சென்று பொறுமையாக பெயில்ஸை தட்டிவிட்டார். மில்லர் பெவிலியனுக்குக் கிளம்பினார். இதெல்லாம் ஏழெட்டு நொடிகளில் நடந்து முடிந்தன.

பாகிஸ்தானுடனான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்குப் படை எடுத்த போதும், தனி ஒருவனாகக் களத்தில் நின்று தென் ஆப்ரிக்கா கவுரவமான ஸ்கோர் குவிக்க உதவினார் மில்லர். இம்முறை அவர் அவுட் ஆக காரணமாக அமைந்தார் டு பிளசிஸ். முக்கியமான  நாக் அவுட் போட்டிகளில் பொதுவாக இறுதி ஓவர்களில்தான் இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தெ.ஆ. இந்த முறை ஆரம்பத்திலேயே அபத்தமான ஆட்டத்தை ஆடியது.

இந்தியாவுக்காக இரண்டு விக்கெட்டுகள் எடுத்துத் தந்த டுபிளசிஸ், பாண்டியா பந்தில் வீழ்ந்தார். அதுவரை மோசமாக வீசி வந்த பாண்டியா நேற்று டு பிளசிஸுக்கு அட்டகாசமான ஒரு ஆஃப் கட்டர் வீசினார். அதன் பின்னர் கோலியின் வியூகங்கள் அருமையாக இருந்தன. தோனியின் ஆலோசனைப்படி பும்ராவுக்கு பதிலாக புவனேஷ்வரைத் தேர்ந்தெடுத்தது, ஃபீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டது என ஒரு நல்ல அணிக்கு ஒரு நல்ல கேப்டன் செய்யக்கூடிய அத்தனை விஷயங்களையும் சரியாகச் செய்தார் கோலி. 

தென் ஆப்ரிக்கா 191 ரன்களுக்குப் பணிந்ததுமே அவர்களின் உடல் மொழி மாறியது. வழக்கமான புத்துணர்ச்சி இல்லை. டிவில்லியர்ஸ் மட்டும் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் மரணத் தேதியை அறிந்த மனிதன் போல தோல்வி உறுதி என்ற நினைப்பில் சொதப்பியது தென் ஆப்ரிக்கா. மோர்னே மோர்கல் ரோஹித்தை அவுட் ஆக்கியதைத் தவிர பவுலிங்கில் ஒரு சாதனையும் செய்யவில்லை. ஃபீல்டிங்கிலும் சொதப்பல். கடைசியில் இந்தியாவுக்குச் சிரமமே இல்லாமல் இரண்டு புள்ளிகள் கிடைத்தன. ஓர் ஆரோக்கியமான போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஒரு சார்பான போட்டியாக நேற்று அமைந்தது. 

ஷிகர் தவான் மிகச்சிறப்பாக ஆடினார். லெக் சைடில் எந்தப் பதற்றமும் இல்லாமல் ஷாட்களை விளாசினார். விராட் கோலியின்  பொறுப்பான ஆட்டமும், யுவராஜ் சிங்கின் சிக்ஸர் ஃபினிஷிங்கும் இந்தியாவின் வெற்றிக்கு உதவின. ஒரு நல்ல அணி எப்படி நேர்த்தியாக ஆடி வெல்லுமோ அதைச் செய்தது இந்தியா. ஒரு கத்துக்குட்டி அணி எப்படி நல்ல நிலையில் இருந்தாலும் தோற்குமோ அதைச் செய்தது தென் ஆப்ரிக்கா அணி. வங்கதேசம் முக்கியமான கட்டங்களில் சொதப்புவதை ஒத்திருந்தது நேற்று தென் ஆப்ரிக்காவின் ஆட்டம். இதே நிலைமை தொடர்ந்தால் டிவில்லியர்ஸ் கண்களில் கண்ணீரை மட்டுமே பார்க்க முடியும், கையில் ஐசிசி  கோப்பையை 2019ல் பார்க்க முடியாது.  

உண்மையாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமெனில், நேற்று இந்தியா மிகச்சிறப்பாக ஒன்றும் ஆடவில்லை. ஆனால் சமயோசிதமாக ஆடியது. தென் ஆப்ரிக்காவின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டது. இந்தியா வென்றது என்பதைச் சொல்வதை விட தென் ஆப்ரிக்கா தனக்குத் தானே குழி தூண்டியது என்றே சொல்லலாம். பழைய தோல்விகளை நினைவு கொள்ளாமல் போர்குணத்தோடு நாக் அவுட் சுற்றில் தென் ஆப்ரிக்கா ஆடப் போகும் ஆட்டத்திற்காக இன்னும் சில ஆண்டுகள் காத்திருப்போம். ஏனெனில் சில விஷயங்களில் காத்திருத்தல் நல்லது. தென் ஆப்ரிக்கா மீண்டு வரும்.

அடுத்த கட்டுரைக்கு