Published:Updated:

டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களை நிர்பந்திக்க முடியாது: சச்சின்

டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களை நிர்பந்திக்க முடியாது: சச்சின்
டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களை நிர்பந்திக்க முடியாது: சச்சின்
டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களை நிர்பந்திக்க முடியாது: சச்சின்

புதுடெல்லி: டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு எந்த ஒரு இளம் வீரரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

ஒருவர் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பினால் அவர் விளையாட வரட்டும். மற்றபடி நீங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது.

ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், அதற்கான வழியை அவர்களே கண்டு கொள்ள வேண்டும். தங்கள் கனவு நிறைவேற, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, ஆல் ரவுண்டர் சிறந்த திறமையை வெளிப்படுத்தினால் தான் சாதிக்க முடியும். எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், பேட்டிங்கில் 20 விக்கெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. இதைத்தவிர, சிறப்பான பீல்டிங்கும் அவசியம்.

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தை பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர். இது ஒன்றும் வெகுதொலைவில் இல்லை. படிப்படியாக இதை அடையலாம். ஆனால், இதற்கு சில உறுதியான முடிவுகள் தேவைப்படுகின்றன.

முதலில் நியூசிலாந்து தொடர் உள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் வரும் இந்த தொடரில், இப்போதே கவனம் செலுத்தினால் பின்னர் அத்தொடரிலிருந்து கவனம் சிதறிவிடும் வாய்ப்பு உள்ளது.
 
வீரர்களுடன் இணைந்து விளையாடும் போது, ஒவ்வொருவரது இயற்கை குணங்கள், திறமைகள், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி செயல்படுவர் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான், சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும்.

இப்படித்தான் டிராவிட், கங்குலியுடன் வெற்றிகரமாக செயல்பட்டேன். ஒவ்வொரு இளைய தலைமுறை வீரர்களும் இதைப் பின்பற்றினால் நல்லது.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு நான் வளர்ந்தேன். அந்தக் கனவுதான் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

நான் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால் நிறைய சாதனைகளை இழந்திருப்பேன். ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினால், தனது கனவை நனவாக்க கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். மற்றபடி விருப்பமில்லாத ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுமாறு கட்டாயப்படுத்துவதை சரியாக இருக்காது என்றார்.