Published:Updated:

டிவில்லியர்ஸ் அவுட்டாகியது என்னால் தான் - டு பிளசிஸ் வருத்தம்! #CT17

டிவில்லியர்ஸ்  அவுட்டாகியது என்னால் தான் - டு பிளசிஸ் வருத்தம்! #CT17
டிவில்லியர்ஸ் அவுட்டாகியது என்னால் தான் - டு பிளசிஸ் வருத்தம்! #CT17

மற்றுமொரு முறை நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது தென் ஆப்ரிக்கா. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் நேற்று ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணியிடம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்காவின் படுதோல்விக்கு இரண்டு ரன் அவுட்டுகள் முக்கியமான அம்சமாக அமைந்தன. 

டாஸ் வென்ற கோலி  பீல்டிங்கை தேர்ந்தெடுக்கவே , தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய  களமிறங்கியது. இந்தத் தொடரில் இதுவரை முதல் பத்து ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இந்த முறை அந்த  தவறைச் செய்ய மாட்டோம் என சொல்லியிருந்தார் டிவில்லியர்ஸ். தென் ஆப்ரிக்க அணி முதல் பத்து ஓவர்களில் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புவேனஸ்வர் குமார், ஜஸ்பிட் பும்ரா இணை அபாரமாக பந்து வீசியது. 

இந்திய அணியின் பீல்டிங்கும் ஓரளவு நன்றாகவே இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு அருகே மட்டுமே தொடர்ச்சியாக பந்து வீசி வந்தனர் இந்திய பவுலர்கள். ஆஃப்  ஜடேஜா உட்பட திறமையான பீல்டர்களை நிறுத்தியிருந்தார் கோலி. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் அதிரடியாக ஆட முடியவில்லை. சுமார் 3.5 - 4 என்ற ரன்ரேட்டில் விளையாடிக் கொண்டிருந்தது தென் ஆப்ரிக்கா. 18 வது ஓவரில் அஷ்வினின் ஒரு அபாரமான பந்தில் ஆம்லா விக்கெட்டை இழந்தார். அப்போது தென் ஆப்ரிக்கா 77 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளசிஸ், டீ காக் இணை கவனமாக ஆடியது. இந்தியாவுக்கு எதிராக பத்தாவது போட்டியில் விளையாடிய டீ காக்  ஆறாவது முறையாக ஐம்பது ரன்களை கடந்தார். இவர் களத்தில் நின்றால் இந்திய அணிக்கு சிக்கல் என்பதை உணர்ந்திருந்த கோலி, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார். 29-வது ஓவரில் டீ காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் உள்ளே வந்தார். 

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இதற்கு முன்னதாக இரண்டு போட்டிகளிலும் முறையே 4 மற்றும் 0 ரன்களை எடுத்திருந்தார் டிவில்லியர்ஸ். இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மைதானத்தில் நுழைந்தார். ஆம்லா, டீ காக், டு பிளசிஸ் போன்றோரிடம் இருந்த லேசான தடுமாற்றம் டிவில்லியர்ஸிடம் இல்லை. பந்துகள் நன்றாக அவரது பேட்டுக்கு வந்தன. அவரது டைமிங்கும் நன்றாக இருந்தது. கோலியால் டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்யும்போது கட்டுப்படுத்த முடியவில்லை. டாட் பால் வீசவிடாமல் தொடர்ச்சியாக ஓடி ஓடி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தார்  டிவில்லியர்ஸ். இந்திய அணியின் கேப்டன் கோலி சுதாரித்தார். பவுலிங்கை மட்டும் நம்பாமல், இறுக்கமான ஃபீல்டிங் வியூகம் மூலம் தென் ஆஃப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியளிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். 

28 ஓவர்களில் 138/ 2  என நல்ல நிலையில் இருந்தது தென் ஆப்ரிக்கா. டிவில்லியர்ஸ் கடைசி வரை களத்தில் நின்றால் 330 - 350 ரன்கள் வரை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை தென் ஆப்ரிக்க ரசிகர்களிடம் இருந்தது. 29-வது ஓவரில் ஜடேஜா பந்து வீச வந்தார். முதல் பந்தில் ஒரு  ரன் எடுத்தார் டிவில்லியர்ஸ். அடுத்த பந்தை டு பிளசிஸ் சந்தித்தார் மிக அருகில் பந்தை தட்டிவிட்டு ஓட ஆரம்பித்தார். ஹர்திக் பாண்டியாவிடம் நேராக சென்றது பந்து. அவர் தோனியிடம் வீசினார். டு பிளசிஸ் ஓடிவருவதை பார்த்து அதிர்ந்த டிவில்லியர்ஸ் பரவாயில்லை  மறுமுனைக்குச் சென்றுவிடுவோம் என ஓடினார். அவருக்கு ரன் அவுட் ஆகப் போகிறோம் என்பது முன்னமே தெரிந்து விட்டது. 

ஏற்கெனவே தோள்பட்டை வலியில் இருந்தபோதும் முடிந்த மட்டும் டைவ் அடித்தார். அந்தரத்தில் இருந்தபடியே பேட்டால் கிரீஸை தொடுவதற்குள் தோனி மின்னல் வேகத்தில்  ஸ்டம்புகளை தகர்த்தார். டிவில்லியர்ஸ் அவுட்! அந்த நொடியிலேயே தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு சரமாரியாக குறைந்தது. அதற்கடுத்த ஓவரிலேயே மில்லருக்கும் - டு பிளசிஸுக்கும் சரியான புரிதல் இல்லாமல் போகவே இந்தியாவுக்கு இன்னொரு ரன் அவுட் கிடைத்தது. அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தென் ஆப்ரிக்காவை சுருட்டி  எறிந்தது இந்திய அணி. 

இரண்டு பேரின் ரன் அவுட்டுக்கு  காரணமாக அமைந்ததுடன்,  ஒழுங்காக ரன்களும் அடிக்காததால் டு பிளசிஸ் மீது மீம்ஸ் போட்டு தாக்கினார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில்  இரண்டு ரன் அவுட் குறித்து வாய் திறந்திருக்கிறார் டு பிளசிஸ்.  " டி வில்லியர்ஸ் அருமையான பார்மில் இருந்தார். அவர் ரன் அவுட் ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்  தான் காரணம். என்னுடைய தவறால் தான் டிவில்லியர்ஸ் அவுட் ஆனார். நேற்றைய தினம் இந்திய ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் மைதானத்தில் மில்லருடன் சரியாகப் பேச முடியவில்லை. வார்த்தைகள் காதில் விழவில்லை. எங்களிடம் சரியான புரிதல் இல்லாததால் மற்றொரு ரன் அவுட் நிகழ்ந்தது. எனினும் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஒரே இடத்துக்குச் சென்றது மிக மோசமான நிகழ்வு. நேற்று இந்திய அணியின் நாள். அவர்கள் எங்களை எல்லா விதத்திலும் தோற்கடித்து விட்டார்கள்" என வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார் டு பிளசிஸ்.