Published:Updated:

நாதன் ஆஸ்லே... 90'ஸ் வீரனின் இந்தச் சாதனையை இன்னும் யாராலும்... ஏன்? அண்டர் ஆர்ம்ஸ் - 8

நாதன் ஆஸ்லே
நாதன் ஆஸ்லே ( ஹாசிப் கான் )

பிரஷர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆட்டத்தை அதன் போக்கில் ரசித்து ஆடக்கூடியவர் நாதன் ஆஸ்லே. இவரது பேட்டிங்கில் அவசரமே இருக்காது. பந்து தன்னைத் தேடி வரும்வரை காத்திருந்து, கிரீஸுக்குள் நின்றபடியே அடித்து ஆடுவதுதான் இவரது ஸ்பெஷல்.

அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள் பலவகை. அதில் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். உலகின் முதல் அதிரடி பேட்ஸ்மேனான விவியன் ரிச்சர்ட்ஸிடம் ஒரு ஆக்ரோஷம், ஒரு கோபம் இருக்கும். வீரேந்திர ஷேவாக்கின் முகத்தில் ஒரு துடிதுடிப்பு இருக்கும். கிறிஸ் கெய்லின் முகத்தில் ஒரு சிரிப்பு, ஒரு துள்ளல் இருக்கும். ஆனால், இப்படி முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இன்றி அதிரடி ஆட்டம் ஆட சில பேட்ஸ்மேன்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் நியூஸிலாந்தின் நாதன் ஆஸ்லே.

சனத் ஜெயசூர்யாதான் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர். 7 சென்சுரிகள் அடித்திருக்கிறார் சனத். ஆனால், இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு எதிராக ஆடிய சக்சஸ்ஃபுல் பேட்ஸ்மேன்களில் ஒருவர் நாதன் ஆஸ்லே. ஒருநாள் போட்டிகளில் இவர் அடித்த சதங்கள் 16. இதில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 சதங்கள் அடித்திருக்கிறார். இந்திய பெளலிங்கை மிகவும் விரும்பி அள்ளி அள்ளி சாப்பிடக்கூடிய உலகின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் நாதன் ஆஸ்லே.
மைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு! அண்டர் ஆர்ம்ஸ் - 7

நாதன் ஆஸ்லே வலது கை ஆட்டக்காரர். சச்சினைப்போலவே ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும், டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இறங்குவார். சச்சினைப்போலவே பார்ட் டைம் பெளலரும் கூட. சச்சின் முதலில் மிதவேகப்பந்து வீச்சாளாராக இருந்து பின்னர்தான் ஸ்பின்னர் ஆனார். ஆனால், நாதன் ஆஸ்லே முழுக்க முழுக்க மிதவேகப்பந்து வீச்சாளர்தான். ஏன், அடிக்கடி சச்சினுடன் இவரது பெயரைக் குறிப்பிடுகிறேன் என்றால் சச்சினின் ஸ்டைல் இவரது ஆட்டத்தில் நிறையவே இருக்கும். அப்போதெல்லாம் நியூஸிலாந்து அணி குறைவானப் போட்டிகளிலேயே விளையாடும். இந்தியாவைப்போலவே நியூஸிலாந்தும் நிறைய போட்டிகளில் விளையாடியிருந்தால் சச்சினுக்கு சதங்களில் கடும்போட்டியை ஏற்படுத்தியிருப்பார் நாதன் ஆஸ்லே.

பிரஷர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஆட்டத்தை அதன் போக்கில் ரசித்து ஆடக்கூடியவர் நாதன் ஆஸ்லே. இவரது பேட்டிங்கில் அவசரமே இருக்காது. பந்து தன்னைத்தேடி வரும்வரை காத்திருந்து, கிரீஸுக்குள் நின்றபடியே அடித்து ஆடுவதுதான் இவரது ஸ்பெஷல். பேட்டிங், பெளலிங் மட்டுமல்லாமல் ஆஸ்லே மிகச்சிறந்த ஃபீல்டரும்கூட. ஸ்லிப்பில் நின்றுகொண்டு ஆஸ்லே பிடிக்கும் கேட்சுகளே அவ்வளவு பரவசப்படுத்தும்.

Nathan Astle
Nathan Astle
ICC

ஆசிய பிட்சுகளின் காதலர் ஆஸ்லே. இந்தியா, இலங்கை பிட்ச்கள் என்றால் ஃபுல் ஃபார்முக்கு வந்துவிடுவார் ஆஸ்லே. என்னைப் போன்ற இந்திய ரசிகர்களுக்கு ஆஸ்லே அறிமுகமானது 1995 நவம்பரில்தான். 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அது. இந்தியா 2 - 1 எனத் தொடர் லீடிங்கில் இருக்க நாக்பூரில் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது நியூசிலாந்து. முதல்முறையாக நியூசிலாந்தெல்லாம் இப்படி ஒரு அடி அடிப்பார்கள் எனப் பார்த்து தெரிந்துகொண்டது அந்தப் போட்டியில்தான். நியூசிலாந்து கிரிக்கெட்டில் இரண்டாவது 300 ப்ளஸ் ஸ்கோர் அதுதான். மேலும் அப்போது நியூசிலாந்து அதிகபட்ச ஸ்கோரும் அதுதான். அன்றையைப் போட்டியில் 348 ரன்கள் அடித்தது நியூசிலாந்து. மனோஜ் பிரபாகர், ஶ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே, ஆஷிஷ் கபூர், சச்சின் டெண்டுல்கர் என எல்லோருடைய பெளலிங்கிலும் அசால்ட்டாக ஆடியிருப்பார் நாதன் ஆஸ்லே. 128 பந்துகளில் 114 ரன்கள் என செம ஸ்டைலிஷ் இன்னிங்ஸ் அது. இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்லே அடித்த முதல் சதமும் அதுதான். அந்தப் போட்டியில் இந்தியா 249 ரன்களில் ஆல் அவுட் ஆகியிருக்கும்.

1996 உலகக் கோப்பையில் ஆஸ்லேவின் பங்கு பெரிதாக இல்லை. ஆனால், 1997 இந்தியாவின் சுதந்திரக் கோப்பையில் விளையாட வந்தபோது மீண்டும் அதிரடி காட்டினார் ஆஸ்லே. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததோடு, 4 விக்கெட்டுகளையும் எடுத்து பாகிஸ்தானை சுருட்டியிருப்பார்.

அடுத்து இந்தியாவுக்கு எதிராகவும் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆடினார் ஆஸ்லே. நியூசிலாந்தின் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்துகொண்டேயிருக்க, ஆஸ்லே மட்டும் இந்திய பெளலர்களை மீண்டும் ஒருமுறை மிரட்டியிருப்பார். 112 பந்துகளில் 92 ரன்கள். 10 பவுண்டரிகள். ஒவ்வொரு பவுண்டரியுமே செம கிளாஸ் ரகம்.

Nathan Astle
Nathan Astle
ICC

மீண்டும் 1999 உலகக் கோப்பையில் ஃபார்மிலேயே இருந்திருக்க மாட்டார். ஃபார்ம் இழந்திருந்தவரை மீண்டும் ஃபார்முக்கு வர வைத்திருக்கும் இந்தியா.

1999-ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மீண்டும் சென்சுரியோடு தொடங்கினார் ஆஸ்லே. மீண்டும் நியூசிலாந்து முதலில் விளையாடி 300 ப்ளஸ் ரன்கள் அடித்தது. செம கிளாஸிக்கல் ஷாட்களை ஆடினார் ஆஸ்லே. முதலில் சொன்னதுபோலவே சிக்ஸர் அடிக்கமட்டுமே க்ரீஸை விட்டு வெளியேவந்திருப்பார் ஆஸ்லே. மற்றவை எல்லாம் க்ரீஸில் நின்று நிதானமாக, ஃபுல் பவரோடு ஒவ்வொரு பவுண்டரிகளையும் அடித்திருப்பார். ஆஸ்லேவின் இந்த இன்னிங்ஸுக்கு பதிலடியாகத்தான் அடுத்தப் போட்டியிலேயே சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் சேர்ந்து நியூசிலாந்தை சம்பவம் செய்திருப்பார்கள். இந்த இன்னிங்ஸைப் பற்றி இந்தத் தொடரின் பின்பாதியில் பார்ப்போம்.

ஆஸ்லேவின் இன்னிங்ஸ்களில் முக்கியமானது, இன்று வரை உலக சாதனையாக இருப்பது இங்கிலாந்துக்கு எதிரான அந்த டெஸ்ட்தான். நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச்சில் மார்ச் 13 - 16, 2002-ல் அந்தப் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் நாசர் ஹுசேன் சென்சுரி அடிக்க 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. ஆனால், நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் இன்னும் மோசம். 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசி. மேத்யூ ஹோகார்ட் நியூசிலாந்தின் 7 விக்கெட்டுகளை எடுத்திருப்பார். சுமாராக சென்றுகொண்டிருந்த இந்த டெஸ்ட்டை அப்படியே தலைகீழாக மாற்றியது இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் இரண்டாவது இன்னிங்ஸ்கள். கிரஹாம் தோர்ப்பே டபுள் சென்சுரி, ஆண்ட்ரு ஃப்ளின்ட்டாஃப் 137 ரன்கள் அடிக்க 468 ரன்களைக்கு ஸ்கோரை உயர்த்தி டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. நியூசிலாந்துக்கு 550 ரன்கள் டார்கெட்.

கிட்டத்தட்ட இங்கிலாந்தின் வெற்றி உறுதி என்பதால் யாரும் பெரிதாக இந்த மேச்சைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதோடு, இந்தியாவின் நேரப்படி அதிகாலைகளில் இந்தப் போட்டி தொடங்கும் என்பதால் டிவியில் மேட்ச் பார்த்தவர்கள் குறைவு. ஆனால், ஆஸ்லே ஆட்டத்தையே மாற்றினார். ஐந்தாவது பேட்ஸ்மேனாக களத்துக்குள் வந்த ஆஸ்லேவின் இன்னிங்கிஸில் அனல் பறந்தது. ஆனால், இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்தது. 128 பந்துகளில் 134 ரன்கள் அடித்திருந்தபோது 9-வது விக்கெட்டும் விழுந்தது. அப்போது நியூசிலாந்தின் ஸ்கோர் 333/9.

Nathan Astle
Nathan Astle

வெற்றிக்கு இன்னும் 217 ரன்கள் தேவை என்கிற நிலையில் கிறிஸ் கெய்ன்ஸோடு இணைந்து கடைசி விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்போட்டு இங்கிலாந்து பெளலிங்கை வெளுத்தெடுத்தார் ஆஸ்லே. கடைசி விக்கெட்டோடு விளையாடியது மொத்தமே 11 ஓவர்கள்தான். ஆனால், அடித்தது 118 ரன்கள். இதில் ஆஸ்லே மட்டுமே 88 ரன்கள்.

100 டு 150 ரன்களை வெறும் 22 பந்துகளில் அடித்தார் ஆஸ்லே. அடுத்த ஐம்பது ரன்களை வெறும் 17 பந்துகளில் அடித்து டபுள் சென்சுரியை நிறைவு செய்தார். 100 டு 200 ரன்களை வெறும் 39 பந்துகளில் அடித்தார் ஆஸ்லே.

அதுவரை ஆடம் கில்கிறிஸ்ட் 212 பந்துகளில் டபுள் சென்சுரி அடித்ததுதான் அதிவேக டபுள் சென்சுரி சாதனையாக இருந்தது. அதுவும் இந்த சாதனை படைக்கப்பட்டு மூன்று வாரங்கள்தான் ஆகியிருந்தது. கில்கிறிஸ்டின் அதிவேக இரட்டை சத சாதனையை வெறும் 153 பந்துகளில் அடித்து உடைத்தார் ஆஸ்லே. 18 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்று வரை ஆஸ்லேவின் இந்த சாதனையை யாராலும் முறியடிக்கமுடியவில்லை. இதில் 28 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்.

இந்த மார்ச் 16-ம் தேதிக்கும் அதிரடி கிரிக்கெட்டுக்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறது. மார்ச் 16-ல் ஆஸ்லே டெஸ்ட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்ததைப்போலவே இதேநாளில் மேலும் இரண்டு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. 2007 மார்ச் 16-ல் நெதர்லாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார் தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷேல் கிப்ஸ். ஒருநாள் போட்டிகளில் உலக சாதனை இது. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் இதே மார்ச் 16-ம் தேதிதான் தனது நூறாவது சதத்தை அடித்து உலக சாதனைப்படைத்தார். மார்ச் 16 அன்று நிகழ்த்தப்பட்ட இந்த மூன்று சாதனைகளும் இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

Nathan Astle
Nathan Astle
ICC

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலுமே விளையாடியிருந்தாலும் ஆஸ்லே ஒன்டே ஸ்பெஷலிஸ்ட்தான். நியூசிலாந்தின் ரன்மெஷனாக இருந்தவர் 96, 99, 2003 என மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடினார். ஆனால், எந்த உலகக் கோப்பையிலுமே பெரிதாக ரன் அடிக்காததுதான் ஆஸ்லேவின் மைனஸ். ஐபிஎல்-க்கு முன்னோடியான இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) போட்டிகளிலும் விளையாடியவர் நாதன் ஆஸ்லே.

இப்போது கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர் எனப்பலரும் ஆஸ்லேவின் சாதனைகளை முந்திவிட்ட போதிலும் அந்த ஸ்டைலிஷ் ஆஸ்லேவின் இடம் இன்னமும் நிரப்பப்படாமல்தான் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு