Published:Updated:

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சங்கக்கரா மீண்டும் முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சங்கக்கரா மீண்டும் முதலிடம்!
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சங்கக்கரா மீண்டும் முதலிடம்!
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சங்கக்கரா மீண்டும் முதலிடம்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இலங்கை வீரர் சங்ககாரா மீண்டும் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையே கொழும்பில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் டிராவில் முடிவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த டெஸ்டில் 192 ரன்கள் குவித்த இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா, பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

34 வயதான சங்கக்கரா 2007-ம் ஆண்டு முதல்முறையாக முதலிடத்தை பிடித்தார். கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் மாதமும் நம்பர் ஒன் ஆக இருந்தார்.

இந்த டெஸ்டில் அடித்த சதத்தின் மூலம் அவருக்கு 42 தரவரிசை புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் அவரது தரவரிசை புள்ளி எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அதிகபட்சமாக 938 புள்ளிகள் வரை பெற்றிருக்கும் சங்கக்கரா மறுபடியும் 900 புள்ளிகளை தொடும் நிலையில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சங்கக்கரா உள்பட 25 வீரர்கள் மட்டுமே இதுவரை 900 தரவரிசை புள்ளிகளை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் (749 புள்ளி) 11-வது இடம் வகிக்கிறார். பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் அவருடன் அந்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றம் ஏதும் இல்லை. தென்ஆப்ரிக்காவின் ஸ்டெயின் முதலிடத்திலும், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரகுமான் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ஜாகீர்கான் ஒரு இடம் இறங்கி 12-வது இடத்தை பெற்றுள்ளார். டாப்-20 இடத்திற்குள் அங்கம் வகிக்கும் மற்றொரு இந்திய பவுலர் பிரக்யான் ஓஜா ஆவார். அவர் தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கிறார்.