Published:Updated:

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் என்னதான் ஆச்சு? இந்திய அணிக்கு அடுத்த கோச் யார்?

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் என்னதான் ஆச்சு? இந்திய அணிக்கு அடுத்த கோச் யார்?
கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் என்னதான் ஆச்சு? இந்திய அணிக்கு அடுத்த கோச் யார்?

ஜூன், 2016: “அனில் கும்ப்ளே மென்மையான மனிதர். ஆனால், போட்டியில் இறங்கிவிட்டால் தடாலடி காட்டுவார். அவரின் பயிற்சி முறை எனக்கு மிகவும் பிடிக்கிறது!.

“மே, 2017: “கும்ப்ளேவின் கோச்சிங் ஸ்டைல் நம் இந்திய டீமுக்கு எடுபடாது. இந்திய அணிக்கு வேறு நல்ல கோச் வேண்டும்!’’ - இவை இரண்டுமே இந்திய அணியின் ஸ்கிப்பர் விராட் கோலியின் ஸ்டேட்மென்ட். அப்படி இரண்டு பேருக்குள்ள என்னதான் நடந்தது?

இந்த ஜூன் 18-ம் தேதி வந்தால், கும்ப்ளேவின் பயிற்சியாளர் கான்ட்ராக்ட் முடிகிறது. அதாவது, இந்திய அணியின் பயிற்சியாளராகி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. ரவி சாஸ்திரிக்குப் பிறகு கோச் பதவிக்கு வந்தவர் அனில் கும்ப்ளே. பொதுவாக, கோச்களின் பணிக்காலத்தை நீட்டிக்கும் வழக்கம் BCCI-ல் உண்டு என்றாலும், இந்த முறை அனில் கும்ப்ளேவைத் தடாலடியாக மாற்ற நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் விராட் கோலி.

இதுவரை விளையாடிய சீரிஸ்களில் வெற்றியையே பெற்றிருந்தாலும், கும்ப்ளேவின் கோச்சிங் ஸ்டைல், விராட் போன்ற சீனியர் வீரர்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லையாம். கும்ப்ளேவுக்கு ‘ஹார்டு டாஸ்க் மாஸ்டர்’ என்று பெயரே வைத்துவிடும் அளவுக்கு அவரின் ஸ்டைல் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் தன் மனஸ்தாபத்தை வெளிப்படையாகவே காட்டிவிட்டாராம் கோலி.

ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் பயிற்சியின்போது, கங்குலியிடம் கும்ப்ளேவைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டாராம் கோலி. BCCI-ன் அட்வைஸரி பேனலில் முக்கியமான மும்மூர்த்திகள் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், VVS.லக்ஷ்மண். இவர்கள் மூவரும்தான் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையிலான சண்டையைச் சமாதானமாக்க முயற்சி செய்து வருகிறார்கள். காரணம், இவர்கள்தான் கும்ப்ளேவை கோச்சாகத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும், ஜூன் 4-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் வீரர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் கோப்பையைக் கைப்பற்ற முடியும்.

இப்போது கேள்வி என்னவென்றால்... ‘கும்ப்ளேவின் கோச்சில் அப்படி என்ன தவறு கண்டுவிட்டார் கோலி?’ என்பதுதான். 

கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா சீரிஸ் மேட்ச்சில் இருந்தே ஒத்துவரவில்லை. இரண்டு பேரும் வெவ்வேறுவிதமான கருத்துகளை வீரர்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள். தர்மசாலாவில் இந்தியா ஜெயித்த கடைசி டெஸ்ட் மேட்ச்சில், பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வை கோலியின் இடத்தில் கும்ப்ளே ரீ-ப்ளேஸ் செய்தது கோலிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குல்தீப் யாதவைச் சேர்க்கும் கடைசி நொடி வரை இதைப் பற்றி கேப்டனான தன்னிடம் கும்ப்ளே கலந்தாலோசிக்காதது கோலியைக் கடுப்பேற்றியிருக்கிறது. 

விளைவு... ரவி சாஸ்திரி கோச்சாக வருவதையே விரும்புகிறார் கோலி. ஆனால், கிரிக்கெட் போர்டு முதலில் கோலியின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. இப்போது சில சீனியர் கிரிக்கெட்டர்களும் ‘ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி இருக்கு’ என்று கும்ப்ளேவின் கோச்சிங்கைக் குறை சொல்வதால், பெரிதாக மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறதாம் BCCI. ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே’ என்று தனக்குச் சாதகமாக கும்ப்ளேவும் சில வீரர்களை ‘Tag’ செய்ய நினைத்தாலும்... பந்து இப்போது கோலியின் கைகளில் இருக்கிறது. இப்போது வினோத் ராய், கமிட்டி ஆஃப் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸின் சேர்மன் - இது சம்பந்தமாக பேனல் மும்மூர்த்திகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

‘‘ரவிசாஸ்திரி போன்ற ஒரு கோச்தான் இந்திய அணிக்கு செட் ஆவார்’’ என்று ‘கிளிப்பிள்ளை’போல் கோலி சொல்லிவரும் வேளையில், வீரேந்திர சேவாக்கும் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளாராம். 

கோச்சுகளைக் கோச்சுக்காதீங்க கோலி!