Published:Updated:

பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

Published:Updated:
பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு

ண்டன், விழாக்கோலம் காணப்போகிறது. பிரிட்டனின் தலைநகரம் எங்கும் நீலமயமாகப்போகிறது. வீதிதோறும் ‘ப்ளூ இஸ் தி கலர்...’ என்னும் பாடல் ஒலிக்கப்போகிறது. ‘ஆன்டோனியோ’, ‘டெர்ரி’, ‘ஹசார்ட்’ என ஃபுல்ஹாம் பகுதி ரசிகர்கள் துதிபாடிக்கொண்டே இருப்பார்கள். மொத்த பிரிட்டனும் பொறாமையில் பொங்கும். முக்கியமாக, மான்செஸ்டர் பகுதி இருளில் மூழ்கும். பிரிட்டன் முழுவதும் ‘செல்சீ’ என்ற வார்த்தையே இன்னும் சில நாள்கள் நிறைந்திருக்கும்.


காரணம், உலகின் மிகப் பிரசித்திபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 2016-17 சீஸன் முடிந்துவிட்டது. பிரீமியர் லீக் கோப்பை எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், தலைநகர் லண்டனில் 2014-15ம் ஆண்டு சாம்பியனான செல்சீ அணியிடமே மீண்டும் தஞ்சமடைந்துள்ளது. 38 போட்டிகள்கொண்ட தொடரில் 30 போட்டிகளில் வென்று, 93 புள்ளிகளுடன் புதிய பிரீமியர் லீக் சாதனையோடு கோப்பையை வென்றுள்ளது செல்சீ ஃபுட்பால் க்ளப்! செல்சீ ரசிகர்களின் கொண்டாட்டம் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.

சொதப்பல் to சாம்பியன்

2014-15ம் ஆண்டு பிரீமியர் லீக் சீஸனில், 87 புள்ளிகள் எடுத்து சாம்பியனாக மகுடம் சூடியது செல்சீ அணி. ரசிகர்கள், கால்பந்து வல்லுநர்கள் என அனைவரும் `செல்சீதான் மீண்டும் சாம்பியன்' என்றார்கள். கால்பந்து புக்கிகளும் ‘ப்ளூஸ்’ என அழைக்கப்படும் இந்த செல்சீ எனும் குதிரையின் மீதுதான் பந்தயம் கட்டியிருந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. வீரர்கள் பலரும் ஃபார்ம் அவுட், பயிற்சியாளர் வீரர்களுக்கிடையேயான உறவில் விரிசல் என அணி தத்தளித்தது. ஒருகட்டத்தில் 16-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு கடைசி மூன்று இடங்களைத் தவிர்க்கப் போராடியது. அந்த அணியின் மரியாதைக்குரிய பயிற்சியாளர், ‘தி ஸ்பெஷல் ஒன்’ ஜோசே மொரினியோ பாதியிலேயே நீக்கப்பட்டார்.

ஒருவழியாக போராடி, வெறும் ஐம்பது புள்ளிகளோடு பத்தாம் இடத்தைப் பிடித்தது. ஒரு சாம்பியன் அணி இப்படி விளையாடியது பெரும் அதிர்ச்சியானது. காரணம், கோப்பையை வென்றது வேறு முன்னணி அணிகள் அல்ல, `லெய்செஸ்டர்' எனும் கத்துக்குட்டி அணி. சரி மீண்டு வர வேண்டுமே, என்ன செய்வது? இத்தாலி அணியின் பயிற்சியாளராக அப்போது பதவியிலிருந்த ஆன்டோனியோ கான்டேவை (ANTONIO CONTE) செல்சீ அணியின் மேனேஜராக்கினார் க்ளப் உரிமையாளர் ரோமன் ஆப்ரமோவிச். ஆரம்பத்தில் சறுக்கினாலும், சில அட்டகாச உத்திகளைக் கையாண்டு தொடர் முடிவதற்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்னரே அணியை சாம்பியனாக்கிவிட்டார் கான்டே. இங்கு செல்சீ அணி கண்ட மாற்றங்களும், அந்த மாற்றங்களைக் கையாண்டு அவர்கள் புரிந்த சாதனைகளும் ஏராளம்!

புலி பதுங்கித்தான் பாயும்


இந்த பிரீமியர் லீக் சீஸன், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்புகளோடு தொடங்கியது. ரியல் மாட்ரிட் – பார்சிலோனா அணிகளுக்காக மல்லுக்கட்டிய பயிற்சியாளர்கள் மொரினியோவும் கார்டியாலோவும் இப்போது மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகளின் பயிற்சியாளர்கள். அதுமட்டுமின்றி கான்டே, கிளாப், வெங்கர் என ஸ்டார் பயிற்சியாளர்கள் பிரீமியர் லீகில் குவிய உச்சகட்ட உஷ்ணத்தோடு தொடங்கியது லீக். அனைவரின் எதிர்பார்ப்பும் மான்செஸ்டர் அணிகள் மீதே இருந்தது. செல்சீ அணி, ஒருகட்டத்தில் ஆறு போட்டிகளில் பத்து புள்ளிகளோடு எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

லிவர்பூல் மற்றும் ஆர்சனல் அணிகளிடம் தொடர் தோல்வி வேறு. கடந்த சீஸன்போல் ஆகிவிட்டால்? பரபரப்பாகத் தொடங்கிய மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் அணிகளெல்லாம் ஓயத்தொடங்கிய நேரம், செல்சீ அணியின் கடிவாளத்தை இறுகக்கட்டி, முழு வீச்சில் பாய்ச்சினார் கான்டே. ஃபார்மேஷனில் மாற்றம், ஆச்சர்யப்படுத்திய வீரர் தேர்வு என ஒரு கிங் மேக்கராக விளங்கினார் கான்டே. தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றிபெற்று, முதல் இடத்தில் அமர்ந்தது செல்சீ அணி. அதன் பிறகும் அதே கன்சிஸ்டன்சியோடு செயல்பட்டு ஒரு தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் (13, ஆர்சனோலோடு சமன்), ஒரு சீஸனில் அதிக வெற்றிகள் (30/38) போன்ற சாதனைகளும் செல்சீ அணி படைத்தது.

கான்டே – தி காட்ஃபாதர்

`மொரினியோ... மொரினியோ...' என உரக்கக் கத்தும் செல்சீ ரசிகர்களை, ‘மொரினியோ யாரு?’ என்று கேட்கும் அளவுக்குக் கட்டிப்போட்டார் கான்டே. அவர் ரசிகர்களைக் கட்டிப்போட்டது, தனது உத்திகளாலும் கால்பந்து மீது அவர் காட்டிய காதலாலும்தான். ஆர்சனலுக்கு எதிரான போட்டியில் செல்சீ அணி தோற்றதும், மாபெரும் மாற்றத்தைச் செய்தார் கான்டே. அதுதான் செல்சீ அணியின் இந்த அசாத்திய வெற்றிப் பயணத்துக்கு அதிமுக்கியக் காரணம்..  

பிரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகள், பெரும்பாலும் நான்கு டிஃபண்டர்களுடன்தான் களம் இறங்கும். குறிப்பாக, 4-2-3-1 ஃபார்மேஷன்தான் பல அணிகளுக்கு டிஃபால்ட் ஃபார்மேஷன். கான்டேவோ இத்தாலியில் 3-5-2 ஃபார்மேஷனில் அணிகளை விளையாடவைத்தவர். அது இத்தாலி கால்பந்துக்குத்தான் பொருந்தும். அந்த உத்திகள் இங்கிலாந்தில் செட்டாகாது. அதனால் கான்டேவும் 4-2-3-1 மற்றும் 4-2-4 ஃபார்மேஷன்களைத்தான் தொடக்கத்தில் கையாண்டார். ஆனால் அது பலனளிக்காதுபோனதால், அணியை சரிவிலிருந்து மீட்க 3-4-3 ஃபார்மேஷனை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இந்த ஃபார்மேஷனுக்குப் பழக்கப்படாத செல்சீ வீரர்களை, அதற்குத் தகுந்தபடி பயிற்றுவித்தார். கோல்களை வாரி வழங்கிய செல்சீ அணியின் தடுப்பாட்டம், அரணாக மாறியது. திணறிய முன்களம் கோல் மெஷின் ஆனது. செல்சீ அணியைத் தோற்கடிக்க முடியாமல் எதிரணிகள் எல்லாம் இதே 3-4-3 உத்தியைக் கையாளத் தொடங்கின. ஆனானப்பட்ட கார்டியாலோ, மொரினியோ, வெங்கர் போன்றோரே தங்கள் அணி தடுமாறுகையில் இந்த ஃபார்மேஷனைக் கடைப்பிடித்ததெல்லாம் தனிக்கதை!

மற்ற பயிற்சியாளர்கள் தன் அணி கோல் அடித்துவிட்டால், சென்டம் எடுத்த மாணவியைப்போல் சற்றே ஆர்ப்பரிப்பார்கள். ஆனால், கான்டே வேற லெவல்!  35 மார்க் எடுத்து பார்டரில் பாஸ் ஆன கடைசி பெஞ்ச் மாணவனைப்போல் ஆர்பரிப்பார் மனுஷன். இதெல்லாம் பரவாயில்லை, கேலரியில் இருக்கும் ரசிகர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கட்டிப்பிடித்து, அவர்களோடு கோலைக் கொண்டாடுவார் பாருங்கள், “யாருயா இந்த மனுஷன்?” என வர்ணனையாளர்களே ஆனந்தக்கண்ணீர் வடிப்பர். அணியின் வெற்றிக்குப் பிறகு இவரைத் தேடத் தேவையில்லை, ‘காஞ்சனா’ ராகவா லாரன்ஸைப்போல், வீரர்களின் இடுப்பில்தான் தலைவர் அமர்ந்திருப்பார். இப்படியான ஒரு பயிற்சியாளர் இருந்தால் போதாதா? “இந்த மனுஷனுக்காகவாவது ஜெயிக்கணும்” என்று ஒவ்வொரு வீரனும் பட்டையைக் கிளப்ப மாட்டானா? எல்லா வகைகளிலும் செல்சீ அணியின் வெற்றிக்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கி, இன்று செல்சீ ரசிகர்களுக்கெல்லாம் மகானாகக் காட்சி தருகிறார் மனுஷன்!

என்ன ரூபம் எடுப்பான் எவனுக்குத் தெரியும்?

செல்சீ அணி, போட்டிகளின் 90 நிமிடமும் ஆதிக்கம் செலுத்தும் அணி அல்ல; இன்றைய ரசிகர்கள் விரும்பும் ‘tiki taka’ ஆட்டம் ஆடும் அணியும் அல்ல. எப்போது எப்படி ஆடும் என யூகிக்க முடியாத வகையில் இந்த முறை செல்சீ வீரர்கள் செயல்பட்டனர். சட்டென வெடிக்கும் எரிமலையைப்போல ‘கவுன்டர்-அட்டாக்’கில் எதிரணியைச் சீர்குலைத்தனர். டீகோ கோஸ்டா, ஈடன் ஹசார்டு, பெட்ரோ ஆகியோர் அடங்கிய முன்களக் கூட்டணியின் மேஜிக்கால் தோற்கவேண்டிய போட்டிகளைக்கூட செல்சீ அணி வென்றது.
கார்டியாலோவின் மான்செஸ்டர் சிட்டி அணியுடன் கான்டேவின் செல்சீ முதல்முறையாக மோதுகிறது. முதல் பாதியில் 1-0 என சிட்டி முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், மூன்றே மூன்று மேஜிக்கல் மொமன்ட்ஸ் – கண் இமைக்கும் நொடியில் ஒவ்வொன்றையும் கோலாக்கி 3-1 என அதிர்ச்சி தந்தது செல்சீ. சிட்டியுடனான இரண்டாவது ஆட்டத்திலும் கடைசிக் கட்டத்தில் கோலடித்து 2-1 என வென்றது செல்சீ. பேயர்ன் மூனிச், பார்சிலோனா என மாபெரும் அணிகளின் பயிற்சியாளர் கார்டியாலோ ஒரு சீஸனில் ஓர் அணியிடம் இரண்டு முறையும் தோற்றது சரித்திரத்தில் இதுவே முதன்முறை. அதை நிகழ்த்தியது செல்சீ அணி.

அதுவரை கா……ர்டியாலோ என மாஸாக வலம் வந்தவர், கான்டேவின் முன் ஒரு சாதாரண பயிற்சியாளராகத் தெரிந்த தருணம் அது. பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த டாட்டன்ஹாம் அணிக்கும் இதே நிலை. அதுவரை இந்த சீஸனில் தோற்கவே இல்லை. செல்சீயுடன் 1-0 என 40 நிமிடம் வரை முன்னிலை வேறு. ஆட்டம் முழுக்க அவர்கள் கன்ட்ரோலில்தான். ஆனால், மீண்டும் கம்-பேக் கொடுத்தார்கள் ப்ளூஸ். 2-1 என வெற்றியும் பெற்று அசைக்க முடியாத அணியாக உருவெடுத்தனர். எதிர் அணியின் பயிற்சியாளராக ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்துக்குள் நுழைந்த மொரினியோ யாரும் நினைக்காதவண்ணம் 4-0 என மாபெரும் தோல்வியைச் சந்தித்தார். அந்த நேரத்தில்தான் செல்சீ ரசிகர்கள் மனதில் பல்வாள்தேவனின் நூறு அடி சிலை பின் தோன்றிய பாகுபலியின் சிலையைப்போல் உயர்ந்து நின்றார் கான்டே!

லிட்டில் மெஜிஷியன்!


இதற்கெல்லாம் மையப்புள்ளி ஈடன் ஹசார்டு. ‘லிட்டில் மெஜிஷியன்' என்று வர்ணிக்கப்படும் ஹசார்டுதான் செல்சீ அணியின் உந்து சக்தி. எதிர் அணியினர் தங்கள் கோலை முற்றுகையில், யாரேனும் பந்தைக் கடத்தி இவரிடம் தந்துவிட்டால்போதும். இந்த பாக்ஸிலிருந்து அந்த மூலைக்குச் சென்று கோலாக்கிவிடுவார் இந்த பெல்ஜியன். இவரது வேகமும் ஆட்ட நுணுக்கமும் தற்போதுள்ள எந்த பிரீமியர் லீக் வீரர்களிடமும் இல்லை. இந்த சீஸினில் பதினாறு கோல்களும் ஒன்பது அசிஸ்டுகளும் செய்து செல்சீ அணியின் வெற்றிக்கு மாபெரும் பங்காற்றினார் ஹசார்டு. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இடத்தை இவரைக்கொண்டு நிரப்ப ரியல் மாட்ரிட் அணி இரண்டு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்துவருகிறது. அவரின் திறமையைப் பறைசாற்ற, இந்த ஒரு விஷயம் போதும். அவருக்குப் பெட்ரோவின் வேகமும் பெரிதும் உதவியது.

''என்னைத் தாண்டி கோல் அடி பாப்போம்!''

இப்படிப்பட்ட ஹசார்டையே தூக்கிச் சாப்பிட்டார் கான்டே. இது பயிற்சியாளர் ஆன்டோனியோ அல்ல; பிரான்ஸைச் சேர்ந்த நடுகள வீரர் கான்டே (N’GOLO KANTE). கடந்த முறை லெய்செஸ்டர் அணி கோப்பை வெல்ல மாபெரும் காரணமாக விளங்கியவர், இந்த முறை செல்சீ அணிக்கு கோப்பை வாங்கித் தந்தார். “என்ன மனுஷன்யா இவன்!” என்று மொத்த கால்பந்து உலகமும் அவரைப் பார்த்து வியந்தது. “இரண்டு கான்டேக்கள் களத்தில் விளையாடுவதுபோல் இருக்கிறது”, “கான்டேவை க்ராஸ் செய்து, அவரே ஹெடர் கோலும் அடித்தாலும் அடிப்பார்” என்று கால்பந்து ஜாம்பவான்கள் எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர். தனது அசாத்திய ஆட்டத்தால் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரர் விருதை வென்றார் KANTE.

இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், கொரில்லா க்ளாஸுக்கு ஸ்க்ரீன் கார்டு போடுவதைப்போலத்தான். அணியின் பாதுகாப்பு அரண் இவர். கோலடிப்பது, அசிஸ்ட் செய்வதெல்லாம் அவரது சிலபஸிலேயே கிடையாது. ஆனால், எதிரணி வீரர்கள் இவரைத் தாண்டி அவற்றைச் செய்வது மிகக்கடினம். “கோல் அடிக்கணும்னா என்னைத் தாண்டி தொடுறா பார்க்கலாம்” என்று நிப்பார். ஓயாத மெஷின் இவர். டேக்கில்ஸ் செய்ததில் மொத்த லீகிலும் இவர்தான் இரண்டாம் இடம். இவரோடு களம் காண்பது உண்மையிலேயே 12 வீரர்களோடு களம் காண்பதைப்போலத்தான். எந்த அணிக்கும் KANTE மிகப்பெரிய பலம். இவரோடு அதிக விலைக்கு வாங்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பால் போக்பாவை ஒப்பிட்டு கலாய்த்துத் தள்ளினர் நெட்டிசன்ஸ்.

ஃபீனிக்ஸ் பறவைகள்

ஹசார்டு, பெட்ரோ, கோஸ்டா, கோர்டுவா, ஆஸ்பிலிகியூடா, ஃபேப்ரகாஸ், வில்லியன், மேடிச், காஹில் என அனைத்து நட்சத்திரங்களும் இந்தத் தொடரில் பிரகாசமாகவே ஜொலித்தனர். அவர்களைவிட டேவிட் லூயிஸ், விக்டர் மோசஸ் இருவரும் அணியின் பலத்தை அதிகம் கூட்டி, பலரையும் ஆச்சர்யப்படவைத்தனர். லிவர்பூல், ஸ்டோக், வெஸ்ட் ஹாம் எனப் பல அணிகளுக்கு லோனில் ஆடிக்கொண்டிருந்த மோசஸ், பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. ஹசார்டு, பெட்ரோ, வில்லியன் போன்றோர் நல்ல ஃபார்மில் இருந்ததால் `விங்கரான மோசஸின் செல்சீ எதிர்காலம் முடிந்தது' என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், கான்டே 3-4-3க்கு அணியை மாற்றியபோது மோசஸை வலது விங்-பேக்கில் ஆடவைத்தார். அனைவரும் மூக்கின் மீது விரல் வைக்கும்வண்ணம் பட்டையைக் கிளப்பினார் மோசஸ். முன்களத்திலும் சரி, தடுப்பு ஆட்டத்திலும் சரி, அணிக்கு பெரும்பலம் சேர்த்தார். மோசஸ் சோபிக்கத் தவறியிருந்தால் 3-4-3 ஃபார்மேஷனே ஒட்டுமொத்தமாக ஃபிளாப் ஆகியிருக்கும்.

டேவிட் லூயிஸ் – செல்சீ அணியிலிருந்து பி.எஸ்.ஜி அணிக்கு மொரினியோவால் விற்கப்பட்டவர். CONTE இவரை மீண்டும் வாங்கியபோது உலகமே சிரித்தது. நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளினர். ஆனால், அவர்களுக்கெல்லாம் தன் ஆட்டத்தால் பதிலளித்தார் லூயிஸ். செல்சீ அணியின் மாபெரும் வீரரான கேப்டன் ஜான் டெரியின் இடத்தில் அணியின் தூணாகச் செயல்பட்டார். முன்பு தான் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக்கொண்டு, செல்சீ அணிக்கு மாபெரும் பலம் சேர்த்தார். இத்தனைக்கும் இரண்டு மாத காலம் முழங்கால் காயத்துடனேயே விளையாடி, தன்னை ஏளனம் செய்தவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டினார் இந்த பிரேசில் டிஃபண்டர். காஹில் மற்றும் ஆஸ்பிலிகியூடாவுடனான இவர்களது தடுப்பாட்டக் கூட்டணியை மீறி எதிரணி வீரர்கள் கோலடிக்கச் சிரமப்பட்டனர். இவர்களின் அற்புதமான தடுப்பாட்டமும் செல்சீ கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணம்.

காரணங்கள் வெல்லாது… காரியங்களே வெல்லும்!

“செல்சீ அணி சாம்பியன்ஸ் லீக்கில் இந்த முறை ஆடவில்லை. அவர்களுக்குப் போதுமான ரெஸ்ட் கிடைத்தது, எங்களுக்கு அப்படியில்லை. நாங்கள் வாரம் இரண்டு போட்டிகளில் ஆடுகிறோம்”, “செல்சீ அணியின் டெக்னிக் சரியில்லை. அவர்களால் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை” என்றெல்லாம் விமர்சனம் செய்தனர் எதிரணி பயிற்சியாளர்கள்.  காரணம் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், உண்மையில் செல்சீ எல்லாவிதங்களிலும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்டாகச் செயல்பட்டதுதான் வெற்றிக்குக் காரணம்.

மொரினியோ, 89 மில்லியன் பவுண்டுக்கு போக்பாவை வாங்கினார். கார்டியாலோவோ ஜீசஸ், சனே, நொலிடோ என நிறைய முன்கள வீரர்களை வாங்கினார். வெங்கரோ அதுவும் செய்யவில்லை. வழக்கம்போல் இந்த சீஸனும் நல்ல ஸ்டிரைக்கர் இல்லாமலேயே களம் கண்டார். லிவர்பூலின் ஜோர்ஜான் க்ளாப் தன் சார்பில் விய்னால்டம், சேடியோ மனே என அட்டாகிலேயே கவனம் செலுத்தினார். எந்த முன்னணி பயிற்சியாளர்களும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவே இல்லை. அதன் விளைவே அவர்கள் புள்ளிப்பட்டியலில் சறுக்க நேரிட்டது. இந்த வகையில் ஓரளவு பேலன்ஸோடு இருந்த அணி டாட்டன்ஹாம் மட்டுமே. செல்சீக்குக்கூட தடுப்பாட்டம் தொடக்கத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. 3-4-3க்கு மாறிய பிறகு அது வேறு லெவலுக்கு மாறிவிட்டது.

விடைபெறும் டெரி

இதன் விளைவால், பிற அணிகள் சிறு அணிகளுக்கு எதிராக பல புள்ளிகளை இழந்தன. புள்ளிப்பட்டியலில் 8 முதல் 20-ம் இடம் வரை உள்ள அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டும் சிட்டி அணி 11 புள்ளிகளையும், ஆர்சனல் அணி 15 புள்ளிகளையும், லிவர்பூல் 28 புள்ளிகளையும், யுனைடெட் அணி 19 புள்ளிகளையும், ஸ்பர்ஸ் அணி 9 புள்ளிகளையும் இழந்தன. இதில் பெஸ்ட் சாம்பியன் செல்சீதான். அந்த அணிகளிடம் செல்சீ அணி இழந்தது வெறும் ஏழு புள்ளிகள்தான். இந்த ஒழுக்கம்தான் செல்சீயின் வெற்றிக்குக் காரணம். எதிராளி எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாமல், அப்படியே விளையாடியதால்தான் செல்சீ அணியால் சாம்பியன் ஆக முடிந்தது. இனியும் இது தொடரும்பட்சத்தில் அடுத்த ஆண்டும் செல்சீயின் ஆதிக்கம் தொடரும். பிற அணிகள் `வெறும் செலவு செய்து வீரர்களை வாங்குவதால் மட்டும் வென்றுவிடலாம்' என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை என்பதற்கு செல்சீ ஓர் உதாரணம். படுத்துக்கிடந்த அணியை ஒரு நல்ல வழிகாட்டியால் பட்டைதீட்ட முடியும் என்பதற்கு CONTE ஒரு நல்ல உதாரணம்.

எப்படியோ பிரீமியர் லீக்கை மீண்டும் கைப்பற்றிவிட்டார்கள். விடைபெறவிருக்கும் தங்கள் கேப்டன் டெரிக்கு மிகச்சிறந்த செண்ட்-ஆஃப் ஆக இது அமைந்துவிட்டது. அடுத்த சீஸனில் செல்சீ அணி ஆதிக்கம் செலுத்துமா, கோப்பையைத் தக்கவைக்குமா எனக் கேள்விகள் எழலாம். ஆனால், அதையெல்லாம் லண்டன்வாசிகள் காதில் போட்டுக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் இன்னும் இரண்டரை மாதங்கள் செல்சீ புகழ்பாடுவதில் பிஸி!

- மு.பிரதீப் கிருஷ்ணா