Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டம்: 5 ஐ.பி.எல். வீரர்களுக்கு தடை!

Vikatan Correspondent
கிரிக்கெட் சூதாட்டம்: 5 ஐ.பி.எல். வீரர்களுக்கு தடை!
கிரிக்கெட் சூதாட்டம்: 5 ஐ.பி.எல். வீரர்களுக்கு தடை!
கிரிக்கெட் சூதாட்டம்: 5 ஐ.பி.எல். வீரர்களுக்கு தடை!

மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட் பிக்சிங்'  சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

5-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடந்தது.இந்த போட்டியின் போது ஒரு தனியார் தொலைக்காட்சி,சில உள்ளூர் வீரர்களிடம் ரகசியமாக பேசி படம் பிடித்த வீடியோவை ஒளிபரப்பியது.அதில் பேசிய வீரர்கள் ஐ.பி.எல்.உள்பட உள்ளூர் போட்டிகளில் 'ஸ்பாட் பிக்சிங்'என்ற சூதாட்டம் நடைபெறுவதாகவும்,ஐ.பி.எல். போட்டியில் வீரர்களுக்கு சம்பளம் கணக்கில் காட்டப்படாமல் வழங்கப்படுவதாகவும்,சூதாட்டமும் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.

வீரர்களின் இந்த சூதாட்ட பேரம் பலத்த சர்ச்சை கிளம்பியது.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சூதாட்ட புகார் குறித்து ஐ.பி.எல்.நிர்வாக குழுவும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் அவசர ஆலோசனை நடத்தியதுடன், டெலிவிஷனில் ஒளிபரப்பான வீடியோ டேப்பையும் ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பில் சிக்கிய மத்தியபிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சுதிந்திரா (டெக்கான் சார்ஜர்ஸ்), உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சலாப் ஸ்ரீவத்சவா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்),மத்திய பிரதேசத்தை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மோனிஷ் மிஸ்ரா (புனே வாரியர்ஸ்),கோவாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் அமித் யாதவ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்),டெல்லியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அபினவ் பாலி ஆகியோரை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் கட்ட நடவடிக்கையை எடுத்தது.

அத்துடன் 5 வீரர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.அவர் 5 வீரர்களிடமும் விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தார்.

விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் அருண்ஜெட்லி, நிரஞ்சன் ஷா ஆகிய 3 பேர் கொண்ட வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
உள்ளூர் போட்டியில் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு ஆதாயம் பெற்றது உறுதி செய்யப்பட்டிருப்பதால் சுதிந்திராவுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.அவருக்கு ஆயுட் கால தடை விதிக்கப்படுகிறது.இதன்படி அவர் ஆயுட்காலம் முழுவதும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. ஆதரவுடன் நடைபெறும் போட்டி மற்றும் வாரியத்தின் வரம்புக்கு உட்பட்ட எந்தவொரு கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாது.

சலாப் ஸ்ரீவத்சவா `மேட்ச் பிக்சிங்'கில் ஈடுபட ஒத்துக்கொண்டதுடன் அது தொடர்பான நிபந்தனைகள் குறித்து பேசி இருக்கிறார்.ஆனால் எந்த போட்டியையும் 'பிக்சிங்'செய்யவில்லை.இருப்பினும் அவருக்கு 5 ஆண்டு காலம் எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மோனிஷ் மிஸ்ரா,அமித் யாதவ்,அபினவ் பாலி ஆகியோர் தேவையில்லாத பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.ஆட்டத்தின் மதிப்பை குறைக்கு வகையில் பேசிய அவர்களுக்கு ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.வீரர்கள் மீதான தண்டனை கடந்த மே 15-ம் தேதி முதலே நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுட் கால தடை விதிக்கப்பட்ட 3-வது வீரர் சுதிந்திரா ஆவார். ஏற்கனவே 2000-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் அசாருதீன், அஜய் ஷர்மா ஆகியோருக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.