Published:Updated:

அந்த 5 சிக்ஸர்கள்... வான்கடேவில் 'வாவ்' தோனி! #MSDhoni #IPLFinal

பு.விவேக் ஆனந்த்
அந்த 5 சிக்ஸர்கள்... வான்கடேவில் 'வாவ்' தோனி! #MSDhoni #IPLFinal
அந்த 5 சிக்ஸர்கள்... வான்கடேவில் 'வாவ்' தோனி! #MSDhoni #IPLFinal

எல்லோருக்கும் கரியரில் வீழ்ச்சிவரும். `இனி அவ்வளவுதான், ஒதுங்குங்க ப்ளீஸ்!' என ஒரு பெருங்கூட்டம் கத்தினாலும், அத்தனை அழுத்தங்களையும் மீறி, மீண்டும் வெற்றியாளராக நிற்பது, சாதாரண விஷயம் அல்ல. அப்படி நிற்பவர்கள், சாதாரண வீரர்கள் அல்ல... சாம்பியன்கள். ஆனால் தோனி, சாம்பியன்களின் சாம்பியன்! 

`எத்தனை போட்டிகளில் ரன்கள் குவிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எந்தப் போட்டியில், எந்தச் சமயத்தில் அணிக்குத் தேவையான ரன்களைக் கச்சிதமாக எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்' - இதுதான் தோனியின் வெற்றி ரகசியம். ரன்களோ, சராசரியோ, ஸ்ட்ரைக் ரேட்டோ, சதங்களோ, அரைச் சதங்களோ எப்போதும் வரலாற்றில் பேசப்பட்டுக்கொண்டே இருக்காது. ஆனால், வெற்றி என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். 

இந்த சீஸனில் தோனியின் ஆட்டம் அப்படி ஒன்றும் மெச்சத்தக்கதாக இல்லைதான். அவரைவிட இளம் வீரர்கள் மைதானங்களில் பொளந்துகட்டுகிறார்கள். ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் வெளுக்கும் சிக்ஸர்கள், இந்தியாவுக்கு நம்பகமான வீரர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. ஆனால், தோனிக்கும் மற்ற இளம் வீரர்களுக்கும் இடையேயான ஒரு சிறிய வித்தியாசம், அவர்கள் சாதனையாளர்கள். தோனி சாதனை புரிவதில் சாதனையாளர். அனுபவம் வாய்ந்த டீம் பிளேயர்.

இந்தியா, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 85 ஆண்டுகள் ஆகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் கால் பதித்து 43 ஆண்டுகள் ஆகின்றன. கண் மூடி திறப்பதற்குள் ஐபிஎல் ஆரம்பித்துப் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தான் சார்ந்த அணிக்காக அதிக முறை முக்கியமான தொடர்களில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் தோனி மட்டும்தான். உலகிலேயே  டி20 லீக் தொடர்களில் ஓர் அணி தொடர்ச்சியாக எட்டு முறை பிளே ஆஃப் சென்றுள்ளது எனச் சொன்னால், இன்னமும் கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் மிரள்கிறது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் தலைவன் மகேந்திர சிங் தோனி.

பொதுவாக, `தோனிக்கு அதிர்ஷ்டம் உண்டு. அதனால் அவர் ஜெயிக்கிறார்' எனச் சிலர் பேசுவதுண்டு. இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனுக்குத் தொடர்ச்சியாக அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்காது. ஒருவனின் கடும் உழைப்பில் கிடைத்த வெற்றியை அதிர்ஷ்டம் எனச் சொல்லி கடந்துபோவதைப் போன்ற அபத்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. 

தனது அணியை எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், ஆறு முறை ஃபைனலுக்கும் அழைத்துச் சென்று சரித்திரம் படைத்த தோனி, நேற்று மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஏழாவது முறையாக ஃபைனலில் ஆடப்போகும் ஒரே வீரர் தோனிதான். இந்த சீஸனில் புனே அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது ஸ்டீவன் ஸ்மித்தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. குறிப்பாக, நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் ஃபீல்டிங் வியூகங்களும் பெளலர்களைப் பயன்படுத்திய விதமும் அருமை.

அதே சமயம், நேற்று தோனி ஆடிய இன்னிங்ஸ் க்ளாஸ்! மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் டிராக். ஆனால், மும்பையில் காற்றில் தொடர்ச்சியாக ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும், லேசான பனிப்பொழிவு இருந்ததாலும் சற்றே ஸ்லோ பிட்சாக மாறியது. இதனால் பந்துவீச்சாளர்கள் எந்த வேகத்தில் வீசுகிறார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்ப மட்டையைச் சுழற்றுவது அத்தனை பேட்ஸ்மேன்களுக்கும் கடினமாக இருந்தது. புனே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஸ்கோர் 140-ஐ தொடுமா என்றே சந்தேகம் இருந்தது. மும்பை, சேஸிங்கில் சிறந்த அணி. 180-க்கு மேற்பட்ட இலக்கு என்றால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை. ஆனால், பேட்டில் பட்டால் கேட்ச், விட்டால் விக்கெட்டுகள் தெறிக்கும் என்ற நிலையில் 13-வது ஓவரில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் தோனி. பந்துகள் கனெக்ட் ஆகவில்லை. பெளண்டரிகள் விளாச ஆசைப்பட்ட தோனி, விரக்தி அடைந்தார். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. தான் இறுதி ஓவர்களில் களத்தில் நின்றால், நிச்சயம் எதிர் அணி பெளலர்கள் தவறு செய்யக்கூடும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். 

18 ஓவர்கள் முடிவில் புனே அணியின் ஸ்கோர் 121/3. இது தாக்குதலுக்கான நேரம் என்பதை உணர்ந்த தோனி, தடாலடியாக முதல் கியரிலிருந்து ஐந்தாவது கியருக்கு மாற்றினார். 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த தோனி அடுத்தடுத்த பந்துகளில் வெடித்தார். 19-வது ஓவரின் முதல் பந்தை மெக்லாகன் தவறாக ஃபுல் டாஸாக வீச, அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த மனோஜ் திவாரி அட்டகாசமாக ஒரு பெளண்டரி அடித்தார். ப்ரீஹிட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார். இரண்டாவது  பந்தில் ஒரு ரன் ஓடினார். மூன்றாவது  பந்தை தோனி சந்தித்தார். ஜஸ்ட் மிஸ். 

நான்காவது பந்தை லெங்த் பாலாக வீசினார் மெக்லாகன். பின்காலில் முழு சக்தியைத் திரட்டி நின்று, செம சிக்ஸர் ஆடினார். தோனி அதிரடி மூடுக்கு வந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட மெக்லாகன், அடுத்த இரண்டு பந்துகளைப்  பதற்றத்தில்  வைடாக வீசினார். ஆறாவது பந்தை அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்  பகுதியில் வீசினார் மெக்லாகன். பொதுவாக கவர் டிரைவ், தேர்ட் மேன் போன்ற பகுதிகளில் அதிகமாக சிக்ஸர் அடிக்க மாட்டார் தோனி. ஆகவே, அது தோனியைக் கட்டுப்படுத்தும்வண்ணம் வீசப்பட்ட அற்புதமான பந்து. ஆனால், இறுதி ஓவர்கள் என்றால் தோனி அற்புதமான பிளேயர் ஆயிற்றே. சும்மா இருப்பாரா?  நேராக  அட்டகாசமான ஒரு ஷாட் ஆடினார். லாங் ஆஃபில் இருந்த ரோஹித் ஷர்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியொரு பந்தில் நேராக சிக்ஸர் அடிக்க தோனியால் மட்டுமே முடியும். அடுத்தடுத்த இரண்டு சிக்ஸர்களால் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகமானார்கள். 

சொந்த மண்ணில், சொந்த அணிக்கு எதிராக எதிர் அணி வீரர் சிக்ஸர் விளாசுவதைக் கண்டு அவர்கள் மெளனமாகவில்லை. மாறாக, `தோனி... தோனி...தோனி...' என முழங்கி ஊக்கமூட்டினர். இது மும்பை மைதானமா அல்லது சென்னை மைதானமா எனத் தெரியாத அளவுக்கு தோனி கோஷம் விண்ணைப் பிளந்தது. சச்சினும் சரி, மும்பை அணியும் சரி, சற்றே அதிர்ச்சி ஆனார்கள். இறுதி ஓவரை பும்ரா வீச வந்தார். முந்தைய போட்டியில் பும்ராவின்  பந்தை தோனி சந்தித்தபோது ஸ்டம்புகள் தெறித்தன. ஆனால், இந்தப் போட்டியில் பந்துகள் பறந்தன. காரணம், தோனியின் பவர் ஹிட்டிங்! 

20-வது ஓவரின் இரண்டாவது பந்தை தோனி சந்தித்தார். நல்ல லெங்த், நல்ல வேகத்துடன் அற்புதமான ஒரு பந்தை வீசினார் பும்ரா. நிச்சயம் அது சிக்ஸருக்கு அனுப்பவேண்டிய பந்து அல்ல. ஆனால், அந்தப் பந்து கவர் திசையில் எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது. காரணம் தோனி. முந்தைய மூன்று சிக்ஸர்களைவிடவும் இது செம ஷாட். அடுத்த பந்தில் நம்பவே முடியாத வகையில் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தை தோனியின் நெஞ்சுக்கு குறிவைத்தார் பும்ரா. இந்த முறை நேர் திசையில் ஒரு மாஸ்டர் சிக்ஸ். அதற்கு அடுத்த இரண்டு பந்துகளை பும்ரா யார்க்கரில் மடக்கினார். ஹெலிகாப்டர் ஷாட் கிங்கை கடைசி இரண்டு பந்துகளில் கட்டுப்படுத்தியது அபாரம். வெல்டன் பும்ரா. 

இப்போதைக்கு அந்த ஐந்து சிக்ஸர்களை மறப்பது கடினம். ஏனெனில், எல்லாமே 'வாவ்' ஷாட்.