Published:Updated:

சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராஃபிக்கு ஏன் தேர்வாகவில்லை?

சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராஃபிக்கு ஏன் தேர்வாகவில்லை?
சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராஃபிக்கு ஏன் தேர்வாகவில்லை?

சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராஃபிக்கு ஏன் தேர்வாகவில்லை?

சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இந்த அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, மனிஷ் பாண்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர், ரிஷப் பன்ட்,  ராகுல் திரிபாதி, உத்தப்பா, ரெய்னா உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்லில் அதிரடியாக ஆடிவருகிறார். 12 போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து 434 ரன்கள் குவித்திருக்கிறார். நேற்றைய நிலவரப்படி, ரெய்னா  தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ரெய்னா நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர், அருமையான  ஃபீல்டர், சுழற்பந்திலும் கலக்குவார் என்பதால் எந்த ஒரு கேப்டனும் இவரை அணியில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். பின்னர் ஏன் ரெய்னா இன்று அறிவிக்கப்பட்ட அணி வீரர்கள் பட்டியலில் இல்லை? இதற்கு காரணம் உண்டு. 

சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடியது எப்போது தெரியுமா? 25 அக்டோபர் 2015. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மும்பையில் நடந்த அந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெர்பார்மென்ஸ் தான். 

ரெய்னா கடைசியாக தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்றார். உள்ளூரில் நடந்த அந்த தொடரில், ஐந்து ஒருநாள் போட்டிகளில் அவர் குவித்த ரன்கள் 3, 0 , 0 , 52 , 12 . சென்னையில் நடந்த போட்டியில் அரைசதம் எடுத்ததை தவிர மற்ற போட்டிகளில் மகா சொதப்பல் ஆட்டம் ஆடினார். இந்திய மண்ணிலேயே தென் ஆப்ரிக்க பவுலர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் வீழ்ந்தார். 

2010க்கு பிறகு இந்த ஏழு ஆண்டுகளில் ரெய்னா ஒருநாள் போட்டிகளில் அடித்த சதம் வெறும் இரண்டு தான். ஒரு சதம் இங்கிலாந்துக்கு எதிராகவும், இன்னொரு சதம்  ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் அடித்தார். ஆனால் இதே காலகட்டத்தில் அவர் 20 அரைசதங்கள் விளாசியிருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். 

ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங் நன்றாக இருந்தாலும், பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தடுமாறுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஐந்தாவது நிலையில் களமிறங்கும் வீரர் தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் முடங்கினால், அந்த பிரஷர் பினிஷர் ரோலில் இருப்பவர்களுக்கு பெரும் பாரமாக அமையும்.

2013, 2014 களில் நல்ல ஃபார்மில் இருந்த ரெய்னா 2015ல் சோடை போனார்.  கடைசியாக அவர் பேட் பிடித்த 16 இன்னிங்ஸ்களில் ஏழு இன்னிங்ஸ்களில் சிங்கிள் டிஜிட்டில் அவுட். இப்படியோரு மோசமான ஃபார்ம் இருப்பதைக் காரணம் காட்டியே ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கிடையில் 2016ல் ரெய்னாவுக்கு குழந்தை பிறக்க, மனைவியையும் குழந்தையும் கவனித்துக்  கொள்வதில் பிஸியானார். அதன் பின்னர் நியூசிலாந்து தொடருக்கு எடுக்கப்படுவதற்கு முன்பாக காயமடைய, அதைக் காரணம் காட்டி ரெய்னாவை தவிர்த்தது பிசிசிஐ. இங்கிலாந்து தொடருக்கு அவர் தயாராக இருந்தாலும், சோதனை முயற்சியாக யுவராஜ், கேதர் ஜாதவ் ஆகியோரை களமிறங்கியது பிசிசிஐ.

நீண்ட நாட்களாக நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிக் கொண்டிருந்ததால் தவித்த இந்திய அணிக்கு யுவராஜ், கேதர், தோனி இணை வலு சேர்த்தது. இதனால் இங்கிலாந்தை வீழ்த்தித் தொடரை வென்றது இந்திய அணி. இதனால் வெற்றி ஃபார்முலாவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால் பிசிசிஐ ரெய்னாவை அணியில் சேர்க்கவில்லை. 

ரெய்னா இங்கிலாந்து மண்ணில் இதுவரை சுமாராகவே ஆடியிருக்கிறார். இந்திய அணி தென்ஆப்ரிக்காவை லீக் போட்டிகளில் எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரெய்னாவின் செயல்பாடுகள் மிகவும் சுமார் ரகமே! 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் அணியில் ரெய்னாவும் இருந்தார். ( 0, 78, 12, 1 , 4 , 10, 0, 0 ) எட்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த ஸ்கோர் இவை தான். புள்ளிவிவரங்கள் ரெய்னாவுக்கு பாதகமாகவே இருப்பதுதான் நிதர்சனம். 

ஒருநாள் போட்டிகளில் சுமாரான ஆட்டம். அதே சமயம், உள்ளூர்  போட்டிகளில் விளையாடித் தன்னை நிரூபிக்கவும் தவறி விட்டார் ரெய்னா. பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கேற்கவே இல்லை. இதனால் டி20 போட்டிகளுக்கு ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐ, ஒருநாள் போட்டிகளில் கழட்டிவிடுகிறது. ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி நிரூபித்த உத்தப்பா, கம்பீர், பன்ட், தினேஷ் கார்த்திக் போன்றவர்களுக்கே இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில் ரெய்னாவுக்கு எப்படி வாய்ப்பு தருவது என்பது அணித் தேர்வாளர்கள் மனநிலை. தவிர யுவராஜ், தோனி, கேதர் மூவரும் மேட்ச்வின்னராக கடந்த தொடரில் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களை நீக்க வலுவான காரணமும் இல்லை என்பதால் ரெய்னா அணியில் சேர்க்கப்படவில்லை. 

ரெய்னா திறமையானவர் தான், புள்ளிவிவரங்கள் என்பதையெல்லாம் தாண்டி, அவர் பெஸ்ட் ஃபீல்டர் என்பதால் அவரால் சுமார் 20 ரன்கள் வரை இந்தியா சேமிக்க முடியும். எனினும் பேட்டிங்கில் அவர் மெருகேற வேண்டிய தேவை இருப்பதால் பிசிசிஐ எடுத்த இந்த முடிவை விமர்சிக்க முடியாது. ரெய்னா மீண்டும் உள்ளூர் போட்டிகளில் ஒருநாள் ஃபார்மெட்டில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்து மீண்டும் ஒருநாள் அணியில் கலக்குவார் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு